மு. இராமனாதன்
First published in Dinamani on Saturday, October 22, 2005
சமீப காலத்தில் சர்வதேச ஊடகங்களில் சீன – அமெரிக்க உறவுகள் குறித்த விவாதங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. ஒன்று உலகின் ஒரே வல்லரசாகவும், மற்றொன்று அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பரஸ்பர உறவுகள் பிரதானமாக மூன்று தளங்களில் இயங்குகின்றன என்கிறார் “டைம்’ இதழின் செய்தியாளர் அந்தோணி ஸ்பெய்த். அவை: வணிகம், தைவான் மற்றும் பயங்கரவாதம் (Three T’s: Trade, Taiwan and Terrorism).
வணிகம்: “20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா கோலோச்சியது. 21-ஆம் நூற்றாண்டில் சீனாவின் கொடிதான் பறக்கும்” என்று சிலர் சொல்வது மிகையாக இருக்கலாம். ஆயினும் கடந்த 25 ஆண்டுகளில் சீனா சாதித்திருப்பது அதிகம். உலகின் மிகப் பெரிய பத்து பொருளாதார நாடுகளின் பட்டியலில் சீனா இடம் பிடித்திருக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதியாளராக வளர்ந்திருக்கிறது. மேற்குலகின் சகல வீடுகளிலும் சீனாவின் விலைகுறைந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பொருள்களும், காலணிகளும், ஆடைகளும் நிறைந்து கிடக்கின்றன. அமெரிக்காவின் தொழிலும் வணிகமும் சீனச் சந்தையை நோக்கி ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. இப்போது அமெரிக்காவின் சுமார் 100 பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவில் ரூ. 2.16 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கின்றன (இந்தியாவில் அமெரிக்காவின் முதலீடு ரூ. 16,500 கோடி மட்டுமே).
1970-ல் ரூ. 2,250 கோடியாக இருந்த சீன – அமெரிக்க வணிகம், 1992-ல் ரூ. 1.5 லட்சம் கோடியாகி, 2004-ல் ரூ. 10.5 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் இறக்குமதியைக் காட்டிலும் சீனாவின் ஏற்றுமதி ரூ. 3.6 லட்சம் கோடி அதிகம். அதாவது வணிகத்தில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் ஏற்றுமதியே. இது சீனாவிற்குச் சாதகமான ஒருதலைப்பட்சமான வணிகம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதை மறுக்கிறார் தேசிய வளர்ச்சிக் குழுமத்தின் ஜாங் யான்ஷெங். சீனாவின் ஏற்றுமதியில் அதிகம் பயனடைவது அமெரிக்காவின் இறக்குமதியாளர்களும், விற்பனையாளர்களும், பயனீட்டாளர்களுமே என்கிறார் அவர். ஆயினும் செப்டம்பர் சந்திப்பின் போது அமெரிக்காவிலிருந்து கூடுதல் பொருள்களையும் சேவைகளையும் சீனா இறக்குமதி செய்து கொள்ளும் என்று சொல்லி இருக்கிறார் சீன அதிபர் ஹு ஜின்டாவ்.
சீனா குறித்த கசப்புணர்வு அரசியல் வழியாக வணிக பேரங்களில் கசிவதையும் பார்க்க முடிகிறது. ஜூலை 2005-ல் விற்பனைக்கு வந்த அமெரிக்காவின் “யுனோகோல்’ எரிசக்தி நிறுவனத்தை சீனாவின் இசஞஞஇ வாங்க முன் வந்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்று சொல்லி பேரத்தை அனுமதிக்கவில்லை. யுனோகோல் நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள் அமெரிக்காவிற்கு வெளியே ஆசியாவிலும் காஸ்பியன் கடலிலுமே உள்ளன என்று இசஞஞஇ வாதிட்டதை அவர்கள் செவி மடுக்கத் தயாராயில்லை. சீனாவை, ஓர் அனல் கக்கும் டிராகனாக அமெரிக்கர்கள் கருதுவதாக சமீபத்தில் குறிப்பிட்டார் பாதுகாப்புத் துறைத் துணை அமைச்சர் ராபர்ட் ஜோயிலிக்.
தைவான்: சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் எப்போதும் முக்கியக் கண்ணியாக இருந்து வந்திருக்கிறது. ஓர் இலையைப் போல் விரிந்து கிடக்கும் தைவான் தீவிற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள நீரிணையில் (ள்ற்ழ்ஹண்ற்) அரசியல் அலைகளுக்கு ஒருபோதும் குறைவில்லை. 1945-ல் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஏற்று ஜப்பானிய ஏகாதிபத்தியம் சரணடைந்தபோது, சீனாவிலிருந்தும் வெளியேறியது. எனினும் சீனாவை ஆட்சி புரிந்து வந்த “கோமிங்டாங்’கிற்கும் (“தேசியக் கட்சி’) கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் நீடித்தது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவைக் கைப்பற்றியது. கோமிங்டாங், சீன ஆட்சியாளர்கள் தங்கள் பிரதேசம் என்று எப்போதும் கருதி வந்திருக்கும் தைவானிற்குத் தப்பியோடியது. அங்கு தங்கள் ஆட்சியையும் நிறுவியது. இந்த ஆட்சி சில மாதங்களே தாக்குப்பிடிக்கும் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், பிலிப்பின்ஸிற்கும் ஜப்பானிற்கும் இடையில் உள்ள தைவானில் அமெரிக்கா ராணுவத் தளத்தை நிறுவியதும் கிழக்காசியச் சமன்பாடுகள் மாறிப் போயின. மேலும் 1950-களின் இடைப்பகுதி வரை தைவானிற்கு பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா வாரி வழங்கியது. உதவிகளைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொண்ட தைவான், உள்கட்டமைப்பு, தொழில், வேளாண்மை என்று எல்லாத் துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறியது. 1980-ல் ஜனநாயக ஒளிக்கதிர் பரவத் தொடங்கிய தைவானில், 1987 முதல், முறையான தேர்தல்கள் நடந்து வருகின்றன.
உலக அரங்கில் நிகழ்ந்த மாற்றங்கள் வாஷிங்டனையும் பெய்ஜிங்கையும் நீண்டகாலம் எதிரும் புதிருமாக இருக்க அனுமதிக்கவில்லை. 1979-ல் சீன-அமெரிக்க ராஜீய உறவுகள் தொடங்கின. சீனாவின் பிரிக்க இயலாத பகுதி தைவான் எனும் “”ஒரே சீனா” கொள்கையை ஜிம்மி கார்ட்டரின் அரசு ஏற்றுக் கொண்டது. இதனால் தைவானுடனான அதிகாரபூர்வ ராஜீய உறவுகளை அமெரிக்கா துறக்க வேண்டி வந்தது; எனினும் அதன் ராணுவ – பொருளாதார உதவிகள் தொடரவே செய்கின்றன.
இதற்கிடையில் 1990 முதல் தைவான் – சீனா வணிகம் வளர்ந்து வருகிறது; கடல் – ஆகாயப் போக்குவரத்துகள் அதிகமாகி வருகின்றன. தைவானின் அதிபர் சென்ஷுய் பியானின் “”தைவான் விடுதலை”ப் பேச்சுகளைக் கடுமையாக எதிர்க்கும் பெய்ஜிங், இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் கோமிங்டாங் தலைவர்களுடன் மே 2005-ல் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தியது. தைவானிற்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கும் சீனாவின் திட்டமும் அப்போது விவாதிக்கப்பட்டது. தைவானைச் சமாதான முறையில் ஒன்றிணைப்பதையே விரும்புவதாகச் சொல்கிறது சீனா. ஆனால் சீனா ராணுவ மார்க்கத்தையே நம்புவதாகக் கருதுகிறது அமெரிக்கா.
பயங்கரவாதம்: 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சீனாவை ஒரு நேச சக்தியாக அடையாளம் கண்டது அமெரிக்கா. பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது சீனா. நியூயார்க் உலக வணிக மையத்தின் இடிபாடுகளில் உயிரிழந்தவர்களில் சீன இளைஞர்களும் இருந்தனர். தலிபானை வீழ்த்தியதை சீனா ஆதரித்தது; ஆப்கானிஸ்தானின் மறு கட்டமைப்பிலும் பங்களித்தது. இரு தரப்பிலும் இருந்த எதிர்ப்பு உணர்வுகள் இதனால் ஓரளவு மட்டுப்பட்டன எனலாம்.
வட கொரியாவை அதன் அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்வதிலும் சீனா முன் கை எடுத்துச் செயல்படுகிறது. சீனாவின் தலைமையில் நடந்த ஆறு நாடுகளின் பேச்சு வார்த்தைகளில் சீனா, அமெரிக்கா, வட – தென் கொரியாக்கள், ரஷியா, ஜப்பான் ஆகியவை செப்டம்பர் 19 அன்று ஒத்திசைவை எட்டின. நடைமுறைச் சிக்கல்கள் தொடர்கிற போதும் “பெய்ஜிங் ஒப்பந்தம்’ கிழக்காசிய உறவுகளில் ஒரு மைல் கல் என்று கருதப்படுகிறது.
திசைவழி: பயங்கரவாத எதிர்ப்பில் ஒன்றுபடுகிற இரண்டு நாடுகளாலும், தைவான் நீரிணையில் ஒரே புள்ளியில் சந்திக்க முடியவில்லை. “”ஒரே சீனா” கொள்கையில் பெய்ஜிங் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை; தைவான் ஆதரவை வாஷிங்டன் தளர்த்திக் கொள்ளத் தயாராயில்லை. அதேவேளையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத அபாயத்தை அகற்றுவதில் சீனாவின் பங்கை அமெரிக்கா பாராட்டுகிறது; சீனாவின் விலை குறைந்த பொருள்களால் அது பயனடைகிறது; ஆனால் இவற்றின் மூலம் வளரும் சீனாவின் பொருளாதாரமும் செல்வாக்கும் ஓர் அச்சுறுத்தலாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது. எனினும் கருத்து வேறுபாடுகளின் அரசியலைக் கடந்து இரு நாடுகளின் தொழிலும் வணிகமும் ஒரே வேளையில் பயன் பெறுகின்றன.
(கட்டுரையாளர் ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).
-தினமணி அக்டோபர் 22 2005