சிறகு விரிக்கும் கொள்ளை நோய்

மு. இராமனாதன்

First published in Dinamani on Wednesday, November 9, 2005

1918மார்ச் 11-ஆம் தேதி அதிகாலை. அமெரிக்காவின் கான்சாஸ் ராணுவத் தளத்தின் சமையற்காரர் ஆல்பர்ட் கிட்சல் கடும் ஜலதோஷத்தினால் அவதிக்குள்ளானார். அன்று மதியத்திற்குள் 100 ஜவான்கள் காய்ச்சல், உடல்வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடினர். வார இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்தது. அவர்களில் யாருக்கும் இது பறவையிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றிய நோய் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. “”ஸ்பானிய ஃப்ளு” என்று வரலாற்றில் இடம் பிடித்த அந்தக் கொள்ளை நோய் (pandameic) தேசப்படத்தின் எல்லைக் கோடுகளை முறித்துக் கொண்டு உலகெங்கும் பரவி 5 கோடி மக்களைக் காவு கொண்டது. இப்போது உலகை அச்சுறுத்தி வரும் “பறவைக் காய்ச்சல்” (bird flu) அதுபோன்ற ஒரு கொள்ளை நோயாய் உருவெடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

மனிதர்களைப் போலவே பறவைகளுக்கும் காய்ச்சல் வரும். காட்டுப் பறவைகளில்தாம் “”பறவைக் காய்ச்ச”லுக்குக் காரணமான ஏ5ச1 எனும் வைரஸ் உருவாகிறது. எனினும் அப்பறவைகள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அவை புலம்பெயரும்போது “நாட்’டில் உள்ள நீர்நிலைகளிலும் மண்ணிலும், அவற்றின் எச்சங்களிலும் இந்த வைரûஸ விட்டுச் செல்கின்றன. அதிலிருந்து கோழி, வாத்து, வான்கோழி முதலான வீட்டுப் பறவைகளை வைரஸ் தொற்றும்போது, அவைகளால் நோயோடு போராட முடிவதில்லை. சமயங்களில் வீட்டுப் பறவைகள் வழியாக இந்த வைரஸ் மனிதர்களுக்கும் தாவுகிறது. ஆனால் இது மனிதர்களிட         மிருந்து  மனிதர்களுக்குத் தொற்றும் எதிர்கால சாத்தியங்கள் தாம் உலகைக் கவ்வியிருக்கும் அச்சத்திற்குக் காரணம். மற்ற ஃப்ளு காய்ச்சல்களைப்போல தும்முவதாலும் இருமுவதா லும் “பறவைக் காய்ச்ச”லும் பரவத் தொடங்கி னால், இந்த முற்றிலும் புதிய நோய்க்கான யாதொரு எதிர்ப்புச் சக்தியுமில்லாத மனித குலம் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.

1997-இல் ஹாங்காங்கில்தான் இந்த வைரஸ் முதன் முதலாகப் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியது. ஆறு பேர் உயிரிழந்தனர். அப்போது நகரிலிருந்த 15 லட்சம் கோழிகளைக் கொன்றது ஹாங்காங் அரசு. நோய் பரவுவது தடுக்கப்பட்டது. ஆனால் வைரஸ் மீண்டும் 2003-இல் தலைதூக்கியது. 2004 ஜனவரியில் தென்கொரியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் தாய்லாந்தின் கோழிகளிடம் நோய் தொற்றியது. பிப்ரவரியில் கம்போடியா, சீனா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. ஜூலையில் மற்றுமோர் அலை உயர்ந்தது. இம்முறை மலேசியாவும் பாதிக்கப்பட்டது. 2005 மே-இல் மேற்குச் சீனத்தின் சிங்ஹாய் ஏரியில் ஆயிரக்கணக்கான நீர்ப் பறவைகள் இறந்து போயின. ஜூலையில் வைரûஸச் சுமந்த பறவைகள் ரஷியாவிலும், மத்திய ஆசியாவின் கஜகஸ்தானிலும் மடிந்தன. அக்டோபரில் வைரஸ் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவை அடைந்தது.

சீனாவின் சிங்ஹாய் ஏரியிலிருந்து பட்டைத் தலை வாத்துகள் (bar headed geese) குளிர்காலத்தில் இந்தியாவுக்குப் புலம்பெயரும். இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் ஐ.நா.வின் உணவு – வேளாண்மை அமைப்பின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளர் மானேந்தர் ஓபராய். புலம் பெயரும் பறவைகளின் எச்சங்களை போபாலில் உள்ள விலங்கு நோய்ச் சோதனைச் சாலைக்கு அனுப்புமாறு எல்லாச் சரணாலயங்களையும் வேளாண்மை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடெங்கிலுமிருந்து கோழிகளின் ரத்த மாதிரிகள் போபாலில் அவ்வப்போது சோதிக்கப்படுகின்றன. உலகின் தலைசிறந்த சோதனைச் சாலைகளில் இது ஒன்று. இந்தியாவில் ஏ5ச1 வைரஸின் அறிகுறிகள் இல்லாததால் இடைவிட்டுப் பரிசோதிப்பது போதுமானது என்பதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொள்கிறது. ஆனால் அதன் இந்தியப் பிரதிநிதி சலீம் ஹபயேப், இந்தியாவில் கோழிகள் கொல்லப்படும் இடங்களில் உள்ள தூய்மைக் குறைவு குறித்து கவலை தெரிவிக்கிறார்.

“பறவைக் காய்ச்சல்” ஒரு கொள்ளை நோயாய் உலக நாடுகள் பலவற்றுள் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால் ஸ்பானிய ஃப்ளு பரவிய 1918-ஐக் காட்டிலும் இப்போதைய அறிவியல் முன்னேற்றம் அழிவைக் குறைக்கும். இதற்கு அரசாங்கங்களும் கோழி வளர்ப்போரும் மக்களும் செய்ய வேண்டியதை வல்லுநர்கள் பட்டியலிடுகின்றனர். அவற்றுள் சில: கோழிப் பண்ணைகள் மூடிய கட்டடங்களில் இருக்க வேண்டும். வளர்ப்பிடங்களிலும் கொல்லும் இடங்களிலும் தூய்மை வேண்டும். பறவைகளைக் கையாளுவோருக்கு கையுறை முதலான பாதுகாப்பு வேண்டும். நோயால் மரித்த கோழிகளைத் தவிர்க்க வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட உயிர்க் கோழிகளாலும், முட்டைகளாலும் யாதொரு கேடும் இல்லை. சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, புகைபிடிக்காமை போன்றவற்றால் தனிநபர்கள் தங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட முடியும். மருந்துகள், கவசங்கள், முகமூடிகள், படுக்கைகள் போன்றவற்றை மருத்துவத் துறை சேர்த்து வைக்க வேண்டும். அரசாங்கங்கள் வெளிப்படைத் தன்மையுடனும் தலைமைப் பண்புடனும் இயங்க வேண்டும். அவசியம் நேர்ந்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். “நியூஸ் வீக்’ இதழின் செய்தியாளர் ஜெர்ரி ஆட்லர் எழுதுகிறார்: “”யாரும் கலவரமடைய வேண்டியதில்லை; ஆனால் எல்லோரும் தயாராய் இருப்பது நல்லது”.

(கட்டுரையாளர் ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்). 

-தினமணி நவம்பர் 9, 2005

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: