அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன்

First published in Thinnai on March 20, 2009

ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும்  கொண்டவர். வேங்கடாசலபதி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development studies) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய-சமூக ஆய்விற்குப் பங்களித்து வருகிறார். என்றாலும் இளைஞர், 40 வயதுதான் ஆகிறது. இளைஞர் அறிஞராக இருக்க முடியாதா? அப்படி இருப்பது நம் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளுக்கு எதிரானது ஆயிற்றே!  அதனால்தான் சுந்தர ராமசாமி கூறுகிறார்: “இன்று ஒரு இளைஞர் – தமிழ் அறிஞர் என்று அவரைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை, இளைஞனும் அறிஞனாக இருக்கமுடியும் – புதுமைப்பித்தன் கதைகளுக்கு மிகச் சிறப்பான ஒரு பதிப்பை உருவாக்கித் தந்து விட்டார்”[1]. 

புதுமைப்பித்தன் தேடல்:

சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னது எட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதுதான் புதுமைப்பித்தனின் அனைத்துக் கதைகளும் உள்ளடக்கிய  நூலை சலபதி பதிப்பித்திருந்தார்[2]. இது வரை ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்நூலில், புதுமைப்பித்தனின் 97 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1948இல் புதுமைப்பித்தன் காலமானபோது, இதில் சரி பாதிக் கதைகளே நூல் வடிவம் பெற்றிருந்தன. ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் நமக்கு எட்டாதபடி உள்ள ரகசிய உற’வின் காரணமாகவோ என்னவோ, ‘வறுமை பிடுங்கும் இந்தியாவில் எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்த நாற்பதையொட்டிய வயதுகளில்’ புதுமைப்பித்தன் மறைந்தார்[3]. அவரது மறைவிற்குப் பின் வெளியான நூல்களில் கதைகள் வெளியான காலமும் இதழும் சுட்டப்படவில்லை. கதைகளும் கட்டுரைகளும் தழுவல்களும் மாறி மாறி இடம்பெற்றன. பிழைகளும் இருந்தன. அவை செம்மையாகவும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு குறைபாடுகளுடன் பதிக்கப்பட்டவை அன்னியில், தொகுக்கப்படாத, அச்சிடப்படாத படைப்புகளும் இருந்தன. இதுகாறும் நூல் வடிவம் பெறாத படைப்புகளை மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான நூல்களையும், அவை வெளியான இதழ்களையும் சலபதி கண்டடைந்திருக்கிறார். புதுமைப்பித்தனின் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று சாத்தியமான எல்லாக் கதவுகளையும் அவர் தேடித் திறந்திருக்கிறார். சென்னை, காரைக்குடி, புதுக்கோட்டை, மருங்கூர், ஆண்டிப்பட்டி, தில்லி, லண்டன், சிகாகோ போன்ற இடங்களில் உள்ள தமிழ் நூல் நிலையங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான, நூற்றுக் கணக்கில் மட்டுமே அச்சாகியிருக்கக் கூடிய இலக்கியச் சிற்றிதழ்களையும், நூல்களையும் கண்டடைவது தமிழ்ச் சூழலில் புலிப்பால் பருகுவதற்குச் சமமானது. இந்த இடத்தில் சில சமகாலத் தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்கள் என் நினைவிற்கு வருகின்றன.

ஜெயகாந்தன் 1961இல் ‘கல்கி’ பத்திரிகைக்கு எழுதிய ‘கைவிலங்கு’ எனும் குறுநாவல் அவரது ‘அனுமதியின்றியே வெட்டிக் குறைக்கப்பட்டு பாதியளவோ அல்லது பாதிக்கும் கொஞ்சம் கூடுதலாகவோ பத்திரிக்கையில் வெளிவந்தது’. பிற்பாடு ஜெயகாந்தன் எழுதியது அப்படியே நூல் வடிவம் பெற்றபோது, அவர் ‘கல்கி’க்கு நன்றி செலுத்துகிறார். ஏனென்றால், ‘இப்பொழுது நான் எழுதியது முழுக்கவும் புத்தகமாக வெளிவருவது, அவர்கள் பழுதுபடாமல் பாதுகாத்துக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததனால்தானே!’ என்கிறார் ஜெயகாந்தன்[4]. அதாவது பத்திரிகைக்கு கொடுத்தபோது அவர் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. ஒளிநகல்கள் இல்லாத காலம். கதை-கட்டுரைகளைத் திரும்பிப் பெற போதிய தபால்தலைகள் வைத்து அனுப்ப வேண்டியிருந்த காலம். எனில், பிரதி எடுப்பது இலகுவான காலகட்டத்தில், அச்சில் வெளியான தனது நூல்களையே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளாத எழுத்தாளர்களும் உண்டு. வண்ணநிலவன் அவர்களில் ஒருவர். 1981இல் வெளியான அவரது ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பு கண்டபோது, முந்தைய பதிப்பின் ஒரு பிரதி போலும் அவர் கைவசம் இல்லை. இத்தனைக்கும் நானறிந்த வரையில் வண்ணநிலவன் மூன்று நாவல்கள்தான் எழுதியிருக்கிறார். ‘ரெயினீஸ் ஐயர் தெரு பிரதியை நண்பர் சைதை முரளி மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்துத் தந்த’தாகச் சொல்லி இருக்கிறார் வண்ணநிலவன்[5]. இப்போது பிரதி எடுப்பதும், சேமித்து வைப்பதும் முன்னைப் போல் சிரமம் இல்லை. கணினி வந்துவிட்டது. ஆனாலும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைக் கைதவற விடுவது தொடர்கிறது.

அ. முத்துலிங்கம் தனது சமீபத்திய தொகை நூல் ஒன்றின் முன்னுரையில், ‘இந்தத் தொகுப்புக்காக நான் அவ்வப்பொழுது எழுதி, கணினியில் வெவ்வேறு அலகுகளில் சேமித்து வைத்திருந்த கட்டுரைகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டினேன். அவற்றிலே சில கிடைக்கவில்லை. தவறிய கட்டுரைகளை திருப்பி எழுதினால் அவை புதுக் கட்டுரைகளாக உருமாறும். ஆகவே இவற்றை மீட்கவே முடியாது’ என்று கைவிட்டு விட்டதாக எழுதுகிறார் [6]. தலைசிறந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அவர்கள் காலத்தில் அவர்களே மீட்டெடுப்பதில் இத்தனை பாடுகள் உள்ளன. இது உலகம் முழுமைக்கும் பொதுவான பண்பாக இருக்க முடியாது. தரமான இலக்கியத்திற்குப் பாராமுகம் காட்டி வரும் சூழல்களில் படைப்பாளிகளால் இப்படித்தான் இருக்க முடியும்.  

இவ்வாறான சூழலில்தான் சலபதி, புதுமைப்பித்தன் மறைந்து 50ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது அனைத்துப் படைப்புகளையும் துரத்தித் துரத்தி மீட்டெடுத்திருக்கிறார். அப்படிக் கண்டெடுத்தவைகளைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் வெளியீட்டு விவரம் இருக்கிறது. கதை முதலில் வெளியான இதழ், பயன்படுத்திய புனைப்பெயர், நூலாக்கம் பெற்ற விவரம் அனைத்தும் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர புதுமைப்பித்தனின் கதைகள் இதழ்களில் வெளியானதற்கும் நூலாக்கம் பெற்றதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. புதுமைப்பித்தனின் காலத்தில் வெளியான நூல்களில் அவரே மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘கலைமக’ளில் வெளியான கதையில் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ அருந்தும் இரண்டு கப் காப்பியின் விலை இரண்டணாவாக இருக்கிறது, பிற்பாடு காஞ்சனை(1943) என்கிற தொகை நூலில் கதை வெளியாகும்போது மூன்றணா ஆகிவிடுகிறது! இன்னும் வடிவ நேர்த்தி, சொல்முறை, ஆங்கிலப் பயன்பாடு, கதைப் பொருள் முதலான பல காரணங்களையொட்டி புதுமைப்பித்தனே சிறிதும் பெரிதுமான பல மாற்றங்கள் செய்திருக்கிறார். இந்தக் கதைகளுக்கெல்லாம் நூற்பதிப்புகளை மூல பாடமாகக் கொண்டு, இதழ்களில் வெளியானவற்றில் இருக்கும் வேறு பாடங்களை, பின்னிணைப்பில் பட்டியலிட்டிருக்கிறார் சலபதி. புதுமைப்பித்தன் மறைவிற்குப் பிறகு சில கதைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன, பல பெறவில்லை. இவற்றுக்கெல்லாம் இதழ்களில் வெளியான பாடத்தையே மேற்கொண்டிருக்கிறார். இந்த நூல் ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவை புதுமைப்பித்தனை அணுகும் எளிய வாசகனுக்கு தடையாக இல்லை. மாறாக கதைகளுக்கு வெளியே தரப்பட்டிருக்கும் ஆய்வுக் குறிப்புகள், அவனுக்கு புதிய வாசிப்பனுபவத்தை நல்குகின்றன.

சமூக ஆய்வு:

கல்விப் புலம் சார்ந்த ஆய்வு நெறிமுறைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் பண்டிதத்தனம் இல்லாமல், சுவாரசியமும் குறையாமல், ‘புதுமைப்பித்தன் கதைகள்’ நூலுக்கு ஒரு ஆய்வுரையும் எழுதியிருக்கிறார் சலபதி. இந்தப் பண்பு அவரது எல்லாக் கட்டுரைகளிலும் காணக் கிடைக்கிறது. அவரது ‘நாவலும் வாசிப்பும்’ என்கிற நூலை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம் [7]. புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 1995ல் முனைவர் பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் விரிவாக்கப் பட்ட வடிவந்தான் இந்நூல். ‘இரங்கற்பா பாடப்படும் போதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது’ என்கிற கவித்துவம் மிக்க வரியோடு நூல் தொடங்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெள்ளமாய்ப் பாய்ந்தது. அவற்றில் பலவும் நடுத்தர வர்க்க அறிவாளர்களுக்கு உவப்பாயில்லை. ‘பச்சை மோதிரத்தின் மர்மம் அல்லது புருஷனை ஏமாற்றிய புஷ்பவல்லி’ போன்ற தலைப்புகளில் வந்த நாவல்களை அவர்கள் கடுமையாகச் சாடுகிறார்கள். எனில், இந்த எதிர்ப்புகளூடேதான் நாவல் என்ற வடிவம் நிலைபெற்றது என்று நிறுவ முயல்கிறார் சலபதி.  

நடுத்தர வர்க்கத்தின் கலைவடிவமாக நாவல் உருப்பெற்றதன் உடனிகழ்வாக மெளன வாசிப்பு முறை தமிழ்ச் சமூகத்தில் தோன்றியது என்றும் துணிகிறார். இதற்காக அதற்கு முன்பு நிலவிய வாசிப்பு முறைகளையும் விரிவாக ஆய்கிறார். ஏட்டுச் சுவடிகளை வாய்விட்டுப் படிப்பதும், மனனம் செய்வதும் அவசியமாக இருந்ததையும், நாட்டுப் புறங்களில் அல்லியரசாணி மாலை, தேசிங்கு ராஜன் கதை போன்றவற்றைக் கூட்டாக வாசித்ததையும் விரிவாகப் பேசுகிறார். நூலெங்கும் பல தரவுகள் முன் வைக்கப் படுகின்றன. மேலும், வடசொற்களும் ஆங்கிலமும் இயன்றவரை தவிர்க்கப்பட்ட சலபதியின் தமிழ்நடை மெல்லிய தென்றலாக வாசகனை வருடிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலை வாசிப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக ஆய்வேடுகள் சாதாரண வாசகர்களின் பாவனைக்கானதல்ல என்றுதான் நினைத்திருந்தேன்.

சலபதியின் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்'(2000), ‘முச்சந்தி இலக்கியம்'(2004) போன்ற நூல்களும் மிகுந்த உழைப்பிற்குப் பின் உருவாகியிருப்பவை; ஆய்வுநெறிகளிலிருந்து வழுவாதவை; எளிய வாசகனின் கைக்கெட்டுபவை.

பாரதி தேடல்:

சலபதியின் இன்னொரு முக்கியப் பங்களிப்பு பாரதி தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகும். பாரதியும் (1882-1921) ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் உள்ள ரகசிய உறவின்’ கரங்களில் பலியானவர். எனில், அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மேதாவிலாசம் உணரப்பட்டது. அதன் விளைவாக கடந்த 80 ஆண்டுகளில் அவரது தொகுக்கப்படாத அச்சிடப்படாத பல்வேறு படைப்புகளை வெளிவந்த வண்ணமிருக்கின்றன. ‘வ.உ.சி. பற்றிய ஆய்வினூடாக பாரதி ஆய்வுக்குள் நுழைந்த’வர் சலபதி. வ.உ.சி. கடிதங்கள் (1982), ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ (1987) ஆகிய நூல்களைத் தொடர்ந்து, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ (1994) ‘பாரதியின் கருத்துப் படங்கள்’ (1994) ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

பாரதி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை (1904-1921) பத்திரிக்கையாளராகக் கழித்தவர். அவர் ‘இந்தியா’ ,’சுதேசமித்திரன்’,’சூரியோதயம்’ ஆகிய இதழ்களில் எழுதியதில் கணிசமானவற்றை பாரதி ஆய்வாளர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். எனில், பாரதியே ஆசிரியராக விளங்கிய ‘விஜயா’ நாளேட்டின் இதழ்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ‘விஜயா’ 1909-10இல் புதுச்சேரியிலிருந்து வெளியானது. பாரதியின் அரசியல் தோழர்களான வ.உ.சி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் 1908இல் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தான் சிறைப்படுவதும் உறுதி என்று கருதிய பாரதி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரான்சின் ஆளுகையிலிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் செப்டம்பர் 1909இல் தொடங்கப்பட்ட ‘விஜயா’, அதன்மீது  தடையாணை விதிக்கப்பட்ட ஏப்ரல் 1910 வரை வெளியானது. ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலில் பாரதியின் எழுத்துக்களை அறிகிற வாய்ப்பு – ஓரிரண்டு நறுக்குகள் தவிர- பாரதி அன்பர்களுக்குக் கிட்டவில்லை. அக்குறை சலபதியால் நீங்கியது. சலபதி பதிப்பித்திருக்கும் ‘பாரதி விஜயா கட்டுரைகள்’ [8] நூலின் செம்பாகம் இரண்டு இடங்களிலிருந்து பெறப்பட்டவை.

பிப்ரவரி 1910இல் வெளியான 20 ‘விஜயா’ இதழ்களை பாரிசீல் கண்டு பிடித்திருக்கிறார் சலபதி. ‘விஜயா’ tabloid அளவில் நான்கு பக்கங்களில் தலையங்கம், படங்கள், விளம்பரங்களுடன் வெளியாகியிருக்கிறது. ‘விஜயா’ சுமார் 150 இதழ்கள் வெளியாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் முழுமையாகக் கிடைத்திருப்பவை இந்த 20 இதழ்கள் மட்டுமே.

இவையன்னியில், ‘விஜயா’வில் வெளியான மேலும் சில கட்டுரைகளையும் சலபதி வெளிக் கொணர்ந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய அரசின் புலனாய்வுத்துறை பொதுமக்கள் கருத்து எப்படித் திரள்கிறது என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு சுதேசப் பத்திரிக்கைகளில் வெளியானவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தது. இந்த ரகசிய அறிக்கைகளில் ‘விஜயா’வில் வெளியான 45 கட்டுரைகள் கிடைக்கின்றன. இவற்றை சலபதி தமிழில் மீள மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றுள் ஒன்று:-

“….அவர்(கவர்னர்) வரும் பாதையில் வேறு வாகனம் ஓடக் கூடாது. வரவேற்புப் பந்தல்களும் தோரணங்களும் வழியெங்கும் போடப்படவேண்டும். கவர்னர் எங்கேனும் தாமதிப்பாரானால், கிராமத்தாரெல்லாம், இரவல் வாங்கியேனும், நல்ல வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அதிக  வரி  செலுத்துபவரின் தலைமையில் சென்று, பெரிய புஷ்ப மாலைகளுடன் அவரை  வரவேற்கவேண்டும். வைஸிராய்  ரயிலில் பிரயாணம் செய்வாரானால், எல்லா ஸ்டேஷன்களும் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதோடு, ராத்திரியில் ஒவ்வொரு  தந்திக்  கம்பத்திலும்  ஒருவன் தீப்பந்தத்தோடு நிற்கவேண்டும். இவ்வாறு செய்ய வேண்டுமென்று எந்தச் சட்டமும் இல்லை. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சென்ற நான்கைந்து வருஷங்களாக இயற்றப்பட்ட சட்டங்களையெல்லாம் ஒருவன் படிப்பானாகில் அவன் அதை ராமராஜ்யம் என்றும் தர்ம ராஜ்யம் என்றும் புகழ்வான். சட்டத்தில் என்ன சொல்லியிருந்தபோதிலும் நடைமுறை வேறாயிருக்கிறது…” (விஜயா, 3 மார்ச் 1910)

நூறாண்டுகளுக்குப் பிறகு கவர்னர், வைஸ்ராய் போன்ற பதவிப் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றன என்பதற்காக இதை நான் எடுத்துக் காட்டவில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கட்டுரைகளை, நூறாண்டுகளுக்குப் பிறகு சலபதி பாரதி காலத்து வசன நடையிலேயே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை இதை வாசிக்கும்போது உணரலாம். இந்த நூல் ஒரு முக்கியமான காலகட்டத்தில் பாரதியின் எழுத்துக்களையும், கூடவே சலபதியின்  புலமையையும், அர்ப்பணிப்பையும் புலப்படுத்துகிறது.

பாரதியியலுக்கு சலபதி அளித்திருக்கும் இன்னொரு கொடை ‘பாரதி கருவூலம்’ [9].  பாரதி ‘ஹிந்து’ நாளிதழுக்கு ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதிக்கு  எழுதிய 16 கடிதங்களையும், அதன் செய்திப் பகுதியில் வெளியான 2 ‘பகிரங்க’க் கடிதங்களையும், இன்னும் 2 கட்டுரைகளையும் சலபதி  இந்த நூலில் பதிப்பித்திருக்கிறார். பாரதியின் ஆங்கிலப் புலமையும், அவர் ‘ஹிந்து’விற்கு அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார் என்பதையும் பாரதி ஆய்வாளர்கள்  அறிந்திருந்தனர். எனில், இரண்டொரு கடிதங்களையும் சில நறுக்குகளையும் மட்டுமே அவர்கள் பார்த்திருந்தனர். ‘பாரதி கருவூலம்’ நூலில் இடம்பெற்றிருக்கும்  பாரதியின் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. இவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையத்தில் இருந்த நுண்படச் சுருள்களிலிருந்து பெற்றிருக்கிறார் சலபதி.

1904 முதல் 1911 வரையிலான நெடிய காலகட்டத்தில் வெளியான இந்தக் கடிதங்கள் பாரதியின் சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்த எழுத்துக்களின் வீச்சும் விரிவானது. திலகரின் மீதான அபிமானம், அன்னிபெசன்ட் மீதான விமர்சனம், தென்னாப்பிரிக்காவில் அல்லலுறும் இந்தியத் தொழிலாளிகள் மீதான கரிசனம், புதுச்சேரியிலும் பிரிட்டிஷ் ஒற்றர்களால் பாரதி படும் அவதி போன்றவை கடிதங்களில் வெளிப்படுகின்றன. தமிழைப் போலன்றி, பாரதி ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களைக் கைக்கொள்கிறார். சலபதி இந்தக் கடிதங்களையும் பாரதி காலத்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதியின் சில கடிதங்கள் ‘ஹிந்து’வில் வெளியான செய்திகளுக்கு ஆற்றப்பட்ட எதிர்வினை. பாரதியின் கடிதங்களுக்கும் எதிர்வினைகள் வெளியாகியிருக்கின்றன. இவையும் நூலில் இடம்பெறுகின்றன. கடிதங்களோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளும் தரப்படுகின்றன. எனில், சலபதியின் நூல்கள் வெறும் ஆவணத் தொகுப்பு மட்டுமில்லை. அவற்றை விரிவான ஆய்வு முன்னுரைகள் அணி செய்கின்றன. அவற்றில் தன்னுடைய ஆய்விலிருந்து பெறப்படும் கருதுகோள்களையும் அவர் முன்வைக்கிறார்.

“பாரதி ‘ஹிந்து’வில் எழுதியதில் வியப்பொன்றுமில்லை. அவர் பத்திரிக்கையாளராகவே இருந்து வந்தார். ஆகவே அப்போதையத் தலையாய ஆங்கில நாளேட்டை அவர் தொடர்ந்து வந்தது இயல்பேயாகும்” என்கிறார் சலபதி [10]. மேலும், “காலனீயப் போலீஸ் அவரது வாயைக் கட்ட முயன்ற ஒரு காலகட்டத்தில் அவரது எழுத்துக்களுக்கு மேடை அமைத்துத் தந்ததில் ‘ஹிந்து’ பெருமைப்படலாம் என்றும் சொல்கிறார் [11]. ஆனால் இந்தப் பாராட்டுரைகளின் புறமே நின்று அவர் ‘ஹிந்து’வை விமர்சனமும் செய்கிறார். “பாரதியின் மேதமையை ‘ஹிந்து’ ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்று கொள்ளத்தக்க எந்த முகாந்திரமும் இல்லை” என்றும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  பாரதி மறைந்த பொழுது ‘ஹிந்து’ ஒரு சிறு தலையங்கக் குறிப்பை மட்டுமே வெளியிட்டது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். அக்குறிப்பும் பாரதியைக் குறித்து ‘ஹிந்து’வில் வெளியான சில உதிரிச் செய்திகளும் நூலில் இடம் பெறுகின்றன.

பாரதியின் மாறிவரும் நிலைப்பாடுகளையும் சலபதி படைப்புகளுக்கு வெளியே நின்று சுட்டுகிறார். எடுத்துக்காட்டாக பாரதி 1904இல் ‘ஹிந்து’ ஆசிரியருக்கு எழுதிய Mr. Sankaran Nair’s Pronouncement என்கிற கடிதத்தைக் குறிப்பிடலாம். ‘சாதிகள் ஒழியும் வரை இந்தியா விடுதலை பெறக் கூடாது’ என்று சென்னை ஆசாரத் திருத்த சங்கம் என்கிற அமைப்பின் தலைவர் சங்கரன் நாயர் பேசியது ‘ஹிந்து’வில் விரிவாக வெளியானது. இந்தக் கருத்தை மறுத்து ஒரு வாசகர் எழுதியிருந்தார். வாசகரின் கருத்தை மறுத்தும், சங்கரன் நாயரை ஆதரித்தும், சமூக சீர்திருத்தம் ஏற்படாமல் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது வெறும் கனவுதான் என்று பாரதி வாதிடும் கடிதம்தான் மேலே சுட்டப்படுவது. இந்தக் கடிதத்தை எழுதியபோது பாரதிக்கு வயது 22. பாரதியின் பிரசுரமான முதல் ஆங்கிலப் படைப்பு இதுவாகவே இருக்கக்கூடும். கடிதத்தின் கீழுள்ள வரலாற்றுக் குறிப்பில், கடிதம் வெளியான சில மாதங்களிலேயே பாரதி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டதை சலபதி ‘இந்தியா’ இதழொன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தப் பின்குறிப்பை ‘ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி?; ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர், தம்முட் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?’ என்ற வரிகளோடு வாசகனால் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.

அங்கீகாரம்:

தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சலபதி இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் ஒன்று: ‘அண்ணல் அடிச்சுவட்டில்’. ஏ.கே செட்டியார் அரும்பாடு பட்டுத் தயாரித்த ஆவணப் படம் ‘காந்தி’, இதைப் பற்றி ஏ.கே செட்டியார் எழுதிய அனுபவக் குறிப்புகள் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ இடம் பெறுகின்றன. அதன் முன்னுரையில் சலபதி இப்படிச் சொல்கிறார்:  

“படம் பிடிப்பதில் முறையான பயிற்சியை ஜப்பானிலும் அமெரிக்காவிலும் இளமையிலேயே பெற்றிருந்த ஏ.கே. செட்டியாருக்கு, 1937 அக்டோபர் 2ஆம் நாள், நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்குக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது காந்தி பற்றிய ‘டாக்குமெண்டரி’ படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘வெறும் மனக் கோட்டை கட்டும் இளைஞன்’ என்ற பலருடைய எண்ணத்தை உடைத்து, அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ஏறத்தாழ நூறு காமிராக்காரர்கள் முப்பது ஆண்டுகளில் படம் பிடித்த 50,000 அடி நீளமுள்ள படங்களை, உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல் பயணம் செய்து தேடியெடுத்து, 12,000 அடி நீளமுள படமாகத் தொகுத்து 1940இல் அதை வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 29. இதை ஒரு சாதனை என்று சொல்வது குறைவு நவிற்சியாகவே இருக்க முடியும். இதனைத் தமிழரல்லாதவர் ஒருவர் செய்திருந்தால் இந்தியாவே கொண்டாடி இருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை”[12].

கடைசி வரிகள் ஏ.கே செட்டியாரை மட்டுமல்ல, தமிழ் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் பங்களித்து போதிய அங்கீகாரத்தைப் பெறாத அனைவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த வரிகள் விளம்பரமும் வெளிச்சமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற பல தமிழறிஞர்களைக் குறிக்கும். புதுமைப்பித்தனையும் குறிக்கும். ஓரளவிற்கு பாரதியையும் குறிக்கும். ஆய்வுலகமும் தமிழ் அறிவாளர்களின் ஒரு பகுதியும் சலபதியின் பங்களிப்பின் சில கூறுகளையேனும் அறிந்திருப்பதாகவே தோன்றுகிறது. எனில், அவரும் அவர் அருகிக்கிற அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.  தமிழ்ச் சமூகமும், இந்தியச் சமூகமும் மறுத்து வரும் அங்கீகாரத்தைக் குறித்து தமிழறிஞர்கள் ஒரு போதும் கவலை கொண்டதில்லை. காலந்தோறும் அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

(ஹாங்காங்கில் உள்ள ‘இலக்கிய வட்டம்’ (www.ilakkyavattam.com) 2008ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஒரு கூட்டம் நடத்தியது. அதில் திரு. வி.க, வ.உ.சி, தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா மற்றும் ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகியோரைக் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள் [13]. மேலேயுள்ளது சலபதியைக் குறித்து நிகழ்த்தப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

சான்றுக் குறிப்புகள்:

 1. சுந்தர ராமசாமி, ‘உரைநடையும் யதார்த்தமும்’. தமிழ் இனி 2000 மாநாட்டுக் கட்டுரைகள் (2005), காலச்சுவடு அறக்கட்டளை, ப. 30.
 2. ஆ. இரா. வேங்கடாசலபதி (ப-ர்), புதுமைப்பித்தன் கதைகள் (2000), காலச்சுவடு பதிப்பகம்.
 3. சுந்தர ராமசாமி, ஜே.ஜே. சில குறிப்புகள் (1986), க்ரியா, ப. 10.
 4. ஜெயகாந்தன் முன்னுரைகள் (1978), மீனாட்சி புத்தக நிலையம், ப. 14-15.
 5. வண்ண நிலவன், கம்பா நதி-ரெயினீஸ் ஐயர் தெரு(2001), நர்மதா பதிப்பகம், ப. 6.
 6. அ. முத்துலிங்கம், பூமியின் பாதி வயது (2007), உயிர்மை பதிப்பகம், ப. 5.
 7. ஆ. இரா. வேங்கடாசலபதி, நாவலும் வாசிப்பும்-ஒரு வரலாற்றுப் பார்வை (2002), காலச்சுவடு பதிப்பகம்.
 8. ஆ. இரா. வேங்கடாசலபதி(ப-ர்), பாரதி விஜயா கட்டுரைகள் (2004), காலச்சுவடு பதிப்பகம்.
 9. ஆ. இரா. வேங்கடாசலபதி(ப-ர்), பாரதி கருவூலம் -ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள் (2008), காலச்சுவடு பதிப்பகம்.
 10. T.S. Subramanian, ‘Subramania Bharati’s Letters: a treasure trove’, The Hindu, April 06, 2008.
 11. T.S. Subramanian, ‘Early views of nationalist-poet Subramania Bharati’, The Hindu, March 30, 2008.
 12. ஏ.கே.செட்டியார், அண்ணல் அடிச்சுவட்டில் (2003), காலச்சுவடு பதிப்பகம், ப. 19.
 13. திரு. வி.க, வ.உ.சி, தேவநேயப் பாவாணர் மற்றும் சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறித்து ஹாங்காங் இலக்கிய வட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் திண்ண.காமின் 30/1/09, 12/2/09, 19/2/09, 5/3/09 இதழ்களில் வெளியாகியுள்ளன. தற்போது ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணயதளத்திலும் வலையேற்றப்பட்டிருக்கிறது. சுட்டி: http://www.ilakkyavattam.com/talks

**********

நன்றி: திண்ணை.காம் மார்ச் 20, 2009

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: