மு. இராமனாதன்
First published in Dinamani on Wednesday, July 19, 2006
மீலிங்கும் தம்மானும் தபால்காரர்கள். முன்னவர் சீனர், பின்னவர் இந்தியர். இவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே தபால்களைப் பட்டுவாடா செய்கிறார்கள். அதுவும் ஒருவர் தனது தபால்களை அடுத்தவரிடம் கைமாற்றினால் போதுமானது. ஆனால் இந்தக் கடிதப் பரிமாற்றம் நடப்பது கடல் மட்டத்திற்கு 14,500 அடிக்கு மேல்; எலும்பை உருக்கும் குளிரில்; இமயமலைகளின் ஊடேயுள்ள நாதுல்லா எனும் எல்லைக் காவலில்!
சீனாவின் திபெத் சுயாட்சிப் பகுதியையும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் பிரிப்பது, நாதுல்லாவில் உள்ள, வெகு சாதாரணமாய்த் தோற்றமளிக்கும் முள்கம்பி வேலிதான். ஆனால் கடந்த 44 ஆண்டுகளாக இதைக் கடக்க அனுமதிக்கப்பட்டவர்கள் தபால்காரர்கள் மட்டுமே. எல்லையின் இரு புறமும் உள்ள உறவினர்கள் – நண்பர்களின் ஒரே தொடர்பாக இருந்து வந்ததும் கடிதங்கள் மட்டுமே.
1962-இல் நடந்த இந்திய – சீன எல்லைப் போரைத் தொடர்ந்து நாதுல்லாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; கூடவே சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும், இயற்கை அமைத்த மலைப்பாதையான நாதுல்லா கணவாயும் மூடப்பட்டது. அதன்வழி நடந்து வந்த வணிகமும் நின்று போனது.
ஆனால் முன்னேறி வரும் இந்திய – சீன நட்புறவின் அடையாளமாக கடந்த ஜூலை 6-ம் தேதி நாதுல்லா கணவாய் மீண்டும் திறந்து விடப்பட்டது. இனி தபால்காரர்கள் மட்டுமல்ல, வணிகர்களும், விரைவில் சுற்றுலாப் பயணிகளும் எல்லையைக் கடக்கலாம்.
1962-க்கு முன்னர் நாதுல்லா கணவாய், வணிகம் தழைத்தோங்கிய “பட்டுச் சாலை’யில் ஒரு பகுதியாய் இருந்தது. சீனாவிலிருந்து இந்தியாவிற்கும், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியான பொருள்கள் பயணித்த பாதையே பட்டுச் சாலை. சீனா ஏற்றுமதி செய்தவற்றுள் சீனப்பட்டு மேற்கு நாடுகளைக் கவர்ந்ததால் சூட்டப்பட்ட பெயரிது. எனினும் நாதுல்லா கணவாயில், வணிகம் உச்சத்திலிருந்த 1940 – 50களில் அரிசி, மாவு, மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பண்டங்களே கைமாறின. குறுகிய செங்குத்தான மலைப்பாதைகளில் கோவேறு கழுதை வண்டிகளில் பொருள்களை ஏற்றிச் சென்ற காலத்தை நினைவு கூர்கிறார் ஏ.ஜே. திரானி. கணவாயிலிருந்து 56 கி.மீ தூரத்தில் இருக்கும் சிக்கிம் தலைநகர் காங்டோக்கில் வசிக்கும் திரானிக்கு வயது 83. கணவாயின் திறப்பு விழாவுக்கு ஆஜராகியிருந்தார் திரானி. மழையும் குளிரும் பனிச்சேறும் அவருடைய ஆர்வத்திற்கு முன் தடையாக நிற்க முடியவில்லை. திபெத் சுயாட்சிப் பகுதித் தலைவரும் சிக்கிம் முதல்வரும் பங்கேற்ற விழாவில் இந்திய – சீனப் பாரம்பரிய இசை மேகத்திற்கு மேல் தவழ்ந்தது.
இப்போதைக்கு கணவாயின் மூலம் தேநீர், நறுமணப் பொருள், அரிசி உள்ளிட்ட 29 பொருள்களை சீனா இறக்குமதி செய்யும். இந்தியா தன் பங்கிற்கு ஆட்டுத்தோல், மூலிகைகள், பட்டு உள்ளிட்ட 15 பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளும். ஆண்டில் 4 மாதங்களும் வாரத்தில் 4 நாள்களும் மட்டுமே பரிமாற்றம் நடக்கும். இதன் அளவு, இந்திய – சீன வணிகத்தில் மிகக் குறைந்த வீதமாகவே இருக்கும்.
2005-இல் நடந்த இந்திய – சீன வணிகத்தின் மதிப்பு ரூ. 85,000 கோடி. இது முந்தைய ஆண்டைவிட 37 சதவீதம் அதிகம். நடப்பு ஆண்டில் இது ரூ. 1 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொருள்கள் இலக்கை அடைய, கடல் வழியாக ஆயிரக்கணக்கான மைல் பயணமும், 2 முதல் 3 வார கால அவகாசமும் தேவைப்படுகிறது. “”நாதுல்லா கணவாயின் இருபுறமும் சாலைகளும் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டால் ஆகாயம்தான் எல்லை”, என்கிறார் ஆய்வாளர் சுர்ஜித் தத்தா. அப்போது 5 தினங்களுக்குள் பொருள்கள் கைமாறி விடும்; சரக்குக் கூலி கணிசமாய்க் குறையும்.
தத்தா சொல்லும் புதிய வழித்தடங்களில் சீனா கவனம் செலுத்துகிறது. சீனாவின் ஏகதேசம் மத்தியில் உள்ள சைனிங் எனும் நகரிலிருந்து திபெத்தின் தலைநகர் லாசா வரையிலான 1300 கி.மீ ரயில் பாதை, நாதுல்லா கணவாய் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு முன்னர்தான் தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதை பாதிக்கு மேல் உறைய வைக்கும் மலை உச்சிகளின் ஊடாகச் செல்கிறது.
இப்போது பெய்ஜிங்கிலிருந்து லாசாவிற்கு 47 மணி நேரத்தில் வர முடியும். லாசா, கணவாயிலிருந்து 430 கி.மீ தொலைவில் உள்ளது. கணவாயை ஒட்டியுள்ள நகரம் யாதுங். லாசாவிலிருந்து யாதுங்கிற்கான நெடுஞ்சாலைப் பணிகளும் திட்டமிடப்படுகின்றன. ஆனால் இந்தியப் பகுதியில் பணிகள் இதே வீச்சில் இல்லை. சிக்கிம் தலைநகர் காங்டோக்கிலிருந்து கணவாய் வரையுள்ள பாதை குறுகலானது. காங்டோக்கிலிருந்து துறைமுக நகரான கொல்கத்தா சுமார் 600 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டிற்கும் இடையே நல்ல இணைப்புச் சாலை இல்லை. ஆனால் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்போது இரு தரப்பு வணிகம் வளரும். கூடவே இந்தியாவின் வடகிழக்கு மற்றும் சீனாவின் தென்மேற்குப் பகுதிகளின் பொருளாதாரமும் மேம்படும்.
வணிக ஆதாயங்களைப் பார்க்கிலும் முக்கியமானது, இந்தக் கணவாய் அரசியல் நம்பிக்கையின் வாயில்களைத் திறந்து விட்டிருப்பதாகும். 1975-இல் அதுவரை முடியாட்சியாக இருந்த சிக்கிமை, இந்தியா ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டது. சீனா இதை அங்கீகரிக்க மறுத்து வந்தது. எனில் சீனா இப்போது இறங்கி வந்திருப்பதுதான், நாதுல்லா உலகுக்கு உணர்த்தும் செய்தி. கைமாறாக இந்தியாவும் திபெத் குறித்த தன் நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளும்; தலாய் லாமாவிற்கு அடைக்கலம் தரும் அதேவேளையில், திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரிக்கும்.
இந்திய – சீன உறவு பல மேடு பள்ளங்களைக் கடந்து வந்திருக்கிறது. இரு தேசங்களுக்கிடையிலான கலாசார உறவுகள் 2000 ஆண்டு காலப் பழமை மிக்கது. இந்தியாவிலிருந்து போன புத்த மதம் சீனக் கலாசாரத்திற்கு இசைவாக இருந்தது. ஆனாலும் குறிப்பிடத்தக்க அரசியல் உறவுகள் 1949-இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே தொடங்கியது எனலாம்.
புதிய சீன அரசை அங்கீகரித்த கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுள் இந்தியா முதலாவதாக இருந்தது. ஆனால் 1959-இல் திபெத் கிளர்ச்சிகளை சீனா ஒடுக்கியதை இந்தியா ஆதரிக்கவில்லை. திபெத்திலிருந்து வெளியேறிய தலாய் லாமாவிற்கு சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அடைக்கலம் வழங்கியது இந்தியா. அதற்கு முன்பாகவே, 1954 முதலே எல்லைப் பிரச்சினைகளும், சிறு மோதல்களும் இருந்து வந்தன. எல்லைப் பிரச்சினைகள் வளர்ந்தன. உரசல்கள் பெருகின. 1962இல் நடந்த எல்லைப் போர் 40 தினங்கள் நீண்டது. அப்போது மூடப்பட்ட பல கதவுகளுள் ஒன்றுதான் நாதுல்லா கணவாய்.
1976 முதல் உறவுகள் மெல்ல சீர்படலாயின. 1988-இல் ராஜீவ் காந்தி மேற்கொண்ட சீன பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சீனாவின் மூத்த தலைவர் டெங்ஸியோ பிங், ராஜீவ் காந்தியின் கரங்களை இறுகப் பற்றிக் குலுக்கியபோது, புதிய உறவுகளுக்குத் தொடக்கம் குறிக்கப்பட்டது.
1993-இல் நரசிம்மராவ் பெய்ஜிங்கிலும், 1996-இல் சீன அதிபர் ஜியாங் ஜெமின் புதுதில்லியிலும் கையொப்பமிட்ட உடன்படிக்கைகள் இதைத் தெரிவித்தன. 2003-இல் பிரதமர் வாஜபேயியின் விஜயத்தின் போது நெருக்கம் கூடியது. நாதுல்லா கணவாயைத் திறப்பது கொள்கையளவில் ஏற்கப்பட்டதும் அப்போதுதான். ஆகவே கணவாய் திறக்கப்பட்டபோது அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு இந்திய – சீன நட்புறவு ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது; இவ்வாண்டின் நிகழ்வுகளில் நாதுல்லாவே முதலிடத்தில் இருக்கும்.
உலகின் அதிக மக்கள் தொகையுள்ள இரண்டு தேசங்கள், வளர்ச்சியையும் வளத்தையும் நோக்கி முன்னேறுகின்றன. ஒன்று உற்பத்தியிலும் மற்றது தொழில்நுட்பத்திலும் முத்திரை பதித்திருக்கிறது. ‘ஒன்றுபட்டால் உண்டாகும் வாழ்வு’ – இரு சாரருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஒரு புதிய பட்டுச் சாலை நிர்மாணிக்கப்படுகிறது.
(கட்டுரையாளர்; ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)-தினமணி ஜூலை 19, 2006