மு. இராமனாதன்
First published in Dinamani on Friday, June 30, 2006
ஷாங்காய் சீனாவின் நிதித் தலைநகரம் என்று அறியப்படுகிறது. இந்நகரில் ஜூன் 15 அன்று “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்’பின் (Shanghai Cooperation Organisation – SCO) ஐந்தாவது மாநாடு நடந்தது. சீனாவும் ரஷியாவும் முன்னெடுத்துச் செல்லும் SCO-வில், இவ்விரு நாடுகளுடன் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. சீனாவும் ரஷியாவும் எண்ணைய் வளமிக்க மத்திய ஆசியாவில் செல்வாக்குச் செலுத்த SCO -வைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு எதிரானது என்று கருதப்படுவதாலும், இம்முறை ஈரான் பார்வையாளராகப் பங்கெடுத்ததாலும், மாநாடு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. சமீபகாலமாக அமெரிக்காவுடன் நெருங்கி வரும் இந்தியாவும் பார்வையாளராகப் பங்கெடுத்தது.

சீனாவின் மேற்கு எல்லைகளையும் ரஷியாவின் தெற்கு எல்லைகளையும் ஒட்டியபடி விரிகிறது மத்திய ஆசிய நாடுகளின் பரப்பு. எல்லாத் திசைகளிலும் தேசங்களால் சூழப்பட்டிருக்கும் இந்நாடுகளுக்கு அவற்றின் தகிக்கும் கோடை, வாட்டும் குளிர் அன்னியில் வேறு ஒற்றுமைகளும் உண்டு. இவை, 1991-இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு விடுதலை பெற்றவை. மக்கள் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பொதுவானவை. அரசுகள் மிகுதியும் எதேச்சாதிகாரமானவை.
நான்கு நாடுகளின் மீதும் வறுமை கவிந்திருக்கிறது. இவற்றுடன் தேசிய இனங்களுக்கிடையிலான பூசல்கள், அது தொடர்பான பிரிவினைவாதம், அண்டை நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகள் போன்றவையும் சேர்ந்து கொண்டபோது, இவற்றை எதிர்கொள்ள 1996-இல் சீனாவின் முயற்சியில் ஷாங்காயில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர்: “ஷாங்காய் ஐவர்’. இதில் SCO வின் தற்போதைய ஆறு உறுப்பு நாடுகளில் உஸ்பெகிஸ்தான் நீங்கலாக மற்றவை இடம் பெற்றன. 2001-இல் உஸ்பெகிஸ்தானோடு அமைப்பு அறுவரானது. “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ என்று பெயர் சூட்டப்பட்டதும் அப்போதுதான்.
உறுப்பு நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது அமைப்பின் கொள்கைத் திட்டத்தில் பிரதானமானது. 2003-இல் ஷாங்காயில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கிடையில் பல்வேறு கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2003 முதல் பொருளாதார ஒத்துழைப்பும் கவனம் பெறுகிறது. கட்டற்ற வணிகம் திட்டமிடப்படுகிறது. எனினும் SCO சர்வதேச கவனம் பெற்றது 2005-இல்தான். இதற்குக் காரணமாக இரண்டு நிகழ்வுகள் 2005 மாநாட்டில் நடந்தன. ஒன்று: இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டன. இது அமைப்பின் வீச்சையும் பரப்பையும் விரிவாக்கியது. அடுத்தது: ஆப்கானிஸ்தானில் தலிபானிற்கு எதிரான யுத்தத்தின் போது உஸ்பெகிஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் அமெரிக்கா தனது ராணுவத் தளவாடங்களை நிறுவியிருந்தது. 2005 மாநாடு, அமெரிக்கா மத்திய ஆசிய மண்ணிலிருந்து பின் வாங்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய ஆசிய நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி, அங்கு தளவாடங்களையும் நிறுவியிருந்த அமெரிக்கா, தொடர்ந்து அவற்றை நிலை நிறுத்தவே விழைந்தது. பெய்ஜிங்கும் மாஸ்கோவும் சிறிய நாடுகளை நெருக்கித் தனக்கு நெருக்கடி தருவதாகக் குற்றஞ்சாட்டியது வாஷிங்டன். மேலும், வளர்ந்துவரும் SCO-வில் பார்வையாளராகப் பங்கு பெறவும் விரும்பியது அமெரிக்கா. ஆனால் வேண்டுகோளை SCO நிராகரித்தது.
மத்திய ஆசியாவில் அமெரிக்காவைக் காலூன்ற விடாமல் தடுப்பதில் சீனாவும் ரஷியாவும் இணைந்து செயல்பட்டாலும், அவற்றுக்கிடையில் அதிகாரப் போட்டி நிலவுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். மத்திய ஆசிய நாடுகளுக்கு நாலாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க சீனா முன்வந்திருக்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து பல எண்ணெய்க் குழாய்கள் சீனாவை நோக்கி நிறுவப்படுகின்றன. தனது புழக்கடையாய் இருந்த பகுதியில் சீனா செல்வாக்குப் பெறுவது ரஷியாவிற்கு உவப்பாயில்லை என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் வால்.
இந்தப் பின்னணியில் 2006 மாநாடு கூடுதல் கவனத்திற்குள்ளானது. மாநாட்டில் ஈரானிய அதிபர் மகமது அகமதிநிஜாந்தை ஊடகங்களின் ஒளிவட்டம் தொடர்ந்தபடியே இருந்தது. SCO அங்கங்களிடையே எரிசக்தி ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் பேசிய அதிபர், பிராந்தியத்தின் எரிசக்தி அமைச்சர்களின் மாநாட்டைத் தாம் கூட்ட விரும்புவதாகவும் அறிவித்தார். சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் ஈரான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஈரான் SCO வில் உறுப்பினராகத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. மாநாட்டில் பங்கேற்ற மற்றொரு பார்வையாளரான பாகிஸ்தானும் தன்னை அமைப்பில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டி வருகிறது. கைமாறாக மத்திய கிழக்கிலிருந்து சீனாவிற்கு, பாகிஸ்தான் வழியாக ஒரு “எரிசக்திப் பாதை’யை அமைத்துத் தர முன் வந்தார் அதிபர் முஷாரப். இவ்விரு நாடுகளுக்கும் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தால் அது அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டியிருக்கும். அமைப்பின் சட்டங்களைச் சுட்டிக்காட்டி உறுப்பினர்களை அதிகரிப்பதை ஒத்திவைத்திருப்பதன் மூலம் ஒரு சர்ச்சையைத் தவிர்த்திருக்கிறது SCO.
மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் எரிசக்தி அமைச்சர் முரளி தியோரா. உறுப்பினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் தத்தமது நாட்டின் தலைவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதன் பொருள் இந்தியா SCO வை முக்கியமாகக் கருதவில்லை என்பதல்ல. இந்தியா, SCO-வில் பார்வையாளர் மட்டுமே என்பதால் பிரதமர் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பது ஒரு கருத்து. ஆனால் இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடே காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். இந்த உடன்பாட்டை அமலாக்க இரு அரசுகளும் முனைந்து வருகின்றன. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பிற்குச் சில மாதங்களே உள்ள வேளையில், அமெரிக்க எதிர்ப்பு முகாமில் தன்னைத் தீவிரப் பங்காளியாகக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசு கருதியிருக்கக் கூடும்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, அதை எதிர்க்கும் SCO உறுப்பினர்களோடு ஒத்துழைக்கும் என்று மாநாட்டில் பேசினார் தியோரா. அடுத்த தினம் அவருடன் பேசிய சீன அதிபர் ஹு ஜின்டாவ் இந்தியாவுடன் நீண்ட கால உறவை விரும்புவதாகக் குறிப்பிட்டார். அவை வெற்று வார்த்தைகள் இல்லை என்பதை அடுத்த சில தினங்களில் ஒப்பமிடப்பட்ட ஓர் உடன்பாடு தெளிவாக்கியது. எல்லைப் பிரச்சினைகளால் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த, சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதுலா கணவாய் ஜூலை 6 முதல் திறக்கப்படும் என்பதுதான் அந்த உடன்பாடு.
அமெரிக்காவின் நட்புக்குப் பங்கம் வராமலேயே SCO நாடுகளின் மதிப்பைப் பெறுவது இந்தியாவிற்குச் சாத்தியமாகியிருக்கிறது. சீனாவிற்கோ தனது எல்லையோரத்தில் செல்வாக்கோடு திகழ்வதற்கும், எரிசக்தியைப் பெறுவதற்கும் மத்திய ஆசிய நட்பு அவசியமாகிறது. தனது கட்டுப்பாட்டில் இருந்த தேசங்களில் தனது பிடி இளகாமல் இருக்க ரஷியா விரும்புகிறது. SCO வில் இணைவதன் மூலம் சர்வதேச அந்தஸ்தைப் பெற முயற்சிக்கின்றன ஈரானும் பாகிஸ்தானும். மத்திய ஆசியாவில் இழந்த இடத்தைப் பெற விரும்புகிறது அமெரிக்கா.
(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).
-தினமணி ஜூன் 30, 2006