பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…

மு. இராமனாதன்

First published in Dinamani on Friday, March 3, 2006

பிப்ரவரி 18 பிற்பகல் மணி 2. போபாலின் உலகப் பிரசித்தி பெற்ற விலங்கு நோய்ச் சோதனைச் சாலை. மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் மாவட்டம் நவபூரிலிருந்து பெறப்பட்ட 12 கோழிகளின் ரத்த மாதிரிகளைச் சோதித்ததில், அவற்றுள் எட்டில் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ5ச1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினங்களில் நவபூர் பண்ணைகளில் சுமார் 40,000 கோழிகள் இறந்து போயிருந்தன. அடுத்த சில தினங்களுக்கு உலக ஊடகங்களின் வெளிச்சம், பற்றாக்குறை மின்சாரமும் பழுதுபட்ட சாலைகளும் உள்ள இந்தியாவின் எண்ணற்ற சிறு நகரங்களுள் ஒன்றான நவபூரின் மீது பரவியது. நவபூரும் அதன் 3 கி.மீ. சுற்றளவில் உள்ள 19 கிராமங்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டன. சுமார் 8 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன. சுமார் 100 கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். பரிசோதிக்கப்பட்ட 95 மனித ரத்த மாதிரிகளில் யாதொன்றிலும் H5N1 வைரஸ் இல்லையென பூனேயின் தேசிய வைரஸ் ஆய்வுக் கழகம் பிப்ரவரி 24 அன்று அறிவித்தபோது, இந்தியாவில் பறவைக் காய்ச்சல் இதுவரை மனிதர்களுக்குத் தொற்றவில்லை என்பது உறுதியானது.

காட்டு வாத்துகள், அன்னப் பறவைகள் முதலான வன-நீர்ப் பறவைகள் (Wild waterfowls) புலம் பெயரும் பாதைகளில் இந்த வைரûஸ தம் எச்சங்களில் விட்டுச் செல்கின்றன. அதிலிருந்து கோழி, வாத்து முதலான வீட்டுப் பறவைகளுக்கும் நோய் பரவுகிறது. வனப் பறவைகளை அதிகம் பாதிக்காத வைரஸ், வீட்டுப் பறவைகளைக் கூட்டாகத் தாக்குகிறது. டிசம்பர் 2003 முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நோய் பரவி வருகிறது. தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் கோழிகள் வரிசையாக பாதிக்கப்பட்டன. 2005 அக்டோபரில் வைரஸ் ஐரோப்பாவை அடைந்தது. துருக்கி, ருமேனியா, குரேசியாவின் வீட்டுப் பறவைகளிடம் வைரஸ் கண்டறியப்பட்டது. 2006 பிப்ரவரியில் ஆப்பிரிக்காவைத் தன் நீண்ட அலகால் தீண்டியது வைரஸ்; நைஜீரியாவின் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. இதே மாதம் பல்கேரியா, கிரீஸ், இத்தாலி, ஹங்கேரி முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வைரஸ் பரவிய போதும், பாதிக்கப்பட்டது வனப் பறவைகளே. ஆனால் தொடர்ந்து வைரஸ் பிரான்ஸில் பரவியபோது ஆயிரக்கணக்கான வான் கோழிகள் மடிந்தன. இதேவேளையில் நவபூர் மற்றும் சூரத்தின் கோழிகள் நோயால் பீடிக்கப்பட்டு மரித்தன.

பறவைக் காய்ச்சல் தலை காட்டும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ள வீட்டுப் பறவைகள் கொல்லப்படுகின்றன. இதுவரை அப்படி உயிரிழந்தவை 14 கோடிக்கும் மேல். 1997-ல் இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கும் தொற்றக் கூடுமென்பது ஹாங்காங்கில் புலனாகியது. பல நாடுகளில் பறவைகள் பாதிக்கப்பட்ட போதும், 6 நாடுகளில்தான் பறவையினின்றும் மனிதர்களுக்கு நோய் தொற்றியிருக்கிறது. அவை: இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, சீனா மற்றும் துருக்கி. பாதிக்கப்பட்டோர்: 170 பேர். நுரையீரலைத் தின்ற நோயின் கடுமைக்கு 92 பேர் பலியாயினர்.

பறவைகளை நேரடியாகக் கையாளுவோரையே வைரஸ் தீண்டியிருக்கிறது. உலகெங்கும் எண்ணற்ற கோழிப் பண்ணைகள் உள்ளன. பல வீடுகளின் புழக்கடைகளில் பறவைகள் வளர்கின்றன. இவற்றைப் பராமரிப்பவர்களும் கொல்பவர்களும் அநேகம். ஆயின் இதுவரை 170 பேரே நோய் வாய்ப்பட்டிருப்பதால், இந்த வைரஸ் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு எளிதில் தொற்றுவதில்லை எனலாம். ஆனால் எல்லா வைரஸ்களும் தம்மை மாற்றிக் கொண்டேயிருக்கின்றன. H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதனை, பிற பொதுவான வைரஸýம் தாக்கும்போது, இவை இரண்டும் இணைந்து, H5N1 வைரஸ் தன்னைப் புது விதமாய் எதிர்காலத்தில் மாற்றிக் கொள்வது உறுதி என்கின்றனர் பல விஞ்ஞானிகள். அப்படி மாற்றம் கொண்ட வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வெகு வேகமாகப் பரவும் என்பதுதான் மருத்துவ உலகைக் கவ்வியிருக்கும் அச்சம். இந்தப் புதிய வைரஸிற்கு எதிர்ப்பு சக்தியில்லாத மனிதகுலம் பேரிழப்பைச் சந்திக்கும். அது கொள்ளை நோயாய் உருவெடுக்கும். ஆனால் இது எப்போது நிகழும்? எங்கே தொடங்கும் என்பதை யாராலும் தீர்மானமாய்ச் சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு நூற்றாணடிலும் மூன்று நான்கு முறையேனும், மனிதர்களுக்கு எதிர்ப்பு சக்தியில்லாத புதிய வைரஸýடன் வந்து கொள்ளை நோய் தாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 1918-இன் ஸ்பானிய ஃப்ளுவில் 5 கோடிப் பேர் மாண்டனர். இதில் பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் இருக்கும். 1957-இன் ஆசிய ஃப்ளுவில் 20 லட்சம் பேரும், 1968-இன் ஹாங்காங் ஃப்ளுவில் 10 லட்சம் பேரும் மடிந்தனர். அடுத்த கொள்ளை நோய் பறவைக் காய்ச்சலாக இருக்குமென்பது வல்லுநர்களின் கணிப்பு.

H5N1 வைரûஸ அண்ட விடாமல் தடுக்கக்கூடிய மருந்தை (Vaccine) உருவாக்குவதில் சில நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் வைரஸ் எங்ஙனம் மாற்றம் கொள்ளும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை. கொள்ளை நோய் பரவத் தொடங்கியபின் ஆராய்ச்சி, சோதனை, உற்பத்தி என்று பல கட்டங்களைக் கடந்து, தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு மாதங்கள் பிடிக்கும். நோயை எதிர்க்க மருந்து (anti – viral drug) உண்டா? உண்டு. டாமிஃப்ளு (Tamiflu) எனும் மாத்திரையை நோயின் ஆரம்பக் கட்டத்தில் உட்கொண்டால் பலனிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆயின் டாமிஃப்ளுவின் தயாரிப்பு முறை சிக்கலானது. மருந்தின் கையிருப்பும் குறைவு. அவற்றையும் 30 நாடுகள், மிகுதியும் செல்வந்த நாடுகள் வாங்கி வைத்திருக்கின்றன. ஸ்விட்சர்லாந்து தயாரிப்பு நிறுவனமான ரோச்சே இதைத் தயாரிக்க முன்வரும் பல நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறது. ரோச்சேயின் முழு ஆற்றலைப் பயன்படுத்தினாலும் அடுத்த பத்தாண்டுகளில் உலகின் 20 சதவீத மக்களுக்கான மருந்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இதன் விலையும் அதிகம். 5 தினங்கள் பயன்படுத்தக்கூடிய 10 மாத்திரைகள் (1 “டோஸ்’) அடங்கிய பட்டியின் விலை ரூ. 3000.

டாமிஃப்ளு தயாரிப்பு உரிமத்திற்காக ரோச்சேயை இந்தியாவின் மருந்து நிறுவனமான சிப்லா அணுகியது. இப்போது அனுமதி இல்லாமலே சுயமாக டாமிஃப்ளுவைத் தயாரிக்கிறது சிப்லா. இந்தியச் சந்தை மட்டுமன்றி 49 நாடுகளுக்கு 1 பட்டி ரூ. 1000 எனும் விலையில் விற்கப் போவதாகவும் அது அறிவித்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் சிப்லாவின் விலை குறைந்த எய்ட்ஸ் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் தற்போது 50,000 “டோஸ்’ டாமிஃப்ளு கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் 1 லட்சம் “டோஸ்’ உடனடியாக வாங்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறது.

நன்கு சமைக்கப்பட்ட கோழிகளை உட்கொள்ளலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இறைச்சியின் அனைத்துப் பகுதிகளும் 70 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும்போது வைரஸ் மடிந்து போகும். முட்டைகளையும் நன்கு வேக வைப்பது நல்லது; எனினும், கோழிகளையோ அவற்றின் இறகுகளையோ எச்சங்களையோ தொடாதிருப்பது நலம். அங்ஙனம் தொட நேர்ந்தால் கைகளை சோப்பிட்டுக் கழு வேண்டும். கோழிகளை வளர்ப்போரும் விற்போரும் கையுறைகள் அணிய வேண்டும். பறவைகளை மூடிய கூடுகளிலோ கட்டடங்களிலோ வைத்திருக்க வேண்டும். உலகிலெங்கும் இதுவரை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவவும் இல்லை. எனினும் அரசும் மக்களும் கவனமாய் இருக்க வேண்டும். நவபூரைக் கட்டுக்குள் கொணர்ந்ததில் கால்நடை, சுகாதாரம், பொதுப்பணி, வனம், நிதி, பஞ்சாயத்து ராஜ், சுற்றுச்சூழல் போன்ற பல துறைகள் ஒருங்கிணைந்தன. ஓர் அவசர நிலையைத் தன்னால் கையாள முடியும் என்று உலகுக்கு உணர்த்தியிருக்கிறது இந்தியா.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).

-தினமணி மார்ச் 3, 2006

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: