மு. இராமனாதன்
First published in Dinamani on Wednesday, June 29, 2005
சீனாவின் ஷென்ஜன் நகரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறாள் – 20 வயது லின் லின். சீனாவின் ஹூபை மாநிலத்தின் சிறிய கிராமம் ஒன்றிலிருந்து பிழைப்பிற்காக நகருக்கு வந்தவள் அவள். விளையாட்டு ஆடைத் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மானிய நிறுவனமான “”பூமா”விற்கு, வாரத்தில் ஆறு நாள்கள், நாளொன்றுக்கு 11 மணி நேரம் வீதம், அவள் ஜாக்கெட்டுகளைத் தைத்துக் குவிக்கிறாள். லின் லின்னைப் போல் 2 கோடித் தொழிலாளிகள் ஈடுபட்டிருக்கும் சீனாவின் ஆடை ஏற்றுமதி இவ்வாண்டு பல மடங்கு பெருகியது. சீனாவின் விலை குறைந்த – அளவில் அதிகமான ஆடை ஏற்றுமதியால், மேற்கு நாடுகளுக்கும் சீனாவிற்குமான வணிக – அரசியல் சமன்பாடுகள் மாறி வருகின்றன. தங்களது ஆடைத் தொழில் பாதிக்கப்படுவதாக, ஏப்ரல் – மே மாதங்களில் 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா ஒரு படி மேலே போய் சீனாவின் ஆடை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது. ஆனால் இந்த நடவடிக்கைகளால் தளர்வுறாமல், சீனா மேற்கு நாடுகளோடு ஒரு வணிக யுத்தம் தொடுத்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள், பரஸ்பர ஒப்பந்தங்கள் மூலமாகவோ தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலமாகவோ வளரும் நாடுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. வளரும் நாடுகள், எந்தெந்தத் துணித் தரங்கள் எந்த அளவிற்கு தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் நிர்ணயம் செய்கின்றன. இது சர்வதேச வணிகத்தில் “ஒதுக்கீட்டு முறை” எனப்படுகிறது. “உலக நாடுகளுக்கு இடையிலான கட்டற்ற வணிகம்’ என்பது உலக வணிக அமைப்பின் கொள்கை. ஒதுக்கீட்டு முறை இந்தக் கொள்கைக்கு முரணானது. அதனால் ஆடை வணிகத்தில் ஒதுக்கீட்டு முறை 2004-ம் ஆண்டோடு முடிவுக்கு வருமென்று பத்தாண்டுகளுக்கு முன்னரே WTO அறிவித்துவிட்டது.
2005-ம் ஆண்டிற்காக சீனாவின் விலை குறைந்த ஆடைகள் காத்துக் கொண்டிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். 2005-ன் முதல் 3 மாதங்களில் சீனா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த பருத்தி ஆடைகள் அதற்கு முந்தைய ஆண்டுச் சராசரியைவிட 80 சதவிகிதம் அதிகரித்தன. செயற்கையிழை ஆடைகளோ மும்மடங்கு கூடின. இதே காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான டி – ஷர்ட்டுகளும், இரு மடங்கு அதிகமான நூலிழைகளும் சீனாவிலிருந்து ஏற்றுமதி ஆயின. இன்னும் பின்னலாடைகள், காலுறைகள், உள்ளாடைகள், லினன் துணிகள் என்று சீனாவின் ஆடை வெள்ளம் மேற்கு நோக்கிப் பாய்ந்தது. 2005-ன் முதற் காலாண்டில் ஏற்றுமதியான ஆடைகளின் மதிப்பு ரூபாய் 86,700 கோடி என்கிறது சீன அரசின் செய்தி நிறுவனமான சின்ஹுவா.
ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்கும் இந்தியாவுக்கும் இடைவெளி அதிகமெனினும், சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியா. “ஒதுக்கீட்டு முறை” நீக்கப்பட்டவுடன் சீனாவைப் போலவே இந்தியாவின் ஆடை ஏற்றுமதியும் பெருகும் எனறு எதிர்பார்க்கப்பட்டது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடும் இந்தியா, பருத்தி சாகுபடியில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. செயற்கையிழை உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதி இவ்வாண்டு கூடிய போதும், அது எதிர்பார்த்ததைப் போல் இல்லை என்று ஒப்புக் கொள்கிறார் ஆடை அமைச்சகச் செயலாளர் ஆர். பூர்ணலிங்கம். மிகுதியும் சிறிய நிறுவனங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆடைத் தொழில், இந்தக் கட்டற்ற வணிகத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்கிறார் அவர். ஏற்றுமதிகள் பெருக வேண்டுமானால் இந்தியாவின் உள்கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும் என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் கௌஷிக் பாசு. கடந்த சில ஆண்டுகளாகவே அன்னிய முதலீட்டில் சீனாவின் ஆடைத் தொழில் நவீனமாகி வருகிறது; இந்தியாவின் தொழிற்சாலைகள் இன்னும் நவீனமாக வேண்டும் என்று ஆடைத் தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சீனாவின் உற்பத்திப் பெருக்கம் மேற்கு நாடுகளுக்கு இசைவாக இல்லை. மே மாத மத்தியில் அமெரிக்கா, ஏழு விதமான ஆடைகளில் சீனாவின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த “ஒதுக்கீட்டு முறை”யைத் தன்னிச்சையாக அமலாக்கியது. ஐரோப்பிய ஒன்றியமும் ஒதுக்கீட்டு முறையை கைக்கொள்வது குறித்து ஆலோசித்தது.
டிசம்பர் 2001-ல் WTO- வில் இணைவதற்கு முன்பு, சீனா 15 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது. சீனா WTO -வில் இணைவதற்குத் தமது ஆதரவை வழங்குமுன், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, 2005-க்குப் பின் 2008 வரை, சீனாவின் ஏற்றுமதிப் பெருக்கத்தால் தமது சந்தைகள் பாதிக்கப்பட்டால், “ஒதுக்கீட்டு முறை”யை மீண்டும் அமலாக்குகிற அதிகாரத்தை அவை எடுத்துக் கொண்டன. அமெரிக்கா இப்போது அதைப் பயன்படுத்தியது.
ஜூன் முதல் வாரத்தில் நடந்த அமெரிக்க – சீனப் பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. ஆனால் ஜூன் 11 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிகத் துறைத் தலைவர் பீட்டர் மாண்டெல்சனுக்கும் சீனாவின் வணிக அமைச்சர் போ ஷீலாய்க்கும் இடையே நடந்த 10 மணி நேரப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. 10 விதமான ஆடை வகைகளை, 2004 ஏற்றுமதி அளவிலிருந்து, ஆண்டிற்கு 8 முதல் 12.5 சதவீதத்திற்குக் கூடாதபடி பார்த்துக் கொள்ள சீனா ஒப்புக்கொண்டது. 2007-ன் இறுதி வரை இது நீடிக்கும். 2008-ல் ஐரோப்பிய ஆடைச் சந்தை முழுவதுமாகத் திறந்து விடப்படும்.
“தங்களது உள்நாட்டு உற்பத்தியையும் வணிகத்தையும் திருத்தி அமைத்துக் கொள்ள அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் பத்தாண்டு கால அவகாசமிருந்தது. ஆயின் இத்துணை காலம் வாளாவிருந்துவிட்டு, இப்போது சீனாவின் ஏற்றுமதியை இன்னும் மூன்றாண்டுகளுக்குக் கட்டுப்படுத்துவது அநீதியானது” என்கிறார். ‘உலக வணிக அமைப்பும் மனித உரிமைகளும்’ என்ற நூலின் ஆசிரியர் எஸ்தர் லாம். இதை ஆமோதிக்கும் அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் பிராம், பெய்ஜிங்கிலிருந்து எழுதினார்: “தாராளமயமாக்கலின் ஆதரவாளர்கள் இன்று தற்காப்பு ஏற்பாடுகளுக்குள் புதைந்து கொள்கிறார்கள். மாறாக, மூடிய இரும்புத் திரைகளுக்குப் பின்னால் ஆட்சி நடத்துவதாகச் சொல்லப்பட்ட ஒரு தேசம் இன்று தனது வணிக – நிதிச் சந்தையை அகலத் திறக்கிறது”.
“பூமா” ஜாக்கெட்டுகள் தைக்கும் லின் லின் ஒரு பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். மேற்கு நாடுகள் தமது விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்கும் மானியத்தால், அவை வெளிநாடுகளில் குறைந்த விலையில் உணவுப் பொருள்களை விற்க முடிகிறது. இந்தப் பொருள்களோடு போட்டியிட முடியாமல் விவசாயத்தைத் துறந்து நகரங்களுக்குக் கூலித் தொழிலாளர்களாய் வந்தவர்களுள் லின் லின்னும் ஒருத்தி. குறைந்த கூலி பெறும் அவள், தைக்கிற ஜாக்கெட்டின் விலையும் குறைவுதான். ஆனால் இந்த விலை குறைந்த ஜாக்கெட்டுகள் தமது நாட்டின் சந்தையையும் தொழிலையும் பாதிப்பதாகச் சொல்கிறது அமெரிக்கா. “”உலகமயமாக்கலை ஊக்குவிப்பதாக கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா சொல்லி வந்தது எத்துணை பெரிய பாசாங்கு”, என்று கேட்கிறது ஹாங்காங் நாளிதழ் South China Morning Post. தனது சமீபத்தியத் தலையங்கத்தில் சீனாவின் “பீப்பிள்ஸ் டெய்லி” இப்படி எழுதியது: “”சீனா மற்றும் இந்தியாவின் தலைமையில், வளரும் நாடுகள் தொழில்நுட்பம் மிகுந்த பணிகளுக்குப் போட்டியிடுகின்றன. திறன் குறைந்த, உடலுழைப்பு தேவைப்படுகிற பணிகளை அவை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டன. இந்த வளரும் நாடுகளின் குரல், வரும் காலங்களில் ஓங்கி ஒலிக்கும்”.
(கட்டுரையாளர், ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).
-தினமணி ஜூன் 29 2005