சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்

மு. இராமனாதன்

First published in Dinamani on Thursday, April 20, 2006

சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலருமாகிய ஹூ சின்டாவ் இன்று (ஏப்ரல் 20) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்திக்கிறார். செப்டம்பர் 2005-ல் திட்டமிடப்பட்ட இந்தச் சந்திப்பு, சூறாவளி கத்ரீனாவினால் தள்ளிப் போனது. உலகின் ஒரே வல்லரசும் அதி வேகமாக வளரும் பொருளாதாரமும் முரண்படுகிற புள்ளிகள் அதிகம். இந்தச் சந்திப்பு இடைவெளிகளை நிரப்புமா? ஹூவிடம் புஷ் என்ன கேட்கப் போகிறார்? ஏப்ரல் துவக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் பேச்சு வார்த்தைகளின் நிரலில் இடம் பெறவிருப்பவை குறித்து கோடி காட்டினார். ரைஸின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறுவது – வணிக முரண்பாடுகள். கடந்த சில வாரங்களாக பெய்ஜிங்கிலும் வாஷிங்டனிலும் நிகழும் பூர்வாங்கப் பேச்சு வார்த்தைகளும் இதையே காட்டுகின்றன.

“உலகின் தொழிற்சாலை’ என்றழைக்கப்படும் சீனாவின் விலை குறைந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள்களும், பொம்மைகளும், காலணிகளும், ஆடைகளும் அமெரிக்காவின் வீடுதோறும் நிரம்பி வழிகின்றன. சீனாவின் ஏற்றுமதி, அது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும் ரூ. 9 லட்சம் கோடி அதிகம். இந்த வணிக உபரிக்கு ஒரு முக்கியக் காரணியென அமெரிக்கா சுட்டி வருவது, சீன நாணயமான யுவான் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக மிகக் குறைவாக மதிப்பிடப்படுகிறது என்பதாகும். இதனால் தங்கள் பொருள்களைக் குறைந்த விலையில் சீன ஏற்றுமதியாளர்களால் விற்க முடிகிறது. இது ஒரு தலைப்பட்சமானது என்கிறது அமெரிக்கா. கடந்த பத்தாண்டு காலமாக தனது நாணய மதிப்பை 1 டாலருக்கு 8.28 யுவான் எனும் அளவீட்டில் நிறுத்தி வைத்திருந்த சீனா, நிர்பந்தங்களுக்குப் பணிந்து தனது பிடிவாதத்தைச் சற்று தளர்த்தியது. தற்போதைய மதிப்பு 1 டாலருக்கு சுமார் 8 யுவான். செனட் உறுப்பினர்கள் சார்லஸ் ஷும்மர் மற்றும் லிண்ட்úஸ கிரகாம் இந்த நடவடிக்கைகளால் திருப்தியுறவில்லை. முன்னவர் ஜனநாயகக் கட்சியின் நியூயார்க் உறுப்பினர். பின்னவர் குடியரசுக் கட்சியின் தெற்குக் கரோலினா பிரதிநிதி. எதிரெதிர் முகாம்களிலிருந்த போதும் சீன எதிர்ப்பில் இவர்கள் ஒன்றுபட்டனர். சீனா தனது நாணயத்தை மறு மதிப்பீடு செய்யவில்லையெனில், சீனாவின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் 27.5 சதவீதம் தீர்வை விதிக்க வேண்டுமென ஒரு மசோதாவை இவர்கள் இருவரும் முன்மொழிந்தனர். இதற்குக் கணிசமான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. மசோதா ஏப்ரல் முதல் வாரத்தில் வாக்கெடுப்பிற்கு வரவிருந்தது. ஆனால் மார்ச் இறுதியில் செனட் உறுப்பினர் இருவரும், சீனத் துணைப் பிரதமர், வணிக அமைச்சர் முதலியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் மசோதாவைத் தாற்காலிகமாகப் பின்வலித்துக் கொண்டனர்.

ஷும்மர் – கிரகாமின் மசோதா நிறைவேறி சட்டமாகியிருந்தால் சீன ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல, அதிக விலையால் அமெரிக்கப் பயனீட்டாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சீனாவின் வணிக உபரிக்கு அதன் தொழிலாளர்கள் பெறும் குறைந்த கூலியும், குறைந்த தயாரிப்புச் செலவுமே முக்கியக் காரணிகள் என்கிறது சீனா. அமெரிக்கர்கள் சீனப் பொருள்களை வாங்கிக் குவிப்பதையும், சேமிப்பில் அவர்களுக்கு ஆர்வமில்லாததையும் மற்ற காரணிகளாகச் சுட்டுகின்றனர் மேல் நாட்டு வல்லுநர்கள். எனினும் யுவானின் மதிப்பு சீரமைக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருவதைச் சீனாவின் மைய வங்கி மறுக்கவில்லை. ஆனால் இதைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கிறது வங்கி.

அபரிமிதமான வணிக உபரிக்கு மற்றொரு காரணமென அமெரிக்கா குற்றஞ்சாட்டுவது: சீனாவின் அறிவுசார் சொத்துரிமை மீறல் (intellectual property right violation). “அதிகமான கணினிகளை வாங்குவதில் சீனா உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனால் மென்பொருள்களை வாங்குவதிலோ 25-ஆம் இடத்தில் இருக்கிறது” என்றார் மார்ச் இறுதியில் பெய்ஜிங் வந்திருந்த அமெரிக்க வணிகச் செயலர் கார்லோஸ் குட்டிரஸ். திருட்டு மென்பொருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதே காரணம். இழ்ஹள்ட், இஹல்ர்ள்ங், ஆழ்ர்ந்ங்க்ஷஹஸ்ரீந் ஙர்ன்ய்ற்ஹண்ய் – இவை சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் படங்கள். உலகின் பல திரையரங்குகளில் இப்போதும் ஓடுபவை. ஆனால் இவற்றின் டிஜிடல் குறுந்தகடுகள் சீன மொழித் துணைத் தலைப்புகளோடு பெய்ஜிங் வீதிகளில் ரூ. 45-க்குக் கிடைக்கின்றன என்கிறார் செய்தியாளர் ராபர்ட் மார்க்குவாண்ட். இன்னும் புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆடை வகைகள், காலணிகள், கைப்பைகள், பர்ஸ்கள் போன்றவற்றின் அசலை ஒத்த போலிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே விற்கப்படுவது மட்டுமல்ல, மாஸ்கோ, வார்ஸô, பாங்காக் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் எழுதுகிறார் அவர்.

சமீபகாலம் வரை சிவில் குற்றமாக இருந்த அறிவுசார் சொத்துரிமைத் திருட்டை தற்போது கிரிமினல் குற்றமாக ஆக்கியிருக்கிறது சீன அரசு. சுமார் 9 கோடிக்கும் அதிகமான பொருள்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலின் விளைவாகக் கைப்பற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் தேசியக் காப்புரிமை அமைப்பின் ஆணையர். இந்த நடவடிக்கைகளை வரவேற்ற குட்டிரஸ், இவை போதுமானதில்லை என்றும் சொல்லத் தவறவில்லை.

தலைவர்களின் சந்திப்பு நிகழும் தருணம் சீனாவிற்குச் சாதகமாக இல்லை. நவம்பரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு அமெரிக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. “சீனாவின் எல்லையற்ற ஏற்றுமதி, அமெரிக்கப் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் பெரிதும் பாதிக்கிறது’ என்பது தேர்தல் களத்தில் எளிதில் செல்லுபடியாகும் பிரசாரம். இந்தச் சூழலில் புஷ்ஷின் நிர்வாகம், சீனாவோடு கடுமையாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வது அவசியம் என்று கருதக் கூடும். பதிலுக்கு சீனாவின் நிலைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பதற்கு ஹூவின் அரசு முயற்சிக்கும். மார்ச் இரண்டாம் வாரத்தில் சந்திப்பிற்கான நாள் குறிக்கப்பட்ட உடனேயே உரசல்கள் வெளித் தெரியலாயின. சீனா இதை அரசு முறைப் பயணம் (நற்ஹற்ங் ஸ்ண்ள்ண்ற்) என்கிறது. அமெரிக்காவோ இதை அதிகாரபூர்வப் பயணம் (ர்ச்ச்ச்ண்ஸ்ரீண்ஹப் ஸ்ண்ள்ண்ற்) என்று மட்டுமே சொல்கிறது.

ஜூலை 2005-ல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வெள்ளை மாளிகையில் ஒரு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. புஷ் பதவியேற்ற பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஐந்து சிறப்பு விருந்துகளே அளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய – அமெரிக்க உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்களை சீனா அவதானித்து வருகிறது. மார்ச் 1 அன்று புதுதில்லியில் புஷ்ஷும் மன்மோகன் சிங்கும் ஒப்பமிட்ட அணுவிசை ஒப்பந்தத்தைச் சில சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை சமன் செய்வதற்காக, அமெரிக்கா இந்தியாவைப் பயன்படுத்துவதாக, பல மேற்கு ஊடகங்கள் எழுதின. ஆனால் இந்தியத் தலைவர்கள் இந்த ஒப்பந்தம் சீனாவிற்கு எதிரானதில்லை என்று வலியுறுத்தினர். மாறிவரும் இந்திய – அமெரிக்க நட்புறவை, பேச்சுவார்த்தைகளின்போது சீனா கவனத்தில் கொள்ளும்.

அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்வதன் மூலம் உறவுகளில் நிலவும் இறுக்கத்தைக் குறைப்பது சீனாவின் நோக்கம். ஆனால் இவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் என்கிறார் ஹாங்காங் பத்திரிகையாளர் ஃபிராங் சிங்.

வணிக உறவுகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? சீனா தனது நாணய மாற்றுக் கொள்கையைத் திறந்த மனத்துடன் அணுக வேண்டும். போலிப் பொருள்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். அமெரிக்கா தனது சேமிப்பை அதிகரிக்க வேண்டும். சீனப் பொருள்களை வாங்குவதில் கட்டுப்பாடுகளையும் தீர்வைகளையும் தளர்த்த வேண்டும். ஆனால் தேர்தல் நேரத்தில் பலியாடுகளை இனங் காண்பது பொருளாதாரக் கொள்கைகளை விளக்குவதைப் பார்க்கிலும் சுலபமானது. சீனாவிற்கும் தனது தொழிலையும் வணிகத்தையும் ஒழுங்குபடுத்துவதைக் காட்டிலும் அமெரிக்காவைக் குறை கூறுவது எளிதானது. ஆதலால் சீன அதிபரின் சந்திப்பால் உறவுகளில் பெரும் மாற்றங்கள் நேரும் என்று தோன்றவில்லை.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

-தினமணி ஏப்ரல் 20, 2006

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: