கடவுச்சீட்டு: சில நினைவுகள்

செ.முஹம்மது யூனூஸ்

Published in The Hindu-26 January 2015

உலகம் சுற்றிய பர்மிய இந்தியரின் நினைவுக் குறிப்புகள்

முதல் உலகப் போருக்குப் பின்னால்தான் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) மெல்லப் புழக்கத்துக்கு வந்தன. அப்போதும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களின் மற்ற காலனி நாடுகளுக்குப் போவதற்குக் கடவுச்சீட்டோ விசாவோ வேண்டியிருக்கவில்லை. இந்தியாவில் அறிவாளிகளுக்கு அறிவாளிகள், உழைப்பாளிகளுக்கு உழைப்பாளிகள், ராணுவத்துக்கு உயிரைக் கொடுக்கும் தியாகிகள் என எல்லோரும் கிடைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை பர்மா, மலேயா, இலங்கை, பிஜி, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று தமது காலனி நாடுகளுக்கெல்லாம் அழைத்துப் போனார்கள். பல இந்தியர்கள் தாமாகவே வாய்ப்புகளைத் தேடியும் போனார்கள். அப்படித்தான் எனது இரு பாட்டனார்களும் பர்மாவுக்குப் போனார்கள். நாங்களெல்லாம் பர்மாவில்தான் பிறந்தோம், வளர்ந்தோம்.

இந்தியாவிலிருந்து பர்மாவுக்கு வருவதும் போவதும் அந்தக் காலத்தில் இலகுவாகவே இருந்தது. கடவுச்சீட்டு, விசா, அடையாள அட்டை எதுவும் கிடையாது. பத்து ரூபாய் கட்டணம் – மூன்று நாள் பயணம். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி மற்றும் சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் கப்பல்கள் கல்கத்தாவிலிருந்தும் சென்னையிலிருந்தும் ரங்கூன் வந்தன.

இந்தியர்கள் மீதான துவேஷம்

பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு மாநிலமாக இருந்த பர்மா 1937-ல் தனியான காலனியாக மாறியது. பர்மியர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக்கொள்வதாகச் சிலர் பிரச்சாரம் செய்தார்கள். பர்மியர்களுக்கு இந்தியர்கள் மீது துவேஷம் உண்டானது. இதனால், 1940-ல் பர்மியக் குடிவரவுக் கட்டுப்பாட்டு அதிகாரி என்று ஒரு பொறுப்பை உருவாக்கினார்கள். பர்மாவிலிருந்து இந்தியாவுக்குப் போகிறவர்களுக்கு ஒரு அடையாள அட்டையை அவர் வழங்குவார். பர்மாவுக்குத் திரும்பவும் கப்பலேறுகிறபோது அதைக் காட்ட வேண்டும்.

இதே வேளையில், இந்தியாவில் குடிவரவுப் பாதுகாவலர் என்று ஒரு பொறுப்பு உருவாக்கப்பட்டது. இவர் இந்தியாவிலிருந்து புதிதாக பர்மா போகிறவர்களுக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்று சான்று வழங்குவார். இந்தச் சான்றிதழும், கூடவே இவர்கள் எதற்கு பர்மா வந்திருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணமும் ரங்கூன் துறைமுகத்தில் பரிசோதிக்கப்படும். கூடவே, அம்மைத் தடுப்பு, காலரா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களையும் காட்ட வேண்டும்.

1948-ல் பர்மா சுதந்திரம் பெற்றது. புதிய அரசு பர்மியர்களுக்குக் குடியுரிமையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியது. வெளிநாட்டவர்கள் அவர்கள் அந்நியர்கள் என்பதற்கான அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல் பர்மாவில் வாழ்ந்த வெளிநாட்டவர்களும் பர்மியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். எனது அண்ணன் பர்மா ரயில்வேயில் வேலை பார்த்தார். ஒரு தம்பி சாட்டர்ட் வங்கியில் வேலை பார்த்தார். இவர்களும் இவர்களைப் போலப் பலரும் பர்மியக் குடியுரிமை பெற்றுக்கொண்டார்கள். நானும் என்னைப் போன்ற பலரும் அந்நியர்களாகப் பதிவு செய்துகொண்டோம்.

குடியரசான இந்தியா

இந்தியா 1950-ல் குடியரசான பிறகு கடவுச்சீட்டு வழங்கத் தொடங்கியது. அந்த ஆண்டே நான் ரங்கூன் இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்து, கருநீல நிறத்தில் மூன்று சிங்க இலச்சினையுடன் கூடிய எனது கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டேன். கடவுச்சீட்டு என்பது ஒரு நாட்டைக் கடந்து அந்நிய நாட்டுக்குச் செல்வதற்காகத் தமது குடிமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆவணம். ஆனால், அப்போது எனக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு பர்மாவில் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது.

1960-ம் ஆண்டில் நான் பர்மாவிலிருந்து, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் போனேன். முதலில் இந்தியக் கடவுச்சீட்டில் இவர் இன்னின்ன நாடுகளுக்குப் போகலாம் என்று குறிப்பு எழுதி வாங்க வேண்டும். பிறகு, போக விரும்பும் நாடுகளின் தூதரகங்களில் விசா வாங்க வேண்டும். ஒவ்வொரு முறை வெளிநாடு போகிறபோதும் இந்த இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை 1977 வரை நீடித்தது. இதை மாற்றியவர் வாஜ்பாயி. நெருக்கடி நிலைக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த ஜனாதா அரசில் அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார். ஒரு முறை கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அவர் போனாராம். அங்கே குவிந்திருந்த கூட்டத்தில் பாதிப் பேர் வெளிநாடு போக அனுமதிக் குறிப்பு எழுதி வாங்க வந்தவர்கள். அதைப் பார்த்து அதிர்ந்துபோய், இந்தத் தேவையற்ற நடைமுறையை மாற்றினார் என்று சொல்வார்கள். அதற்குப் பிறகு, இந்தியக் கடவுச்சீட்டு கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும் என்றானது.

1961-ல் நான் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தேன். படித்த, கேள்விப்பட்ட ஒவ்வொரு ஊருக்கும் போனேன். எனது பூர்விகமான ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இளையாங்குடிக்கும் போனேன். உறவினர்களைச் சந்தித்தேன். இந்தியாவிலிருந்து நான் பர்மா திரும்பிய ஆறு மாதங்களில் அங்கே ராணுவ ஆட்சி வந்துவிட்டது. 1964-ல் எல்லாவற்றையும் தேசியமயமாக்கிவிட்டார்கள். விவசாயம், தொழில், வர்த்தகம் எல்லாம் முடங்கிவிட்டது. இந்தியர்கள் கணிசமாக வெளியேறினார்கள்.

பிழைப்பைத் தேடி…

நானும் பிழைப்பைத் தேடி 1966-ல் ஹாங்காங் வந்து சேர்ந்தேன். அப்போது ஹாங்காங் பிரிட்டனின் காலனியாக இருந்தது. 1997-ல் சீனாவுக்குக் கை மாறியது. அதற்கு முன்பாக சில ஹாங்காங் சீனர்கள் பிரிட்டிஷ் கடவுச்சீட்டு வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். ஆங்கிலேய அரசும் அப்படிக் கேட்டவர்களுக்குக் கடவுச்சீட்டு வழங்கியது. பிரிட்டிஷ் கடவுச்சீட்டு இருந்தால் சுமார் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம். அப்போது ஹாங்காங் இந்தியர்கள் பலரும் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு பிரிட்டிஷ் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார்கள். நான் மூன்று சிங்க இலச்சினையுடன் கூடிய எனது கடவுச்சீட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

முன்பெல்லாம் இந்தியாவில் கடவுச்சீட்டு வாங்குவதற்கு அதிகக் கால தாமதம் ஆகும். இடைத்தரகர்கள் இருப்பார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. நண்பர்கள் சென்னையில் ஒரு வாரத்துக்குள் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவோ புதிதாக வாங்கவோ முடிகிறது என்று சொல்கிறார்கள். எல்லாம் கணினிமயமாகிவிட்டது. மற்ற நாடுகளைப் போல இயந்திரங்கள் படிக்கக்கூடிய கடவுச்சீட்டுகள் வந்துவிட்டன. கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஹாங்காங் வந்து 48 வருடங்கள் ஆகிவிட்டன. தொழில் நிமித்தமும் சுற்றுலா நிமித்தமும் பல ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முன்னதாகத் திட்டமிட்டு விசா வாங்கிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு விமான நிலையங்களின் குடிவரவு அதிகாரிகளிடம் கருநீல நிறத்தில் மூன்று சிங்க இலச்சினையுடன் கூடிய எனது கடவுச்சீட்டைக் கொடுப்பேன். அதன் முதல் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் இருக்கும் – ‘இந்தக் கடவுச்சீட்டை வைத்திருப்பவரை எந்த இடையூறும் இல்லாமல் கடக்க அனுமதிக்கவும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவும் வேண்டுகிறேன்’. அந்த வேண்டுகோளின்கீழ் இந்தியக் குடியரசுத் தலைவர் என்று எழுதியிருக்கும்.

– செ. முஹம்மது யூனூஸ், ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: yoonus@netvigator.com

(கேட்டு எழுதியவர்: மு. இராமனாதன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: