உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்

மு. இராமனாதன்

First published in Dinamani on Tuesday, February 7, 2006

கிரோசோவிரே எனும் கிராமம் பிரான்சில் உள்ளது. இங்கு வசிக்கும் டிபேர் லெஃப்ரே ஒரு விவசாயி. 45 ஹெக்டேர் நிலத்தில் கோதுமையும், சோளமும், சணலும் பயிரிடுகிறார். இவரது 110 பசுக்களைக் கறப்பதற்கு கணினிமயப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளன. 10,000 லிட்டர் பால் வரை பாதுகாக்கத் தக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் இவரது பண்ணையில் உள்ளன. ஓய்வு நேரங்களில் பிரெஞ்சு இலக்கியம் படிக்கிறார் லெஃப்ரே. 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் லெஃப்ரேயைப் போன்ற விவசாயிகள் மிகுதி. இவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்குகிறது. விவசாய மானியங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்து அமெரிக்கா வருகிறது. இந்த மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட விளைபொருள்களோடு வளரும் நாடுகளாலும், ஏழை நாடுகளாலும் போட்டியிட முடிவதில்லை. இந்தப் பிரச்சினையே ஹாங்காங்கில் டிசம்பர் மத்தியில் நடைபெற்ற உலக வணிக அமைப்பின் (World Trade Organisation – WTO) அமைச்சரவை மாநாட்டில் பிரதானமாக விவாதிக்கப்பட்டது. இதுவே ஜனவரி இறுதியில் ஸ்விட்சர்லாந்தின் டாவோசில், அமைப்பின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டிலும் மையப் பிரச்சினையாக இருந்தது. வளரும் நாடுகளில் குரலை, சமச்சீரற்ற வணிகக் கொள்கையை கைக்கொள்ளும் செல்வந்த நாடுகளால் அதிக காலம் புறக்கணிக்க முடியாது என்பதை இம்மாநாடுகள் உணர்த்தின.

இப்போது 150 உறுப்பு நாடுகளைக் கொண்டிருக்கும் WTO அமைப்பில், இந்தியா தொடக்க காலம் முதலே உறுப்பினராக இருந்து வருகிறது. 2001-இல் சீனா இணைந்தது. ரஷியாவும் வியட்நாமும் விரைவில் இணையும். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் WTO 1995-இல் நிறுவப்பட்டது. அதற்கு முன்பிருந்த “காட்’ (General Agreement on Tariffs and Trade – Gatt) எனும் அமைப்பின் மறு உருவாக்கமே WTO. 1993-இல் காட் அமைப்பின் மாநாடு உருகுவேயில் நடந்தது. உருகுவே சுற்றுத் தீர்மானம் அமலுக்கு வரும் வரை, அமைப்பின் எல்லைக்கு வெளியேதான் வேளாண்மை இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட செல்வந்த நாடுகள் நீண்ட காலமாகவே வேளாண்மையைப் போற்றி வருகின்றன. முதலாவதாக தமது விவசாயிகளுக்கு எண்ணற்ற மானியங்களை வழங்குகின்றன. இரண்டாவதாக, இறக்குமதியில் ஒதுக்கீடு செய்கின்றன. அதாவது, எந்தெந்த நாடுகள், என்னென்ன பொருள்களை எந்த அளவிற்கு தமது சந்தையில் விற்கலாம் என்று முன்னதாகவே நிர்ணயம் செய்கின்றன. மூன்றாவதாக, அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருள்களுக்கும் அதீதமான இறக்குமதித் தீர்வை விதித்து, தமது சந்தையில் இறக்குமதிப் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கின்றன. கடைசியாக, தத்தமது நாட்டின் விளைபொருள்களுக்கு ஏற்றுமதி மானியம் வழங்குவதன் மூலம் உலகச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்கின்றன.

இதைப் போலவே செல்வந்த நாடுகள், உற்பத்திப் பொருள்களுக்கான தமது சந்தையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஆடைகளையும், சாக்லேட்டையும் விற்பதற்கு ஒதுக்கீடுகளும் தீர்வைகளும் விதிப்பதால், ஏழை நாடுகள் பருத்தியையும், கொக்கோவையும் மட்டுமே விற்க முடிகிறது. ஆப்பிரிக்க வணிகத் தகவல் மையம் எனும் அமைப்பின் கென்யா ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ஓடேர் ஓங்வென் சொல்கிறார்: “”கென்யா மேற்கு நாடுகளுக்கு ஒரு கிலோ காப்பிக் கொட்டையை 12 சென்டிற்கு (ரூ. 5.40) விற்கிறது. ஒரு கிலோ கொட்டையில் 200 கோப்பை காப்பி தயாரிக்க முடியும். மேற்கு நாடுகளில் இதன் விலை 600 டாலர் (ரூ. 27,000)”.

உருகுவே சுற்றில் செல்வந்த நாடுகள் வேளாண் துறையில் நிலவும் சமனற்ற சந்தையை நிகர் செய்யக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன. மேலும், தமது சந்தையைப் பிற நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நாளடைவில் திறந்து விடவும் அவை ஒப்புக் கொண்டன. அதற்குப் பிரதிபலனாக தாம் முன்னணியில் விளங்கும் தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைத் துறைக்கு, வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் வாசல் திறக்க வேண்டுமெனக் கோரின. “”சேவைத் துறையில் வளரும் நாடுகளின் கதவுகள் கணிசமாகத் திறந்தன. ஆனால் வேளாண்மைத் துறையில் செல்வந்த நாடுகள் இன்னும் தமது பாதுகாப்புக் கவசங்களைக் களையவில்லை” என்கிறார் நோபல் விருது பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் ஜோசப் ஸ்டிகிளிட்ஸ்.

1999 முதல் WTO வின் அமைச்சரவை மாநாடுகள் இரண்டாண்டிற்கு ஒரு முறை நடைபெறுகின்றன. 1999-இல் அமெரிக்காவின் சியாட்டிலில் நடைபெற்ற மாநாட்டில் வளரும் நாடுகளின் அமைச்சர்கள் கடுமையான பேரத்தில் ஈடுபட்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் WTO-விற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். மாநாடு தோல்வியடைந்தது. 2001-இல் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடந்த மாநாட்டில் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு வணிகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதற்கான கால வரையறை 2005 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டு மாநாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய வளரும் நாடுகளின் குரல் முதன்மையானது.

ஆகவே டிசம்பர் 2005-இல் ஹாங்காங்கில் நடந்த மாநாடு அதிகம் கவனிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் உலகின் 80 சதவீத மக்கள்தொகையை உள்ளடக்கிய 110 வளரும் மற்றும் ஏழை நாடுகள் ஜி – 110 எனும் கொடியின் கீழ் முதன் முறையாக ஒன்றுபட்டன. நெடிய பேச்சு வார்த்தைகளின் முடிவில் சில இணக்கங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் தமது வேளாண் பொருள்களுக்கு வழங்கி வரும் ஏற்றுமதி மானியங்களைப் படிப்படியாக 2013-க்குள் அகற்றிக் கொள்ளச் சம்மதித்தது. தமது விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் மானியங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 22,500 கோடி இருக்கும் என்று மதிப்பிடுகிறார் கொலம்பியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த் பானக்ரியா. ஒன்றியம் தமது விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் மானியத்தில் இது வெறும் 2 சதவீதமே இருக்கும் என்கிறார் அவர். ஆகவே இதை ஒரு பாய்ச்சலாகக் கருத முடியாது. ஆனால் சரியான திசையில் வைக்கப்படும் சிறிய அடி வைப்பாகக் கொள்ளலாம். அமெரிக்காவும் பருத்திக்கு வழங்கி வரும் அபரிமிதமான மானியங்களை படிப்படியாக விலக்கிக் கொள்ள முன் வந்திருக்கிறது.

மேலும் 50 ஏழை நாடுகளின் 97 சதவீதம் உற்பத்திப் பொருள்களுக்கு தீர்வைகளையும் ஒதுக்கீடுகளையும் அகற்றிக் கொள்ளச் செல்வந்த நாடுகள் முன் வந்திருக்கின்றன. ஆனால் இதில் ஏராளமான விதிவிலக்குகளுக்கும் வழி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கா ஆடை இறக்குமதிக்கும், ஜப்பான் அரிசி இறக்குமதிக்கும் விலக்களிக்கக் கோரும். எனினும், இதில் ஏழை நாடுகள் உற்பத்திப் பொருள்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய வழி பிறந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இனி ஏழை நாடுகள் உணவைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவும். இப்படி பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு செல்வந்த நாடுகள் விதித்து வந்த தீர்வை இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

செல்வந்த நாடுகளின் விவசாய மானியங்களுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பும் இருக்கிறது. பிரெஞ்சு விவசாயி டிபேர் லெஃப்ரே போன்றவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களிடம், தங்கள் அரசுகளின் வேளாண்மைக் கொள்கை குறித்து அதிருப்தி நிலவுகிறது. இதனால் சேவைத் துறையிலும் தொழிற் துறையிலும் தங்களால் பரந்துபட்ட உலகச் சந்தையை அடைய முடியவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். ஆயினும், செல்வந்த நாடுகளின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் விவசாய மானியங்களை ஆதரிக்கவே செய்கின்றனர். எனினும், உலகின் 80 சதவீத மக்களின் நலனைப் புறக்கணிக்கும் வேளாண்மைக் கொள்கைகளை நெடுங்காலம் கைக்கொள்ள முடியாது என்பதும் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் கடும் போராட்டத்திற்குப் பிறகும் சிறிய வெற்றிகளையே ஈட்ட முடிகிறது. ஆனால் அமைப்பிற்குள் இருந்தபடியே போராடித்தான் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். சிலியின் வெளியுறவு அமைச்சர் இக்னேசியா வால்கர் சொல்கிறார்: “இப்போது தெற்கு (ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்) கட்டற்ற வணிகத்தை ஆதரிக்கிறது. வடக்கு (அமெரிக்கா, ஐரோப்பா, கனடா) பாதுகாப்பு வளையங்களுக்குள் பதுங்குகிறது”.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

-தினமணி பிப்ரவர் 7, 2006

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: