விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்

மு இராமனாதன்

First published in Thinnai on Thursday October 14, 2004

ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன் முடிவுகளையும் பரிசீலிப்பது PR முறையின் சாதக பாதகங்களை நெருங்கிப் பார்க்க உதவும்.

இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் ‘நேரடி ‘த் தேர்தல் முறையே பின்பற்றப்படுகிறது. அதிக வாக்குகள் பெறுகிறவர், அந்தத் தொகுதியின் உறுப்பினராவார்.இது எளிதாகவும், இயற்கையானதாகவும் இருக்கிறது; ஆண்டாண்டு காலமாய்ப் பயன்பாட்டிலும் இருக்கிறது. ஆனால் PR ஆதரவாளர்கள் இது குறைபாடுடையது என்கின்றனர்.நேரடித் தேர்தலில் வெற்றி பெறுகிறவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் பல வேளைகளில் இது பெரும்பான்மை வாக்காளர்களின் தீர்ப்பாக இருப்பதில்லை. பிரதானப் போட்டியாளர்கள் தவிர, சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான வாக்குகள் பெற்ற போதும், அவை நேரடித் தேர்தலில் வெற்றிக் கோட்டைத் தொடுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு கட்சி பெறுகிற வாக்குகளுக்கும் அடைகிற தொகுதிகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில், 2001-இல் 30 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக 132 இடங்களைக் கைப்பற்றியது. இது மொத்த இடங்களில் 56 சதவீதமாகும். 1996-இல் காற்று திமுகவின் திசையில் வீசியது. 42 சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற திமுகவால் 173 இடங்களைப்(74 சதவீதம்) பெற முடிந்தது. நேரடித் தேர்தல் நடக்கிற தேசங்களிலெல்லாம் இதுவே நிலைமை. 2001 பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் டோனி பிளேயரின் கட்சி 40 சதவீத வாக்குகளின் மூலமாக 64 சதவீத இடங்களில் வாகை சூடியது.

மேலும், நேரடித் தேர்தலில் தோல்வியடைகிற வேட்பாளர்கள் பெறுகிற வாக்குகள் மதிப்பிழந்து போகின்றன. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 57 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியபோது, 35 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக கூட்டணியின் சார்பாக ஒருவராற்கூட நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்குள் கால் பதிக்க முடியவில்லை; 8 சதவீத வாக்குகளைப் பெற்ற சிறிய கட்சிகளைப் பற்றிப் பேசவே வேண்டாம். இதே தேர்தலில் தேசீய அளவில் பிஜேபி கூட்டணி(34.83%) காங்கிரஸ் கூட்டணியைவிட(34.59%) சற்றே கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 32 தொகுதிகள் குறைவாகவே கிடைத்தன என்று எடுத்துக்காட்டுகிறார் தேர்தல் முடிவுகளை அலசிய அ.கி.வேங்கடசுப்ரமணியன். PR முறையின் தமிழக ஆதரவாளர்களில் ஒருவரான ‘தீம்தரிகிட ‘ ஆசிரியர் ஞாநி, கூட்டணி அரசியல் அதிகமாகி வரும் இந்தியச் சூழலில் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலத்தையும் நேரடித் தேர்தல் முறையில் அறிய முடியாது என்கிறார். எடுத்துக்காட்டாக இடது சாரிகள், தலித் கட்சிகள், இதர சாதிக் கட்சிகள் முதலியவற்றின் அசல் செல்வாக்கு என்ன என்பதை இப்போதையத் தேர்தல் முறையில் கண்டறியவே முடியாது. சராசரியாக இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு சட்டமன்றத்திலும் இந்தக் கட்சிகளுக்கு 12 இடங்கள் கிடைத்தாக வேண்டும் என்பது ஞாநியின் வாதம்.

PR முறை இதற்கெல்லாம் மாற்றாக அமைகிறது என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள். PR-இன் அடிப்படைத் தத்துவங்களாக அதன் தீவிரப் பிரச்சாரகருள் ஒருவரான டக்ளஸ் ஜே அமி சொல்வது: 1.எல்லா வாக்காளர்களும் பிரதிநிதித்துவத்திற்குத் தகுதியானவர்கள்; 2. சமூகத்தின் எல்லா அரசியல் குழுக்களும், அவர்களுக்கு வாக்காளர்களிடம் உள்ள ஆதரவுக்கேற்ப சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் அங்கம் பெற வேண்டும். அதாவது கட்சிகள் அல்லது குழுக்கள் தாங்கள் பெறுகிற வாக்குகளின் விகிதாச்சாரத்தில் இடங்களைப் பெற வேண்டும்;100 இடங்களுள்ள சட்டமன்றத்தில் 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி, 40 இடங்களைப் பெற வேண்டும்.

PR முறையின் நோக்கம் இதுவென்றாலும், அது பல நாடுகளில் பல வடிவங்களிலாகப் பயன்பாட்டில் இருக்கிறது.(http://www.thinnai.com/ pl0603048.html). ஐரோப்பிய நாடுகள் பலவற்றுள்ளும், சமீபத்தில் ஜனநாயகமயமாகிய தென் ஆப்ரிக்காவிலும் பின்பற்றப்படுவது ‘பட்டியல் வாக்கு முறை ‘ என்பதாகும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினருக்குப் பதிலாகப் பலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பல-உறுப்பினர் தொகுதி 3 உறுப்பினர் கொண்ட சிறிய தொகுதியகவோ, 10 உறுப்பினர் வரை கொண்ட பெரிய தொகுதியகவோ இருக்கலாம்.ஹாங்காங் தேர்தலில் தொகுதிகள், 4 முதல் 8 உறுப்பினர் கொண்டதாயிருந்தது.70 இலட்சம் மக்கட்தொகையும், 32 இலட்சம் வாக்காளர்களையும் கொண்ட ஹாங்காங் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; 5 தொகுதிகளிலுமிருந்து 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1998-இலிருந்து ஹாங்காங்கில் PR முறை பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் தனிப்பட வேட்பாளர்களுக்கல்ல, வேட்பாளர்களின் பட்டியல்களுக்கே வாக்களித்தனர். ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பட்டியல்களுக்குள் வேட்பாளர்களின் வரிசை அல்லது முன்னுரிமை அவர்கள் தமக்குள் முன்னதாகவே நிர்ணயித்துக்கொள்வதாகும். வாகுச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் இந்த வரிசையிலேயே இடம் பெறும். வேட்பாளர்கள் வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் தெரிவாயினர். எடுத்துக்காட்டாக, ஒரு தொகுதியில் 3 இடங்களுக்கு, 4 பட்டியல்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகக் கொள்ளலாம். பட்டியல் அ, ஆ, இ ஒவ்வொன்றிலும் 2 வேட்பாளர்களும், நான்காவது பட்டியல் ஈ-யில் ஒரு வேட்பாளரும் களத்தில் உள்ளதாகக் கொள்ளலாம். மொத்தம் 3 இலட்சம் வாக்குகள் பதிவாகின்றன. பட்டியல் அ-1,30,000 வாக்குகளும், பட்டியல் ஆ-1,05,000 வாக்குகளும், பட்டியல் இ-20,000 வாக்குகளும், பட்டியல் ஈ-45,000 வாக்குகளும் பெறுகின்றன எனலாம். முதற் சுற்றில் ‘தொடக்கநிலை மதிப் ‘பான 1,00,000 வாக்குகளைப் பெறுகிற பட்டியல்களில் முதலாவதாக உள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்- அதாவது பட்டியல் அ மற்றும் ஆ-வின் முதல் வேட்பாளர்கள் முதற் சுற்றில் தெரிவாவர். இதில் தொடக்கநிலை மதிப்பாகக் கொள்ளப்பட்ட 1 இலட்சம் வாக்குகள் என்பது, பதிவான 3 இலட்சம் வாக்குகளை, இடங்களின் எண்ணிக்கையால் (3) வகுக்கிற போது கிடைப்பதாகும். இரண்டாவது சுற்றில், முன்னதாகத் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைக் குறைத்த பின் எஞ்சிய வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும். இப்போது பட்டியல் அ-வில் 30,000 வாக்குகளும், பட்டியல் ஆ-வில் 5,000 வாக்குகளும், பட்டியல் இ-இல் 20,000 வாக்குகளும், பட்டியல் ஈ-யில் 45,000 வாக்குகளும் இருக்கும். பட்டியல் ஈ-யின் வேட்பாளர் எஞ்சிய மூன்றாவது இடத்திற்குத் தகுதி உடையவராவார். இந்தப் பட்டியல் வாக்குமுறை ‘பெரிய எச்சச் சூத்திர ‘(largest remainder formula)த்தின் அடிப்படையில் இயங்குகிறது. இது வாக்காளர்களின் முன்னுரிமையையும் விருப்பத் தேர்வையும் நுணுக்கமாகப் பிரதிபலிப்பதாகாகச் சொல்கிறது ஹாங்காங் அரசியலமைப்புத் துறை.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் பட்டியல் அ-1,02,000 வாக்குகளும், பட்டியல் ஆ-1,50,000 வாக்குகளும், பட்டியல் இ-40,000 வாக்குகளும், பட்டியல் ஈ-8,000 வாக்குகளும் பெறுவதாகக் கொண்டால், பட்டியல் அ மற்றும் ஆ-வின் முதல் வேட்பாளர்கள் முதற் சுற்றிலும், பட்டியல் ஆ-வின் இரண்டாம் வேட்பாளர் இரண்டாவது சுற்றிலும் தெரிவாவர்.

பொதுவாக ஹாங்காங்கில் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும் ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் இரு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. ஹாங்காங் மேம்பாட்டிற்கான ஜனநாயகக் கூட்டமைப்பு(Democratic Alliance For Betterment of Hong Kong- DAB), லிபரல் கட்சிமுதலானவை முதற் பிரிவின் கீழ் வரும். ஜனநாயகக் கட்சி,Frontier,பிரிவு 45 அக்கறைக் குழு முதலானவை இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. ஒரே தொகுதியில் ஒரே கட்சியின் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் போட்டியிட்டடதும், ஒரே பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சியினர் போட்டியிட்டதும் நடந்தன. கட்சிகள், சிறிய அமைப்புகள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். ஒரே தொகுதியில் பல பெய்ஜிங் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் சுயேச்சையாளர்களும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 5 தொகுதிகளிலுமாக 30 இடங்கள்; இவற்றில் 18-ஐ ஜனநாயக ஆதரவாளர்களும், மீதமுள்ள 12-ஐ பெய்ஜிங் ஆதரவாளர்களும் கைப்பற்றினார்கள். (பார்க்க தனிக் கட்டுரை : ‘ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள் ‘)

ஒரே தொகுதியில் பல இடங்கள் இருந்ததால், சில தொகுதிகளில் ஒரு கட்சியோ அல்லது இணக்கமான கட்சிகள் ஒன்றிணைந்தோ தங்கள் வேட்பாளர்களை இரண்டு பட்டியல்களில் களமிறக்கின. இதனால் கட்சிகளுக்குத் தங்கள் ஆதரவு வாக்குகளை இரண்டு பட்டியல்களுக்கும் பகிர்ந்தளிக்கச் செய்வதில் சாதுர்யம் தேவைப்பட்டது. ஆனால் இந்தப் போர்க்கலையில் ஜனநாயகக் கட்சியின் பலவீனம் முடிவுகளில் தெரிந்தது. 5 தொகுதிகளில் ஒன்றான ஹாங்காங் தீவுத் தொகுதியில் 6 இடங்கள். இதற்கு 6 பட்டியல்களிலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெய்ஜிங் ஆதரவு DAB ஒரு பட்டியலிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பட்டியல்களிலும் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சியினரின் பட்டியலில் 3 வேட்பாளர்களும், ஜனநாயக ஆதரவு அமைப்பான Frontier-இன் பட்டியலில் 2 வேட்பாளர்களும் இருந்தனர்; இரண்டிலுமாகச் சேர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் 4பேர் வெற்றிக் கோட்டைத் தாண்டுவது அவர்கள் திட்டம். தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு ஏதோ ஒரு கணிப்பு, ஜனநாயகக் கட்சியின் பட்டியலைப் பார்க்கிலும் Frontier-இன் பட்டியல் அதிக வாக்குகளைப் பெறுமென்றும், ஜனநாயகக் கட்சிப் பட்டியலின் இரண்டாவது வேட்பாளர் மார்ட்டின் லீ, வெற்றி பெற ஏலாதென்றும் சொன்னபோது அவர்கள் கலக்கமுற்றனர். கடைசி நேரத்தில், Frontier ஆதரவு வாக்குகளைத் தங்களுக்கு நல்குமாறு வேண்டினர். பத்திரிக்கைகள் இந்தப் பிரச்சாரத்திற்கு ‘மார்ட்டின் லீயைக் காப்பாற்றுங்கள் ‘ என்று பெயரிட்டன. அவர்களது கலக்கத்திற்கு அவசியமில்லை என்பது பின்னால் தெரிய வந்தது. ஆனால் அப்போது காரியம் அவர்களின் கைமீறிப் போயிருந்தது. முடிவுகள் வருமாறு:

மொத்த வாக்குகள் – 6,18,451

பதிவான வாக்குகள் – 3,56,397

பட்டியல்1 – DAB- 6 வேட்பாளர்கள் – 74,659

பட்டியல்2 – சுயேச்சை- 1 வேட்பாளர் – 65,661

(ரீடா பான்-முன்னாள் சபாநாயகர்)

பட்டியல்3 – சுயேச்சை- 3 வேட்பாளர்கள் – 5,313

பட்டியல்4 – ஜனநாயகக் கட்சி- 3 வேட்பாளர்கள்- 1,31,788

பட்டியல்5 – சுயேச்சை- 1 வேட்பாளர் – 2830

பட்டியல்6 – Frontier- 2 வேட்பாளர்கள் – 73,834

முதற் சுற்றிற் தெரிவாகத் தேவையான தொடக்கநிலை மதிப்பான 59,400 வாக்குகளைப் (3,56,397/6) பெற்ற, பட்டியல்1-இன் முதல் வேட்பாளரும், பட்டியல்2-இன் ஒரே வேட்பாளரும், பட்டியல்4-இன் முதலிரண்டு வேட்பாளர்களும், பட்டியல்6-இன் முதல் வேட்பாளரும்- ஆக 5பேர் தெரிவாயினர். எஞ்சிய ஒரே இடம் அடுத்த சுற்றிற்கு வந்தபோது மீதமிருந்த வாக்குகள் வருமாறு:பட்டியல்1 – 15,259;பட்டியல்2 – ஒரே வேட்பாளர், பரிசீலனை தேவை இல்லை:பட்டியல்3 – 5,313; பட்டியல்4 – 12,988; பட்டியல்5 – 2,830; பட்டியல்6 – 14,434.

Frontier-இன் பட்டியல்6-ஐப் பார்க்கிலும் DAB-இன் பட்டியல்1 அதிகம் பெற்றது 825 வாக்குகள். DAB பட்டியலின் இரண்டாம் வேட்பாளர் சோய் ஸோ யுக் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சியின் 12,988 வாக்குகள் வீணாகியபோது, மறுபக்கம் Frontier-இன் இரண்டாம் வேட்பாளர் சிட் ஹோ தோல்வியை ஏற்க வேண்டி வந்தது.

ஜனநாயகக் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க வாக்குகளை மாற்றிச் செலுத்திய விசுவாசிகள், முடிவுகளைக் கண்டு ஆத்திரமடைந்தனர். அடுத்த தினம், நேயர்கள் தொலைபேசி வழியாகப் பங்கேற்கும் ‘தேநீர்க் கோப்பையில் ஒரு புயல் ‘ எனும் பிரபல வானொலி நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது.

தேர்தல் முடிவுகளால் PR முறை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்த விவாதத்தை தொடங்கியவர் ஜனநாயகக் கட்சியின் மார்ட்டின் லீ. PR முறை தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை வாக்காளர்களின் கரங்களிலிருந்து பறித்து விட்டது என்கிறார் லீ. ஹாங்காங் தீவுத் தொகுதிக்கான யுத்தத்தில் சுமார் 2,05,000 வாக்குகளோடு (மேற்படிப் பட்டியல் 4&6) 3 இடங்களை ஜனநாயகவாதிகள் அடைந்தபோது, 1,40,000-க்குச் சற்றே அதிகமான வாக்காளார்களின் ஆதரவோடு அரசு ஆதரவு வேட்பாளர்கள் (மேற்படிப் பட்டியல் 1&2) அதே அளவு இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள். இந்தத் தொகுதியில் வாக்காளார்களின் விருப்பம் துல்லியமாக இடங்களாக மாற்றம் பெறவில்லை என்பது உண்மைதான். அனால் இதற்குத் தேர்தல் முறையை ஒட்டு மொத்தமாகப் பழிப்பது பொருத்தமாக இராது என்கிறார் பத்திரிக்கையாளர் ஃபிராங் சிங். மொத்தமுள்ள 5 தொகுதிகளிலுமாகப் பதிவான சுமார் 18 இலட்சம் வாக்குகளில், 62 சதவீதத்தை கையகப்படுத்தியிருந்த ஜனநாயவாதிகளின் கூடாரத்திலிருந்து 18 உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்வார்கள். இது மொத்தமுள்ள 30 இடங்களில் 60 சதவீதமாகும். 37 சதவீத வாக்காளர்களின் பின்துணையோடு பெய்ஜிங் ஆதரவாளர்கள் பெற்ற இடங்கள்-12, மொத்த இடங்களில் 40 சதவீதம். இரண்டு தரப்பினரும் கிட்டத்தட்ட பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திலேயே இடங்களைப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் மற்றொரு பத்திரிக்கையாளர் சி.கே.லாவ். தீவுத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியினர் கைகளைச் சுட்டுக் கொண்டதற்கு அவர்களது தேர்தல் யுக்திகளின் குறைபாடே காரணம் என்பது லாவின் வாதம்.

ஆங்கில நாளிதழான South China Morning Post, PR முறையிலிருந்து நேரடித் தேர்தல் முறைக்குப் போவதென்பது பின்னோக்கிப் பயணிக்க முற்படுவதாகும் என்று சாடுகிறது. தற்போதுள்ள PR முறையில் குறைபாடுகள் இருக்கலாம்; அதைச் சீர்திருத்த வேண்டுமென்கிற நாளிதழ், குறிப்பிட்டுச் சொல்லும் ஆலோசனை: தொகுதிகளின் அளவைச் சிறிதாக்கி இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும். பரந்துபட்ட வாக்காளார்களைச் சென்றடைவதில் போட்டியாளர்களுக்குச் சிரமமிருக்கிறது. மேலும், ஒரே தொகுதியில் அதிக இடங்கள் இருப்பதால் சாதுர்யமான அணுகுமுறையும் அவசியமாகிறது.

PR முறையை ஆதரிக்கும் அரசியல் ஆலோசகர் லா நெய் க்யுங், ஹாங்காங் அமைப்பில் குறையாகக் காண்பது, வேட்பாளர்களின் வரிசை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதே. லா சிபாரிசு செய்வது இந்த முறையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமான ‘திறந்த பட்டியல் முறை ‘. பல ஐரோப்பிய ஜனநாயகங்களில் அமலில் இருக்குமிந்த முறையில் பட்டியலைத் தேர்ந்தெடுப்பதோடப்பம், பட்டியலின் கீழுள்ள வேட்பாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு வேட்பாளரும் பெறுகிற வாக்குகளின் எண்ணிக்கை, பட்டியலில் அவரது நிலையைத் தீர்மானிக்கும்.

சில ஆய்வாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் முறை உட்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது என்கிறார்கள். கட்சிக்குள் போட்டியின் மூலம் வேட்பாளர்களின் வரிசை தீர்வாகுமெனில், அது சிறந்ததே; மாறாகக் கட்சித் தலைமையின் எதேச்சதிகாரத்தினால் முடிவாகிற வரிசை ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள்.

ஹாங்காங் அரசு அரசியலமைப்புச் சீர்திருத்த ஆலோசனைகளை இப்போது நடத்தி வருகிறது. தேர்தற் சீர்திருத்தங்களும் இதில் விவாதிக்கப்படும். PR முறை மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டுமென்பதில் பல ஆய்வாளர்களுக்குக் கருத்தொற்றுமை இருக்கிறது.

நன்றி: திண்ணை அக்டோபர் 14, 2014

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: