இணையம்: பலவீனமான வலை

மு இராமனாதன்

First published in Thinnai on Thursday, February 1, 2007

டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் பேரிடர் ஒன்றை நேரிடவிருக்கிறது என்பது அப்போது தெரியாது. அவருக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. இணையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் நடப்பு விலையைப் பார்த்துவிட்டு, வட அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலில் ஒப்பந்தப் புள்ளி ஒன்றை அனுப்ப வேண்டும். தைவானில் உள்ள உற்பத்தியாளரின் பில்லை சரி பார்த்து உரிய தொகையை அனுப்ப வேண்டும். வங்கியின் வலைத்தளத்தில் பிரவேசித்து, அறிவுரைகள் வழங்கினால் அன்றைய தினமே பணம் அவர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். ஆனால் லியுங்கிற்கு எந்த இணைப்பும் கிடைக்கவில்லை. “தொடர்பு கிடைப்பதற்கான கால அவகாசம் கடந்து விட்டது” என்கிற அறிவிப்பே மீண்டும் மீண்டும் திரையில் தோன்றியது. உள்ளங்கைக்குக் கீழ் உருளும் விசையெலியின் ‘கிளிக்’ ஓசையில் விரியும் இந்தத் தளங்களுக்கு அன்று என்ன நேர்ந்தது என்று அவருக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம் பல சர்வதேசத் தொலைபேசித் தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. காலை 10 மணியளவில் காரணம் தெளிந்தது.

முந்தின நாள் இரவு, டிசம்பர் 26 அன்று தைவானை சக்தி வாய்ந்த பூகம்பமொன்று தாக்கியிருந்தது. ரிக்டர் அளவில் 7.1 என்று பதிவாகியிருந்த இதன் அதிர்வலைகளை ஹாங்காங்கிலும், சீனாவின் க்வாங்டாங், ·ப்யுஜான் மாநிலங்களிலும் கூட உணர முடிந்தது. தைவானின் தெற்கு முனையில் கடலுக்கு 22 கி.மீ கீழே உருவான இந்தப் பூகம்பம், இணையத்தின் பல தொடர்புகளையும் தகர்த்தது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 அன்று, சுமத்ரா தீவுகளுக்கு அருகே கடலாழத்தில் உருவான பூகம்பத்தை இது நினைவூட்டியது. அப்போது இந்துமாக் கடலோரமெங்கும் கரைகளைக் கடந்த சுனாமி அலைகள், 2,30,000 உயிர்களைக் காவு கொண்டன. அதோடு ஒப்பிடுகையில் இந்தப் பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஆனால் இது உண்டாக்கிய பாதிப்பு முற்றிலும் வேறு பரிமாணாம் உடையதாய் இருந்தது. இந்தப் பூகம்பம் கடலுக்குக் கீழ் நிறுவப் பட்டிருந்த பல ஒளியிழைக் கேபிள்களைத் (fibre-optic cables) துண்டித்தது. நீர்மூழ்கிக் கேபிள்கள் என்று அழைக்கப்படும் இவற்றின் ஊடாகத்தான் இணையத்தின் தகவல்கள் பயணிக்கின்றன. தொலைபேசிக் குரல்களும், காட்சிப் படங்களும் கூட இவ் வண்ணமே கடத்தப் படுகின்றன. சர்வதேசத் தொலைபேசி உரையாடல்கள் உட்பட உலகின் 95 சதவீத தொலைத் தொடர்புப் பரிமாற்றங்கள் இந்த நீர்மூழ்கிக் கேபிள்கள் வழியேதான் நடக்கின்றன.

முறிந்து போன கேபிள்களில் ஒன்று- கிழக்காசியக் கேபிள் தொடர். ஆசியா நெட்வொர்க் எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கேபிள், ஹாங்காங்கை சீனா, தைவான், பிலிப்பைன்ஸ், ஜப்பான், கொரியா மற்றும் சிங்கப்பூருடன் இணைக்கிறது. தென் சீனக் கடலும், பிலிப்பைன்ஸ் கடலும் இணைகிற லூஸான் நீரிணையில் பல இடங்களில் முறிந்து போன இந்தக் கேபிளின் மொத்த நீளம் 19,800கிமீ. முறிந்து போன பிற கேபிள்கள்: ஆசியா பசிபிக் கேபிள் தொடர்(19,000கிமீ), வடக்காசிய வளையம்(10,000கிமீ), சீன-அமெரிக்க கேபிள் தொடர்(30,000கிமீ), ஆசிய-ஐரோப்பிய கேபிள் தொடர்(28,000கிமீ), மற்றும் ஹாங்காங்கைப் பல கிழக்காசிய நாடுகளுடன் இணைக்கும் 17,000கிமீ நீளமுள்ள C2C கேபிள் தொடர். மொத்தத்தில், ஹாங்காங்கை மற்ற நாடுகளுடன் இணைக்கும் 7 கேபிள்களில் 6 முறிந்து போயின. பிற தென் கிழக்காசிய நாடுகளும் இதை ஒத்த பாதிப்புக்கு உள்ளாகின. இணையத்தின் ஜீவநாடியாக விளங்கும் இந்தக் கேபிள்கள் முறிபட்டபோது, இணையத்தைச் சுற்றிச் சுழலும் வணிகமும், தொழிலும், கல்வியும், ஊடகமும், பொழுது போக்கும் பாதிக்கப் பட்டன.

மின்னஞ்சல்கள் இடைவிட்டு வந்திறங்கின. பல வலைத்தளங்களின் வாசல்கள் அடைந்து கொண்டன. தேடு பொறிகள் செயலிழந்தன. 24 மணி நேரமும் தடையற்ற இணையச் சேவையை அனுபவித்த வந்த ஹாங்காங் மக்கள் இந்த இடையூறால் அதிர்ந்து போயினர். இவர்களில், ரயில் நிலையங்களில் பொருத்தப் பட்ட கணினிகளில் பரபரப்புடன் கடந்து போகும் பயணிகளுக்கிடையில் தமது மின்னஞ்சல் கொள்கலனை விரைவாகத் திறந்து பார்ப்பவர்கள் உண்டு. காபிக் கடைகளின் உயரமான முக்காலிகளில் அமர்ந்தபடி ஆறிப்போன காபியை உறிஞ்சியபடி வலைத்தளங்களை வாசிப்பவர்கள் உண்டு. மடிக் கணினிகளில் சைபர் வெளியில் சஞ்சரிப்பவர்கள் உண்டு. செல்பேசிகளில் குறுஞ் செய்திகள் அனுப்புபவர்கள் உண்டு. இவர்களது வாழ்வில் கணினியும் இணையமும் கலந்து விட்டது.

ஹாங்காங்கின் 70 லட்சம் மக்கள் தொகையில், எம்.எஸ்.என்-இன் ஹாட்மெயில், உடனடித் தகவல் முதலான சேவைகளுக்கு மட்டும் 17 லட்சம் பேர் சந்தாதாரர்கள் என்கிறார் மைக்ரோசா·ப்டின் ஹாங்காங் மேலாளர் லெஸ்லி சூ. பூகம்பத்திற்கு அடுத்த சில தினங்கள் எம்.எஸ்.என் சேவையின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. வணிகத்திலும் தொழிலிலும் உண்டான பாதிப்புகளும் அதிகம். ப்ளும்பெர்க், ராயிட்டர்ஸ் போன்றவை வழங்கும் நிதித் தகவல்கள் கிடைக்காததால் அந்நியச் செலவாணி வணிகம் முடங்கியது. சேவை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஜார்ஜ் லாவ் சொல்கிறார்: “பல ஹாங்காங் வணிக நிறுவனங்களின் வலைத்தளங்களை, வட அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இருந்த வாடிக்கையாளர்களால் திறக்க முடியவில்லை.” அதி வேகமாக இயங்கி வந்த வணிகப் பரிமாற்றங்கள் தடுமாறின. இணையச் சேவைக்கு இப்படி ஒரு தடங்கல் நேருமென்று பயனர்கள் யாரும் கருதி இருக்கவில்லை.

இணையத்தின் முந்தைய வடிவம் ஆர்ப்பாநெட். எழுபதுகளில் பல்கலைக் கழகங்களும், ராணுவ மையங்களும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள தங்களது கணினிகளை இணைத்துக் கொண்டன. அதுவே ஆர்ப்பாநெட் எனப்பட்டது. இது படிப்படியாக வளர்ந்து எண்பதுகளில் இணையம் என்று பெயர் பெற்றது. இணையம் உருக் கொண்ட இந்தக் காலம், அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் உச்சத்திலிருந்த காலம். ஆதலால் அணுசக்தி தாக்குதல் நேர்ந்தாலும் தரவுகள் பாதிக்கப் படாதவாறு இணையம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அப்போது சொல்லப் பட்டது. ஏதேனும் ஒரு வழி அடைபட்டால், தகவல்கள் தாமே வழி மாறி இலக்கை அடைய வேண்டும். எனில், டிசம்பர் 26 அன்று இது நடக்கவில்லை. நீர்மூழ்கிக் கேபிள்கள் பல ஒரே சமயத்தில் செயலிழந்தன.

பாதிப்பின் தீவிரம் புரிந்ததும், முறிபடாத கேபிள்கள் வழியாக தகவல்களும், குரல்களும், படங்களும் கடத்தப்பட்டன. இரண்டு தினங்களுக்குள் தைவான் நீங்கலாக பாதிக்கப்பட்ட பிற தென் கிழக்காசிய நாடுகளின் சர்வதேசத் தொலைபேசிச் சேவை பெருமளவு சீராகிவிட்டது. இணையச் சேவையும் படிப்படியாக முன்னேறி ஒரு வார காலத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் பல தொடர்புகள் கிடைப்பதில் தாமதம் தொடர்ந்தது. சைபர் வெளி குறுகி விட்டது. அதனால் தகவல் நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருக்கும் போக்கு வரத்து நெரிசல்தான் தாமதத்திற்குக் காராணம். ஹாங்காங் தொலைத் தொடர்பு மையம், அவசியத்திற்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்துமாறும், வெளிநாட்டு வலைத்தளங்களிலிருந்து பெரிய கோப்புகளை இறக்கிக் கொள்ள வேண்டாமென்றும் பயனர்களைக் கேட்டுக் கொண்டது.

பாதிக்கப்பட்ட கேபிள்கள் லூஸான் நீரிணையில், 300கிமீ நீளமும் 150கிமீ அகலமும் உள்ள கடற்பரப்பில் நீண்டு கிடக்கின்றன. கப்பல்களை நடுக் கடலில் நங்கூரமிட்டு, கடல் மட்டத்திற்கு 4கிமீ கீழேயிருக்கும் கேபிள்களில் முறிபட்ட பகுதிகளைக் கண்டுணர்ந்து, அவற்றைக் கப்பல் தளத்திற்கு உயர்த்தி, பழுது பார்த்து, மீள இறக்க வேண்டும். இப்போதும் பணி மும்முரமாக நடக்கிறது. பிப்ரவரியில்தான் நிலைமை முழுமையாகச் சீரடையும் என்கின்றனர் கேபிள் உரிமையாளர்கள்.

இந்தக் கேபிள்கள் குறுக்கும் நெடுக்குமாக போதிய பாதுகாப்பின்றி கடற்படுகையில் இடப்பட்டு இருக்கின்றன. “நங்கூரங்களும், மீன் வலைகளும் கேபிள்கள் முறியக் காரணமாக இருந்திருக்கின்றன” என்கிறார் ஆஸ்திரேலியா தேசீயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்கஸ் புக்ஹார்ன். சமயங்களில் சுறாமீன்கள் கடித்து வைப்பதும் உண்டு. ஆனால் பல முறிவுகள் ஒரே சமயத்தில் நேர்ந்திருப்பது இதுவே முதல் முறை.

இவ்விதமான தடங்கல் நேராதிருக்க என்ன செய்ய வேண்டும்? வாஷிங்டனில் உள்ள கணினி ஆலோசனை நிறுவனமொன்றின் தலைவர் பிராங் டஜ்பெக் சொல்கிறார்: “பல்வேறு பாதைகள் இருக்க வேண்டும். ஒரே வழித்தடத்தில் எல்லா கேபிள்களையும் இடலாகாது.” கூடுதல் கேபிள்களும், தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக வழித்தடங்களை மாற்றும் சாத்தியங்களும் தேவை என்கின்றனர் வல்லுநர்கள். பூகம்பப் பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை. செயற்கைக் கோள் மூலம் தரவுகளைக் கடத்த முடியும். ஆனால் செலவு அதிகம்.

இந்தச் சம்பவம் வேறு சில விவாதங்களையும் தோற்றுவித்திருக்கிறது. கேபிள் உரிமையாளர்கள் மீது அராசாங்கங்களுக்கு யாதொரு கட்டுப்பாடும் இல்லை. இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் உரிமங்கள் வழங்குகின்றன. எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அவற்றை நிர்ப்பந்திப்பதற்கு பல நாடுகளின் சட்டங்களில் வழி இல்லை. சில வல்லுநர்கள், அரசின் தலையீடு தேவையில்லை, சந்தையின் தேவைக்கு சேவை நிறுவனங்களும், கேபிள் உரிமையாளர்களும் ஈடு கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றனர். வேறு சிலர் இதை ஒப்பவில்லை. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இணையத்தின் ஜீவநாடி, சில தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கைகளில் இருப்பதும், அதில் அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லாதிருப்பதும் பொது நலனுக்கு உகந்ததில்லை என்பது அவர்கள் வாதம்.

இந்தப் புத்தாண்டு தினத்தன்று லியுங் சி விங்-கால் எப்போதும் போல் நண்பர்களுக்கு வாழ்த்துக் குறுஞ் செய்திகள் அனுப்ப முடியவில்லை. ‘உடனடித் தகவல்’ சேவையில் அவர் அனுப்ப முயன்ற வாழ்த்துக்கள் எதுவும் உடனடியாகப் போகவில்லை. இணையத்தின் முழுப் பயன்பாட்டையும் தூய்ப்பதற்கு கேபிள்கள் பலமாக இருக்க வேண்டும். அரசு-கேபிள் நிறுவனங்கள்-சேவை நிறுவனங்கள்-பயனர் இடையேயான இடைமுகம் குறித்த திறந்த விவாதங்கள் நிகழ்த்தப் பட்டு, நிறுவனங்களின் கடமைகள் வரையறுக்கப்பட வேண்டும். கேபிள்களைப் பாதுகாப்பாக நிறுவுவதற்குச் சர்வதேச விதிமுறைகள் வகுக்கப் படவேண்டும். “இணையச் சேவை வழங்குவோரும் கேபிள் உரிமையாளர்களும் பேருந்து நிறுவனங்களைப் போல் இயங்க வேண்டும்” என்கிறார் மலேசியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் இயக்குநர் முகமது ஷாகிரில். “இலக்கை அடைவதற்கு ஒரே ஒரு வழித்தடம் போதுமானதில்லை. பல வழித்தடங்கள் வேண்டும்”.


நன்றி: திண்ணை பிப்ரவரி 1, 2007

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: