வலசை போகும் சீனர்கள்

மு. இராமனாதன்

Published in The Hindu-Tamil, 19 February 2015

நகர்மயமாதலையும் புலம்பெயர்தலையும் சீனர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

இன்று சீனப் புத்தாண்டு தினம். சீனர்களின் முக்கியமான பண்டிகை இதுதான். நவம்பரில் தொடங்கும் உறைய வைக்கும் குளிர் மார்ச் மாதத்தில் முடியும். வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் கொண்டாட்டமாகவும் இது அமையும். மனைவி-மக்கள்-பெற்றோர்-உறவினர்களுடன் ஒன்றுகூடி, வட்ட வடிவ மேசையைச் சுற்றி அமர்ந்து விருந்துண்பது கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் பண்டிகைக்காக நகரங்களில் பணியாற்றும் சுமார் 25 கோடித் தொழிலாளர்கள் ரயில்களிலும் பேருந்துகளிலும் படகுகளிலும் மாறி மாறிப் பயணம் செய்து, தொலைதூரங்களில் உள்ள கிராமங்களை வந்தடைவார்கள். பண்டிகைக் காலம் முடிந்ததும் மீண்டும் நகரங்களுக்குத் திரும்புவார்கள்.

இந்த யாத்திரைக் காலம் பிப்ரவரி 4 முதல் மார்ச் 15 வரை 40 நாட்கள் நீளும். இந்தக் கால கட்டத்தில் இவ்வாண்டு 280 கோடிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று சீன அரசின் தேசிய வளர்ச்சித் துறை கணித்திருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 கோடி அதிகம். 240 கோடிப் பயணங்கள் சாலையிலும், 30 கோடி ரயிலிலும், 5 கோடி நதியிலும், 5 கோடி ஆகாயத்திலும் அமையும். சாலைகளும் ரயில் தடங்களும் புனரமைக்கப்படுகின்றன, பொதுப் போக்குவரத்து அதிகரிக்கப்படுகிறது, வாகனங்கள் பகலிரவாக மக்களைச் சுமந்தபடி விரைகின்றன. பருவ காலங்களை ஒட்டிப் பறவைகள் புலம் பெயர்வதை ‘வலசை போவது’ என்பார்கள். இங்கே கோடிக் கணக்கான மக்கள் குறிப்பிட்ட கால அளவில் வலசை போகிறார்கள். ஆனால், இந்த வலசை சீனா நகர்மயமாகி வருவதன் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.

தடைபோடும் ஹுக்கு

உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் தொழிற்சாலைகளை சீன நகரங்களில் நிர்மாணித்திருக்கின்றன. அவற்றை நோக்கிக் கிராமங் களிலிருந்து ஆண்களும் பெண்களும் சாரிசாரியாக வருகிறார்கள். தொழிற்சாலைகளிலும், கட்டிடப் பணித்தலங்களிலும், உணவகங்களிலும், அங்காடி களிலும் பணியாற்றுகிறார்கள். பெய்ஜிங்கில் மட்டும் 65 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்களின் உழைப்புதான் சீனாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணி. ஆனால், இவர்களால் நகரவாசிகளாக முடிவதில்லை. காரணம், சீனாவின் ஹுக்கு முறை. ஹுக்கு என்பது குடும்ப அட்டை போன்றது. உள்நாட்டுக் கடவுச்சீட்டு என்று சிலர் சொல்கிறார்கள். இது ஒரு முக்கியமான ஆவணம். உடமையாளரின் ஊராட்சி இதை வழங்கும்.

கிராமத்து ஹுக்குவை நகரத்து ஹுக்குவாக மாற்றுவது சுலபமில்லை. நகரத்து ஹுக்கு இல்லையென்றால் கல்வி, மருத்துவம், வீட்டுவசதி, ஓய்வூதியம் முதலான அரசு வழங்கும் சலுகைகள் எதையும் நகரத்தில் பெற முடியாது. ஆகவே, கிராமங்களிலிருந்து வருபவர்கள் தொழிற்சாலைகள் கட்டியிருக்கும் பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடத்தில் (டார்மிட்டரி) தங்கிக்கொள்வார்கள். அவர்களது பிள்ளைகளும் பெற்றோர்களும் கிராமங் களில் வசிப்பார்கள். இவர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம், சமயங்களில் 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள், சமயங்களில் ஏழு நாட்கள், வருடத்தில் 11 மாதங்கள் உழைப்பார்கள். சேமிப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு புத்தாண்டு விடுமுறையின்போது தத்தமது கிராமங்களுக்கு வலசை போவார்கள். ஒரு மாத கால விடுமுறை கழிந்ததும் நகரங்களுக்குத் திரும்புவார்கள்.

சீனாவின் 5.8 கோடிக் குழந்தைகள், அதாவது சீனக் குழந்தைகளில் நான்கில் ஒன்று, புலம் பெயர்ந்து நகரங்களில் வாழும் பெற்றோருக்குப் பிறந்தவை, கிராமங்களில் தாத்தா-பாட்டிகளின் பராமரிப்பில் வளர்பவை. இது சீனா நகர்மயமாகி வருவதன் கவலை தரும் ஒரு அம்சம் என்கிறார் சமூக ஆர்வலர் ஹூ ஷூலாய். அவரைப் போலவே பலரும் இதைச் சீர்ப்படுத்த வேண்டும் என்கின்றனர்.

மைய அரசு நகரங்களுக்குப் புலம்பெயர்ந்தவர் களுக்குப் படிப்படியாக நகர ஹுக்கு வழங்க வேண்டும் என்று சொல்லிவருகிறது. ஆனால், இவற்றை வழங்கும் அதிகாரமுள்ள மாநில அரசுகளும் நகராட்சிகளும் தயங்குகின்றன. தண்ணீர், மின்சாரம், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வீடுகள், கடைகள் முதலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிட்டு, அதற்கேற்ப நகர ஹுக்குவை வழங்குவோம் என்று அவை சொல்லிவருகின்றன.

சேரிகள் இல்லாத சீனா

சீனா அதிவேகமாக நகர்மயமாகி வருகிறபோதும் அதன் நகரங்களில் இந்தியாவைப் போலவோ பிரேசிலைப் போலவோ சேரிகள் இல்லை என்று சமீபத்தில் ‘தி எகானமிஸ்ட்’ எழுதியிருந்தது. அதே வேளையில், சீனாவுக்குள் ஹுக்கு முறையால் சமன்பாடற்ற நிலை இருப்பதையும் இதழ் சுட்டிக்காட்டியது.

1990-களில் சீனாவின் நகரங்களில் 30%-க்கும் குறைவான மக்களே வசித்தார்கள். இப்போது 54% பேர் நகரவாசிகள். இதில் 36% மக்களுக்கே நகர ஹுக்கு இருக்கிறது. மீதமுள்ள 18% பேர், அதாவது 25 கோடி மக்கள், கிராம ஹுக்குவுடன் நகரங்களில் பணி யாற்றுகிறார்கள். 2020-ல் நகரவாசிகளின் எண்ணிக்கை 60% ஆகிவிடும். ஆனால், அதற்குள் புதிதாக 10 கோடி மக்களுக்கு நகர ஹுக்கு வழங்கிவிட வேண்டும் என்பது அரசின் இப்போதைய திட்டம். அப்படி வழங்கிய பிறகும் 22 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நகர ஹுக்கு இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இதே திட்டப்படி ஹுக்கு வழங்க மேலும் 10 ஆண்டுகள் ஆகலாம்.

இவையெல்லாம் நடந்தால், சீனாவில் அது மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஹுக்கு வழங்குவதற்கேற்ப நகரங்களின் உள்கட்டமைப்பு வளரும். தங்கள் ஊதியத்தின் பெரும்பகுதியைச் சேமிக்கும் கிராமத்தவர்கள், தங்களுக்கு நகரங்களில் குடும்பத்தாருடன் வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கும்போது அதிகமாகச் செலவழிக்க முன் வருவார்கள். உற்பத்தி செய்யப்படுகிற பொருட்கள் மிகுதியும் ஏற்றுமதி செய்யப்படுகிற நிலை மாறி, அவை உள்நாட்டுச் சந்தையிலும் சகாய விலைக்குக் கிடைக்கும். இது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் கூடவே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

இந்தியாவுக்கு பாடம்

சீனா தொழில்மயமான வரலாற்றில் இந்தியாவுக்குப் பாடங்கள் இருக்கின்றன. 1951-ல் இந்தியாவில் 17% இருந்த நகரவாசிகளின் எண்ணிக்கை 2010-ல் 30%-ஐத் தாண்டியது.

2030-ல் இது 40% ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) திட்டம் தேசத்தைத் தொழில் மயமாக்கும் நோக்கம் கொண்டது. அதற்கான மனிதவளம் இந்தியாவிடம் இருக்கிறது. தொழில் வளர்ச்சி யோடு நகரங்களின் உள்கட்டமைப்பும் வளர வேண்டும். புலம்பெயரும் தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும் வகை செய்யப்பட வேண்டும்.

சீனா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு நகர ஹுக்கு வழங்குவது என்ற சுயநிர்ணய இலக்கை சீனா அடைந்துவிட்டால், அது சீனாவுக்குப் மிகப் பெரும் பாய்ச்சலாக அமையும். அப்போது கிராமத் திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, நகரங்கள் பிழைப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல் வாழ்வதற்கான இடமாகவும் மாறும். அப்போது பலரும் மனைவி-மக்கள்-பெற்றோருடன் புத்தாண்டை நகரங்களிலேயே கொண்டாடுவார்கள். சீனர்கள் வலசை போவதும் குறையும்.

மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலின் தொகுப்பாசிரியர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: