மு. இராமனாதன்
Published in The Hindu – Tamil, 13 October 2014
ஹாங்காங் போராட்டம்குறித்து மேலைநாட்டு ஊடகங்கள் முன்வைப்பது தவறான பார்வை.
ஹாங்காங் மாணவர்கள் கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடிவருகிறார்கள். இதனால் ஹாங்காங் மூன்றாவது முறையாக உலகச் செய்திகளில் மையம் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிச்சம் முதன்முறையாக ஹாங்காங்கின் மீது பரவியது 1997 ஜூன் 30 நள்ளிரவில். அபினி யுத்தத்தில் ஹாங்காங்கைக் கைப்பற்றிய பிரிட்டன், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குத் திரும்பக் கொடுத்த வைபவம் அந்த இரவில் நிகழ்ந்தது. அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது, யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மக்கள் சீனத்தின் கொடியும் கூடவே ஹாங்காங்கின் தனிக் கொடியும் ஏற்றப்பட்டன.
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அமைச்சரவை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. என்றாலும், ஹாங்காங்குக்கு விலக்கு அளிக்க மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங் ஒப்புக்கொண்டார். அவர் முன்மொழிந்ததுதான் ‘ஒரு தேசம், இரண்டு ஆட்சி முறை’. அதாவது, சீனத்தின் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், ஹாங்காங் ஒரு ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக விளங்குகிறது. இதற்காக ஒரு செயலாட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுகிறார். ஹாங்காங்கின் சந்தைப் பொருளாதாரமும் பேச்சுச் சுதந்திரமும் சட்டத்தின் மாட்சிமையும் பேணப்படுகிறது.
ஸார்ஸை வெற்றிகொண்ட ஹாங்காங்
இரண்டாவது முறையாக ஹாங்காங் ஊடகங்களை நிறைத்தது 2003 மார்ச்-ஏப்ரல் மாதங்களில். அதற்கான காரணம் துரதிர்ஷ்டவசமானது. ஸார்ஸ் எனும் தொற்றுநோய் நகரின் மத்தியில் சம்மணமிட்டு அமர்ந் திருந்தது. சுமார் 1,800 பேரைப் பாதித்து, 300 பேரைக் காவுகொண்டது. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் அரசாங்கமும் நிர்வாக இயந்திரமும் வல்லுநர்களும் மக்களும் விவேகத்தோடு நடந்துகொண்டார்கள்; மிகுந்த உறுதியோடு நோயை வெற்றிகொண்டார்கள்.
இப்போது மூன்றாவது முறையாக உலக நாக்குகளில் ஹாங்காங் புரள்கிறது. ஹாங்காங்கின் ஜனநாயக வரலாறு சுருக்கமானதுதான். 1998 முதல் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்துவருகிறார்கள். ஆனால், ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு தேர்வுக் குழு. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு அமைப்புகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். எனினும் இந்த அமைப்புகள் பலவும் பெய்ஜிங்குக்கு ஆதரவானவை. 2017 தேர்தலில் செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடி யாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதற்கு பெய்ஜிங் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், வேட்பாளர் களை ஏற்கெனவே உள்ள தேர்வுக் குழுதான் நியமிக் கும் என்றும் அறிவித்தது. இதற்கு ஜனநாயக ஆதரவா ளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்
ஹாங்காங்கின் அரசியல் கட்சிகளை, ஜனநாயக ஆதரவாளர்கள், பெய்ஜிங் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பிரிவினருக்கும் ஆதரவு இருக்கிறது. 2012-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் பெற்ற வாக்குகள் முறையே 56%, 44%. ஜனநாயகக் கட்சிகள் மேலதிக வாக்குகளைப் பெற்றபோதும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, நம்பகமான தலைமையும் இல்லை. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு கல்வியாளர்கள் சிலர் ‘சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
நகரின் வணிக மையமான சென்ட்ரலில் ஆதரவாளர்களைக் கூட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பது அவர்களின் திட்டமாக இருந்தது. இவர்களுக்கும் பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லை. ஆனால், சென்ட்ரல் இயக்கம் செப்டம்பர் 28 அன்று ஆக்கிர மிப்புக்கு அழைப்பு விடுத்தபோது, ஆயிரக் கணக் கானோர் திரண்டனர். அவர்கள் அரசியல் கட்சிகளையோ சென்ட்ரல் இயக்கத்தையோ சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மாணவர்கள். மேலும், அவர்கள் ஆக்கிரமித்தது சென்ட்ரலை அல்ல, தலைமைச் செயலகம் இயங்கும் அட்மிராலிட்டி மற்றும் கடைத்தெருக்கள் மிகுந்த மாங்காக், காஸ்வேபே பகுதிகளிலுள்ள பிரதான சாலைகளை. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பகுதிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு அலுவலகங்களின் பாதைகள் மறிக்கப்பட்டன. கடைகளும் பள்ளிகளும் மூடப்பட்டன. பல பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன. பள்ளி மாணவர்களும் பணியாளர்களும் வர்த்தகர்களும் சிரமத்துக்குள்ளாயினர். சிலர் வெளிப்படையாக ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். சாலைகளிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களை எச்சரித்தது அரசு. அறிவு ஜீவிகளும் சமயத் தலைவர்களும் மாணவர்கள் ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் என்றும் அரசு மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும் கோரினர். ஒரு வாரத்துக்குப் பிறகு தலைமைச் செயலகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளும் இயங்கத் தொடங்கின. ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிலிருந்து சில நூறுகளாயிற்று. என்றாலும் சாலைகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்கு மாணவர்கள் இதுவரை திரும்பித் தரவில்லை. அக்டோபர் 10 அன்று அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது, பிறகு ரத்துசெய்துவிட்டது. அடுத்த கட்டத்துக்கு அனைவரும் காத்திருக்கினறனர்.
மேலைநாட்டு ஊடகங்களின் பார்வை
மேலைநாட்டு ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை வேறு பல நாடுகளில் நடைபெற்ற புரட்சியோடு ஒப்பிட்டு எழுதின. இந்த ஒப்பீடு முறையானதல்ல. ஹாங்காங்கில் தனிமனித சுதந்திரம் நிலவுகிறது, நீதித் துறை சுயேச்சையானது, குடிமக்கள் யாரும் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை, 97% மக்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது, ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படாவிட்டாலும் அடக்குமுறையாளர்கள் அல்லர், அவர்கள் சட்டமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.
‘தி நியூயார்க் டைம்ஸ்’, சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி 2017-ல் நேரடித் தேர்தலின் மூலம் செயலாட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று எழுதியது. இது தவறானது. ஒப்பந்தத்தில் நேரடித் தேர்தலுக்குத் தேதி எதுவும் குறிக்கப்படவில்லை. ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் 45-வது பிரிவு செயலாட்சித் தலைவருக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் குழு பரந்துபட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. 1997-ல் 400 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட குழுவில் இப்போது 1,200 பேர் உள்ளனர். இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஜனநாயக ஆதரவாளர்களும் செயலாட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வகைசெய்யப்படும் என்று நோக்கர்கள் எதிர்பார்த்திருந்தனர். பெய்ஜிங் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறது.
இணைப்புப் புள்ளியின் அவசியம்
செயலாட்சித் தலைவராக யார் வேண்டுமானாலும் போட்டியிட வழி செய்யப்பட வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவாளர்களின் கோரிக்கை. இது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. இதற்கு பெய்ஜிங் ஒருக்காலும் சம்மதிக்கப் போவதில்லை. இதை மாணவர்கள் உணர வேண்டும். தலைவர் பதவிக்கு வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் குழு இன்னும் விரிவாக்கப்பட்டுப் பலரும் தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்று மிதவாதிகள்கூட எதிர்பார்க் கின்றனர். இதை அரசும் பெய்ஜிங் ஆதரவாளர்களும் உணர வேண்டும். அப்போது இரண்டு தரப்பினரும் பேச முடியும்; ஒரு புள்ளியில் சந்திக்கவும் முடியும்.
சூழலில் இப்போது பரஸ்பர அவநம்பிக்கை பரவிக் கிடக்கிறது. ஹாங்காங் சமூகம் முன்னெப் போதையும்விடப் பிளவுபட்டுக் கிடக்கிறது. நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ‘அன்ஃபிரண்டு’ செய்துகொள்கிறார்கள். சாப்பாட்டு மேஜைகளில் குடும்பத்தினர் அரசியல் பேசுவதைத் தவிர்ப்பதாக எழுதுகிறார் பத்திரிகையாளர் ஷெர்லி யாம்.
2003-ல் ஸார்ஸின் உருவில் ஒரு சோதனை வந்தது. ஹாங்காங் சமூகம் அதை ஒற்றைக்கட்டாக எதிர்கொண்டது. இப்போது மீண்டும் ஒரு சோதனை. ஆனால், சமூகம் அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. என்றாலும் இந்தச் சோதனையை எதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கான திறன் ஹாங்காங்கிடம் இருக்கிறது.
– மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com