தாய்லாந்து: அரசியலில் ராணுவம்

மு இராமனாதன்

First published in Thinnai, Friday October 6, 2006

செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி நிலையங்களையும் வளைத்தன. ஒரு தோட்டா போலும் வெடிக்கவில்லை. ஒரு துளி ரத்தம்கூட சிந்தப்படவில்லை. ராணுவத் தளபதி சோந்தி பூன்யராட்கிளின் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தார். 18 மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிரதமராகியிருந்த தக்சின் சின்வத்ரா, ஐநா மாநாட்டில் கலந்து கொள்ள நியூயார்க் போயிருந்தார். நிலைமை கைமீறிப் போய்விட்டதை தக்சினும் அவரது சகாக்களும் உணர்ந்தனர். இவ்வாண்டுத் துவக்கம் முதலே தேசத்தின் அரசியல் அரங்கில் பதட்டம் மிகுந்திருந்தது. ஊழல் மற்றும் எதேச்சதிகாரக் குற்றாச்சாட்டுகளால் சூழப்பட்டிருந்த தக்சினுக்கு எதிராக பாங்காக்கில் பேரணிகள் நடந்த வண்ணமிருந்தன. தக்சினின் ஜனநாயக விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவே இப்போது களமிறங்கியதாகச் சொல்கிறது ராணுவம். ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு, தாய்லாந்தில் நடைமுறை வாழ்க்கை திரும்பிவிட்டது. எனினும் ஒரு ஜனநாயக ஆட்சியைத் துப்பாக்கி முனையில் கவிழ்ப்பது எப்படி ஜனநாயகமாகும் என்கிற கேள்விகளும் வலம் வருகின்றன.

ராணுவ ஆட்சி தாய்லாந்திற்குப் புதியதில்லை. முடியாட்சியாக இருந்த தாய்லாந்து, 1932 முதல் மன்னரை அரசியலமைப்புத் தலைவராகக் கொண்ட பாராளுமன்ற ஜனநாயகமாக உருவெடுத்தது. தொடர்ந்த 60 ஆண்டுகளில் பீரங்கி வண்டிகள் 17 முறை அரசுத் தலைமையகத்தை முற்றுகையிட்டிருக்கின்றன. எனில், ராணுவம் கடைசியாக ஆட்சியைக் கைப்பற்றியது 1991-இல்; வெளியேறியது 1992-இல். அதற்குப் பிறகு பீரங்கி வண்டிகள் வீதிகளுக்கு வந்தது இப்போதுதான்.

ராணுவம் அரசியலில் தலையிடுகிற போக்கு உலக அளவிலும் குறைந்து வருகிறது. பன்னாட்டுச் சச்சரவுகளை ஆய்வு செய்யும் ஹில்லர்பர்க் எனும் அமைப்பின் தரவுதளம் 1960-களில் தான் ராணுவ ஆட்சிகள் உச்சத்தில் இருந்ததாகத் தெரிவிக்கிறது. அதாவது ஆண்டிற்கு 25. 1991-இல் அமெரிக்கா-ரஷியப் பனிப்போர் முடிகிறவரையில் சராசரியாக ஆண்டிற்கு 15 முறை ராணுவங்கள் ஆட்சியைக் கைப்பற்றின. அதற்குப் பிறகு இது ஆண்டிற்கு ஐந்தாகக் குறைந்து விட்டது. ஜனநாயக மதிப்பீடுகள் உயர்ந்து வரும் சூழலில் தாய்லாந்து ராணுவத்தின் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்திருக்கின்றன.

தக்சின் தனக்கு முந்தைய 22 பிரதமர்களைக் காட்டிலும் செல்வாக்கோடுதான் இருந்தார். ஒரு போலீஸ்காரராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய தக்சின், 1987-இல் தொலைத் தொடர்பு வணிகத்தில் ஈடுபட்டார். கைத்தொலைபேசி, இணையம், செயற்கைக்கோள், ஊடகம் என்று அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்தது. கோடிகள் குவிந்தன. ‘தாய் ராக் தாய்’ எனும் புதுக் கட்சி தொடங்கினார். 2001-இலும் மீண்டும் 2004-இலும் ஆட்சியைக் கைப்பற்றினார்.

தாய்லாந்தின் கிராமப்புற மக்களை தக்சினின் கவர்ச்சிகரமான திட்டங்கள் ஈர்த்தன. கிராமப்புற முதலீட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. வேளாண் கடன்கள் பகுதியாகவோ முழுமையாகவோ ரத்து செய்யப் பட்டன. தாய்லாந்தை உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளராக நிலை நிறுத்தும் அதன் விவசாயிகளுக்கு, ’30 பட்’ சுகாதாரத் திட்டம் அமல் படுத்தப்பட்டது, இதன் மூலம் கிராம மக்கள் 30 பட்(ரூ.36) மட்டும் செலுத்தி பொது மருத்துவமனையின் அனைத்து சேவைகளையும் பெறலாம்.

தொடக்கத்தில் நகரவாசிகளிடையேயும் அவரது பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை. அவரது தொலைத் தொடர்பு நிறுவனமான ‘ஷின் கார்ப்’, அரசின் சலுகைகளை உட்கொண்டு பெருத்தது; தாய்லாந்தின் செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்தியது. ‘ஷின் கார்ப்’ அல்லாத வேறு தனியார் அலைவரிசைகள் நீடிக்க முடியாத நிலை உருவானது. பத்திரிக்கைகள் விமர்சித்தன. தக்சின், எதிர்ப்பாளர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடுத்தார். ஊழல் குற்றச் சாட்டுகள் மிகுந்தன. தக்சின், ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களை பலவீனப்படுத்தினார். கனன்று கொண்டிருந்த தக்சின் எதிர்ப்பு இவ்வாண்டு ஜனவரியில் பற்றிக்கொண்டது. அதற்குக் காரணமாக அமைந்தது ‘ஷின் கார்ப்’பின் பங்கு விற்பனை. தக்சினின் குடும்பத்தினர் ‘ஷின் கார்ப்’பில் தங்களுக்குச் சொந்தமான 49 சதவீதப் பங்குகளை சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான ‘டெமாஸெக்’ எனும் நிறுவனத்திற்கு விற்றனர். வரவு:ரூ.9000 கோடி. இதற்கு அவர்கள் வரியேதும் செலுத்த வேண்டி வரவில்லை. அதற்கு ஏற்றாற் போல் வரிச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்னதாகவே திருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து, தக்சினைப் பதவியிறங்கச் சொல்லி பாங்காக் வீதிகளில் பேரணிகளும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. எதிர்ப்புகள் மூத்தபோது, ஏப்ரலில் தக்சின் ஒரு திடீர்த் தேர்தலை அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. ‘தாய் ராக் தாய்’ கட்சி 57 சதவீத இடங்களைப் பிடித்தது. ஆனால் பல வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை “யாருக்கும் இல்லை” என்கிற பிரிவின் கீழ் அளித்தனர். இதனால் பல தொகுதிகளில், எதிர்ப்பேதும் இல்லாவிட்டாலும், தக்சினின் வேட்பாளர்களால் அரசியல் அமைப்பு கோருகிற குறைந்தபட்ச 20 சதவீத வாக்குகளைப் பெற முடியவில்லை. பாராளுமன்றத்தையும் கூட்ட முடியவில்லை.

இந்த நெருக்கடியான கட்டத்தில் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் தலையிட்டார். மன்னருக்கு அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்கள் இல்லாத போதும், மக்கள் மிகுதியும் அவருக்கு விசுவாசமாக இருக்கின்றனர். திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னர் மன்னரின் படம் திரையில் தோன்றுகிறது. பார்வையாளர்கள் எழுந்து வணங்குகின்றனர். அலுவலகங்களிலும், கடைகளிலும், பள்ளிகளிலும், வாடகைக் கார்களிலும் மன்னரின் படம் மாட்டப் பட்டிருக்கிறது. மன்னர், உச்ச நீதிமன்றத்தை இந்த அரசியல் நெருக்கடியைத் தீர்க்குமாறு பணித்தார். நீதிபதிகள் ஏப்ரல் தேர்தலைச் செல்லாது என்று அறிவித்தனர். தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலுக்கு நவம்பரில் நாள் குறித்தது. தக்சின் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். என்றாலும் கிராமப்புற வாக்காளர்களின் ஆதரவோடு தக்சினின் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் ராணுவம் முந்திக் கொண்டு விட்டது. ராணுவம் தங்களுக்கு மன்னரின் ஆசியிருப்பதாகச் சொல்கிறது. அரண்மனையிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனினும் மன்னரின் ஆதரவைக் குறித்து யாருக்கும் ஐயமில்லை.

தாய்லாந்தில் இப்போது ராணுவச் சட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கிறது. கூட்டம் கூடுவதும், கட்சி அரசியலும், பேச்சுச் சுதந்திரமும் தடை செய்யப் பட்டிருக்கின்றன. ஆட்சியைக் கைப்பற்றியதும் ராணுவம் இரண்டு வாக்குறுதிகளை நல்கியது: (1) இரண்டு வாரங்களுக்குள் ஒரு சிவிலியன், பிரதமராக நியமிக்கப் படுவார். (2) தற்போதைய அரசியல் சட்டத்தைத் தக்சினால் தனது வசதிக்கேற்ப வளைக்க முடிந்தது. ஆதலால், அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைத்து ஓராண்டிற்குள் தேர்தல் நடத்தப்படும்.

இதில் முதல் வாக்குறுதியை ராணுவம் நிறைவேற்றியிருக்கிறது. அக்டோபர் முதல் தேதி சுரயத் சுலோனாட் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சுரயத் இப்போது சிவிலியன்தான். ஆனால் முன்னாள் ராணுவத் தளபதி. 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். தாய்லாந்து ராணுவத்தை நவீனப்படுத்தியதில் அவருக்குப் பங்கு உண்டு. 2003-இல் ஓய்வு பெற்றார். மன்னருக்கு நெருக்கமானவர். ஒரு சிவிலியன் பிரதமரை நியமிப்பதன் மூலம் சர்வதேச நம்பிக்கையைப் பெறலாம் என்று கருதியிருந்தது ராணுவம். ஆனால் ராணுவத் தளபதியாக இருந்த ஒருவரையே பிரதமராக நியமித்திருப்பது அந்த நம்பிக்கையைப் பெற உதவவில்லை. புதிய பிரதமரை நியமித்த கையோடு அமலாக்கப் பட்டிருக்கிற இடைக்கால அரசியலமைப்பும் அந்த நம்பிக்கைக்கு எதிராகவே இருக்கிறது. ராணுவமே புதிய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்களை நியமிக்கும். அவர்களிலிருந்து பிரதமர் தனது அமைச்சர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பிரதமரையும் அமைச்சர்களையும் நீக்கும் அதிகாரம் ராணுவத்தின் இரும்புக் கரங்களில் இருக்கும். புதிய அரசியலமைப்பு எழுதுவதற்கான குழுவையும் ராணுவமே நியமிக்கும். இதை உருவாக்குவதில் பிரதமருக்கோ, ஜனநாயக அமைப்புகளுக்கோ, மக்களுக்கோ பங்கிருக்கும் என்று தோன்றவில்லை. பாதுகாப்புக் கொள்கைகளை ராணுவமே வகுக்கும்.

முதல் வாக்குறுதியின் நிலை இவ்வாறிருக்க, ஓராண்டிற்குள் தேர்தல் என்கிற இரண்டாம் வாக்குறுதி நிறைவேறுமா?

வரலாறு நெடுகிலும் ஆட்சியைக் கைப்பற்றிய தளபதிகள் பாசறைக்கு சுலபத்தில் திரும்பியதில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் லாரா ஸ்மித். 1999-இல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபைத் தூக்கியெறிந்தார் தளபதி பர்வேஸ் முஷ்ரப்; 2001-இல் தன்னையே அதிபராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்; 2002-இல் ஐந்தாண்டுகளுக்கு அதிபரானார். இதற்கிடையில், அதிபர் பொறுப்பேற்றால் ராணுவத் தலைமையைக் கைவிடுவேன் என்று வாக்களித்திருந்தார். அந்த வாக்குறுதியை மட்டும் கவனமாகக் கைவிட்டு விட்டார். சிலியில் 1973-இல் ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி அகஸ்டோ பினோசெட் 1990-இல் தான் வெளியேறினார். 1985-இல் ஆட்சியைப் பிடித்த நைஜீரியத் தளபதி இப்ராகிம் பாபன்கிடா, 1993-இல் தூக்கியெறியப்படும் வரை நாற்காலியை இறுகப் பற்றியிருந்தார்.

ராணுவம் தாய்லாந்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது, தென்கிழக்கு ஆசியாவெங்கும், அதற்கு அப்பாலும் அதிர்வலைகளை எழுப்பக் கூடும். அண்டை நாடுகளில் ஏற்கனவே ராணுவத்தின் அரசியல் செல்வாக்கு அதிகம். ·பிலிப்பைன்ஸ் ஜனநாயக நாடுதான். 2001-இல் தக்சினைப் போலவே ஊழல் குற்றச் சாட்டுகளாலும் மக்கள் எதிர்ப்பாலும் சூழப்பட்டிருந்தார் அப்போதைய ·பிலிப்பைன்ஸ் அதிபர் ஜோஸப் எஸ்ட்ராடா. அவர் வெளியேற்றப் படவும், இப்போதைய அதிபர் கிளோரியோ அரையோ பதிவியேற்கவும் காரணமாக இருந்தது ராணுவம்தான். இப்போது அரையோவின் நிர்வாகமும் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டிருக்கிறது. இரண்டு முறை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று, தப்பிப் பிழைத்து, தாக்குப் பிடிக்கிறார் அரையோ. இந்தோனேசியாவும் ஜனநாயக நாடுதான். தளபதி சுகார்தோவின் 32 ஆண்டுகள் நீண்ட சர்வாதிகார ஆட்சி, 1998-இல் முடிவுக்கு வந்தது. இப்போதைய அதிபர் சுசிலோ யுதயோனோ தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப் பட்டவர், எனினும் இவரும் முன்னாள் ராணுவத் தளபதியே. இங்கும் ராணுவத்தின் அரசியல் செல்வாக்கு அதிகம். பர்மாவில் 1962 முதல் இடையில் ஓராண்டு நீங்கலாக, ராணுவமே நேரடியாக ஆட்சி நடத்துகிறது. விட்டு விலகுவதற்கான யாதொரு அறிகுறியும் இல்லை. இப்படி அண்டை நாடுகளில் ராணுவம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், தாய்லாந்தில் நேர்ந்திருப்பது ஜனநாயக ஆர்வலர்களுக்குக் கவலை அளிக்கிறது.

பாங்காக் வீதிகளில் நின்றிருந்த பீரங்கி வண்டிகள் புதிய பிரதமர் பதிவியேற்றதும் பாசறைக்குத் திரும்பி விட்டன. எனில், ராணுவத்தின் தடயங்கள் எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கிறது. வானொலி-தொலைக் காட்சி நிலையங்களிலும் பத்திரிகை அலுவலகங்களிலும் வலம் வரும் ராணுவ வீரர்கள் ஆட்சிக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். இப்போதைக்கு அதற்குத் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஊடகங்கள் தக்சினின் ஆட்சிக்கு மாற்றாக ராணுவ ஆட்சியைப் பார்க்கின்றன. ‘த நேஷன்’ என்கிற நாளிதழ் எழுதியது: “தக்சினுக்கு எதிரான இந்த ராணுவ ஆட்சி தேவையான ஒரு தீமை.” அறிவுஜீவிகள் மத்தியிலும் ராணுவ ஆட்சிக்கு ஆதரவிருக்கிறது. சுலலோங்கார்ன் பல்கலைக்கழக இயக்குநர் திட்னான் போங்சுதிராக் சொல்கிறார்: “தக்சினைப் பதவியிறக்க வேறு வழியில்லை.” ஆனால் ஆசியான், ஐநா போன்ற பன்னாட்டு அமைப்புகளும், உலக நாடுகளும் ராணுவ ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடகங்கள் பலவும் இதை ஜனநாயகக் கொலை என்றே வர்ணித்திருக்கின்றன. ஹாங்காங் நாளிதழ் ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ இப்படி எழுதியது: “ஒரு தவறை இன்னொரு தவறின் மூலம் சரியாக்கிவிட முடியாது. தக்சினின் கொள்கைகள் மறுப்புக்கிடமானதாக இருந்தாலும், ராணுவ ஆட்சி ஜனநாயக விரோதமானது சட்ட விரோதமாகக் கைப்பற்றிய அதிகாரத்தை முறையான தேர்தல் மூலம் மக்களுக்கு மீண்டும் வழங்குவதன் மூலமே ராணுவம் தான் உண்டாக்கியிருக்கிற பாதிப்பைச் சரி செய்ய முடியும்”.

**********

நன்றி: திண்ணை அக்டோபர் 6, 2006

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: