ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்

மு இராமனாதன்

இப்ராகிம் ஹாங்காங்கிற்கு வந்து ஒரு வருடமாகிறது. காயல்பட்டினம் மத்திய மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த கையோடு ஹாங்காங் எல்லிஸ் கடோரி அரசு மேனிலைப் பள்ளியில் முதல் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்து விட்டான். பள்ளியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கூடவே கொஞ்சம் சீனமும் படிக்கிறான். ஆனால் தமிழ் படிக்காமல் அவன் பெற்றோருக்கு சமாதானம் ஆகவில்லை. YIFCஇன் தமிழ் வகுப்பிற்கு விண்ணப்பித்தான்.

அமைப்பாளர்கள் தரப்படுத்தியதில் சுலபமாக உயர்நிலை வகுப்பில் பொருந்தினான். உயர்நிலை வகுப்பு ஏகதேசம் ஐந்தாம் வகுப்பிற்கு இணையானது. ஆறாம் வகுப்புப் படித்தவனுக்கு ஐந்தாம் வகுப்புத் தமிழ் எளிதாகத்தானே இருக்கும்? எளிதாகத்தான் இருந்தது. ஆனால் “ரொம்ப வித்தியாசமானது” என்கிறான் இப்ராகிம். அங்கே நீண்ட பத்திகளைப் பாராமல் படித்து எழுத வேண்டியிருந்தது. இங்கே கோடிட்ட இடங்களை நிரப்புவதும், சிறிய வாக்கியங்களில் பதிலெழுதுவதும் போதுமானது. ஆனால் வார்த்தைகளையும் வாக்கிய அமைப்புகளையும் புரிந்து கொண்டால்தான், அந்தச் சிறிய வாக்கியங்களை எழுத முடியும் என்பது இப்ராகிமிற்கு விரைவிலேயே விளங்கியது. பாடங்களை கேள்வி-பதில்களாகப் பிரித்து, அவற்றை மனனம் செய்து விடைத்தாளில் மறு உற்பத்தி செய்வது மொழிக்கல்வி ஆகாது என்பது YIFC தமிழ் வகுப்பு அமைப்பாளர்களின் கருத்து. தமது எண்ணங்களையும் கருத்துக்களையும், பேச்சிலும் எழுத்திலும் வெளியுடவும் புரிந்து கொள்ளவுமான திறன்களை மாணவர்கள் பெற வேண்டும் என்பதே அமைப்பின் குறிக்கோள்.

தமிழ் வகுப்புகள் மூன்றாண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிற ஒரு நகரத்தில் YIFCஇன் அமைப்பாளர்களும், ஆசிரியர்களும் இந்த வகுப்புகளுக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் அபாரமானது. ஹாங்காங் தமிழ்ச் சூழலில் முன் உதாரணம் இல்லாதது. அதனால் தமிழ்ச் சமூகத்தின் ஆதரவையும் மதிப்பையும் நேடியிருப்பது. ஆனால் இந்தச் சேவையை ஆலையில்லாத ஊருக்கு வழங்கும் இலுப்பைப்பூச் சர்க்கரையாக YIFC கருதவில்லை. கரும்புச் சர்க்கரையாக, அதுவும் உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறது. அதனால் மாணவர்களுக்கு மொழித் திறன்களைப் பயிற்றுவிப்பதிலும், கூர்மைப்படுத்துவதிலும் விஞ்ஞான அணுகுமுறைகளைக் கைக்கொள்கிறது.

YIFC அமைப்பாளர்கள் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால் தமிழ் மொழியின்பால் பற்றுடையவர்கள். இந்த வகுப்புகளின் ஆசிரியர்கள் யாரும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களில்லை. ஆனால் இளைய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள். இவர்களில் யாரும் மொழியியல் வல்லுநர்களில்லை. ஆனால் மொழிக் கல்விக்கு அவசியமான திறன்கள் என்று அந்த வல்லுநர்கள் சொல்லுவதை தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பவர்கள்.

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுதான் ஒரு மொழியின் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பரிமாற்றம் முறையாக நிகழ வேண்டுமானால், அதில் பங்கேற்பவர்களுக்கு நான்கு அடிப்படை மொழித் திறன்கள் வேண்டும் என்கின்றனர் மொழியியலாளர்கள்.அவை கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்பன. இந்தத் திறன்கள் மாணவர்களுக்குக் கைகூட வேண்டுமெனும் நோக்கோடுதான் பாடத்திட்டம் கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வகுப்புகள் அக்கறையோடு நடத்தப்படுகின்றன. உருப்போட்டு ஒப்பிக்கும் திறன்களையல்ல,உண்மையான மொழித்திறன்களையே இவர்கள் நடத்தும் தேர்வுகள் மதிப்பிடுகின்றன.

கேட்டல்:

மொழிக் கல்வியில் கேட்டல் முக்கியமானது. பேசுவதுதான் செயல்பூர்வமானது என்றும், கேட்பதற்குக் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தால் போதுமானதென்றும் சிலர் கருதுகின்றனர். உண்மைதான். ஆனால் செவிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். கவனத்தை ஒருமுகப் படுத்த வேண்டும். வாசிக்கும் போது தேவைப்பட்டால் மீண்டும், மீண்டும் மீண்டும் படிக்கலாம். ஆனால் கேட்கும்போது வார்த்தைகளைத் தவறவிட்டால் பரிமாற்றம் தடைப்படும்.

YIFCஇன் எல்லாத் தமிழ் வகுப்புகளும் சொல்வது-எழுதுதல் (dictation) பயிற்சியோடுதான் தொடங்குகின்றன. மாணவர்களுக்கு அறிமுகமான வார்த்தைகளையோ வாக்கியங்களையோ ஆசிரியர்கள் சொல்வதும், அதைக் கேட்டு மாணவர்கள் எழுதுவதும், மொழியிலுள்ள அடிப்படை ஒலிகளை உணர்வதற்கும், சொல்வதைக் கேட்டு பிழைகளின்றி எழுதுவதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. ஆண்டிற்கு இருமுறை நடக்கும் தேர்வுகளிலும் இந்தப் பயிற்சிக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் “அரும்பு” பாடநூல் வரிசைகள்தாம் மிகுதியும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் பாடநூல்கள் மற்றும் பயிற்சி நூல்களோடு ஒலிவட்டுகளும் இடம் பெறுகின்றன. புதிய குரலில் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு, பயிற்சி நூல்களில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்கும் பயிற்சி உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை இடைநிலை மாணவர்களுக்கும் வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்த விழைகிறது YIFC.

பேசுதல்:

நன்றாக எழுதக் கூடிய பலரால் சரளமாகப் பேச முடிவதில்லை. சரளமாகப் பேசுகின்ற பலர் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. சிலர் பேசுவது சரியாகக் கேட்பதில்லை. நன்றாகக் கேட்குமாறு பேசும் சிலரது உச்சரிப்பு சீராக இருப்பதில்லை. எல்லாவற்றையும் இணைக்கும் பேச்சுப் பயிற்சி மொழிக் கல்வியின் இன்னுமொரு பிரதான கண்ணி.

YIFCஇன் வகுப்புகளில் ஒவ்வொரு பாடமும் எல்லா மாணவர்களாலும் உரத்த குரலில் வாசிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் உச்சரிப்பு மேம்படுகிறது. சொல்ல வந்த கருத்துக்கேற்ற தொனியும் மெல்லக் கைவருகிறது. வகுப்பில் மாணவர்கள் சகஜமாக இருக்கவும் இந்த வாசிப்பு உதவுகிறது. அச்சமும் கூச்சமும் விலகுகிறது. ஆரம்பநிலை மாணவர்களுக்குப் படம் பார்த்துக் கதை சொல்லவும், இடைநிலை-உயர்நிலை மாணவர்களுக்கு அறிமுகமான படங்களைக் குறித்து நண்பர்களோடு பேசவுமான பயிற்சிகள் தரப்படுகின்றன.

எல்லா வகுப்புகளுமே மாணவர்களின் பங்களிப்புடனான கலந்துரையாடல்களாகவே நடைபெறுகின்றன. எனில், அவர்களது பேச்சுத்திறன் தேர்வுகளில் சோதிக்கப்படுவதில்லை. ஹாங்காங் பள்ளிகளில் நடைபெறும் பிற மொழி வகுப்புகளில், மாணவர்களைக் கலந்துரையாடச் செய்து அதற்கு மதிப்பீடுகள் வழங்குவது தேர்வுகளின் ஒரு பகுதி. இவ்வாறான பயிற்சியை வரும் ஆண்டுகளில் தமிழ் வகுப்பின் தேர்வுகளிலும் உள்படுத்தும் எண்ணம் YIFCக்கு இருக்கிறது.

படித்தல்:

கேட்டலும் பேசலும் வாய்மொழிக் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் திறன்கள். எனில், படித்தலும் எழுதுதலும் எழுத்துக் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. படித்தல் என்பது வெறும் வாசிப்பு மட்டுமில்லை. ஒரு கதையோ, கட்டுரையோ, பாடலோ, விளம்பரமோ சொல்லும் கருத்தை உணர்ந்து கொள்ளும் திறன் முதற்கட்டம். அவை சொல்லும் துணைக் கருத்துக்களை புரிந்து கொள்வதும், படித்ததை நினைவில் கொள்வதும் அடுத்த கட்டம்.

வகுப்பறைப் பாடங்களைப் படிப்பதும், உட்கொள்வதும், பின் பயிற்சி நூல்களில் கோடிட்ட இடங்களை நிரப்புவதும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்கின்றன. புதிய சொற்கள் பட்டியிலடப்பட்டு, அவற்றின் பயன்பாடுகள் பல எடுத்துக்காட்டுகளோடு படிக்கப்படுகின்றன. எழுத்துக்கள் சொற்களாகும் போதும், சொற்கள் வாக்கியங்களாகும் போதும் அவற்றில் பயிலும் எளிய இலக்கணக் கூறுகளும் கற்பிக்கப்படுகிறது.

உயர்நிலை மாணவர்களால் ஒரு பத்தியைப் படித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது. இடைநிலை மாணவர்களால் படங்களைப் பார்த்து அதற்குரிய சொற்களை எழுத முடிகிறது. படிப்பது என்பது உள்வாங்கிக் கொள்வது, மனனம் செய்வது அல்ல என்பது யாரும் எடுத்துச் சொல்லாமலே, மாணவர்களுக்கு விளங்கி விடுகிறது.

எழுதுதல்:

ஏதொன்றையும் எழுதும்போது அதில் எழுதுகிறவர் மட்டுமே ஈடுபடுவதால் அது அந்தரங்கமானது என்று தோன்றலாம். ஆனால் எல்லா எழுத்திற்கும் ஒன்றோ அதற்கு மேற்பட்ட வாசகரோ இருப்பதால் அது பொதுவானது என்பதே சரி. எழுத்து நிரந்தரமானது. அதனால் சரியான சொற்களைக் கொண்டு பிழையற எழுதுவது அவசியமாகிறது.

கையெழுத்துப் பயிற்சி எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இளநிலை மாணவர்களின் பயிற்சி புள்ளியிட்ட எழுத்துக்களின் மீது விளம்புவதில் தொடங்குகிறது. இளம் சிறார்களுக்கு நீண்ட நேரம் பென்சிலைப் பிடித்து எழுதுவது அயர்ச்சியாக இராதா? “ரொம்ப நேரம் எழுத மாட்டோம்” என்கிறாள் ஷாகினா. அப்புறம் வகுப்பில் என்ன செய்வார்கள்? Western Pacific எனும் மழலையர் பள்ளியில் “K3A” படிக்கும் ஷாகினா தமிழ் வகுப்பின் இளநிலை மாணவி. அவள் தொடர்ந்து சொல்கிறாள்: “பாட்டுப் பாடுவோம், கதை சொல்லுவோம்….அப்புறம் படிச்சுக் கொடுக்கிறதை திரும்பச் சொல்லுவோம்”.

இடைநிலை, உயர்நிலை வகுப்புகளுக்கு எழுதும் அளவு ஒப்பீட்டளவில் கூடுகிறது. கேட்பதை எழுதுவதும், படிப்பதை எழுதுவதும் வகுப்பறைகளிலும், வீட்டுப் பாடங்களிலும், தேர்வுகளிலும் தொடர்கிறது. எல்லா எழுத்தும் புரிந்து கொண்டு எழுதப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் முனைப்பாக உள்ளனர்.

ஐந்தாவது திறன்:

ஜாரிஃபா, யாமாட்டை கைஃபங் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி. பள்ளியில் ஆங்கிலத்தோடு, சீனமும் படிக்கிறாள். சீன வகுப்புகளில் பொதுத் தலைப்புகளில் 150 வார்த்தைகள் வரையிலான சிறிய கட்டுரைகளை எழுதுவதாகச் சொல்கிறாள் ஜாரிஃபா. தமிழ் வகுப்பில் மூன்றாண்டுகளாகப் படிக்கும் அவளுக்கு அதைக் காட்டிலும் அதிகமாகத் தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறக்கூடிய ஆசைதான். படிப்பதையும், கேட்பதையும் உள்வாங்கிக் கொண்டு எழுதுவதால், இந்த மாணவர்களால் அதிக தூரம் போக முடியும். எழுதுவது மட்டும் கல்வியாகாது என்பது மொழியிலாளர்களின் கருத்து. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களுக்கும் மொழிக் கல்வியில் சரி நிகர் சமானமான இடம் உண்டு. இந்த நான்கு திறன்களையும் மாணவர்கள் பெறும் போது அவர்களால் தெளிவாகச் சிந்திக்க முடியும். அப்போது ஐந்தாவது திறனொன்று அவர்களுக்குக் கைகூடும். அது சுயமாக கல்வி கற்கும் திறன். சுய சிந்தனையுள்ள மாணவர்களால் வருங்காலத்தில் வாழ்க்கையை, அதன் பிரச்சனைகளை நேரிட முடியும். நல்ல குடிமக்களாகவும் உருவாக முடியும்.

(தமிழ் வகுப்பு மூன்றாம் ஆண்டு விழா மலரிலிருந்து, மே 2007)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: