மு. இராமனாதன்
First published in Dinamani on Tuesday, October 17, 2006
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னானின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. அடுத்த பொதுச் செயலராகப் பொறுப்பேற்கப் போகிறார் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் பான் கி மூன். அக்டோபர் 9 அன்று ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் (Security Council) பான்-ஐத் தேர்ந்தெடுத்தது. 191 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு இந்தத் தேர்வை வழிமொழிந்தது. பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் இந்தியாவின் வேட்பாளர், ஐ.நா.விலேயே பணியாற்றும் சசி தரூர்; வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை ஒரு வாரம் முன்பே தெரிந்துகொண்டு போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.
ஒரு சர்வதேசத் தேர்தலில் இந்தியா போட்டியிட்டதே பெருமைக்குரியது என்று சிலர் கருதுகின்றனர். வெற்றி வாய்ப்பு குறித்து முறையாகக் கணிக்காமல், போட்டியில் குதித்து, வெளியேற நேர்ந்தது அவமானகரமானது என்று வேறு சிலர் விமர்சிக்கின்றனர். இந்த வாதப் பிரதி வாதங்களுக்கிடையில் ஐ.நா.வின் கட்டமைப்பு குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது வெற்றி ஈட்டிய நேச நாடுகளால் ஐ.நா. உருவாக்கப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்களாயின; “வீட்டோ’ அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டன. இதன் மூலம் எந்தத் தீர்மானத்தையும் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைப் பெற்றன. ஒரு முன்வரைவுக்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும்சரி, இந்த 5 நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு அதை எதிர்த்தாலும்கூட அந்த வரைவு அமலுக்கு வராது.
பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்கள் தவிர, தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பினர்களும் உண்டு. இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். இந்தத் தாற்காலிக உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. 1945-க்குப் பிறகு உலகம் பல அரசியல், பொருளாதார, சமூகவியல் மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. எனினும், நிரந்தர உறுப்பினர்களிடம் அதிகாரம் குவிந்திருக்கிற ஐ.நா.வின் கட்டமைப்பில் அடிப்படை மாற்றமேதும் நிகழவில்லை.
ஐ.நா. ஜனநாயகமயமாக வேண்டும்; அதன் பொதுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் எனும் கோரிக்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது. பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, 110 கோடி மக்களின் தேசத்துக்கு முறையான அந்தஸ்து இல்லாத ஓர் அமைப்பு, தன்னை சர்வதேச அமைப்பு என்று அழைத்துக் கொள்வது எங்ஙனம்? ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளும் நிரந்தர உறுப்பினர் பதவி கோரி வருகின்றன.
ஆனால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அதிகாரம் 5 நாடுகளின் கைகளில் புதைந்து கிடக்கிறது.
பாதுகாப்பு மன்றம், இறுதித் தேர்தலுக்கு முன்னதாக பல அதிகாரபூர்வமற்ற ‘முன்னோட்டத் தேர்தல்’களை (Straw Polls) நடத்துகிறது. மன்றத்தின் உறுப்பினர்கள், போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் நேராக “ஆதரவு’, “எதிர்ப்பு’, “கருத்து இல்லை’ எனும் மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.
இது ரகசிய வாக்கெடுப்பாதலால் அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. முன்னோட்டத் தேர்தலைத் தாண்டுவதற்கு, 5 நிரந்தர மற்றும் 10 தாற்காலிக உறுப்பினர்களின் வாக்குகளில், குறைந்தபட்சம் 9 ஆதரவு வாக்குகளைப் பெற வேண்டும். எதிர்ப்பு வாக்குகள் தாற்காலிக உறுப்பினர்களுடையது எனில் பாதகமில்லை. நிரந்தர உறுப்பினர்களின் எதிர்ப்பு வாக்குகள் “வீட்டோ’வாகக் கருதப்படும்.
ஒரு “வீட்டோ’ பெற்றாலும், அந்த வேட்பாளர் போட்டியிலிருந்து விலக வேண்டும். ஆரம்பச் சுற்றுகளில் நிரந்தர – தாற்காலிக உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளை வேறுபடுத்த முடியாது. கடைசிச் சுற்றில் நிரந்தர உறுப்பினர்களின் வாக்குச் சீட்டின் நிறம் மாறும். அதில் எதிர்ப்பு வாக்குகள் இருந்தால் வேட்பாளர் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. சசி தரூருக்கு நேர்ந்ததும் அதுதான்.
இந்த முறை ஜூலை, செப்டம்பர் மாதங்களில் ஆரம்பச் சுற்றுகள் நடந்தன.
எல்லாத் தேர்தல்களிலும் பான் முதலிடத்திலும் தரூர் இரண்டாமிடத்திலும் தொடர்ந்தனர். இவர்களைத் தவிர இலங்கை, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், லிதுவேனியா மற்றும் ஜோர்தான் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். அக்டோபர் 2-ம் தேதி நடந்த கடைசிச் சுற்று முன்னோட்டத் தேர்தலில் பான் பெற்ற வாக்குகள்: ஆதரவு-14, எதிர்ப்பு-0, கருத்து இல்லை-1. தரூர் பெற்றவை முறையே 10, 3, 2. இந்தச் சுற்றில் நிரந்தர உறுப்பினர்களின் வாக்குச் சீட்டின் நிறம் மாற்றப்பட்டதால், தரூர் பெற்ற 3 எதிர்ப்பு வாக்குகளில் ஒன்று நிரந்தர உறுப்பினருடையது என்பது தெரிந்தது.
அதாவது ‘வீட்டோ’ எனும் கூரிய வாள் அவர் மீது இறங்கியிருந்தது. தரூர் பின்வாங்கினார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் செய்து வந்த பிரசாரம் முடிவுக்கு வந்தது. ஜூன் 15-ம் தேதி இந்தியா தனது வேட்பாளராகத் தரூரை அறிவித்தது. அப்போது ஊடகங்களிலும் அறிவுஜீவிகளிடத்திலும் ஒரு பரவச உணர்வு பரவியது. இந்தப் பதவி இந்தியாவுக்குப் பெருமை தரும் என்று பலர் கருதினர். இதற்கு முன்பு பொதுச் செயலர்களாக இருந்தவர்கள் தங்கள் தேசங்களுக்குப் பெருமை சேர்த்தார்களா? பர்மா, பெரு, எகிப்து, கானா முதலான நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா.வுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர். அவர்கள் வகித்த பதவியால் அந்தத் தேசங்களுக்குச் சொல்லிக் கொள்ளும்படியான பெருமை ஒன்றும் இல்லை என்பதே உண்மை.
பொதுச் செயலரால், தான் சார்ந்த நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவின் அதிபர் தபோ எம்பெகி சமீபத்தில் நடந்த அணிசாரா நாடுகளின் மாநாட்டில் பேசும்போது, “ஐ.நா.வில் எங்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் இல்லை. ஆதலால் எங்களுக்கான தீர்மானங்களை எடுக்க ஐ.நா.வுக்கு உரிமை இல்லை” என்று குறிப்பிட்டார். ஆப்பிரிக்கரான அன்னான் ஐ.நா. அமைப்பின் தலைவராக இருந்ததால் ஆப்பிரிக்காவுக்கு பலன் ஏதுமில்லை. ஆகவே தரூர் செயலராகி இருந்தாலும் அவரால் இந்தியாவுக்கு அனுசரணையாக நடக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் முறையல்ல.
இப்படி ஒரு முக்கியமான பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் கணிப்புகளும், விவாதங்களும் நடந்திருக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ‘வீட்டோ’வைக் கையிலெடுத்தாலும் வெற்றி பெற முடியாது. இது அநீதியாக இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்துக்கு இதுதான் விதி. நிரந்தர உறுப்பினர்களை முன்னதாகவே கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும்.
இந்தியாவின் அவசரக் கோலத்துக்கு நேர் எதிராக இருந்தது தென் கொரியாவின் கவனமான அடிவைப்புகள். ஓர் எதிர்ப்பு வாக்கைக்கூட அது பெறவில்லை என்பதிலிருந்தே இது புரியும்.
தென் கொரியா நீண்ட காலமாகவே அமெரிக்காவின் நட்பு நாடு. ரஷியாவோடும் இணக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், சீனாவின் நம்பிக்கையையும் பெற்றதில்தான் அதன் ராஜதந்திரம் வெற்றி பெறுகிறது. பான் கி மூனுக்கு முன்புள்ள சவால்கள் அதிகம். அவர் செயலராக நியமிக்கப்பட்ட அதே தினம் அவரது அண்டை நாடான வட கொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தியிருக்கிறது. சூடானிலும் லெபனானிலும் காங்கோவிலும் பிரச்சினைகள் முளைத்து வருகின்றன. தன்னால் இவற்றை எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பான்.
பானுக்கு இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் இந்தியா போட்டியிட்டிருக்க வேண்டியதில்லை. முறையான முன் தயாரிப்புகள் இல்லை. ஆலோசனைகளும் விவாதங்களும் இல்லை. யானைக்கும் அடி சறுக்கும். ஆனால் சறுக்கலிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).
-தினமணி, 17 அக்டோபர் 2006