ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி

மு. இராமனாதன்

Published in The Hindu – Tamil, 11 August 2014

குழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!
தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தை உலகெங்கும் உள்ள மொழியியல் அறிஞர்கள் உரக்கச் சொல்லிவருகிறார்கள். என்றாலும், ஆங்கில மோகத்தில் திளைக்கும் இந்தியத் தமிழர்களின் செவிகளில் அது விழுவதில்லை. தமிழை இரண்டாம் பாடமாகக்கூடப் படிக்காத ஒரு தலைமுறை தமிழ்நாட்டு நகரங்களில் உருவாகிவிட்டது.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமானோர் தமது பாரம்பரியத்தின் வேர்கள் தாய்மொழியில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், தமது பிள்ளைகள் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பல நாடுகளில் இது நடைமுறைச் சாத்தியமாக இருப்பதில்லை. ஹாங்காங்கிலும் அப்படித்தான் இருந்தது – 10 ஆண்டுகளுக்கு முன்புவரை. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தமது பிள்ளைகள் தமிழ் படிக்க முடியவில்லையே என்ற பெற்றோர்களின் ஏக்கம், ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ எனும் அமைப்பினர் நடத்திவரும் தமிழ் வகுப்பால் ஓரளவு நீங்கியது!
சனிக்கிழமைதோறும் 125 மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள். மொத்தம் ஆறு பிரிவுகள். 12 ஆசிரியர்கள். இந்தத் தன்னார்வ ஆசிரியர்களில் பலரும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களில்லை; ஆனால், இளைய சமுதாயத் துக்குத் தாய்மொழியைக் கற்றுக்கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள். இதன் எட்டு அமைப்பாளர்களில் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால், தமிழ்மீது பற்றுடையவர்கள்.
கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளியாக ஹாங்காங் எப்போதும் கருதப்பட்டுவந்திருக்கிறது. இங்கு சீனக் கலாச்சாரத்தோடு வளர்ந்த நாடுகளின் வசதிகளும் உள்கட்டமைப்பும் இணைந்து விளங்குகின்றன. ஹாங்காங்கின் 70 லட்சம் மக்கள் தொகையில் 93% சீனர்கள்தாம். வெளிநாட்டினரில் பிலிப்பைன்ஸ்காரர்கள், இந்தோனேசியர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுமார் 30 ஆயிரம் இந்தியர்கள் வசிக் கின்றனர். இதில் தமிழர்கள் 2,000 பேர் இருக்கலாம்.
வெளிநாடுகளில் வாழும் சிறுவர்கள் அந்நியக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கிறார்கள்; ஆங்கிலம்வழி கற்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை ஒரு வீட்டு மொழியாகப் பயன்படுத்துவதைக்கூடப் படிப் படியாகக் குறைத்துவிடுகிறார்கள். ஹாங்காங் இந்திய மாணவர்களும் அப்படித்தான். அவர்கள் தத்தமது தாய்மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு இங்கு மிகக் குறைவுதான். இந்தியர்களும் பாகிஸ் தானியர்களும் நேபாளிகளும் அதிகமாகப் பயிலும் எல்லிஸ் கடோரி என்கிற அரசுப் பள்ளியில், இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகின்றன. குரு கோவிந்த சிங் கல்வி அறக்கட்டளை, சீக்கிய மாணவர்களுக்கு பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர, ஹாங்காங்கில் முறையாகக் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி என்கிற பெருமை, இந்தத் தமிழ் வகுப்பையே சேரும்.
35 இளம் நாற்றுக்களோடு…
செப்டம்பர் 2004-ல் ஹாங்காங் தமிழ் வகுப்புகள் 35 மாணவர்களோடும் இரண்டு ஆசிரியர்களோடும் ஆரம்பிக்கப்பட்டது. சுங்-கிங் மேன்ஷன் என்கிற 50 ஆண்டுகாலப் பழமைவாய்ந்த கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்தில் இருந்த ஓர் இந்திய உணவகம், வாரந்தோறும் வகுப்பறையாக மாற்றப்பட்டது. சுங்-கிங்கில் ஐந்து தொகுதிகள், ஒவ்வொன்றிலும் 17 தளங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு மின்தூக்கிகள் மட்டுமே. அவையும் சிறியவை. கட்டப்பட்ட காலத்தில் அவை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இந்தக் கட்டிடம் சுற்றுலாப் பயணிகளால், குறிப்பாக ஆசியர்களாலும் ஆப்பிரிக்கர்களாலும் நிரம்பிவழிகிறது. மின்தூக்கிகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். சிறுவர்கள் அசரவில்லை. அவர்களது பாதுகாப்பைக் கருதி, கட்டிடத்தின் வாயிலிலிருந்து உணவகத்துக்கும், வகுப்புகள் முடிந்ததும் மீண்டும் வாயிலுக்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பை அமைப்பாளர்களே ஏற்றுக் கொண்டனர்.
முறையாகத் தமிழ் கற்பிக்கப்படும் செய்தி பரவியது. புதிய மாணவர்கள் சேர முன்வந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக அனைவரையும் சேர்த்துக்கொள்ள இயல வில்லை. மூன்றாண்டுகள் இவ்விதம் கழிந்தன. பள்ளி வளாகத்துக்கு வகுப்புகளை மாற்றுவதன் அவசியமும் அதிகரித்தது. ஹாங்காங்கின் பெரிய அரசியல் கட்சிகளுள் ஒன்றான டி.ஏ.பி-யை அமைப்பாளர்கள் அணுகினர்.
டி.ஏ.பி-யின் முயற்சியில், நான்காம் ஆண்டில் நியூமேன் கத்தோலிக்கப் பள்ளி அதன் வகுப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. அப்போது, மாணவர்களின் எண்ணிக்கை 56-ஆக இருந்தது. பிரிவுகள் மூன்றாகவும் ஆசிரியர்கள் ஐவராகவும் இருந்தனர்.
நீண்ட தாழ்வாரங்களையொட்டிய விசாலமான வகுப் பறைகளில் பல்லூடகக் கருவிகளின் துணையோடு ஹாங்காங் சிறுவர்கள் தமிழ் கற்கலாயினர். வகுப்புகளைத் தவிர, பெற்றோர் – ஆசிரியர் சந்திப்புகள், பொங்கல்-ரம்ஜான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள் போன்றவையும் பள்ளி வளாகத்திலேயே நடந்தன. மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்தது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்தன. கடந்த ஆண்டில் நியூமேன் நிர்வாகம் அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு, இனி தமிழ் வகுப்புகளுக்குப் பள்ளியைத் தர இயலாது என்று சொன்னவுடன், அமைப்பாளர்கள் கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். மீண்டும் டி.ஏ.பி-யின் உதவியோடு 125 மாணவர்களோடும் 12 ஆசிரியர் களோடும் தமிழ் வகுப்புகள் போங்சியூ சூன் என்னும் பள்ளிக்கு மாறியது.
பாடத்திட்டம்
வகுப்பறைகளைப் போலவே பாடத்திட்டமும் படிப்படியாக முறைப்படுத்தப்பட்டது. வகுப்புகள் தொடங் கப்பட்டபோது மாணவர்கள் நோட்டுப் புத்தகங்களில் பாடங்களை எழுதிச் சென்றனர். பிற்பாடு, தமிழ்நாட்டுப் பாடநூல்களின் ஒளிநகல்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து, சிங்கப்பூரின் ‘தமிழோசை’ பாட நூல்கள் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்துக்கும் கல்வி முறைக்கும் இசைவாக இருப்பதால், இரண்டாம் ஆண்டி லிருந்தே பாடத்திட்டத்தின் அங்கமாகிவிட்டது. கூடவே, தமிழகத் தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் சில பயிற்சிப் புத்தகங்களும் இலக்கண நூல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இந்தியக் கல்வி பெரும்பாலும் மாணவர்களின் எழுத்துத் திறனைத்தான் சோதிக்கிறது. ஆனால், மொழிக் கல்வியில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களுக்கும் சரிநிகர் சமானமான இடம் உண்டு. ஹாங்காங் கல்வித் திட்டத்தில் ஆங்கிலமோ, சீனமோ வேறு மொழிகளோ படிக்கும் மாணவர்களுக்கு நான்கு திறன்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் அவ்விதம் கற்கும் மாணவர்கள், தமிழ் வகுப்பிலும் அதையே எதிர்நோக்குகின்றனர். தமிழ் வகுப்பின் பாடத் திட்டமும் அவ்விதமே அமைக்கப்பட்டிருக்கிறது.
பத்தாண்டுகள்!
2004-ல் தொடங்கப்பட்ட தமிழ் வகுப்புகள் மே 2014-ல் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டன. இந்த 10 ஆண்டுகளில் ஒரு சனிக்கிழமைகூட வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டதில்லை. ஆள்பலமோ பணபலமோ பெரும் செல்வாக்கோ இல்லாத ஒரு சிறுபான்மை அமைப்பு, அந்நிய நாட்டில் தாய்மொழியைப் பயிற்றுவித்து வருகிறது. இதற்குத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் ஆசிரியர்களும் அமைப்பாளர்களும் ஒரு காரணம். தமிழ் படித்தால் பொருளீட்ட முடியுமா என்று கேட்காமல், தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம். சுயவிருப்போடும் ஆர்வத்தோடும் தமிழ் கற்கும் மாண வர்கள் முக்கியமான காரணம். இவர்களின் கூட்டு முயற்சியால் 10 ஆண்டுகள் என்கிற மைல்கல்லை எட்டியிருக்கும் இந்த வகுப்புகள், வருங்காலங்களில் தமது தொடர்ந்த வளர்ச்சியால் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும்.
– மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தமிழ் வகுப்பின் ஆலோசகர்
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: