ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி

மு. இராமனாதன்

Published in Solvanam, 26/01/2016

(ரேடியோ ஹாங்காங் சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நடத்திய நிகழ்ச்சியில் 26.9.15 அன்று ஒலிபரப்பானது)

சுதா ரவி: வணக்கம் நேயர்களே. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கிவரும் ரேடியோ ஹாங்காங் தமிழோசை நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவிதா மோகன்: வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் நடந்து வரும் தமிழ் வகுப்பைப் பற்றிப் பேசப் போகிறோம். கூடவே தமிழ் வகுப்பு மாணவர்கள் அவர்களுடைய பாடப்புத்தகத்திலிருந்து சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும் சொல்லப் போகிறார்கள். என் பெயர் கவிதா மோகன். ஹாங்காங் தமிழ் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளுள் நானும் ஒருத்தி. என்னுடன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சுதா ரவி.

சுதா ரவி: நான் சுதா ரவி. நானும் தமிழ் வகுப்பு ஆசிரியை. முதலில் ஹாங்காங் தமிழ் வகுப்பு ஏன் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்று  பார்க்கலாமா?

கவிதா மோகன்: நிச்சயமாக. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமானோர் தமது பாரம்பரியத்தின் வேர்கள் தாய்மொழியில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தமது பிள்ளைகள் தமிழைக் கற்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலும் இது நடைமுறைச் சாத்தியமாக இருப்பதில்லை. ஹாங்காங்கிலும் அப்படித்தான் இருந்தது-பத்தாண்டுகள் முன்பு வரை…ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமது பிள்ளைகள் தமிழ் படிக்க முடியவில்லையே என்ற பெற்றோர்களின் ஏக்கம் ஹாங்காங் ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ நடத்திவரும் தமிழ் வகுப்பால் கழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

சுதா ரவி: இப்போது 125 மாணவர்கள் சனிக்கிழமை தோறும் தமிழ் கற்கிறார்கள். மொத்தம் ஆறு பிரிவுகள். 12 ஆசிரியர்கள். இந்தத் தன்னார்வ ஆசிரியர்களில் பலரும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை; ஆனால் இளைய சமுதாயத்திற்குத் தாய் மொழியைக் கற்றுக் கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள். இதன் எட்டு அமைப்பாளர்களில் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால் தமிழின்பால் பற்றுடையவர்கள்.

கவிதா மோகன்: வெளிநாடுகளில் வாழும் சிறுவர்கள் அன்னியக் கலாச்சாரத்திற்கு இடையே வளருகிறார்கள்; ஆங்கிலம் வழியாகப் படிக்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை வீட்டில் பேசுவதுகூடக் குறைந்து விடுகிறது.

சுதா ரவி: ஹாங்காங் இந்திய  மாணவர்களும் அப்படித்தான். அவர்கள்  தத்தமது தாய்மொழியை  ஒரு  பாடமாகக்  கற்கிற வாய்ப்பு இங்கு  மிகக் குறைவுதான். இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நேப்பாளிகளும் அதிகமாகப் பயிலும்  எல்லிஸ்  கடோரி  என்கிற அரசுப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது.  குரு கோவிந்த சிங்  கல்வி  அறக்கட்டளை  சீக்கிய  மாணவர்களுக்குப்  பஞ்சாபி  கற்பிக்கிறது.  இவற்றைத் தவிர  ஹாங்காங்கில்  முறையாகக்  கற்பிக்கப்படும்  இந்திய  மொழிக் கல்வி  என்கிற பெருமை நம்முடைய தமிழ் வகுப்பையே சேரும்.

கவிதா மோகன்: இந்தத் தமிழ் வகுப்பு எப்போது எப்படித் தொடங்கப்பட்டது? இதில் என்னென்ன பிரச்சினைகள் இருந்தன? சொல்ல வருகிறார் அப்துல் அஜீஸ். தமிழ் வகுப்பின் அமைப்பாளர்களில் ஒருவர்.

அப்துல் அஜீஸ்: எல்லோருக்கும் வணக்கம். விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காகத்தான்  YIFCஐ- Young Indian Friends Clubஐ- ஆரம்பித்தோம். YIFC மூலமாக சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் வகுப்புகளை ஆரம்பித்தோம். 35 மாணவர்களோடும், வெங்கட், அலாவுதீன் ஆகிய இரண்டு ஆசிரியர்களோடும் வகுப்புகள் ஆரம்பமாகின.  சுங் கிங் மேன்ஷனில் இருந்த டாக்டர் ஜவஹர் அலியின் உணவகத்தில் சனிக்கிழமை மாலை தோறும் வகுப்புகள் நடந்தன.

இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது.  உணவகத்தில் அனைவரையும் அமர்த்துவதில் சிரமம் இருந்தது.  அப்போது Democratic Alliance for the Betterment of Hong Kong (DAB) உதவியால் நியூமேன் கத்தோலிக்கக் கல்லூரி வார இறுதியில் தமிழ் வகுப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது.  அது அக்டோபர் 2007.  அப்போது மாணவர்களின் எண்ணிக்கை 56ஆக இருந்தது.

ஒவ்வொரு  ஆண்டும் புது மெருகோடு ஆறு ஆண்டுகள் வகுப்புகள் தொடர்ந்தன. மார்ச் 2013-ல் நியூமேன் நிர்வாகம் எங்களை அழைத்தது.  மராமத்துப் பணி இருக்கிறது புதிய இடத்திற்கு மாறிக்  கொள்ளுங்கள் என்று சொன்னது.  பெரிய அதிர்ச்சிதான். மீண்டும் DAB மூலம் முயன்றோம்.

இந்த முறை TKDS Fong Siu Chuen பள்ளி கிடைத்தது. 124 மாணவர்களுடனும் 12 ஆசிரியர்களுடன் 2013-ல் புதிய பள்ளிக்கு மாறினோம். சில நடைமுறைச் சிக்கல்களால் நாமாகவே 2014-ன் துவக்கத்தில் இன்னொரு பள்ளிக்கு மாறினோம். Father Dolphe யின் உதவியால் Wah Yun கல்லூரி கிடைத்தது. இப்படியாக 11 ஆண்டுகளாக வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன; நன்றாக நடந்து வருகின்றன.

சுதா ரவி: நன்றி. அப்துல் அஜீஸ் அவர்களே. 11 ஆண்டு கால சரித்திரத்தை 11 வரிகளில் சொல்லிவிட்டீர்கள். இனி தமிழ் வகுப்பின் மாணவர்கள் சிலரைச் சந்திக்கப் போகிறோம். அவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திலிருந்து சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். முதலில் வருபவர் ஆயுஷ்.

வணக்கம், ஆயுஷ்,

ஆயூஷ்: வணக்கம், டீச்சர்.

சுதா ரவி: நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?

ஆயூஷ்: மகாகவி பாரதியார்.

சுதா ரவி: நல்ல ஆரம்பம். சொல்லுங்க.

ஆயுஷ்:  பாரதியார் ஒரு மகாகவி. அவர் தேசியக் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி. பாரதியார் நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

பாரதியார் பாடல்கள் மக்களிடம் வீர உணர்வையும் நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் ஏற்படுத்தின. அவர் கற்பனைக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை; மக்களிடமிருந்த மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

பாரதியார் இன்று உலகின் சிறந்த புலவர்களுடன் ஒப்பிடப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறார். அவரது புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று:

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு

என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

சின்னஞ்சிறு குருவி போலே

நீ திரிந்து பறந்து வா பாப்பா

வண்ண பறவைகளைக்கண்டு நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கவிதா மோகன்:  நன்றி ஆயுஷ்.  காலத்தால் அழியாதது பாப்பா பாட்டு.

அடுத்து வருவது செல்வி மர்ஜான். மர்ஜான், நீங்க யாரைப் பற்றிச் சொல்லப் போறீங்க?

மர்ஜான்: நான் பாரதிதாசனைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

கவிதா மோகன்: பாரதிக்கு அடுத்து பாரதிதாசன் வருவது நல்ல பொருத்தம்தான். சொல்லுங்க.

மர்ஜான்: பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியார் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாகத் தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

பாரதியாரைப் போலவே பாரதிதாசனும் சமூக நலனில் அக்கறை கொண்டவராய், தேசப் பற்று உடையவராய், மொழிப்பற்று மிகுந்தவராய் விளங்கினார். பாரதிதாசன் தம் கவிதைகளில் சீர்திருத்தத்தை வலியுறுத்தினார். இவருடைய பாடல்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. அதனால் இவருக்கு ‘புரட்சிக் கவிஞர்’ என்றும் ‘பாவேந்தர்’ என்றும்  பட்டங்கள் வழங்கப்பட்டன.

தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு வடிவம் தாங்கி,  தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் பாரதிதாசன்.

நாம் எல்லோரும் அறிந்த பாரதிதாசனின் பாடல் ஒன்று உண்டு:

தமிழுக்கும் அமுதென்று பேர்!

அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! –

இன்பத்தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

அவரது இன்னொரு பாடல்:

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

சுதா ரவி:  இன்னும் மூன்று மாணவர்கள் பேச இருக்கிறார்கள். அதற்கு முன்பாக, நேயர்களே, ஹாங்காங்கில் படிக்கும் இந்தப் பிள்ளைகள், தமிழை பள்ளிக்கூடத்தில் ஒரு பாடமாகப் படிக்காத இந்தப் பிள்ளைகள், எப்படி தமிழ்க் கவிஞர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று உங்களில் சிலருக்காவது ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும்.

கவிதா மோகன்: உண்மைதான். அதற்கு பதில் சொல்ல வருகிறார் காழி அலாவுதீன். தமிழ் வகுப்புகளின் தலைமை ஆசிரியர். அலாவுதீன் அவர்களே, தமிழ் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா?

அலாவுதீன்: சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். 2004ல் தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டபோது முறையான பாடநூல்கள் இல்லை. எல்லா மாணவர்களின் தரம், வயது ஒன்றுபோல் இருக்கவில்லை.  வயதிற்கு ஏற்றாற்போலும், அவர்களின் தமிழ் அறிவின் அடிப்படையிலும் வகுப்புகளை மூன்று  நிலைகளாகப் பிரித்து பாடங்கள் நடத்தினோம்.  மாணவர்கள் நோட்டுப் புத்தகங்களில் பாடங்களை எழுதிச் சென்றனர். பிற்பாடு தமிழ்நாட்டுப் பாடநூல்களின் ஒளிநகல்களைப் பயன்படுத்தினோம்

முறையான பாடத்திட்டத்திற்கான அவசியத்தை உணர்ந்தோம். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டங்கள் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்திற்கு இசைவாக இருந்தது. மேலும் ஹாங்காங்கில் பாடங்களும் பயிற்சிகளுமாகப் படிக்கிற மாணவர்களுக்கு ஏற்றாற் போலும் இருந்தது. இந்தப் பாடத்திட்டத்தில் எழுத்துத் திறனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எளிய இலக்கணப் பயிற்சிகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டோம்.  இதற்காகத் தனியார் பதிப்பகங்களின் இலக்கண நூல்களைப்  பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணிவரை  வகுப்புகள் நடக்கும். முதல் பருவம் :  செப்டம்பர் முதல் ஜனவரி வரை. இரண்டாம் பருவம் : பிப்ரவரி முதல் மே வரை. வகுப்புகள்  –1 முதல் 6 நிலைகள் வரை. ஒவ்வொரு பருவமும் குறைந்தபட்சம் 18 வகுப்புகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் எழுத்துத் தேர்வும் வாய்மொழித் தேர்வும் நடக்கின்றன.  இவை தவிர ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தபட்சம் 9 Dictation எனப்படும் கேட்டெழுத்துத் தேர்வுகள் நடக்கின்றன. மேலும் எல்லா வகுப்புகளின் முடிவில் வீட்டுப் பாடங்களும் உண்டு.

கவிதா மோகன்: நன்றி, அலாவுதீன் அவர்களே. நமது தமிழ் வகுப்பில் படிக்கும் மாணவர்களால் படிப்பதையும், கேட்பதையும் உள்வாங்கிக் கொண்டு எழுத முடிகிறது. அதற்கு நமது பாடத்திட்டம் ஒரு முக்கியமான காரணம்.

சுதா ரவி: ஆமாம், கவிதா மோகன். அடுத்ததாக மூன்று மாணவர்கள் மூன்று கவிஞர்களைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். இப்போது வருவது  காதர். நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லப் போறீங்க, காதர் ?

காதர்: ‘கவிமணி’ என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லப் போகிறேன்

சுதா ரவி: நல்லது, காதர் சொல்லுங்க.

காதர்: உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய ‘ருபாயியத்’ கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி.

உயிர்கள் மீது அன்பும், கருணையும், அடக்கமும், தெய்வபக்தியும், பெரியோர்கள் மீது மதிப்பும், குழந்தைகளின் மீது பரிவும், நாட்டு விடுதலை வேட்கையும், சாதிமத வேறுபாட்டின் மீது வெறுப்பும், இயற்கை அழகுகளில் ஈடுபாடும் கொண்டிருந்தவர் கவிமணி. அவருடைய பண்புகள் அவர் படைப்புகளில் நன்கு எதிரொலிக்கின்றன என்பதை அவர் கவிதைகளைப் படிக்கும்போது காணலாம்.

எடுத்துக்காட்டாக ஆறு தன்னைப் பற்றித் தானே பேசுவதாக அமைந்த எளிய பாடல் இது:

கல்லும் மலையும் குதித்து வந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்து வந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும் நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

ஆயிரம் காலால் நடந்து வந்தேன் – நன்செய்

அத்தனையும் சுற்றிப் பார்த்து வந்தேன்;

நேயமுறப் புன்செய்க் காட்டிலும் – அங்கங்கு

நீரை இறைத்து நெடுக வந்தேன்

மாங்கனி தேங்கனி வாரிவந்தேன் – நல்ல

வாச மலர்களும் அள்ளி வந்தேன்;

தீங்கரும் பாயிரம் தள்ளி வந்தேன் – மிகத்

தேனும் தினையுமே சேர்த்து வந்தேன்

கவிதா மோகன்: காதரின் குரலில் கவிமணியின் ஆறு ஓடி ஓடி வந்தது. அடுத்து வருபவர் ரஹீதா. நீங்க யாரைப் பற்றிப் பேசப் போறீங்க, ரஹீதா,?.

ரஹீதா: நான் பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றிப் பேசப் போகிறேன்.

கவிதா மோகன்: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை. சொல்லுங்க.

ரஹீதா: ஆமாம். ‘மக்கள் கவிஞர்’ என்று புகழப் பெற்ற பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர்.  இவருடைய பாடல்கள் கிராமிய மணம் மிகுந்தவை.

வாழ்க்கையில் இவர் செய்யாத தொழில்களில்லை. தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் எனப் பல தொழில்களைச்செய்தவர், பிறகு நாடக நடிகராக மாறி, இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.

காலத்தால் அழியாத இவரது திரைப் படப்பாடல்களுள் ஒன்று இது:

சின்னப் பயலே, சின்னப் பயலே

சேதி கேளடா – நா-

சொல்லப் போற வார்த்தையை நல்லா

எண்ணிப் பாரடா, நீ

எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அது தாண்டா வளர்ச்சி – உன்னை

ஆசையோடு ஈன்றவளுக்கு

அதுவே நீ தரும் மகிழ்ச்சி

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே

சுதா ரவி: எளிமையும் அறிவுரையும் நிரம்பிய அருமையான பாடலைக் கேட்டோம். அடுத்து வருபவர் அரவிந்த். நீங்க யாரைப் பற்றிச் பேசப் போகிறீர்கள்?.

அரவிந்த்: கண்ணதாசனைப் பற்றிப் பேசப் போகிறேன்.

சுதா ரவி: ஆகா, கவியரசு கண்ணதாசன், பேசுங்க.

அரவிந்த்: கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், மேலும் நாவல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் , பத்திரிகையாசிரியர் என்று பல் முகங்களுடன் விளங்கினார். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் ஆகியவை கண்ணதாசன் எழுதிய முக்கியமான புத்தகங்கள். அவரது பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவண்ணமிருக்கின்றன. அவற்றுள் ஒன்று இது:

உன்னை அறிந்தால் ..நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு

மாலைகள் விழவேண்டும் – ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

அவரது கவிதைச் சிறப்புக்கும் எளிமைக்கும் உதாரணமாக இன்னுமொரு பாடலைப் பார்க்கலாம்:

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,

மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா ?

அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

கவிதா மோகன்: எளிய மனிதர்களையும் கவிதையின்பால் ஈர்த்தவர் கண்ணதாசன். நன்றி அரவிந்த்.

சுதா ரவி: இன்றைய நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். எங்களது மாணவர்களின் தமிழை நீங்கள் கேட்டீர்கள்.

கவிதா மோகன்: 2004-ல் தொடங்கப்பட்ட தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது.  நீங்கள் இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது 12ஆம் ஆண்டின் வகுப்புகள் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. இதுவரை ஒரு சனிக்கிழமைகூட வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதில்லை.

சுதா ரவி: ஆள்பலமோ, பணபலமோ, பெரும் செல்வாக்கோ இல்லாத ஒரு சிறிய அமைப்பு அன்னிய நாட்டில் தாய் மொழியைப் பயிற்றுவித்து வருகிறது. இதற்குத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் ஆசிரியர்களும் அமைப்பாளர்களும் ஒரு காரணம். தமிழ் படித்தால் பொருளீட்ட முடியுமா என்று கேட்காமல் தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் ஒரு காரணம். சுயவிருப்போடும் ஆர்வத்தோடும் தமிழ் கற்கும் மாணவர்கள் முக்கியமான காரணம்.

கவிதா மோகன்: இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. இந்த நிகழ்ச்சியை எழுதித் தயாரித்தவர் தமிழ் வகுப்பின் ஆலோசகர் திரு. மு. இராமனாதன். அவருக்கு எங்கள் நன்றி.

சுதா ரவி: நேயர்களே உங்கள் அனைவருக்கும் YIFC ன் சார்பாக நன்றி. வணக்கம்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்க

(மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்; தமிழ் வகுப்புகளின் ஆலோசகர். தொடர்புக்கு : Mu.Ramanathan@gamil.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: