மு. இராமனாதன்
Published in The Hindu-Tamil, January 18, 2016
பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமான பிளாஸ்டிக்கை ஒழிக்க மனமாற்றம் தேவை
வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலைப் படித்தவர்களால் அதில் வரும் மழை வர்ணனையை மறக்க முடியாது. பாளையங்கோட்டையில் உள்ள அந்தச் சின்னஞ்சிறு தெரு, மழையில் மேலும் பிரகாசம் எய்துமாம். ஆனால், சென்னையில் கொட்டிய மழையால் நகரம் பிரகாசம் எய்தவில்லை; மாறாக நகரத்தின் சில கசடுகள் மேலெழும்பி வந்தன. அப்படியான ஒன்றுதான் பிளாஸ்டிக் கழிவுகள். பல நீர்வழிப் பாதைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டன. வடிகால்கள், வாய்க்கால்கள், ஆறு எங்கிலும் பிளாஸ்டிக் பைகள் மிதந்தன. மாநகராட்சி ஊழியர்களும் தன்னார்வலர்களும் இரவு பகலாக அவற்றை அள்ளினார்கள்.
பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் பரவலானது 90-களில்தான். அதுவரை எல்லோரும் அங்காடிகளுக்குத் துணிப் பைகளையும் சாப்பாட்டுக் கடைகளுக்குப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்றார்கள். இப்போது கையை வீசிக்கொண்டு செல்கிறார்கள். வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளோடு காத்திருக்கிறார்கள்.
எப்படிப்பட்டது பிளாஸ்டிக்?
பிளாஸ்டிக் எடை குறைவானது, மலிவானது, நெகிழ்வானது, மடிக்கக்கூடியது, உடையாது, நீர் உட்புகாதது, கண்ணாடி போல் உள்ளேயிருப்பதை வெளிக்காட்டுவது. அதனால், கடந்த கால் நூற்றாண்டில் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. ஆனாலும் சூழலியலாளர்கள் ஏன் பிளாஸ்டிக்கை வெறுக்கிறார்கள்? மண்ணில் துளிர்த்தவை எல்லாம் மீண்டும் மண்ணில் மறைய வேண்டும். அதுவே இந்தப் பூமியின் இருப்புக்கு ஆதாரமானது. பிளாஸ்டிக் இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்படுவதில்லை. அது எளிதில் இந்த மண்ணிலிருந்து மறைவதில்லை.
அ.முத்துலிங்கம் ‘ஆயுள்’ என்றொரு சிறுகதை எழுதியி ருக்கிறார். நாயகன் தேசாந்திரி. ஊர் ஊராகச் சுற்றுபவன். அவனிடத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ள ஒரு பொதியும், ஒரு பிளாஸ்டிக் தண்ணீர்க் குடுவையும் இருக்கின்றன. ஒரு முறை இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் வசிக்கும் பள்ளத்தாக்குக்கு வருகிறான். அவனுடைய குடுவை அவர்களுக்கு விநோதமாக இருக்கிறது. அவன் அங்கே சில காலம் தங்குகிறான். ஒரு பழங்குடிப் பெண்ணை விரும்புகிறான். ஒரு மழைக் காலத்தில் பள்ளத்தாக்கிலிருந்து புறப்படுகிறான். மீண்டும் வருவதாக அவளிடம் சொல்கிறான். அவன் நினைவாக பிளாஸ்டிக் குடுவையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவள் காத்திருக்கிறாள். அவளைச் சுற்றி மரணங்கள் நிகழ்கின்றன. அவளும் ஒரு நாள் இறந்துபோகிறாள். அவளது குடிசையும் சிதிலமாகிறது. அந்த பிளாஸ்டிக் குடுவையும் காணாமல் போகிறது. ஆனால், அது அழிவதில்லை. அது மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகும்.
ஈக்கள் சராசரியாக 28 நாட்கள் வாழும். வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் ஒரு வருடம். தவளை இரண்டு வருடங்கள். நாய் 15 வருடங்கள். சிங்கம் 30 வருடங்கள். ஒட்டகச்சிவிங்கி 36 வருடங்கள். மனிதன் 65 வருடங்கள். கிளி 70 வருடங்கள். கடல் ஆமை 100 வருடங்கள். ஆனால், மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அழிந்துபட குறைந்தது 450 வருடங்களாகும். அத்தனை காலமும் அது பூமிக்குப் பாரமாய் இருக்கும்.
இப்போதே வடசென்னை கொடுங்கையூர் குப்பைமேடும் தென்சென்னைப் பெருங்குடிக் குப்பைமேடும் நிரம்பி வழிகின்றன. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி வைப்பதற்கு இன்னும் பல குப்பைமேடுகள் வேண்டிவரும்.
பிளாஸ்டிக் தீது
இயற்கையால் மீண்டும் இட்டு நிரப்ப முடியாத வளங்களான எண்ணெயிலிருந்தும் எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிறது பிளாஸ்டிக். இதில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப் படுகின்றன. அவை காற்றை, நீரை, மண்ணை மாசாக்குகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் வரக் காரணமாகின்றன. வீதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழைநீர்- கழிவுநீர் வடிகால்களை அடைத்துக்கொள்கின்றன. அவை நீரில் மிதந்தும் காற்றில் பறந்தும் கடலை அடைகின்றன. கடல்வாழ் உயிரினங் களில் பல பிளாஸ்டிக்கை விழுங்கி இறந்துபோகின்றன.
எத்தனை அபாயங்கள் இருந்தபோதும் பிளாஸ்டிக் வசீகரமானது. உலகளவில் ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது. சமீபகாலத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்துவரும் நகரங்களுள் ஒன்று ஹாங்காங்.
ஹாங்காங் உதாரணம்
ஹாங்காங்கிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்தது. தொடர்ந்த பிராச்சாரத்துக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல் ஒரு சட்டம் இயற்றினார்கள். காய்கறி-இறைச்சிக் கடைகளைத் தவிர, அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை வழங்க வேண்டும். இப்போது ஒரு லட்சம் அங்காடிகளுக்கும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து பைகளை எடுத்துவருகிறார்கள்.
கடந்த ஜூலை இரண்டாம் வாரம் ஹாங்காங் புத்தகக் காட்சி நடந்தது. 580 அரங்குகள். 10 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். துணிப் பைகளிலும், முதுகுப் பைகளிலும், சக்கரம் வைத்த பெட்டிகளிலும் புத்தகங்களை அள்ளிப்போனார்கள். பிளாஸ்டிக் என்ற பேச்சே இல்லை. இதற்குச் சட்டம் மட்டுமல்ல; மக்களின் விழிப்புணர்வும் காரணம்.
கன்னியாகுமரி உதாரணம்
இதெல்லாம் வெளிநாடுகளில்தான் சாத்தியம் என்று பெருமூச்சுடன் சிலர் கடந்து போகக்கூடும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியான விழிப்புணர்வைப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஊர் சுற்றிப் பார்க்கக் குடும்பத்துடன் போயிருந்தேன். மாவட்டத்தில் அப்போதே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தது.
சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலைப் போலவே அதன் தெப்பக்குளமும் அழகானது. குளக்கரையில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எனது மகள் குளிர்பானம் கேட்டாள். போத்தலைக் கொண்டுவந்த பரிசாரகர், சற்றுக் குனிந்து எங்களுக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் மகளிடம் சொன்னார்: ‘நாங்க ஸ்ட்ரா கொடுக்கறதில்லம்மா’. அது இங்கே சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. நாங்கள் கொடுப்பதில்லை என்றுதான் சொன்னார். மிகவும் பதவிசாகச் சொன்னார்.
அடுத்த நாள் கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய துணிக்கடை ஒன்றுக்குப் போனோம். என் மனைவி தனக்கு வேண்டிய நிறத்தைச் சுட்டுவதற்காகத் தனது கைப்பையிலிருந்து ஒரு துணியை எடுத்துக்காட்டினார். கடைக்காரர் பதறிவிட்டார். ஏன்? அது இரண்டு நாட்களுக்கு முன்னால் திருநெல்வேலியில் வாங்கியது. பிளாஸ்டிக் பையில் இருந்தது. ‘பரிசோதகர்கள் வந்தால் உங்கள் கடையில் பிளாஸ்டிக் எப்படி வந்தது என்று கேட்பார்கள். அம்மா, பையை உள்ளே வையுங்கள்’ என்றார். சட்டமும் மக்களின் விழிப்புணர்வும் பிளாஸ்டிக்கை ஒரு மாவட்டத்திலிருந்து புறந்தள்ளிக்கொண்டிருப்பதைக் கண்டோம். ஒரு மாவட்டத்தில் சாத்தியமாவது ஒரு மாநிலத்தில் சாத்தியமாகாதா என்ன?
இதுதான் நேரம்
‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல் இப்படி முடியும்: “மழையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது.” நாவலில் வருகிற சின்னஞ்சிறு தெருவில் பெய்த மழையைப் போன்றதல்ல சென்னையில் கொட்டிய மழை. என்றாலும் வண்ணநிலவன் சொல்வது போன்ற கடவுள் தன்மையை சென்னைவாசிகளிடம் பார்க்க முடிந்தது. அவர்கள் ஒரு பேரிடரைப் பரிவுடனும் பொறுப்புடனும் துணிவுடனும் எதிர்கொண்டார்கள். இதுதான் நேரம். பிளாஸ்டிக்கை மறுதலிப்பதில் சென்னை தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கலாம். பல நூறாண்டு காலம் பூமிக்குப் பாரமாய் இருக்கப்போகும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அடியோடு நிறுத்துவது உத்தமம். குறைவாகப் பயன்படுத்திக் குப்பைத் தொட்டிகளில் சேர்ப்பது மத்திமம். பேரிடருக்குப் பின்னும் பாடம் கற்க மறுப்பது அதமம்.
– மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com