எழுத்து ஒரு சொத்தா?

மு. இராமனாதன்

Published in The Hindu – Tamil, 28 November 2014

எழுத்தாளர்களை மதிக்காத சமூகத்தில்தான் காப்புரிமை அதிகமாக மீறப்படுகிறது.
என் வீட்டின் வாசிப்பறையில் அமர்ந்தபடி இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்கிறேன். இந்த வீடு, இன்னும் வங்கிக் கடன் கட்டி முடிக்கவில்லை என்றாலும், என் பெயரில்தான் இருக்கிறது. ஆகவே, என்னுடைய சொத்து. யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த மேசை, நாற்காலி, கணினி போன்றவையும், ஹாங்காங்கில் பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் என்றாலும், என் சொத்துக்கள்தாம். யாரும் அபகரித்தால் புகார் கொடுக்கலாம். ஆனால், இப்போது நான் கணினியில் உள்ளிடுகிற இந்த எழுத்துக்கள் என்னுடைய சொத்தா?
இப்படியொரு கேள்வி எழக் காரணம், சமீபத்தில் படித்த கட்டுரை. கடந்த ஜூலை மாதம் மொரிஷியஸில் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக ஒரு மாநாடு நடத்தி, அந்தச் சமயத்தில் ஒரு மலரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. அயலில் வசிக்கும் தமிழர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓர் அமெரிக்க அன்பர் அமெரிக்கத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை உள்ளடக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஹாங்காங் குறித்த பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அது ஹாங்காங்கைப் பற்றியது என்பதனால் அல்ல, அதில் இரண்டு பத்திகள் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. அன்பர் ஒன்றிரண்டு மாற்றங்களைச் செய்திருந்தார். ‘ஹாங்காங்’ என்பதை ‘ஆங்காங்’ என்றும், ’70 இலட்சம் மக்கள்தொகை’ என்று நான் எழுதியிருந்ததை ‘72,35,043 மக்கள்தொகை’ என்றும் மாற்றியிருந்தார். மற்றபடி, நான் எழுதியிருந்த இரண்டு பத்திகள் கிட்டத்தட்ட அப்படியே இடம்பெறுகின்றன.
இப்படியான சம்பவத்தை இதற்கு முன்னரும் எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது நான் செய்யக்கூடியது ஒன்றுதானிருந்தது. எழுதுவதை ஏறக்கட்டிவிட்டுப் பாடங்களைப் படிப்பது.
சந்தை மதிப்பும் சன்மானமும்
30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இன்னொரு சம்பவம். இதை இப்படியே விட்டுவிடலாகாது. யாரோ சொல்லியிருக்கிறார்கள். எதையும் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். நான் மனைவியிடம் ஆலோசனை கேட்டேன். அவர் அந்தப் பென்னம் பெரிய மலரை இரண்டு கைகளாலும் ஏந்தி, பிரஸ்தாபக் கட்டுரையை நிதானமாகப் புரட்டினார். மொத்தம் 20 பக்கங்கள். கூண்டில் நிற்கும் என்னைப் பார்த்து, “இவ்வளவு பெரிய கட்டுரையில் இரண்டு பத்திகள்தானே, போகட்டும், விட்டுவிடலாம்” என்று தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி சிலவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு படைப்பாளிக்குத் தனது படைப்பின்மீது இரண்டு உரிமைகள் உள்ளன. முதலாவது, சந்தை மதிப்பு அல்லது சன்மானம். இரண்டாவது, சமூக மதிப்பு அல்லது தார்மிக உரிமை.
எனது கட்டுரையை இணையத்தில் வெளியிட்ட பத்திரிகை லாப நோக்கமற்றது. வாசகர்களிடம் சந்தா வசூலிப்பதில்லை. எழுத்தாளர்களுக்குச் சன்மானமும் தருவதில்லை. இதில் பொருளாதாரரீதியில் எனக்கு இழப்புமில்லை, அந்த அன்பருக்கு லாபமுமில்லை.
ஆனால், தார்மிக உரிமை இருக்கிறதே. என்னுடைய கட்டுரைக்குக் காப்புரிமை இருக்கிறது. வழக்குப் போடலாம். ஆனால், அதற்கு நேரமும் பணமும் வேண்டும். தவிர, ஒரு படைப்பின் மீதுள்ள உரிமையை நீதிமன்றமல்ல, சமூகத்தில் நிலவும் சட்டத்தின் மாட்சிமை பெற்றுத்தர வேண்டும். எழுத்தை மதிக்கும் சமூகங்களில் அப்படித்தான் நடக்கிறது.
நகலெடுப்பின் விளைவு
பரீத் சக்காரியா இந்திய – அமெரிக்கர். ‘நியூஸ் வீக்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தற்போது ‘டைம்’ இதழில் தொடர்ந்து எழுதுகிறார். 2012-ல் துப்பாக்கிக் கட்டுப்பாட்டைப் பற்றி இவர் எழுதிய கட்டுரையின் ஒரு பத்தி, அதற்குச் சில காலம் முன்பு ஜில் லேப்போர் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதைச் சில வலைஞர்கள் கண்டுபிடித்தார்கள். சக்காரியா மன்னிப்புக் கேட்டார். ‘டைம்’ இதழ் அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
காவ்யா விஸ்வநாதன் இன்னொரு இந்திய – அமெரிக்கர். ஹார்வர்டு மாணவி. 2006-ல் ஒரு நாவல் எழுதினார். லிட்டில் பிரவுன் பதிப்பகம் வெளியிட்டது. காவ்யா எழுதிய நாவலின் பல பத்திகளுக்கும் மெகன் மெக்காபர்டி என்பவர் முன்னதாக எழுதியிருந்த இரண்டு நாவல்களின் பத்திகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருந்ததை மெக்காபர்டியின் வாசகர் ஒருவர் கண்டுபிடித்தார். சந்தையில் இருந்த காவ்யாவின் புத்தகப் பிரதிகள் அனைத்தையும் லிட்டில் பிரவுன் திரும்பப் பெற்று அழித்துவிட்டது. மேலும், பதிப்பகம் காவ்யாவின் அடுத்த புத்தகத்துக்கும் ஒப்பந்தம் செய்திருந்தது. இரண்டு புத்தகங்களுக்குமாகச் சேர்த்து 5 லட்சம் டாலர், அதாவது மூன்று கோடி ரூபாய், இந்த ஒப்பந்தத்தையும் பதிப்பகம் ரத்துசெய்தது. இவையெல்லாம் அங்கே எழுத்துக்கு உள்ள சந்தை மதிப்பையும் எழுத்துத் திருட்டு, அறிவுலகத்தில் உண்டாக்குகிற அதிர்வுகளையும் புலப்படுத்துகின்றன.
எழுத்தின் சந்தை மதிப்பு
தமிழ் எழுத்தாளர்களின் சந்தை மதிப்பு எப்படி உள்ளது? கடந்த 50 ஆண்டுகளில் தமிழின் முழு நேர எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், பத்துப் பேராவது தேறுவார்களா என்று தெரியவில்லை. தி. ஜானகிராமன் வானொலியில் வேலை பார்த்தார். அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். இந்திரா பார்த்தசாரதி டெல்லி பல்கலைக்கழகத்திலும் ஜி. நாகராஜன் மதுரைத் தனிப் பயிற்சிக் கல்லூரிகளிலும் பயிற்றுவித்தார்கள். வண்ணநிலவனுக்குப் பத்திரிகைத் தொழில், வண்ணதாசனுக்கு வங்கிப் பணி. பி.ஏ. கிருஷ்ணனும் தியடோர் பாஸ்கரனும் நல்ல உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்றபின்புதான் தீவிரமாக எழுதுகிறார்கள். எழுத்து இங்கே ஒரு தொழிலில்லை.
சமூக மதிப்பு எப்படி?
சுந்தர ராமசாமி ஒரு முறை இப்படிச் சொன்னார். ஒரு பெட்டிக் கடைக்காரர் எழுத்தாளராகவும் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாலு பேர் சந்திக்கிற இடத்தில் யாரேனும் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், அவர் ஒருபோதும் ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்று சொல்ல மாட்டார். அது சமூகத்தில் அவருக்கு மரியாதையை ஈட்டித்தருவதில்லை.
எட்டு ஆண்டுகள் இருக்கும். அ. முத்துலிங்கத்தின் கதை ஒன்றைப் படித்துப் பிரமித்துப்போய் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடன் பதில் எழுதினார். அதுவே, ஓர் இலக்கியப் படைப்பைப் போல இருந்தது. அன்றிரவே சாப்பாட்டு மேசையில் அதைப் பகிர்ந்துகொண்டேன். ஹாங்காங்கில் வளர்ந்த என் மகனுக்கு அவரது மறுமொழியின் உள்ளடக்கத்தைவிட, ஓர் எழுத்தாளர் தனது விசிறிகளுக்குப் பதில் எழுதுகிறார் என்பதுதான் வியப்பாக இருந்தது. எழுத்தை மதிக்கும் சமூகங்களில் எழுத்தாளர்களை எளிதில் தொடர்புகொண்டுவிட முடியாது. இங்கே நாஞ்சில் நாடன் தனது செல்பேசி, இல்பேசி எல்லாவற்றையும் அவரது இணையதளத்தில் போட்டுவைத்திருக்கிறார். ஒரு தமிழ் வாசகர் எழுத்தாளரைத் தொலைபேசியில் அழைப்பதற்கு எங்கே மெனக்கெடப்போகிறார் என்கிற தைரியம்தான் காரணமாக இருக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு எனது எழுத்துக்களை யாரோ எடுத்துக்கொண்டபோது ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்போது ஆவலாதியை எழுத முடிகிறது. அவ்வளவுதான் நாம் மேம்பட்டிருக்கிறோம்.
– மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: