கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்

மு. இராமனாதன்

First published in Kalachuvadu, January 2007.

அக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வாஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.

இதை ஒரு ‘வரலாற்று நிகழ்வு’ என்று வர்ணித்த வடகொரியா, ‘கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட சோதனை இது’ என்றும் கூறியது. ஆனால் இந்தச் சோதனையால் உலக நாடுகள் கடும் அதிருப்தியடைந்தன. வடகொரியாவின் ஒரே சகாவான சீனாவிற்கும் இது உவக்கவில்லை போலும். மனித குலத்தைப் பெருந்திரளாய் அழிக்க வல்ல ஆயுதம் ரகசியமான ஆட்சியாளர்களிடம் இருக்குமானால், அது பேரழிவிற்கு வழிவகுக்கும் எனும் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஒருமனதாகவும் உடனடியாகவும் வடகொரியாவின் மீது பல தண்டனைத் தடைகளை நிறைவேற்றியது. ‘ரகசிய தேசம்’, ‘ரவுடி ராஜ்ஜியம்’ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வடகொரியாவை, அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் தடைகளின் நோக்கம். ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. இதற்கு முன்பும் இப்போதும் வடகொரியா எதிர்கொண்டுவரும் சர்வதேசத் தடைகளால் அதைப் பணியவைக்க முடியவில்லை. அதனால்தான் சீனா சமரசத்திற்கு முயன்றது. நவம்பர் தொடக்கத்தில் வடகொரியா பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. ஓராண்டுக்கும் மேலாக முடங்கியிருக்கும் “ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தை” பெய்ஜிங்கில் மீண்டும் டிசம்பரில் தொடங்கும். இந்தப் பேச்சுவார்த்தைகளில் விருந்தினரான சீனா முக்கியப் பங்கேற்கும்; கொரிய தீபகற்பத்தின் பங்காளிகளான வடகொரியாவும் தென்கொரியாவும் பங்கேற்கும்; அண்டை நாடுகளான ஜப்பானும் ரஷ்யாவும், கூடவே அமெரிக்காவும் பங்கேற்கும்.

வரலாறு

பேச்சுவார்த்தைகளில் இடம்பெறப்போகும் நாடுகள் அனைத்திற்கும் குருதி புரண்டோடும் கொரிய வரலாற்றில் பங்குண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய ‘நேச நாடுக’ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன.

1950இல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வடகொரியா. தென்கொரியத் துருப்புகளாலும் ஜப்பானியத் தளங்களிலிருந்து விரைந்த அமெரிக்கத் துருப்புகளாலும் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தது அமெரிக்கா. அப்போது பாதுகாப்பு மன்றத்தில் சீனாவின் இடத்தைத் தைவான் வகித்துவந்தது. இதை எதிர்த்து சோவியத் யூனியன் மன்றத்தைப் புறக்கணித்துவந்தது. அமெரிக்காவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 லட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் பன்னாட்டுப் படை உருவானது. இதில் 2.60 லட்சம் பேர் அமெரிக்கர்கள்தாம். இந்தப் படை 1950 செப்டம்பரில்தான் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. செப்டம்பர் இறுதியிலேயே தென்கொரியப் பகுதிகள் மீட்கப்பட்டன.

போர் இங்கே முடிந்திருந்தால், ஒருவேளை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபகற்பம் முழுவதையும் மேற்குலகின் செல்வாக்குப் பகுதியாக மாற்ற விரும்பினார். ஐ.நா.வின் படை 38ஆம் அட்சக் கோட்டைக் கடந்து, வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. சீன-வடகொரிய எல்லையில் நீண்டு கிடக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கி முன்னேறியது. அப்போது, மலைகளுக்குப் பின்னாலிருந்து வெளியேறிய சீனாவின் ‘தொண்டர் படை’யை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ட்ரூமன் எதிர்பார்க்கவில்லை. 1950இன் டிசம்பர்க் கடுங்குளிரில் ஐ.நா.வின் படை பின்வாங்க நேர்ந்தது. போர் மேலும் இரண்டாண்டுகள் நீண்டது. வரலாற்றாளர்களின் கணிப்பில் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல். 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. எனினும் இதுவரை சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை. அமெரிக்க-தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை ராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது.

வடகொரியாவின் வறுமை

வடகொரியாவில் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை ‘பெருந்தலைவர்’ என்றும் மகன் ‘அன்புத் தலைவர்’ என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18% நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் ‘டைம்’ செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர்.

வடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது.

1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme – WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.

அணு ஆயுதம்

1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty – NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை ‘தீமையின் அச்சில் சுழலும்’ நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

அக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை ‘வெற்றிகரமாக’ நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம். ஆனால் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசத்தை மேலும் நெருக்குவது மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்கும். இந்தத் தடைகள் வடகொரியா எதிர்பாராதவை அல்ல. இவை அதிக காலம் நீடிக்காது என்பது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம். முன்நிபந்தனையின்றி ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அது எதிர்பார்த்திருக்கலாம். இனி ஊக்கச் சலுகைகள் தாமே வரும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

ஆறு நாடுகள்

இப்போதைக்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மட்டுப்படுத்திக்கொள்ளும் எனத் தெரிகிறது. ஜப்பான் தடைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றே சொல்லிவருகிறது. ரஷ்யாவிற்கு ஒரு காலத்தில் அதன் செல்வாக்குப் பகுதியாக இருந்த வடகொரியாவின் மீது அனுதாபம் தொடர்கிறது.

வடகொரியாவின் ராணுவத் துருப்புகளின் எண்ணிக்கை 10 லட்சம். தென்கொரியா இந்தப் பலத்தில் பாதியையே பெற்றிருக்கிறது. ஆனால் தெற்கு, வடக்கைக் காட்டிலும் இரு மடங்கு மக்கள் தொகையும் 20 மடங்கு செல்வச் செழிப்பும் மிக்கது. ஜூலை மாதம் நிறுத்திவைத்த உணவுப் பொருட்களை, பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள இந்தச் சூழலில் தென்கொரியா அனுப்பிவைக்கும் என்று தெரிகிறது. ‘கொரியர்கள் அனைவரும் சகோதரர்கள், இந்தப் பிரிவினை வல்லரசுகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது’ எனும் கருத்து புதிய தலைமுறையிடம் நிலவுகிறது.

வடகொரியாவின் உணவுத் தேவைகளில் கணிசமான பகுதியையும் எரிபொருள்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது சீனா. தனது அறிவுரையை மீறி வடகொரியா அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியபோது சீனா வன்மையாகக் கண்டித்தது. ஆனால் வடகொரியாவைப் பேச்சுவார்த்தைக்கு இணங்கச்செய்ததும் சீனாவேதான்.

அணு ஆயுதப் பரவல்

வடகொரியாவின் சோதனை 187 நாடுகள் ஒப்பிட்டிருக்கும் NPTயின் மீது அறையப்பட்டிருக்கும் ஆணி என்று சில விமர்சகர்கள் கருதுகின்றனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதபாணியாக இருந்தது. பிற்பாடு சோவியத் யூனியன் (1949), பிரிட்டன் (1952), பிரான்ஸ் (1960), சீனா (1964) ஆகிய நாடுகளும் அணு ஆயுதம் தரித்தன. இந்த ஐந்து நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் வீட்டோ அதிகாரமுள்ள நிரந்தர உறுப்பினர்கள். NPT, இந்த ஐந்து நாடுகளையும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கவும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளவும் அனுமதிக்கிறது. தடை, மற்ற உறுப்பு நாடுகளுக்குத்தான். இந்தச் சமனற்ற உடன்பாட்டுக்கு இந்தியா ஒப்பவில்லை. 1974இலும் 1998இலும் இந்தியா சோதனைகள் நிகழ்த்தியது. அமெரிக்கா கண்டித்தது. ஆனால் 1967இலேயே அணு ஆயுதத்தைத் தயாரித்த இஸ்ரேலை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. 1998இல் பாகிஸ்தான் எட்டாம் அணு ஆயுத நாடானது. இப்போது வடகொரியா ஒன்பதாம் நாடாகியிருக்கிறது.

அணு ஆற்றல் ஆய்வாளர்கள் இன்னும் 40 நாடுகளேனும் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் வல்லமை பெற்றவை என்கின்றனர். இந்த நாடுகள் தங்களது சிவில் அணு ஆற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் திறன் கொண்டவை. இதைத் தவிர அணு ஆயுதக் கள்ளச் சந்தை வேறு. பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை எனப்படும் அப்துல் காதிர் கானின் ஏற்பாட்டில் சென்ட்ரிஃப்யூஜ் எனப்படும் சுழற்சிச் செறிவாக்கல் கருவிப் பகுதிகள், பாகிஸ்தானிலிருந்து லிபியா, ஈரான் மற்றும் வடகொரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன. இது 2004இல் அம்பலமானது. எகிப்து, நைஜர், நைஜீரியா, சூடான், சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு கான் பயணம் செய்திருந்ததும் அப்போது தெரியவந்தது.

வடகொரியாவின் சோதனை, இனி ஜப்பானும் தென்கொரியாவும் அணு ஆயுதத்தை நாடுமோ என்னும் அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்விரண்டு நாடுகளுக்கும் அணு ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பு எனும் குடையை விரித்துவைத்திருக்கிறது அமெரிக்கா. இந்தக் குடை அதிக காலம் வேண்டிவருமா என்னும் ஐயம் வடகிழக்கு ஆசியாவின் மீது கவிந்திருக்கிறது.

இந்தச் சோதனையை இந்தியா எதிர்கொண்ட விதம் வியப்பளித்தது. புதுதில்லியின் அறிக்கை குற்றச்சாட்டுகளை அடுக்கியது: “சர்வதேசக் கட்டுப்பாட்டை மீறிய செயல், சமாதானத்திற்கான பேரபாயம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், கள்ளத்தனமான அணு ஆயுதப் பரவல் …” ஏன் இத்தனை கோபம்? இந்தியா NPTயில் கையொப்பமிடவேயில்லை. வடகொரியா 2003இல் முறைப்படி பின்வாங்கிக்கொண்டது. இந்தியாவின் சோதனை சர்வதேசக் கட்டுப்பாடுகளை மீறவில்லையெனில், வடகொரியா மட்டும் எப்படி மீறியதாகச் சொல்ல முடியும்? வடகொரியா போன்ற ஒரு நாடு பேரழிவு ஆயதங்களை வைத்திருப்பதைக் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தால் அதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் காட்டமான எதிர்வினைக்குப் பின்னால் இருப்பது இந்திய-அமெரிக்க சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே கூடுதல் நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டுவரும் ஒப்பந்தம், இந்தச் சோதனையால் இனியும் தாமதமாகலாம். யாரையேனும் மகிழ்விக்க இந்தியா, தன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரலாகாது.

திசைவழி

ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வடகொரியா விரும்புகிற பொருளாதாரச் சலுகைகள் அதற்குக் கிடைக்கலாம். தன்னை ஓர் அணு ஆயுத நாடாக எல்லோரும் அங்கீகரிக்க வேண்டு மென்றும் அது கோரலாம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்து வதிலும் பிறருக்கு வழங்குவதிலும் அது அமெரிக்காவுடன் பேரம் பேசலாம். எவ்வாறாகிலும் அது அணு ஆயுதங்களை இப்போதைக்குக் கைவிடப் போவதில்லை.

எனில், NPTயின் கதி? ஐந்து நாடுகள் மட்டும் அணு ஆயுதத்தை வைத்திருக்கும்; அவை சமாதனத்திற்கு மட்டும் அவற்றைப் பயன்படுத்தும்; NPTயின் மற்ற உறுப்பு நாடுகள் அவற்றைத் தயாரிக்கவோ பரிமாறிக் கொள்ளவோ கூடாது எனும் விதிகள் இனியும் செல்லுபடியாகாது. NPTயில் அங்கம் வகிக்காத நாடுகளை அமைப்பு எப்படிக் கட்டுப்படுத்தும் என்பதிலும் தெளிவில்லை. அதிகமான அணு ஆயுத நாடுகளை ஒப்புக் கொள்வதோ, அனைத்து நாடுகளும் அணு ஆயுதத்தை மறுதலிப்பதோதான் ஏற்கக்கூடிய வழிகளாக இருக்கும். இடைப்பட்ட வழிகளின் கதவுகள் கடந்த 30 ஆண்டுகளில் வரிசையாக அடைபட்டுவந்திருக்கின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் கனவாகத் தோன்றலாம். ஆனால் அதுவே நீதியானது. அதற்கு அணு ஆயுதத்தை இப்போதைக்கு ஒன்பது நாடுகள் மட்டுமே கைவிட வேண்டும்.

கட்டுரையாளர் ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.

–நன்றி: காலச்சுவடு ஜனவரி 2007

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: