மு. இராமனாதன்
First published in Dinamani on Wednesday March 23, 2005
நீண்டகாலமாக மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. சமீபத்தில் வெளியான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடி (தற்போதைய மதிப்பீடு 107 கோடி). ஆயின், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட இரண்டரை மடங்கு அடர்த்தியானது. 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரந்து கிடக்கும் சீனாவில், சராசரியாக ஒவ்வொரு ச.கிமீ பரப்பிலும் 135 பேர் வாழும்போது, இந்தியாவின் 33 லட்சம் ச.கி.மீ பரப்பில், ஒவ்வொரு ச.கி.மீட்டரையும் 325 பேர் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அடர்த்தி 2025-இல் இன்னும் அதிகரிக்கும். அப்போது இந்தியா, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகும் என்கிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மக்கள் தொகைப் பிரிவின் இயக்குநர் ஹெய்னா ஸ்லோட்னிக்.
1970-ல் ஆயிரம் பேருக்கு 34 குழந்தைகள் என்றிருந்த சீனாவின் பிறப்பு விகிதம், 1995-ல் ஆயிரம் பேருக்கு 17 குழந்தைகள் என்கிற விகிதத்தில் சரிபாதியாகக் குறைந்தது. 2003-ல் 12 குழந்தைகள் என்று மேலும் சரிந்து, உலகின் குறைந்த பிறப்பு விகிதமுள்ள நாடுகளில் ஒன்றாகியிருக்கிறது சீனா. இந்தியாவின் பிறப்பு விகிதம் 1970-ல் 41 குழந்தைகளாயிருந்து, 1995-ல் 28 என்றாகி, தற்போது 21 ஆகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையும், 1975-இன் நெருக்கடி நிலைக் காலக்கட்டம் நீங்கலாக, மிகுதியும் பிரசாரங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் மூலமாகவே திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதையும் பல பிறப்பு – இறப்பு ஆய்வாளர்கள் (demographer) குறிப்பிடுகின்றனர். 2000 முதல் இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய மக்கள்தொகை செயல்திட்டம் இலக்குகளுக்கும் எண்ணிக்கைகளுக்கும் அப்பால் பரந்துபட்ட குடும்பநலத்தில் அக்கறை காட்டுகிறது. ஆனால் 2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் தேசிய சராசரி பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 25 குழந்தைகள்; இதுவே உத்தரப்பிரதேசத்தில் 33-ம், தமிழகத்தில் 19-ம் ஆக வேறுபடுகிறது. சீனாவில் மாநிலங்களுக்கிடையில் இப்படிக் கணிசமான வேறுபாடுகள் இல்லை.
சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எழுபதுகளில் தொடங்கியது. 1979-ல் மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங்கின் ஆட்சியில் உலகெங்கிலும் முன்னுதாரணமில்லாத “”ஒற்றைக் குழந்தைத் திட்டம்” அமல்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதும், இரண்டு குழந்தைகளுக்குமான இடைவெளி மூன்றாண்டுகள் இருக்க வேண்டுமென்பதில் குடும்பநலப் பணியாளர்கள் கவனமாயிருந்தனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கட்டாயத்தின் பேரில் நிறைவேற்றப்படுவதில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அரசு நிர்ணயித்திருக்கிற இலக்கை அடைவதற்காக களப்பணியாளர்கள் – அரசின் ஆசிர்வாதத்தோடு – கடுமையாகச் செயல்பட்டனர் என்கிறார் ஜான் கேவனாவ் எனும் ஆங்கில நூலாசிரியர்.
ஆயினும் சீனாவின் பெண் கல்வி, அதிக அளவிலான பெண் தொழிலாளர்கள், கூடிவரும் ஆயுள் (life expectancy), உடல்நல முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி போன்ற சமூகப் பொருளாதார அம்சங்களும் சீனாவின் கரு – வள விகிதத்தை (fertility rate)) குறைத்திருப்பதில் பங்கு வகிக்கின்றன என்கிறார் பேராசிரியர் அமார்த்திய சென்.
பாலியல் சமநிலை: ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் சீனா எதிர்கொள்கிற சிக்கல்களில் முதன்மையானது பாலியல் சமநிலை பிறழ்ந்திருப்பதாகும். தற்போது சீனாவில் சராசரியாக 100 பெண் குழந்தைகளுக்கு, 120 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. 100 பெண் குழந்தைகளுக்கு, 103 முதல் 106 ஆண் குழந்தைகள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதம் என்பது ஐ.நா.வின் மதிப்பீடு. உலகச் சராசரி – 100:106. இந்தியாவைப் போலவே சீனாவிலும் ஆண் வாரிசு குடும்பத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆண் குழந்தைகள் மீதான பாரம்பரிய விருப்பத்தை ஒற்றைக் குழந்தைத் திட்டம் மேலும் அதிகரித்திருக்கிறது. ஹாங்காங் பத்திரிகையாளர் சைமன் பாரி சொல்கிறார்: “ஆறேழு மாதக் கர்ப்பமாக இருந்தாலும் கருச்சிதைவிற்கு முன் கேள்வி கேட்கப்படுவதில்லை; மேலும் கருச்சிதைவுகள் அனைத்தும் இலவசம் என்பதால் பெண் கருக்கள் தொடர்ந்து கலைக்கப்படுகின்றன.”
ஆண் மேலாதிக்கம் அதிகமுள்ள இந்தியச் சமூகத்தில், 100 பெண் குழந்தைகளுக்கு 107 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. உலகச் சராசரியை ஒட்டிய விகிதத்தை பிரத்தியேக முயற்சிகள் இல்லாமல் இந்தியாவால் அடைய முடிந்திருக்கிறபோது, பெண் கல்வியில் இந்தியாவைப் பார்க்கிலும் பல படிகள் முன்னேயுள்ள சீனாவில், பெண் குழந்தைகள் பிறக்காமலே இறப்பதற்கு, ஒற்றைக் குழந்தைத் திட்டம் ஒரு முக்கியக் காரணி என்று கருத இடமிருக்கிறது.சீனாவின் பாலியல் விகிதத்தின் சாய்வு இப்படியே தொடர்ந்தால், 2020-இல் 4 கோடி இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாய் இருக்க நேரும் என்று கணிக்கிறார் மக்கள்தொகை மற்றும் சூழியல் குழுமம் எனும் அமைப்பின் துணைத் தலைவர் லீ வைசியாங். வேலையில்லாத, குற்றங்களுக்கும் போதைப் பொருள்களுக்கும் துணை போகச் சாத்தியமுள்ள இளைஞர்களைச் சீன சமூகம், “மொட்டைக் கிளைகள்” என்று அழைக்கிறது. “”மணமாகாத ஆண்கள் பெருமளவில் இருந்தால், அவர்களில் மிகுதியும் “மொட்டைக் கிளை’களாகக் கூடும்”, என்கிறார் பிரிட்டனின் கென்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் ஆன்டிரியா டென் போயர். சீன அரசு இந்தச் சமநிலையின்மையைச் சீராக்க நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் ஆணும் பெண்ணும் சமம் என்று கற்பிக்கப்படுகிறது.
முதியோர் சமூகம்: குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மற்றுமொரு பக்கவிளைவு பெருகிவரும் முதியோர் சமூகம். சீனாவில் இப்போது 14 கோடியாக இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2020-ல் 24 கோடியாக உயரும்.
2001-ல் அரசு தொடங்கிய “நட்சத்திர ஒளி’ என்கிற திட்டத்தின்கீழ் 32,500 முதியோர் இல்லங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இளைஞர்கள், முதியோரை ஆதரிக்கிற சீனப் பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமென்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.
திட்டத்தின் விளைவுகளும் திசைவழியும்: ஜனவரி 6 அன்று சீனாவெங்கும் 20,000 குழந்தைகள் பிறந்தன. ஆயின் பெய்ஜிங்கின் மகப்பேறு மருத்துவமனையில் 31 வயதுத் தாய் லான் ஹூய்க்கும், 37 வயதுத் தந்தை ஜாங் டாங்கிற்கும் பிறந்த ஆண் குழந்தைக்குத்தான் “130 கோடியாவது குடிமகன்” என்கிற மகுடம் கிடைத்தது. இந்தக் குழந்தைக்குத்தான் தொப்புள் கொடி அறுக்கப்பட்டவுடனேயே படங்கள் எடுக்கப்பட்டு, அவை அதிகாலை நாளிதழ்களில் வெளியாகிற அதிர்ஷ்டம் வாய்த்தது. பிற்காலத்தில் இவனும், இவனது மனைவியும், தத்தமது குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளாய் இருக்கப் போவதால், இருவரும் தமது பெற்றோரை மட்டுமல்ல, ஆயுள் அதிகரித்து வரும் ஒரு தேசத்தில் இருவரது தாத்தா – பாட்டிகளையும் ஆதரிக்க வேண்டி வரும்.
2004-ல் பதிவாகியிருக்கிற ஆயிரம் பேருக்கு 5.87 எனும் சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை பல்வேறு காரணங்களினால் 2005-ல் ஆயிரம் பேருக்கு 7 எனும் விகிதத்தில் தளர்த்தலாம் என்பது மார்ச் தொடக்கத்தில் நடந்த சீன மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட தேசியச் சமூகப் பொருளாதாரத் திட்ட வரைவின் பரிந்துரை. மேலும் இந்த வரைவு, தாய் – சேய் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்கிறது. 130 கோடி எனும் மைல்கல்லைத் தொடர்ந்து, 30 ஆண்டுகாலக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட அமலாக்கத்தின் தீவிரம் குறைவதற்கான மெல்லிய சாத்தியங்கள் சீனத்தில் தென்படத் தொடங்கியிருக்கின்றன.
(கட்டுரையாளர்; ஹாங்காங்கில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்).
-தினமணி மார்ச் 23,2005