மு. இராமனாதன்
Published in The Hindu Tamil, 1 April 2015
நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்த துடியான இளம்பெண் எனது ஹாங்காங் அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்தார். “இந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? முகவரியையும் மாற்றிவிடலாமே” என்றார். நான் சொல்லச்சொல்ல முகவரியைக் கணினியில் உள்ளிட்டார்.
தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் முகவரியையும் சரிபார்த்துக்கொண்டார். மேசையின் மீதிருந்த கண்ணாடித் தகட்டில் பிரத்யேகப் பேனாவால் கையொப்பமிடச் சொன்னார். அது கணினியில் பதிவாகியது. உடனே, புதிய நூலக அட்டையை வழங்கினார். ஒரு தேநீர் குடிக்கிற அவகாசத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
நூலகம் எப்போதும் எனக்கு அணுக்கமான இடமாக இருந்துவந்திருக்கிறது. நான் முதன்முதலில் உறுப்பினரானது காரைக்குடி பொது நூலகத்தில். 70-களில் மாணவனான என்னைக் குறுக்குக் கேள்விகள் கேட்காமல் சேர்த்துக்கொண்டார் அந்த நூலகர். வைப்புத் தொகை: மூன்று ரூபாய். ‘ராமனாதபுர மாவட்ட நூலக ஆணைக்குழு, கிளை நூலகம்’ என்ற மங்கலான நீலப் பெயர்ப் பலகை மாட்டியிருக்கும். முதல் தளத்துக்குக் குறுகலான படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் அந்த நூலகத்தில்தான் எடுத்துவந்து படித்தேன்.
வல்லவரையன் வந்தியத்தேவனோடு புரவியில் ஏறி, காற்றினுங் கடுகி விரைந்த காலமது. நான் வசித்த ஊர்கள் மாறிக்கொண்டே இருந்தன. மணியன், பாலகுமாரன், சுஜாதா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று என் ரசனையும் மாறிக்கொண்டே இருந்தது. அதற்கேற்ப நூலகங்களும் தீனி போட்டுக்கொண்டே இருந்தன. எர்ணாகுளத்தில் வேலை பார்த்தேன். அங்குள்ள நூலகத்தில் தமிழ்ப் பிரிவு இருந்தது. அப்போது ஆளுநராக இருந்த பா. ராமச்சந்திரன் முயற்சியால் உருவானது. இப்போதும் யாரேனும் திலீப் குமாரின் பப்லிப் பாட்டியைப் பற்றியோ நீல. பத்மநாபனின் அனந்தன் நாயரைப் பற்றியோ பேசினால், எனக்கு எர்ணாகுளம் கான்வென்ட் சாலைக் கட்டிடம் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் புத்தகங்களின் காட்சி தெரியும்.
ஹாங்காங் நூலகங்கள்
ஹாங்காங் நூலகங்கள் என் வாசிப்பு அனுபவத்தை வேறு தளத்துக்கு இட்டுச்சென்றன. பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் சென்னைப் பெருநகரத்தோடு ஒப்பிடத் தக்க ஹாங்காங்கில் 79 நூலகங்கள் உள்ளன. நூலகங்களில் பதிவுபெற்ற உறுப்பினர்கள் 41 லட்சம் (மக்கள்தொகையில் 57%). எல்லா நூலகங்களிலுமாக 1 கோடியே 14 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒலிப்புத்தகங்கள், ஒளிநாடாக்கள், சஞ்சிகைகள், நுண் படங்கள், குறுவட்டுகள், வரைபடங்கள் முதலான வற்றின் எண்ணிக்கை 17.5 லட்சம். கடந்த ஆண்டில் மக்கள் 5.5 கோடித் தடவை புத்தகங்களை இரவல் பெற்றிருக்கிறார்கள்.
ஒருவர் 5 புத்தகங்கள் எடுக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால், நேரிலோ இணையம் வழியாகவோ நீட்டித்துக்கொள்ளலாம் – நான்கு முறை. நகரின் எந்த நூலகத்திலும் புத்தகம் எடுக்கலாம்; எந்த நூலகத்திலும் திருப்பிக் கொடுக்கலாம். நூலகங்கள் காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை நூலக வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட்டுவிடலாம். முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நூலகப் பெட்டி இருக்கும்.
புத்தகங்களின் அட்டவணையை இணையத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு நூலும் எத்தனை பிரதிகள் உள்ளன, எந்தெந்த நூலகங்களில் உள்ளன, இரவல் போயிருக்கிறதா, அலமாரியில் இருக்கிறதா போன்ற விவரங்களும் காணக் கிடைக்கும். மேலும், உங்களுக்கு வேண்டிய நூலை இணையத்திலேயே முன்பதிவு செய்யலாம். எந்த நூல்நிலையத்தில் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வந்ததும் மின்னஞ்சல் வரும். இரண்டு வாரங்களுக்குள் போய் வாங்கிக்கொள்ளலாம். நான் இந்தியாவில் தவறவிட்ட பொக்கிஷங்களான லூயி பிஷரின் ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’, ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’, ஜார்ஜ் ஆர்வெலின் ‘விலங்குப் பண்ணை’ போன்ற நூல்களை அப்படித்தான் வாங்கிப் படித்தேன்.
எல்லா நூலகங்களிலும் சிறுவர் பகுதி இருக்கும். தடிமனான தரை விரிப்புகள், குட்டை நாற்காலிகள், விலங்குகள் – பறவைகளின் சிற்பங்கள் எனக் கற்பனை வளத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். எல்லா நூலகங்களிலுமாக 1,800 கணினிகள் உள்ளன. கணினிகள் தனித்தனி அடைப்புகளில் இருக்கும். சொந்தக் கணினியையும் பயன்படுத்தலாம். வை-ஃபை சேவை இலவசம். சொந்தப் புத்தகங்களைக் கொண்டுவந்து படிப்பதற்கான அறைகளும் இருக்கின்றன. மிகுதியும் மாணவர்கள் பயன்படுத்துவார்கள். நூலகங்கள், ஊராட்சிகளுடன் இணைந்து வாசிப்பரங்கங்கள் நடத்தும். குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்வுகளும் உண்டு. கடந்த ஆண்டில் 3,400 வாசிப்புகள் நடந்தன. எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் விமர்சகர்களும் பங்கேற்பார்கள். கடந்த வருடம் நிதிநிலை அறிக்கையில் நூலகங்களுக்கு 77.62 கோடி ஹாங்காங் டாலர் (ரூ. 630 கோடி) ஒதுக்கப்பட்டது.
ஹாங்காங் மக்களின் புத்தகக் காதலையும் நூலகங் களின் செல்வாக்கையும் அறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 450 சீன எழுத்தாளர்கள் கூடி அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்கள். “நூலகங்களில் புத்தகங்கள் சுற்றுக்குப் போவதையொட்டி அதன் ஆசிரியர்களுக்குக் காப்புரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.” எழுத்தாளர்களின் கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை; ஆனால், பொதுத்தளத்தில் இதற்குப் பரவலான ஆதரவு இருக்கிறது.
இத்தனைக்கும் ஹாங்காங்குக்கு நெடிய நூலக வரலாறெல்லாம் இல்லை. முதல் நவீன நூலகம் 1962-ல் தான் தொடங்கப்பட்டது. நகரின் கல்விக் கோயிலாகக் கருதப்படும் மைய நூலகம், 2001-ல் தொடங்கப்பட்டது. 3.5 லட்சம் சதுர அடிப் பரப்பில் 12 தளங்களில் அமைந்திருக்கிறது . பொம்மை நூலகம், சிறார் – பதின் பருவத்தினர் – பெரியோருக்கான தனித்தனிப் பகுதிகள், வரைபடங்கள், பல்லூடகக் கருவிகள், காணும் கலை, இசை, அபூர்வப் புத்தகங்கள் என்றும் தனித்தனிப் பிரிவுகள் உண்டு. மேலும், உணவகம், கண்காட்சி அரங்கு, கூட்ட அரங்கு போன்றவையும் உண்டு.
தமிழக நூலகங்கள்
தமிழகத்தில் 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள், ஆக 4,042 நூலகங்கள் உள்ளன.
இவை தவிர, சென்னையில் கன்னிமாரா நூலகமும் அண்ணா நூலகமும் உள்ளன. தமிழகமெங்கும் மக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10% நூலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது; இது ரூ. 300 கோடி வரும் என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. நூலகங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும்.
நான் படித்த ‘பொன்னியின் செல்வன்’ ஆதிப் பதிப்புக்கு முன்னுரை எழுதியிருந்தவர் ராஜாஜி. சுருக்கமான அந்த முன்னுரை ஐந்து பாகங்களிலும் இடம்பெற்றிருக்கும். அதில் ராஜாஜி இப்படிச் சொல்லி யிருப்பார்: “காகிதமோ, அச்சோ, படமோ, பெயிண்ட்டோ எல்லாமே மிக நேர்த்தியாகச் சேர்த்து இந்த வெளியீட்டை உன்னத ஸ்தானத்தில் அமர்த்தியிருக்கின்றன. ஒரே ஒரு குறை, நம்முடைய ஆர்வங்கொண்ட படிப்பாளிகள் எல்லாருமே ஏழைகள். பெரும் தொகை போட்டுப் புஸ்தகத்தை வாங்க வெகு சிலரே முன்வருவார்கள். அதனால், நூல்நிலையங்களில் வைத்துப் பலரும் படிக்கச் செய்யலாம்.”
– மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்; தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com