மு. இராமனாதன்
First published in Dinamani on May 31, 2006
திருவிழா முடிந்துவிட்டது. தோரணங்கள், கட் – அவுட்கள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் இன்னமும் காற்றில் மிச்சமிருக்கும் இலவச வாக்குறுதிகள் சில தினங்களுக்கேனும் ஞாபகத்தில் இருக்கும். எல்லாத் தேர்தல்களையும் போலவே இந்த முறையும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பொதுநல ஆர்வலர்கள் எழுப்பிய குரலை ஒலிபெருக்கிச் சத்தங்களுக்கிடையிலும் கேட்க முடிந்தது. அவற்றுள் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்பட்டன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதாம். அதேவேளையில் இப்போதைய தேர்தல் முறைக்கு மாற்றான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation-PR) குறித்தும் சிலர் பேசவே செய்தனர். கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதத்தில் இடங்களைப் பெறுவது என்பதுதான் PR முறையின் சாரம்.
இப்போதைய தேர்தல் முறையில் ஒரு தொகுதிக்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிகபட்ச வாக்குகளைப் பெறுகிற வேட்பாளர் வாகை சூடுகிறார். இது நேரடியானது, பழக்கமானது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைச் சுவீகரித்த இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளிலும், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்போதும் அமலில் இருப்பது. ஆகவே, பல ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் டத முறை நமக்கு அன்னியமானதாகத் தெரிகிறது. டத முறையில் பல வகைகள் இருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் PR முறையின் ஆதார விதி எளிதானது. எல்லாக் கட்சிகளும் அவை பெறுகிற வாக்குகளுக்கேற்ப சட்டப்பேரவையில் இடம் பெற வேண்டும். அதாவது 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி, 100 இடங்கள் உள்ள பேரவையில் 40 இடங்களைப் பெற வேண்டும்.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி 44.73 சதவீத வாக்குகளும், அதிமுக அணி 40.06 சதவீதமும், விஜயகாந்தின் தேதிமுக 8.38 சதவீதமும் பெற்றன. மொத்தமுள்ள 234 இடங்களில் இந்த அணிகள் நியாயமாக முறையே 105, 94 மற்றும் 20 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடப்பு நேரடித் தேர்தல் முறையில் இவை பெற்ற இடங்கள் முறையே: 163, 69 மற்றும் 1. இதேபோல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 57 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக அணியினரால், எஞ்சிய 35 சதவீத வாக்குகள் மதிப்பிழந்து போயின. இந்த முறை அநீதியானது என்று அதிமுகவினர் பேசியதாகத் தெரியவில்லை. ஏனெனில், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 31 சதவீத வாக்குகளைப் பெற்று 132 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் ஆட்சி அமைக்கும் கட்சி, அவர்கள் பெறுகிற வாக்கு விகிதத்தைக் காட்டிலும் அதிகமான இடங்களைப் பெறுகிறது. எதிர்க்கட்சியின் நிலை நேரெதிர். ஆனால் இன்று பாதிக்கப்படும் கட்சி, நாளை இதே நேரடித் தேர்தல் முறையால் ஆட்சி பீடத்தை அடைய முடியும். இது பெரிய கட்சிகளுக்குச் சாதகமானது.
நேரடித் தேர்தலில் எப்போதும் பாதிக்கப்படுபவை சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள். இப்போதைய கூட்டணிகளால் சிறிய கட்சிகளின் உண்மையான பலம் புலப்படுவதில்லை. அவை தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்தாலும், அது வெற்றிக் கோட்டை அடைவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. மூன்றாவது அணியினர் வாக்குகளைப் பிரிக்கும் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் நியாயமான விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான் PR முறையின் ஆதார நோக்கமாக இருந்தபோதும், பல நாடுகளில் பலவிதமான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மிகுதியும் பின்பற்றப்படுவது “பட்டியல் வாக்கு முறை”. இதில் தொகுதிகள் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 10 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தொகுதியில் உள்ள மொத்த இடங்களுக்குப் போட்டியிடலாம். 5 இடங்கள் உள்ள தொகுதிக்கு 5 வேட்பாளர்களை ஒரு பட்டியலின் கீழ் அவை களத்தில் இறக்கலாம். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடலாம். வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கல்ல பட்டியலுக்கே வாக்களிப்பார்கள். எடுத்துக்காட்டாக, 5 இடங்கள் உள்ள தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன எனலாம். அப்போது ஓர் இடத்தைப் பெறுவதற்கு 1,00,000/5 = 20,000 வாக்குகள் தேவை. இது தொடக்க நிலை மதிப்பு எனப்படுகிறது. முதல் சுற்றில் பெறுகிற ஒவ்வொரு 20,000 வாக்குகளுக்கும் 1 இடம் கிடைக்கும். கீழே உள்ள அட்டவணையில் கண்டபடி, 38,000 வாக்குகளைக் கட்சி – 1 பெறுவதாகக் கொண்டால், முதல் சுற்றில் அது 1 இடத்தைப் பெறும். கட்சி – 1 பெற்ற வாக்குகளில் 20,000ஐக் குறைத்தால், கிடைக்கும் எஞ்சிய 18,000 வாக்குகள் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி – 2, 17,000 வாக்குகள் பெறுகிறது. அது தொடக்கநிலை மதிப்பைக் காட்டிலும் குறைவானதால், அது பெற்ற வாக்குகள் அனைத்தும் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி – 3 முதல் சுற்றில் 1 இடத்தைப் பெறும். இப்போது இரண்டாம் சுற்றில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி – 1இன் இரண்டாம் வேட்பாளரும், கட்சி – 2இன் முதல் வேட்பாளரும், பட்டியல் – 4இன் சுயேச்சை வேட்பாளரும் தேர்வு பெறுவர். இந்த முறையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் உள்ள இடைவெளி குறைவு என்பதை அட்டவணையில் காணலாம்
பட்டியல் எண் | கட்சி/சுயேச்சை | வேட்பாளர் எண்ணிக்கை | பெற்ற வாக்குகள் | முதல் சுற்றில் பெற்ற இடங்கள் | எஞ்சிய வாக்குகள் | இரண்டாம் சுற்றில் பெற்ற இடங்கள் | மொத்த இடங்கள் | வாக்கு சதவீதம் | ிடங்களின் சதவீதம் |
1 | கட்சி -1 | 5 | 38,000 | 1 | 18,000 | 1 | 2 | 38 | 40 |
2 | கட்சி -2 | 5 | 17,000 | – | 17,000 | 1 | 1 | 17 | 20 |
3 | கட்சி -3 | 5 | 22,000 | 1 | 2,000 | – | 1 | 22 | 20 |
4 | சுயேச்சை-1 | 1 | 19,000 | – | 19,000 | 1 | 1 | 19 | 20 |
5 | சுயேச்சை-2 | 1 | 4,000 | – | 4,000 | – | – | 4 | 0 |
100,000 | 5 | 100 | 10 |
அட்டவணை- பட்டியல் வாக்கு முறை
பதிவான வாக்குகள்:1,00,000, இடங்கள்:5,
தொடக்க நிலை மதிப்பு:20,000
இந்த எடுத்துக்காட்டில் வேட்பாளர்களின் வரிசை, கட்சிகள் முன்னதாகவே நிச்சயித்துக் கொள்வதாகும். இது “நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் வாக்கு முறை” எனப்படுகிறது. பட்டியலைத் தேர்வு செய்வதோடு, குறிப்பிட்ட பட்டியலில் உள்ள வேட்பாளர்களுள் ஒருவரையும் தெரிவு செய்வது “திறந்த பட்டியல் வாக்கு முறை” எனப்படும். ஒவ்வொரு பட்டியலிலும் தேர்வு பெறத் தகுதியானவர்களின் எண்ணிக்கை மேற்சொன்ன முறையில் தீர்மானிக்கப்படும். பின்னர் குறிப்பிட்ட பட்டியலில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவாவார்.
பட்டியல் வாக்கு முறையின் மாறுபட்ட வடிவங்களே, நெதர்லாந்து, பின்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, போலந்து, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும், தென் ஆப்ரிக்காவிலும், இஸ்ரேலிலும் பின்பற்றப்படுகின்றன.
PR முறையின் இன்னொரு வடிவமான “கலப்பு உறுப்பினர் விகிதாசார முறை”யில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 வாக்குகள் இருக்கும். சட்டப்பேரவையில் சரி பாதி உறுப்பினர்கள் முதல் வாக்கின் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டாம் வாக்கு கட்சிகளுக்கு அளிக்கப்படும். கட்சிகள் தாம் பெற்ற வாக்கு விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பேரவையின் மீதமுள்ள பாதி இடங்களை நிரப்புவார்கள். ஜெர்மனி, நியூஸிலாந்து, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகளில் இந்த முறை அமலில் இருக்கிறது. “மாற்றத் தக்க வாக்கு முறை” என்பது இன்னொரு வகை. அயர்லாந்து, மோல்டோவா ஆகிய நாடுகள் இதைப் பின்பற்றுகின்றன.
நேரடித் தேர்தல் முறையிலேயே பழக்கப்பட்டுவிட்டதால், PR முறையும் அதன் பல்வேறு வகைகளும் தொடக்கத்தில் குழப்பமிக்கதாகத் தோன்றலாம். உறுப்பினர்கள் பெறும் இடங்களை நிர்ணயிப்பது ஒருக்கால் சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் வாக்களிக்கும் முறை எளிதானது; நேரானது. வாக்காளர்கள் PR முறையின் நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஒரு குறுந்தகட்டில் பிடித்தமான பாடலை ரசிப்பதற்கு அதன் மின்னணுவியல் தெரிய வேண்டியதில்லை என்கிறார் PR ஆதரவாளரான அமெரிக்க அரசியல் விஞ்ஞானி டக்ளஸ் ஜே அமி.
மேற்கு நாடுகளில் PR முறை பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் வாக்குகள் வீணாவாதில்லை. இந்தியாவில் இதைப் பெரிய கட்சிகள் ஆதரிக்கப் போவதில்லை. சிறிய கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், PR முறையின் சாதகங்களைப் படிப்படியாகப் பிரசாரம் செய்யலாம்!
(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)
-தினமணி மே 31,2006