வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு

பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: 
தமிழின் பெருமைமிகு படைப்பு

மு. இராமனாதன்

First published in Kalachuvadu, April 2012

தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார். இந்தியாவிற்கான சீனாவின் துணைத் தூதர் வாங் ஸ்ஷுவேஃபங் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சீன நூல்களில் மிகத் தொன்மையான ‘ஷிழ் சிங்’ (Shi Jing) சீனாவின் முதல் நூல். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பலவகையில் தமிழின் சங்க இலக்கியங்களுக்கு ஒப்பானது. ‘ஷிழ் சிங்’ என்பதற்குப் ‘பாடல்களின் தொகுப்பு’ எனப் பொருள் சொல்லலாம். இதையே கவித்தொகை என்று தமிழாக்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் பயணி. தேர்ந்தெடுக்கப்பட்ட சீனப் பாடல்களின் நேரடி மொழிபெயர்ப்புடன் கூடவே பின்னணி விவரங்களையும் பாடல்களின் கருப் பொருளையும் விவரிக்கும் பயணி, கவித்தொகையின் வரலாறு, அதன் உள்ளடக்கம், மொழிபெயர்த்த விதம் ஆகியவற்றைக் குறித்தும் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். பயணி என்னும் புனைபெயர்கொண்ட எம். ஸ்ரீதரன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி தில்லித் தமிழ்ச் சங்கச் செயலர் இரா. முகுந்தனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நூலைக் குறித்து மூன்று உரைகள் நிகழ்த்தப்பட்டன.

‘வரலாற்றுப் பார்வை’ எனும் பொருளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி பேசினார். “சீனாவுக்கும் தமிழகம்/இந்தியாவுக்குமான தொடர்புகள் ஈராயிரமாண்டுகளுக்குக் குறையாதவை. சீனாவின் பண்பாட்டுத் தாக்கங்கள் தமிழில் காணக் கிடைக்கின்றன. ஆனால் சீன மரபு இலக்கியத்திலிருந்து எந்த நூலும் தமிழில் இதுவரை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு ஒன்றுக்கொன்று மொழிபெயர்ப்பு நிகழாத மொழிகளுக்கிடையே, முதன்முதலாக மொழிபெயர்க்கும் பெரும் சவாலை எதிர்கொண்டு, அதைச் செவ்வனே சமாளித்திருக்கிறார் பயணி. வெளியுறவுப் பணியின் பொருட்டுச் சீன மொழி கற்கும் வாய்ப்பைப் பெற்ற பயணி, அதை ஊன்றிக் கற்று, இந்த அரிய நூலைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்” என்று குறிப்பிட்ட சலபதி, ஒரு சீனக் கவிதைக் களஞ்சியத்தை அவர் தமிழுக்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இருமொழி நாவலாசிரியர் பி. ஏ.கிருஷ்ணன் ‘இலக்கியப் பார்வை’ எனும் பொருளில் பேசினார். “பயணியின் மொழிபெயர்ப்பு மிகுதியும் வசனக் கவிதையாகவே அமைந்திருக்கிறது, எளிய மொழியே பயின்றுவருகிறது. எனினும் சீன மண்ணின் மணத்தையும் தொன்மையையும் தமிழ்ப் பாடல்கள் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன” என்றார் அவர். தொடர்ந்து, “செவ்விலக்கியங்களில் இடம்பெறும் உவமைகளும் உருவகங்களும் இயல்பானவையாகவும் காலங்கடந்து நிற்பவையாகவும் விளங்கும்” என்றார். “ஈங் ஈங் எனும் சாணி வண்டுகள்/ வேலிப்படல்களின் மீது” எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்கொண்டு இதை விளக்கினார். “நாட்டின் நலம் நாடும் ஒருவரைப் பற்றி, மன்னனிடம் பழிகூறுகிறார்கள் நிந்தனையாளர்கள். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் blue-flies (மாட்டு ஈக்கள்) பறந்துவருகின்றன. எனில் பயணியின் மொழியாக்கத்தில் வரும் சாணி வண்டுகளே (dung beetles) இங்குப் பொருத்தமாக அமைகின்றன. ஏனெனில் சாணிவண்டுகள் எங்கும் நுழைய முயல்வன. சூரிய ஒளி படாத இடங்கள் அவற்றுக்கு உகந்தவை. ஆதலால் அரசவை அல்ல, சாணக் குவியலே நிந்தனையாளர்களுக்குப் பொருத்தமான இடமென்பது பாடலில் பொதிந்திருக்கும் பொருள். வேலிப்படல் அரசவைக்கு உருவகமாக அமைந்தது” என்று கூறிய பி.ஏ. கிருஷ்ணன், தொடர்ந்து “தாழ்நிலத்திலே நெல்லி மரம்/ கிளைகள் அசையும் ஒய்யாரம்” என்னும் பாடலைக் குறிப்பிட்டார். “இந்தப் பாடலின் ஆங்கில மொழி பெயர்ப்புகளில் carambola (தம்பரத்தம்) மரங்கள் வருகின்றன, ஆனால் பயணியின் மொழியாக்கத்தில் வரும் நெல்லி மரம் தமிழர்களுக்குப் பரிச்சயமானது. மேலும் தமிழில் மரங்கள் துளிர்த்துத் தழைத்து ஆடுகின்றன. பாடல் வரிகளே தென்றலில் அசையும் கிளைகள்போல ஓர் ஊஞ்சல் தன்மை கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் இந்த அசைவு அனுபவம் வெளிப்படவில்லை” என்றார் அவர்.

‘உள்ளிருந்தொரு பார்வை’ எனும் பொருளில் பேசினார் எழுத்தாளர் மு. இராமனாதன். “கடந்த ஆறாண்டுக் காலமாகப் பயணி இந்நூலுக்காக உழைத்திருக்கிறார்” என்றார் அவர். “முதலில் பெய்ஜிங்கில் சீன மாணவர்களுக்குச் சீன இலக்கியத்தைச் சொல்லித்தரும் பேராசிரியர்கள் இருவரிடம் தொடர்ந்து கவித்தொகையைப் பாடம் கேட்டார். கூடவே சீனமும் தமிழும் அறிந்தவர்களைக் கொண்டு தனது இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் குழுவை உருவாக்கி அதில் மொழிபெயர்ப்பின் கரட்டு வடிவங்களை விவாதித்தார். தமிழறிஞர்களையும் நண்பர்களையும் கொண்டு Tamil-Shi Jing எனும் கூகிள் குழுமம் ஒன்றை உருவாக்கி, மொழிபெயர்ப்புகளை கூகிள் ஆவணங்களாகப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து மொழிபெயர்ப்பையும் பின்னணி விவரங்களையும் அறிமுகக் கட்டுரைகளையும் புதுப்பித்துக்கொண்டேயிருந்தார். அவரது தொடர்ந்த ஆய்வின் பயனாகப் பல்வேறு பரிமாணங்கள் கிடைத்தன. அவற்றின் சாற்றைத்தான் பயணி இந்த நூலில் வழங்கியிருக்கிறார்” என்றார் இராமனாதன்.

நூலை வெளியிட்டுப் பேசிய சிவசங்கர் மேனன், சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். சரளமாகச் சீன மொழி பேசக்கூடியவர். தனது உரையில் அவர் “இந்நூல் மூலப்பாடல்களின் பொருளைத் தமிழ் வாசகர்கள் கவிநயத்தோடு அறிந்துகொள்ள வகைசெய்வதாக அறிகிறேன்” என்றார். பழமைமிக்க ஷிழ் சிங் பாடல்களைத் தெரிவுசெய்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதரனின் முயற்சியைப் பாராட்டினார். கூடவே நூல் மிகச் சிறப்பாக, சீன மணம் கமழும்படியான படங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறிப் பதிப்பாளரையும் பாராட்டினார். ஸ்ரீதரன் ஒரு சீன-தமிழ் அகராதி தயாரிக்கும் பணியைத் தொடங்கினார், அதில் அவர் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென்ற வேண்டுகோளோடு தனது உரையை நிறைவுசெய்தார்.

சீனத் துணைத் தூதர் வாங் ஸ்ஷுவேஃபங், “இந்த நூலை இந்திய மக்கள் சீனாவுக்கு வழங்கிய பரிசாகக் கருதுகிறேன்” என்றார். “எல்லாச் சீன மாணவர்களும் ஷிழ் சிங்-கின் ஒன்றிரண்டு பாடல்களையேனும் அறிந்திருப்பார்கள். நானும் உயர்நிலைப் பள்ளியில் சில பாடல்களைப் படித்தேன். அவை கடினமாகத்தான் இருந்தன” என்று கூறிய வாங், “இப்படியான நூலை இந்தியர் ஒருவர் கருத்தூன்றிக் கற்று அதை நேரடியாக மொழிபெயர்த்திருப்பது என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது” என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய பயணி, “இந்த நூல் பலரின் உதவிகொண்டே சாத்தியமானது. நூலில் இடம்பெறும் நன்றிக்குரியவர்களின் பட்டியலே இரண்டரைப் பக்கங்களுக்கு நீள்வதிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம்” என்றார். “எனது சீன மொழிப் பயிற்சியும் சீன இலக்கிய அறிவும் குறைபாடு உடையவை. வெளியறவுத் துறையிலேயே நிறைந்த சீன அறிவு படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். எனது தமிழிலக்கிய அறிவும் குறைவு. என்றாலும் ஆர்வத்தின் அடிப்படையிலேயே இம்முயற்சியில் ஈடுபட்டேன்” என்றார் பயணி. சீன – தமிழ் இலக்கியப் பரிணாம வளர்ச்சியில் தனது முந்தைய நூலும் (சீன மொழி – ஓர் அறிமுகம்), இந்த நூலும் ஒரு செல் உயிரிகள். மிகைப்படுத்தினாலும் குரங்கின் இனம் போல, வளர்ச்சியடையாதவை. இதைவிடச் சிறந்த – மனிதர் போன்ற வளர்ச்சியுற்ற – நூல்கள் தவறாமல் வரும்; வந்தாக வேண்டும். இந்த நூல் குறைபாடுடையது என எனக்குத் தோன்றும் அதே நேரத்தில், இந்த நூல் முக்கியமானது எனவும் தோன்றுகிறது” என்று கூறித் தனது உரையை நிறைவுசெய்தார் பயணி.

காலச்சுவடு பதிப்பாசிரியர் கண்ணன் தனது நன்றியுரையில் “காலச்சுவடின் பெருமைமிகு பதிப்புகளான அன்னை இட்ட தீ, பாரதி-விஜயா கட்டுரைகள், பாரதி கருவூலம் போன்ற நூல்களின் வரிசையில் பயணியின் இந்த மொழிபெயர்ப்பு நூலும் இடம்பெறும்” என்று குறிப்பிட்டார். “இத்தனை நூற்றாண்டுகளாகச் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக ஒரு நூல் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தமிழன் என்ற முறையில் தனக்கு உவப்பளிக்கவில்லை” என்றார். நிகழ்வின் இன்னொரு சிறப்பம்சம் சீனத் தூதர் கவித்தொகையின் முதலாவது பாடலைச் சீன மொழியிலேயே ராகத்துடன் பாடியது. “குவான்!, குவான்!” என்னும் அந்தப் பாடலைப் பயணி மொழிபெயர்த்திருந்தார். அவளையும் அவனையும் பற்றியும் அவர்களது காதலைப் பற்றியும் ஆற்றங்கரையில் பறவைகள் கொஞ்சுவதையும் கீரை பறிக்கும் பெண்களையும் கிராமத்தில் கேட்கும் இன்னிசைகளையும் சொல்கிறது இந்தப் பாடல். இதன் தமிழ் வடிவத்தைப் பயணி தனது ஏற்புரையில் வாசித்தார். முன்னதாகக் கிருஷ்ணன் இதே பாடலைக் குறிப்பிட்டு, இது ஐங்குறுநூறில் வரும் ‘புலிநகக் கொன்றை’ப் பாடலை ஒத்திருக்கிறது என்றார். ஏ. கே. ராமனுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தார். சங்கப் பாடலில் வரும் தலைவி “அவனை இனி நினைக்கமாட்டேன், எனது கண்களுக்குச் சிறிது தூக்கமாவது கிடைக்கட்டும்” என்கிறாள். கவித் தொகையில் வரும் அவனுக்கோ “நனவிலும் கனவிலும் அவளது நினைவுகள்/ நெடுகின கணங்கள் நெடுகின கணங்கள்/மறுபடி மறுபடிப் புரண்டுருண்டிருந்தான்.”

ஒரே பாடலைச் சீனத்திலும் அதன் மொழிபெயர்ப்பைத் தமிழிலும் அதற்கு இணையான சங்கப் பாடலை ஆங்கிலத்திலும் ஒரே மேடையில் கேட்க வாய்த்தது வித்தியாசமான இலக்கிய அனுபவத்தை நல்கியது. ஒரு வகையில் அது இந்த நிகழ்வின் சாரமாகவும் அமைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: