ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்

மு இராமனாதன்

First published in Vaarththai, June 2008

கவ்லூன் பூங்கா ஹாங்காங்கின் நடுநாயகமான பகுதியில் அமைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் பூங்காவில் நிறுவப்பட்டது அந்தக் கடிகாரம். அது காலத்தை முன்னோக்கிக் காட்டுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதற்கு இன்னும் எத்தனை தினங்கள் இருக்கிறது என்பதை நாள்தோறும் குறைத்துக் காட்டிக் கொண்டே வரும்.  மே  2ஆம் தேதி ’98 தினங்கள்’ என்று அறிவித்தது கடிகாரம். அன்று பகல்  வெளிச்சம் மங்கலாக இருந்தது. மெல்லிய  தூறலும்  சேர்ந்து கொண்டது. இவையெதுவும்  நகரின்  பிரதான சாலைகளின் இருமருங்கும் திரண்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. அன்றுதான் ஐந்து கண்டங்களையும், 19  நகரங்களையும் கடந்து ஒலிம்பிக் பந்தம் ஹாங்காங்  வந்திருந்தது. இன்னும் நூறுக்கும் மேற்பட்ட சீன நகரங்களில் அதன் பயணம் தொடரும். ஆகஸ்ட் 8ஆம்  தேதி  பெய்ஜிங்  சென்றடையும்.

சீன மண்ணில் பந்தத்தின் முதல் தொடர் ஓட்டம் நடப்பது தங்கள் நகரில்தான் என்கிற பெருமிதத்தை ஹாங்காங் மக்களிடத்தில் பார்க்க முடிந்தது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு வந்து 11 ஆண்டுகளே ஆகின்றன. என்றாலும் தாய்மண்ணோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஹாங்காங்கின் தேசப்பற்றை இந்த ஓட்டம் பறை சாற்றியது. தவிர, இது உலக நாடுகளுக்கு வேறு ஒரு செய்தியையும் சொல்லியது.

ஹாங்காங் வருவதற்கு முன் பந்தம் உலகின் பல முனைகளில் பயணம் செய்திருந்தது. அந்தப் பயணம் திபெத் ஆதராவாளர்கள் உள்ளிட்ட சீன எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது; ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் அமைதியாக நடைபெறவில்லை. இதே வேளையில் சீனாவின் மீது உலகத் தலைவர்களின் கடுமையான விமர்சனங்களும் சேர்ந்து கொண்டன. இந்த அரசியலால் சீனாவின் பெருமிதம் பங்கப்பட்டிருந்தது. ஹாங்காங்கின் கோலாகலமான தொடர் ஓட்டம், சீனர்கள் ஒலிம்பிக்ஸை எப்படி வாராது போல் வந்த மாமணியாகக் கொண்டாடுகின்றனர் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியது. 

அரசியல் விளையாட்டு 

மார்ச் 30ஆம் தேதியன்று சீன அதிபர் ஹூ ஜின்டாவ் தினெமன் சதுக்கத்தில் தொடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். உலகம் முழுதையும் விளையாட்டின் மூலம் ஒன்றிணைப்பது தான் ஒலிம்பிக்ஸின் நோக்கம் என்றார் ஹூ. கடந்த 30 ஆண்டுகளில் சீனா  சாதித்திருக்கும் அபரிமித வளர்ச்சி முன்னுதாரணமில்லாதது. ஒலிம்பிக்ஸ் வேளையில் அதை உலகிற்கு முரசறைந்து பெருமை கொள்ள விழைகிறது சீனா. தொடர் ஓட்டமும் அதன் ஒரு பகுதியே. ஆனால்  திபெத் ஆதரவாளர்களும், மேற்கு நாடு்களும், சீன எதிர்ப்பாளர்களும் சீனாவின் அரசியலைக் குறை கூற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஒலிம்பிக்ஸில் அரசியல் கலப்பது இது முதல் முறையல்ல. 1972 மியூனிக் ஒலிம்பிக்ஸில் யூத வீரர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். 1976 மான்ட்ரியல் ஒலிம்பிக்ஸை தென் ஆப்ரிக்காவின் நிற வெறிக்கு எதிராக 25 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணித்தன. பனிப்போர் உச்சத்திலிருந்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸிலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸிலும், தடகளங்களில் வீரர்களைப் பார்க்கிலும் வேகமாக ஓடி அரசியல் துவேஷங்கள் வெற்றி பெற்றன. ஆனால் இப்போது உலகம் மேலும் சுருங்கி இருக்கிறது. தகவல் தொழிநுட்பம் வளர்ந்து இருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான கட்டற்ற வணிகம் பெருகி இருக்கிறது. ஆகவே அரசியலைப் பின்னுக்குத் தள்ளி விளையாட்டு முன்னால் வர வேண்டும். அல்லது சீனா அப்படி எதிர்பார்த்தது. ஆனால் மேற்கு நாடுகள் சீனாவை தர்மசங்கடப்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல் நடந்து கொண்டன.

ஓட்டம் தொடங்குவதற்கு முன்னரே பிரச்சனைகள் ஆரம்ப மாகிவிட்டன. மார்ச் இரண்டாம் வாரத்தில் திபெத்தின் தலைநகர் லாசாவில் கலவரம் வெடித்தது. திபெத்தியக் கலகக்காரர்கள் சீனர்களின் கடைகளையும் உடைமைகளை யும்  குறி வைத்துத் தாக்கினார்கள். கலவரத்தை ஒடுக்கியது சீன நிர்வாகம். பல வெளிநாட்டு ஊடகங்கள் கலவரத்தைப் பற்றி விரிவாகப் பேசவில்லை. ஆனால் அதை அடக்கியதை மட்டும் செய்தியாக்கின. கடந்த 30 ஆண்டுகளில் திபெத், சீனாவைப் போலவே அதிவேகமான சமூகப் பொருளாதார வளர்ச்சிகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் திபெத்தியர்கள் பொருளாதார வளர்ச்சியால் மட்டும் திருப்தியுறவில்லை. அவர்கள் சுயாட்சி வேண்டும் என்கின்றனர். திபெத்தின் சமூக உரிமைகளைக் குறித்து எழுதிய வெளிநாட்டு ஊடகங்கள், அது அடைந்திருக்கும்  வளர்ச்சியைக் கண்டு கொள்ளவில்லை. ஊடகங்கள் உள்நோக்கத்தோடு தங்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டும் வெளியிடுவது சீனர்களுக்கு ஆத்திரமூட்டியது.

திபெத் கலவரங்களைத் தொடர்ந்து உலகின் மனசாட்சிக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், திபெத் விடுதலை இயக்கத்தினரிடம் தான் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்.  ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தலைவர் போட்டரிங்,ஒன்றியத் தலைவர்கள் ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, திபெத்துடன்  சீனா பேச்சு வார்த்தைகளைத் துவக்கினால் மட்டுமே தான் துவக்க விழாவில் பங்கேற்பேன் என்று நிபந்தனை விதித்தார். சார்லஸும், போட்டரிங்கும், சர்கோஸியும் இன்னும் பல மேற்கு நாட்டுத் தலைவர்களும் மனித உரிமைகளின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் தாம். 2012இல் ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கும். பிரிட்டிஷ் ராணுவம் ஈராக் ஆக்கி்ரமிப்பில் பங்கெடுத்ததற்காக இந்தத் தலைவர்கள் லண்டன் ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவைப் புறக்கணிப்பார்களா? இந்தப் பாரபட்சம் சீனர்களுக்கு எரிச்சலூட்டியது. 

சீனாவின் மீது இன்னும் பல குறைபாடுகள் சொல்லப்படுகின்றன. டார்ஃபரில் சூடான் நடத்தி வரும் இனப்படுகொலைகளை சீனா கண்டு கொள்வதில்லை என்பது அவற்றுள் ஒன்று. சூடானோடு ராஜிய – வர்த்தக உறவுகளைப் பேணி வரும் சீனாவால் சூடானை நிர்ப்பந்திக்க முடியும். சீனாவில் மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது மேற்கு நாடுகளின் இன்னுமொரு குற்றச்சாட்டு. சீனாவில் மனித உரிமை என்பது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியதும் சீர்படுத்த வேணடியதுமான பிரச்சனைதான். ‘ஆனால் அதற்கு ஒலிம்பிக்ஸை களமாகப் பயன்படுத்தாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டார் ஒலிம்பிக்ஸ் தலைவர் ஜாக்குஸ் ரோகே. 

அரசியல் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு அதற்கான களங்கள் இருக்கின்றன. ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்களுக்கானது. இந்தத் தருணத்திற்காக அவர்கள் உடலை வருத்தி தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்தத் தருணத்திற்காக  சீனர்களும் காத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பொருள் செலவில் ஸ்டேடியங்கள், தடகளங்கள்,சாலைகள்,விடுதிகள்,விமான நிலையங்கள் எல்லாம் தயாராகியிருக்கிறது.சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்  மூடப்படுகின்றன,வாகனங்கள் நகருக்கு
வெளியே நிறுத்தப்படுகின்றன. டாக்ஸி  ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும் நான்காண்டுகளாக  ஆங்கில  வகுப்புகள்  நடக்கின்றன. இது சீனர்கள்  வீட்டுத் திருமணம், இதில் வந்து வாழ்த்தி விட்டுப்  போகுமாறு அழைக்கிறது சீனா. எல்லாக் கல்யாணங்களிலும் குறை சொல்லும் பெரியப்பாக்கள் இருப்பார்கள். தாலி கட்டிய பிறகு குறைகளைப் பேசலாம் என்று அவர்கள் காத்திருக்கத் தயாராயில்லை. பரிசம் போடுவதற்கு முன்னரே அவர்களது குறைகள் ஆரம்பமாகி விட்டன.

இதற்கு முன்னர் நடந்த எந்தத் தொடர் ஓட்டமும் இப்படி அரசியல் படுத்தப் பட்டதில்லை. 
மேகத்தின் ஓட்டம்

ஹாங்காங் வந்தடைவதற்கு முன்னர் தொடர் ஓட்டம் 19 நகரங்களைக் கடந்து வந்திருந்தது. தார் இ சலாம் (தான்சானியா), மஸ்கட் (ஓமன்) போன்ற நகரங்களில் ஓட்டத்திற்கு எதிர்ப்பேதுமில்லை. ஆப்பி்ரிக்க- அரேபிய நாடுகளுடன் சீனாவிற்கு உள்ள வணிக உறவு தான் காரணம். ஹோசி மின் நகரம் (வியட்னாம்), போயங் யாங்(வட கொரியா) நகரங்களிலும் பவனி சிறப்பாகவே நடந்தது. இந்த நாடுகளிலும் சீனாவிற்கு செல்வாக்கு அதிகம். பாங்காக் (தாய்லாந்து), கோலாலம்பூர் (மலேசியா) ஆகிய நகரங்களில் ஓட்டத்திற்குப் பலத்த காவல் தேவைப்பட்டது. ஜக்கார்த்தாவில் (இந்தோனேசியா) ஓட்டம் நடந்த பகுதியில் குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது; ஆர்ப்பாட்டக்காரர்கள் வெகு தொலைவில் நிறுத்தப்பட்டனர். பாதுகாப்புக் காரணங்களால் இஸ்லாமாபாத்தில் (பாகிஸ்தான்) ஸ்டேடியத்திற்குள்ளேயே நடந்தது  ஓட்டம். கான்பராவிலும்(ஆஸ்திரேலியா), சியோலிலும்(தென் கொரியா) சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன; அந்த நாடுகளில் வசிக்கும் சீனர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு சீனாவிற்கு ஆதரவாக எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

புது தில்லியில் 3 கி.மீ தூரம் நடந்த ஓட்டத்தில் விளையாட்டு வீரர்களும் பிரமுகர்களுமாக 70பேர் பங்கு பெற்றனர். ஒரு போதும் உய்த்து உணர முடியாத ஒரு நொடியின் நூற்றிலொரு பாக வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்த ஒருவரை சில வயசாளிகளுக்கு நினைவிருக்கலாம். 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸில் 400மீட்டர் தடை ஓட்டத்தில் 0.01நொடி பின்னால் வந்ததால் ஒலிம்பிக்ஸின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பை நழுவ விட்டவர் பி.டி உஷா. தீபமேந்தி பவனி வந்தவர்களில் அவரும் இருந்தார். இடது கையை உயரத் தூக்கி அசைத்தார். அந்த வீராங்கனைக்கு பெருமிதமிக்க தருணமாக அது அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. அவருடைய கை அசைப்பை  தொலைக்காட்சிக் காமிராக்கள்  படம் பிடித்தன.  திரும்பக் கை அசைப்பதற்குத்தான் பொதுமக்கள் இல்லை. உஷாவைச் சுற்றி நீல உடையில் சீனப் பாதுகாவலர்கள், அவர்களைச் சுற்றி கறுப்பு – சிவப்பு உடையில் இந்தியப்  பாதுகாவலர்கள் , அடுத்த வளையத்தில் ஆயுதமேந்திய   காவலர்கள். நகரெங்கும் 15,000 காவலர்கள் பணியில் இருந்தனர். தொலைவில், இந்தியாவில் வசிக்கும் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்தியா நீங்கலாக, ஓட்டத்தின் போது நடந்த திபெத் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தவர்களில் பலரும் திபெத்தியர்கள் அல்லர். திபெத் விடுதலைக்கு ஆதரவான மேற்கு நாட்டவர்கள். இவர்களில் யாரும் ஏனோ வேறு பொது நிகழ்வுகளில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவோ, ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவோ குரல் கொடுப்பதில்லை. இந்த ஆர்ப்பாட்டங்கள் உச்சத்தில் இருந்த மூன்று நகரங்கள் : லண்டன், சான்பிரான்ஸிஸ்கோ, மற்றும் பாரிஸ்.

துடுப்புப் படகில் ஐந்து முறை தங்கம் வென்றவர் ஸ்டீவ் ரெட்க்ரேவ். லண்டனில் ஓட்டத்தைத் தொடங்கி வைத்த ஸ்டீவ் , தனது கைகளிலிருந்து பந்தத்தை யாரும் பறிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னொரு ஆர்ப்பாட்டக்காரர் சிறிய தீயணைப்புக் கருவியின் மூலம் ஜோதியை அணைக்க முயற்சித்தார். ஓட்டம் இடையிடையே நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தீபம் அணைக்கப்பட்டு அருகிருந்த பேருந்தினுள் கொண்டு வைக்கப்பட்டது. ‘திபெத் விடுதலை’க் குரல்கள் வழியெங்கும் ஒலித்தன. பந்தம் கைமாறும் போதெல்லாம் தள்ளு-முள்ளு நடந்தது. 

சான்பிரான்ஸிஸ்கோவில் ஓட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டது. வழிகள் மாற்றப்பட்டன. ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓட்டப் பாதையைக்  கண்டறிந்து பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர். என்றாலும் இவ்விரண்டு நகரங்களைக்கால் சீனர்கள் அதிகம் காயம்பட்டது பாரிஸில்தான். 

ஜின் ஜிங் சக்கர வண்டி வாள் சண்டையில் (paralympic fencing ) சீனாவின் குறிப்பிடத்தக்க வீராங்கனை. அவரது கால்களைக் கான்சர் காவு கொண்டிருந்தது. ஆனால் வாள் சுழற்றும் திறனைத் தன் கைகளில் குவித்து வைத்திருந்தார் ஜின். பாரிஸில் அவரது கைகளிலிருந்து ஒரு ‘மேற்கு நாட்டு மனிதன்’ பந்தத்தைப் பறிக்க முயன்ற போது சக்கர வண்டியில் அமர்ந்தபடி பந்தத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் ஜின். வாள் சுழற்றித் திடமேறிய கரங்களிலிருந்து  பந்தத்தைப் பறிக்க முடியவில்லை. அடுத்த தினம் அந்தக் காட்சி சீன மொழி இணைய வெளியெங்கும் காணக் கிடைத்தது. அந்தப் பந்தம் ஒன்றரை அடி நீளமும் ஒரு கிலோ எடையுமுள்ள ஒரு உலோகம் மட்டுமில்லை. அதில் மேகங்கள் வரையப்பட்டிருந்தன. மேகங்கள் சீனாவின் கட்டிடங்கள், ஓவியங்கள், இதிகாசங்கள் அனைத்திலும் இடம் பெறும் ஒரு கலாச்சாரக் குறியீடு. அது சீனர்களின் செயல் திறமையையும் வளர்ச்சியையும் குறிக்கிறது. பந்தம் ஒரு காகிதச் சுருள் போலக் காட்சியளிப்பது எதேச்சையானதல்ல. காகிதம் சீனா உலகிற்களித்த கொடை.

ஒலிம்பிக்ஸ் துவங்குவதற்கு பல தினங்கள் முன்பே முதல் தங்கப் பதக்கத்தை ஜின்னுக்கு நெஞ்சார வழங்கினர் சீ்னர்கள். சீன மொழி இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் அவரது சாகசத்திற்கு புகழாரங்கள் குவிந்தன. ஜின் ஒரு ‘சக்கரவண்டி தேவதை’ எனறு எழுதியது சீனாவின் செய்தி நிறுவனம் சின்ஹூவா. தேசிய எழுச்சி ஒரு அலை போல சீனாவெங்கும் உயர்ந்தது. அவர்களது கோபம் Carrefour அங்காடிகளின் மீது திரும்பியது. சீனாவில் 100 நகரங்களுக்கு மேல் கிளை பரப்பியிருக்கும் Carrefour பிரான்ஸிற்குச் சொந்தமானது. பெய்ஜிங், அன்ஹாய், ஹெனான், வூஹான், ட்சிங்டாவ் என்று சீனாவெங்கும் இந்த அங்காடிகளின் முன் ஆயிரக்கணக்கான சீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிலைமை உணர்ச்சிகரமாக மாறுவதை உணர்ந்த பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தனது சிறப்புத் தூதுவராக செனட் தலைவர் கிறிஸ்டியன் போன்செலட்டை சீனாவிற்கு அனுப்பி வைத்தார். போன்செலட் ஜின்னிடம் பிரான்சில் நடந்த ‘வலி மிகுந்த சம்பவத்திற்கு’ வருத்தம் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொண்ட முறை வெளிநாட்டில் வசிக்கும் சீனர்களையும் கோபப்படுத்தியது. இதே வேளையில் சி.என்.என் அறிவிப்பாளர் ஜாக் காஃபர்டி தனது நிகழ்ச்சியொன்றில் சீனர்களை ‘வன்முறையாளர்கள், முரடர்கள்’ என்று பேசினார். இதையும் அவர்கள் பொறுத்துக் கொள்ளத் தயாராயில்லை. லாஸ் ஏஞ்சலீ்ஸ், வான்குவர், ஸ்டாக்ஹோம்,  சான்பிரான்ஸிஸ்கோ, பெர்லின், சியோல் போன்ற நகரங்களில் வசிக்கும் வெளிநாட்டுச் சீனர்கள், அதிகமும்  மாணவர்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். 

இது போன்ற அந்நியர்களுக்கு எதிரான தேசிய எழுச்சிகள் இதற்கு முன்பும் சீனாவில் நடந்திருக்கின்றன. 1999 இல் பெல்கிரேடில் சீனத் தூதரகத்தின் மீது அமெரிக்கா (‘தவறுதலாக’) குண்டு வீசிய போதும், 2005இல் ஜப்பான் தனது போர்க்காலக் கொடுமைகளை வரலாற்று நூல்களில் பூசி மெழுக முயற்சித்த போதும் இது போன்ற போராட்டங்கள் நடந்தன. ஆனால் அரசியல் அவதானிகள் இப்போது காட்டப்பட்ட எதிர்ப்பில் தீவிரம் மிகுந்திருந்தது என்கின்றனர். ஏப்ரல் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான மக்கள் தினசரி ‘தங்கள் தேசப்பற்றை மக்கள் விவேகத்தோடு வெளிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது. பல நாட்டினர் வந்து குழுமவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன்னர் அந்நிய எதிர்ப்பு தீவிரப்படுவது நல்லதல்ல என்று பெய்ஜிங் கருதியிருக்கலாம்.

ஹாங்காங் பவனி

ஹாங்காங் மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் தேசப் பற்றை எதிர்ப்பின் மூலமல்ல, ஆதரவின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.  ஓட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்னரே ‘சீனா வாழ்க’ முதலான கோஷங்களை பாதையின் இருமருங்கும் கேட்க முடிந்தது. சுமார் எட்டு மணி நேரம் நீண்ட, 25 கி.மீ பயணப்பட்ட தீபம்,  விளையாட்டு  வீரர்கள், கலைஞர்கள்,  மாணவர்கள், தொழிலதிபர்கள்,  ஊழியர்கள் என்று 120 பேரின் கரங்களில் மாறி மாறி  ஒளிர்ந்து கொண்டே இருந்தது.  சீனாவின்  மனித உரிமை, ஜனநாயகம்  குறித்த எதிர்ப்புக்  குரல்களும்  ஓட்டத்தின் இடையே ஒலிக்கவே  செய்தன.  ஆனால்  பெருவாரியான  மக்களின் ஆதரவுக்  குரல்களால் அவை  கவனம்  பெறவில்லை.

‘ஹாங்காங் வேற்றுமைகளும்,சகிப்புத் தன்மையும், ஒத்திசைவும் ஒருங்கே அமைந்த நகரம். இந்தப் பண்புகள் இந்த ஜோதியை இன்று மேலும் ஒளிரச்  செய்யும்’ – சுருக்கமாகப் பேசினார் செயலாட்சித் தலைவர் டோனால்ட்  செங்; பந்தத்தை முதல் ஓட்டக்காரர் லீ லாய் ஷாம்-இடம் கையளித்தார். லீ 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் ஒரு மிதவையில் காலூன்றியபடி , காற்றோடு பொருதி கடலில் கடுகி விரைந்தவர். அப்போது அந்த இளம் பெண்ணுக்காக உயர்த்தப்பட்ட ஹாங்காங்கின் கொடி உலகெங்கிலும் கோடிக்கணக்கான இல்லங்களிலிருந்த தொலைக்காட்சிகளில் பட்டொளி வீசிப் பறந்தது. லீ கையசைத்தபடி  ஓடிய போது உடன் ஆயிரக்கணக்கான கைகள் அசைந்தன. அந்தக் கைகளில் சீனக் கொடியும், ஹாங்காங் கொடியும், ஒலிம்பிக் கொடியும் உரசியபடி அசைந்தன.

கென்னத் சென் குதிரை வீரர். லீ சிங்-உம், கோ லாய் சாக்-உம் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் ஈட்டிய டேபிள் டென்னிஸ் விற்பன்னர்கள். நீந்தல், சைக்கிள், ஓட்டம் மூன்றும் இணைந்த ட்ரையதலானில் சர்வதேச சாம்பியன் டானியா மாக். பந்தம் ஏந்தியவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டு வீரர்களே. என்றாலும்  ஹாங்காங்கின் பல தரப்பினரும் இடம் பெற்றனர். 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஆண்டி லா, பாப்பிசைப் பாடகர் ஜாக்கி சுயுங், சட்டப் பேரவைத் தலைவர் ரீட்டா பான், செவாலியே விருது பெற்ற இசை நிகழ்ச்சி நடத்துநர் இப் விங் சீ,  இன்னும் கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று பந்தம் கை மாறி மாறி கடைசியாக சைக்கிள் வீரர் வாங் காம் போவிடம் வந்து சேர்ந்தது. வாங் சைக்கிளில் அல்ல ஓடி வந்து தான் பந்தத்தை நிலையில் சேர்த்தார். ஆனால் பந்தம், முழுத்தூரமும் கால் நடையாக மட்டுமல்ல, கோல்ஃப் வண்டிகளிலும், குதிரைகளின் மீதும், ட்ராகன் படகுகளிலுமாகப் பயணித்தது.

ஓட்டத்திற்குச் சில தினங்கள் முன்னதாக அரசு சாராத வரவேற்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது. பல துறை சார்ந்த பிரபலங்கள் ஒன்றிணைந்தனர். ‘சீனாவிற்குச் செல்வோம்’ என்ற வாசகங்கள் பொறித்த சிவப்பு நிற டி ஷர்டுகளை வடிவமைத்தது குழு. பல நிறுவனங்கள் இந்தச் சட்டைகளை தாமே தயாரித்து ஊழியர்களுக்கு வழங்கின. மாணவர்கள் சீருடைக்குப் பதிலாக இதை அணிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஜியார்டானோ எனும் பன்னாட்டுத் துணிக்கடை 15000 சட்டைகளை இலவசமாக வழங்கியது. மே 2 வேலை நாளாக இருந்தது. உழைப்பிற்குப் பெயர் போன ஹாங்காங்வாசிகளில் பலரும் எப்போதும் போல் வேலைக்குப் போனார்கள். பலர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்கள். நாளிதழ்களோடு ‘சீனாவிற்குச் செல்வோம்’  சிவப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், உணவு விடுதிகளிலும், ரயில் நிலையங்களிலும் ஓட்டம் நேரடியாக ஒளி்பரப்பப்பட்டது. வணிக மையங்களிலும், கலை அரங்குகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. எங்கும் கோலாகலமாய் இருந்தது.

சட்டத்தின் மாட்சிமை பேணப்படும் நகரில் எதிர்ப்புக் குரல்களுக்கும் இடமிருந்தது. சீனாவின் ஜனநாயக இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் ஹாங்காங் அமைப்பினர் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு இந்த ஓட்ட தினத்தையே தேர்ந்தெடுத்தனர். திபெத் விடுதலைக்கு ஆதரவளிக்கும் சில மாணவர்களும் இருந்தனர். ஆனால் இவர்களது எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. எனினும் தங்கள் எதிர்ப்பை அவர்கள் சாத்வீகமாகப் பதிவு செய்தனர்.

ஹாலிவுட் நட்சத்திரமும், மனித உரிமை ஆர்வலருமான மியா ஃபாரோ இதே தினம் ஹாங்காங் வந்திருந்தார். டார்ஃபர் படுகொலைகளை நிறுத்துமாறு சூடானை நிர்ப்பந்திக்கும் தார்மீகப் பொறுப்பு சீனாவிற்கு இருக்கிறது என்றார் ஃபாரோ. அவர் உரையாற்றிய வெளிநாட்டு நிருபர் சங்கத்தின் அரங்கு நிறைந்திருந்தது.

ஹாங்காங்கின் முதலாளித்துவப் பொருளாதாரமும், பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் மாட்சிமையும் காலனி ஆட்சியில் இருந்தது போலவே இப்போதும் பேணப்படுகிறது. அயலுறவு, பாதுகாப்பு ஆகியவை பெய்ஜிங்கின் பொறுப்பில் இருககிறது. மற்ற துறைகள் அனைத்திலும் ஹாங்காங் சுயாட்சியோடு் விளங்குகிறது. ஹாங்காங்கிற்கு ‘அடிப்படை விதி’கள் உள்ளன. இந்த விதிகளை ஹாங்காங்கின் குட்டி அரசியலமைப்புச் சட்டம் எனலாம். இந்த விதிகளின் கீழ் ஹாங்காங் ஒரு ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக இருந்து வருகிறது. இதற்கு ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ என்று் பெயரிட்டார் மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங்.

1997 ஜூன் நள்ளிரவில் அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின் பிர்ட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கிய போது 156 ஆண்டு காலக் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது மக்கள் கலவையான மனநிலையில் இருந்தனர். தாய்நாட்டோடு இணைகிற பெருமிதம் பலருக்கு இருந்தது. என்றாலும் சீனாவின் ஆளுகையில் ஹாங்காங்கின் சுதந்திரக் காற்றுக்குப் பங்கம் நேருமோ என்ற அச்சமும் பலருக்கு இருந்தது. ஆனால் அந்த அச்சத்திற்கு அவசியமில்லை என்பது வருங்காலங்களில் தெரிந்தது. ஹாங்காங்கின் சுயாட்சியில் பெய்ஜிங் பெருமளவில் தலையிடவில்லை. அண்டை மாநிலங்களோடு சிறப்புப் பொருளாதார ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. பிற மாநிலங்களில் வசிக்கும் சீனர்கள் ஹாங்காங்கிற்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்து போவது ஊக்குவிக்கப்பட்டது. பரஸ்பர புரிதல்கள் உருவாயின. தங்கள் தாய் மண்ணை ஹாங்காங் சீனர்கள் மீண்டும் கண்டு கொண்டனர். அது தொடர் ஓட்டத்தின் போது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. ஒலிம்பிக்ஸை அரசியல் மயமாக்குவதில் தங்களுக்குச் சம்மதமில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தினார்கள் இந்த தேசாபிமானிகள்.

ஒலிம்பிக் ஜோதி

ஆகஸ்ட் 8 ஆம் தேதி(08-08-08) இரவு 8 மணிக்கு கவ்லூன் பூங்காவில் உள்ள கடிகாரம் 0-நாள் 0-நிமிடம் என்று அறிவிக்கும். அப்போது 120க்கும் மேற்பட்ட நகரங்களையும் 137,000 கி.மீ தூரத்தையும் கடந்து வந்த பந்தம்,  சீனாவின்  தலைசிறந்த வீரன் ஒருவனால் பெய்ஜிங் ஸ்டேடியத்தின்  மையத்தில் உள்ள  கொப்பரையில்  ஏற்றி வைக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அது  கொளுந்து விட்டு எரியும். அந்த இரண்டு வாரங்களில் 205  நாடுகளின், 10,500  விளையாட்டு வீரர்கள், 302 போட்டிகளில் தங்கள் உடலைப்  பிழிந்தெடுத்து, அவர்களது உச்சபட்ச திறனைக்  காட்சி  வைப்பார்கள். உலகம் இதுவரை  கண்ணுற்றதில் அது ஆகச் சிறந்த ஒலிம்பிக்ஸாக இருக்கும். ஹாங்காங் உள்ளிட்ட  சீன  மக்கள் அதை தங்கள்  வீட்டுத்  திருமணம்  போல்  கொண்டாடுவார்கள். எல்லோரும் அப்போது  சீனாவின்  மனித உரிமைப்  பிரச்சனைகளை  மறந்திருப்பார்கள். இந்த ஒலிம்பிக்ஸ் சீனாவை உலக அரங்கில்  மேலும்  சக்தி  மிக்க  நாடாக மாற்றும். அது சீனாவின் பொறுப்பையும், வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கும். அது உலகம் கவலை கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சீனாவிற்கு உருவாக்கும். 

[நன்றி: வார்த்தை ஜீன் 2008]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: