தொடுதிரை அடிமைகள்

மு. இராமனாதன்

Published in The Hindu Tamil- June 17, 2015

உங்களிடம் தொடுதிரை மோகம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நோமோ-ஃபோபியா என்ற நோய் இருக்கிறது

ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னார்: “வள்ளுவர் தொட்டனைத்து ஊறும் அறிவு என்று சொல்கிறார். அந்தக் காலத்தில் அவர் தொடுதிரைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால், இன்று ஸ்மார்ட்போன் திரையைத் தொட்டால் தகவல்கள் ஊறிப் பெருகி வழிந்தோடுகிறதல்லவா? இப்படியாக வள்ளுவர் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக விளங்குகிறார்”.

அறிஞர் வள்ளுவரைப் பற்றிச் சொன்னதை விட்டுவிடலாம். ஆனால், நாளும் பொழுதும் பகலும் இரவும் உலகெங்கும் கோடிக் கணக்கானோர் குனிந்த தலையும் ஸ்மார்ட்போனுமாகத் திரிகின்றனரே. அந்த அளவுக்கு அவை அவசியமானவைதானா?

உங்களுக்கு நோமோ-ஃபோபியாவா?

கடந்த வாரம் ஹாங்காங்கில் ஒரு கருத்தரங்குக்குப் போயிருந்தேன். அலைபேசிகளை அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. வரவேற்பறையில் அவற்றை ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். பலரும் மருகி மருகி நின்றார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் அலைபேசிகளை ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள். இப்படி அலைபேசிகளை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள். தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், பலரும் அரங்கத்திலிருந்து பாய்ந்து வெளியேறித் தத்தமது அலைபேசியைக் கைப்பற்றி, அதன்மீது கவிழ்ந்துகொண்டார்கள். உலகெங்கும் இவர்களைப் போல் தொடுதிரை அடிமைகள் இருக்கிறார்கள்.

அலைபேசியை மறந்தாலோ, தொலைத்தாலோ, அதில் சார்ஜ் குறைந்தாலோ, தொடர்பு எல்லைக்கு வெளியே போக நேர்ந்தாலோ சிலர் பதற்றமடைவார்கள். வேறு சிலர் அடிக்கடி அனிச்சையாக ஸ்மார்ட்போனை எடுத்துத் தகவலோ அஞ்சலோ வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலர் அவசிய மில்லாமல் படம் எடுத்தபடி இருப்பார்கள். சிலர் தாங்கள் பதிவிட்ட நிலைத்தகவலுக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால் நொந்துபோவார்கள். சிலர் எதிரில் யாரேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே போனை எடுத்துப் பார்ப்பார்கள். இது ஒரு நோய். இதற்கு நோமோ ஃபோபியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நோ-மொபைல்-போன்-ஃபோபியா எனபதன் சுருக்கம் இது.

ஸ்மார்ட்போன் என் சேவகன்

இதை நோய் என்றால் ஸ்மார்ட்போன் அபிமானிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களில் பலருக்கும் பாரதிக்குச் சேவகனாய் வாய்த்த கண்ணனைப் போல் அமைந்திருக்கிறது ஸ்மார்ட்போன். அதில் படம் எடுக்கலாம், பாட்டுக் கேட்கலாம், ‘வீடியோ’வில் விளையாடலாம், நூற்றுக் கணக்கான பத்து இலக்க எண்களையும் முகவரிகளையும் சேமித்து வைக்கலாம். நாட்குறிப்பேடாக, கடிகாரமாக, கால்குலேட்டராகப் பயன்படுத்தலாம். இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உலவலாம். குறுந்தகவல்களையும் படங்களையும் காணொளிகளையும் பரிமாறிக்கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஜி.பி.எஸ். உதவியுடன் இருக்குமிடத்தை அலைபேசி கணித்துக்கொள்ளும். பிறகு, போக வேண்டிய இடத்தைப் பதிவுசெய்தால் அதை வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்.

இவற்றைத் தவிர, இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. தொலைபேசி என்பது காரணப் பெயர். தொலைவில் உள்ளவர்களோடு பேசும் கருவி. முன்னொரு காலத்தில் தொலைபேசிகள் அதற்குத்தான் பயன்பட்டன. இப்போதும் ஸ்மார்ட்போன்களை பேசுவதற்காகப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.

கட்டை விரலும் கழுத்தும் உஷார்

ஸ்மார்ட்போனால் பெற்றுவரும் நன்மைகளை எல்லாம் பேசி முடியாது என்கின்றனர் அதன் அபிமானிகள். நன்மைகள் அதிகம்தான், ஆனால் ஸ்மார்ட்போன்கள் அதிகமும் எதற்காகப் பயன்படுகின்றன? ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணிப்பின்படி: வாட்ஸ் அப்-35%, ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்கள் – 17%, தொலைபேசி-17%, மின்னஞ்சல்-12%, விடியோ விளையாட்டு- 10%, செய்தித்தாள்/புத்தகங்கள்- 5%. பயனர்கள் அதிக நேரத்தை எதில் செலவழிக்கிறார்கள் என்பதை இது போன்ற கணிப்புகள் புலப்படுத்தும்.

புகழ்பெற்ற ஆங்கில ராக் இசைப் பாடகர் ரோஜர் டால்ட்டிரி சொல்கிறார்: “தொடர்ச்சியான, பெரும்பாலும் பயனற்ற தகவல்கள் ஒருவரின் படைப்பூக்கத்தை மழுங்கடித்துவிடும். சும்மா இருக்கும்போதுதான் கலாபூர்வமான சிந்தனைகள் தோன்றும்”. சிந்தனையை மட்டுமல்ல, ஸ்மார்ட் போனின் அதீதப் பயன்பாடு உடலையும் பாதிக்கிறது.

ஹாங்காங்கில் பல பிள்ளைகள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கண் மருத்துவர் ஒருவர் அதற்கான காரணம் சொன்னார். “இந்தப் பிள்ளைகள் அதிகமும் தொலைக்காட்சியையும் கணினியையும்தான் பார்க்கிறார்கள். சிறிய திரை களைத் தொடர்ந்து அருகில் பார்ப்பதால் தூரக் காட்சிகளைப் பார்க்கும் சக்தி குறைகிறது. கண்ணாடி தேவைப்படுகிறது”. மருத்துவர் இப்படிச் சொன்னபோது, ஸ்மார்ட்போன்கள் கண்டறியப்படவில்லை. இப்போது கணினியும் தொலைக் காட்சியும் ஸ்மார்ட் போனுக்குள் இறங்கிவிட்டன. திரை சுருங்கிவிட்டது. கண்ணுறும் நேரமும் கூடிவிட்டது. இந்தக் குறுந்திரை மோகம் கண்களை மட்டுமல்ல, குனிந்த தலை நிமிராமல் நீண்ட நேரம் அலைபேசியைப் பயன் படுத்துவதால் கழுத்தையும் பாதிக்கிறது. மணிக்கட்டிலும் கட்டைவிரலிலும் உணர்வின்மை வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடுதிரைக்கு தடை

ஸ்மார்ட்போனின் பயன்பாடு இந்தியாவில் எப்படி இருக்கிறது? இந்தியாவில் 59 கோடிப் பேர் (மக்கள்தொகையில் 47%) அலைபேசி வைத்திருக் கிறார்கள். இதில் 21 கோடிப் பேர் (16.8%) ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். ஓர் ஒப்பீட்டுக்காக வேறு சில நாடுகளில் மக்கள்தொகையில் ஸ்மார்ட்போன் பயனர்களின் வீதம் வருமாறு: சிங்கப்பூர்- 72%, ஹாங்காங்- 63%, அமெரிக்கா-56%, சீனா-47%, இந்தோனேசியா- 14%.

இந்தியாவில் ஸ்மார்ட்போனுக்குப் பெரிய சந்தை இருப்பதாக அதன் உற்பத்தியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

`ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எஸ்.வி.ராமதாஸ் ஓரிடத்தில் சொல்லுவார்: “நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்”. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்தியர்களைப் பற்றி அப்படி நினைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் நான்கே ஆண்டுகளில், அதாவது 2019-ல் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கையை 65 கோடியாக (மக்கள்தொகையில் 52%) உயர்த்திவிடலாம் என்பது அவர்களது கணிப்பு.

ஸ்மார்ட்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது ஒருவரை அதற்கு அடிமையாக்கிவிடும். ஆனால், நமது சமூகம் அப்படிக் கருதுகிறதா என்று தெரியவில்லை. அறிஞர்கள் ஸ்மார்ட்போன் வழியாக அறிவு ததும்பி வழிவதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தொடுதிரை மோகம் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஹாங்காங் பத்திரிகையாளர் பீட்டர் காமெரர் சில யோசனைகள் சொல்கிறார்: “தலையணைக்கு அருகே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உறங்காதீர்கள். வாட்ஸ் அப்பையும் முகப் புத்தகத்தையும் படிக்கிற நேரத்தில், பகுதி நேரத்தைப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்மார்ட்போனை உங்கள் கைக்கெட்டாத தூரத்தில் வைத்துவிடுங்கள். சாப்பாட்டு மேசையில் தொடுதிரைக்குத் தடை விதியுங்கள்”.

விரல் இடுக்கில் தழுவும் உலகம்

முகப்புத்தகத்தில் ஒரு வெறுப்பாளரின் கருத்து ரையைப் படிக்கும்போதோ அல்லது அதற்கு எப்படி இன்னும் காழ்ப்போடு பதிலளிக்கலாம் என்று யோசிக்கும்போதோ நாம் தவறவிடுவது படுக்கையறை ஜன்னலின் மீது அமர்ந்து படபடவென்று சிறகடிக்கும் மணிப்புறாவாக இருக்கலாம். வாட்ஸ் அப்பில் ஒரு வறட்டுத்தனமான நகைச்சுவையை வாசிக்கும்போது நாம் கவனிக்காமல்போவது பேருந்து நிறுத்தத்தில் நட்பு பாராட்டும் நோக்கத்தில் நம்மைப் பார்த்த புதிய மனிதராக இருக்கலாம். ஸ்மார்ட்போனுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது; மனிதர்கள் இருக்கிறார்கள். தொடுதிரையில் நமது விரல்கள் மும்முரமாக விளையாடுகிறபோது விரலிடுக்கின் வழியே வாழ்க்கை கைநழுவிப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் நன்று. வாழ்க்கை அதனினும் நன்று.

சுயகட்டுப்பாட்டோடு ஸ்மார்ட்போனைப் பயன் படுத்தினால் அது பாரதிக்குச் சேவகனாய் வாய்த்த கண்ணனைப் போல் நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய், பார்வையில் சேவகனாய் விளங்கும்.

[மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: