கட்டுரை
மு. இராமனாதன்

Published in Kalchuvadu, May 2020
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். “அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. அன்று எங்கள் தந்தை வேள் பாரி இருந்தார். பறம்புமலை எம்மிடம் இருந்தது. இன்று எங்கள் மலை எம்மிடம் இல்லை, எங்கள் தந்தையும் இல்லை.” புறநானூறு தெரிந்திருந்தால் ஹாங்காங் மக்களும் இந்தப் பாடலை இப்போது பாடியிருப்பார்கள். ஆனால், மூலப் பாடலைத் திருப்பிப் போட்டிருப்பார்கள். புறப்பாடலில் தொனிக்கும் அவலத்தைப் பெருமிதமாக மாற்றியிருப்பார்கள். ‘அற்றைத் திங்கள் சார்ஸ் வந்தது, அல்லலுற்றோம், பாடம் படித்தோம், இற்றைத் திங்கள் கோவிட் வந்தது, தடுத்து நிறுத்தினோம்,’ என்று பாடியிருப்பார்கள்.
அற்றைத் திங்கள்
ஆண்டு 2003. மார்ச் முதல் வாரம். குளிர் விலகவில்லை. அப்போதுதான் நாளிதழ்களில் ‘அசாதாரண நிமோனியா’ என்பது துண்டுச் செய்தியாய் நுழைந்தது. இன்னதென்று வகைப்படுத்த முடியாத காய்ச்சலை மருத்துவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். அந்த துண்டுச் செய்தி மார்ச் இரண்டாம் வாரத்தில் பத்திகளை விழுங்கி வளர்ந்தது. பொது மருத்துவமனை ஒன்றில் இந்த நிமோனியா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் தாதியர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நோய் தொற்றியது. நோயின் பெயர் சார்ஸ். கோவிட்-19ஐப் போன்றே சார்ஸும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.
2002 நவம்பர் மாதம் தென் சீன நகரமாகிய குவாங் டாங் நகரில் முதலில் விலங்குகளிலிருந்து மனிதருக்கும், பின் மனிதரிலிருந்து மனிதருக்கும் தொற்றியது சார்ஸ். ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை என்றுதான் ஆரம்பத்தில் சீனா சாதித்துக்கொண்டிருந்தது. பாதிப்பு தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2003 பிப்ரவரியில்தான் உலக சுகாதார அமைப்பிற்குத் தகவல் தெரிவித்தது. பாதிப்பின் வீரியத்தை வெளி உலகிற்குச் சொல்ல மேலும் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது.
சீனாவில் தொடங்கிய சார்ஸ் ஹாங்காங்கிற்கும் பெயர்ந்தது. சீனாவின் ஒரு மாநிலம்தான் ஹாங்காங். ஆனால் தன்னாட்சியுடன் இயங்கும் மாநிலம். ஹாங்காங்கும் ஆரம்பத்தில் அடக்கி வாசித்தது. எல்லாம் இயல்பாக இருக்கிறது என்பதான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது.
ஆனால் பிரச்சனையின் தீவிரம் விரைவில் புரிந்தது. இந்நோயின் சாம்பல்துகள் படிந்த அந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை அச்சுத்தாள்களில் கசிந்தது. சந்தேகமும் அச்சமும் மரணமும் பீதியும் புள்ளிவிவரக் கணக்குகளாக உலக நாக்குகளில் புரண்டன. அந்த நெருக்கடியிலும் ஹாங்காங்கின் அரசாங்கமும் நிர்வாக எந்திரமும் வல்லுநர்களும் மக்களும் நடந்து கொண்ட விதம்தான் அந்தக் குட்டித் தேசத்தின் போக்கை நிர்ணயித்தது.
அரசு எந்திரம் எந்தத் தயக்கமும் இன்றித் தெளிவான நடவடிக்கைகள் எடுத்தது. 2003 மார்ச் மூன்றாம் வாரத்தில், பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த ஹாங்காங் கல்வித் துறைச் செயலர், அதற்கு அடுத்த வாரமே அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டார். ஆரம்பத்தில் பெரிய அளவில் நோய் பரவ வாய்ப்பில்லை என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது சுகாதாரத் துறை. மார்ச் மூன்றாம் வாரத்தில் ‘அமாய் தோட்டம்’ என்கிற குடியிருப்பில் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 15 கட்டடங்கள்; ஒவ்வொன்றிலும் 33 தளங்கள்; தளத்திற்கு எட்டு வீடுகள். இந்தக் குடியிருப்பில் மட்டும் 321 பேர் பாதிக்கப்பட்டனர். ‘அமாய் தோட்ட’க் குடியிருப்பில் வசிப்பவர்களைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தி, ஊருக்கு வெளியே குடியமர்த்தியது அரசு.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வந்தது. விரைந்து விரைந்து அலுவலகம் சென்று, விரைந்து விரைந்து வீடு திரும்புகிற மக்களைக் கொண்ட ஹாங்காங்கில், நெடிதுயர்ந்த கட்டடங்களின் நடுவே சுழல்கிற காற்றில் பயம் கலந்தது. எழுபது லட்சம் மக்களின் வீட்டு முன்னறைகளில் தயக்கமும் கிலியும் வந்து உட்கார்ந்துகொண்டன. சுரங்க ரயிலில், பேருந்துகளில், நடை பாதைகளில், அங்காடிகளில் எதிர்ப்பட்ட எல்லோர் முகத்திலும் சந்தேகம் குடிகொண்டிருந்தது.

தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் முகக்கவசங்களுக்குமேல் சுழன்றன கண்கள். முகக்கவசம் ஹாங்காங்கின் ஓர் அங்கமாக மாறும் என்று அப்போது பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹாங்காங் பயன்படுத்தியது அறுவைச் சிகிச்சைக் கவசம். இது கொரோனா வைரஸ் நோயாளிகளும் மருத்துவர்களும் அணியும் என்-95 முகக்கவசத்திற்கு அடுத்த நிலையில் வைக்கத்தக்கது. துவைத்துப் பயன்படுத்தக்கூடிய துணிக்கவசத்தைவிட மேலானது. முகக்கவசம் அணிவது, தங்களைக் காத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, அது பிறருக்காகத் தாங்கள் செய்ய வேண்டிய கண்ணியமான நடவடிக்கையும் ஆகும் என்பது ஹாங்காங் மக்களின் கருத்து.
2003 ஏப்ரல் துவக்கத்தில் உலக சுகாதார அமைப்பு, சுற்றுலாப் பயணிகள் ஹாங்காங்கைத் தவிர்ப்பது நலம் என்று அறிவுரை வழங்கியது. சுற்றுலாவை நம்பியிருந்த விடுதிகளும் உணவகங்களும் கண்காட்சிகளும் அங்காடிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. என்றாலும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொண்டனர். தனிநபர் தூய்மையும் பொதுச் சுகாதாரமும் ஒருங்கே பேணப்பட்டன. விரல் இடுக்குகளில்கூடத் தங்கிவிடக்கூடிய சாதுரியமான வைரஸை எப்படிக் கழுவிக் களைவது என்பது இன்று உலகம் முழுமைக்கும் தெரியும். ஹாங்காங் மக்களுக்கு அன்றே தெரியும்.
அப்போது மருத்துவத் துறை இயக்குநராக இருந்தவர் டாக்டர் மார்கிரெட் சான். அவர் நாள்தோறும் செய்தியாளார்களைச் சந்தித்தார். உள்ளது உள்ளபடி தகவல்களைத் தந்துகொண்டிருந்தார். அவரது தலைமைப் பண்பும் வெளிப்படைத்தன்மையும் உள்ளூரில் நம்பிக்கையை வளர்த்தது. உலகெங்கும் கவனிக்கப்பட்டது. அதற்கு அவருக்கு வெகுமதியும் கிடைத்தது. 2006 முதல் 2017 வரை உலக சுகாதார அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சார்ஸ் காலத்தில் அவர் ஹாங்காங்கில் ஆற்றிய பணியே இந்த வையத் தலைமையை அவருக்குப் பெற்றுத் தந்தது.
2003 ஜூலை துவக்கத்தில் நோய் கட்டுக்குள் வந்துவிட்டது. அப்போது உலகெங்கும் 800 பேரின் உயிரை சார்ஸ் பறித்துக்கொண்டு போயிருந்தது. அதில் 300 பேர் ஹாங்காங் வாசிகள். நிலைமை சீரானதும் ஹாங்காங் அரசு ஓய்வெடுக்கவில்லை. காய்தல் உவத்தல் இன்றி ஒரு விசாரணை மேற்கொண்டது. அப்போது நட்சத்திரமாக மாறியிருந்த மார்கிரட் சானின் நடவடிக்கைகள் உட்பட எல்லாமும் மீள்பரிசோதனைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாயின.
சார்ஸ் கட்டுக்குள் வந்த பிறகும் இருமல், காய்ச்சல் என்று எது வந்தாலும் ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கினார்கள். 17 ஆண்டுகளாக இது தொடர்கிறது. அதன் பிறகு முகக்கவசம் ஹாங்காங்கில் ஒரு வீட்டு உபயோகப் பொருளாகிவிட்டது.
‘சுவாசிப்பதுகூட மரணத்திற்குக் கதவுதிறந்து விடுமோ’ என்று அஞ்சப்பட்ட அந்த அசாதாரண நிலைமையில், ஹாங்காங்கின் மருத்துவப் பணியாளர்கள் கடமையே கண்ணாக இருந்தார்கள். நோயின் வெப்ப அலைகள் விரைந்து பரவிக்கொண்டிருந்த காலத்திலும் தொடர்ந்து அந்த உலையின் மையத்தில் உழன்றுப் பணியாற்றினார்கள். முகமில்லா எதிரியாக நாசிகளில் நுழைந்து நுரையீரலைத் தின்ற சார்ஸால் பாதிக்கப்பட்டோரில் நான்கில் ஒருவர் மருத்துவப் பணியாளர்களாக இருந்தார்கள். முகமூடிகள், கையுறைகள், அங்கிகள், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் ஆரம்பத்தில் போதிய அளவில் இல்லாதிருந்தது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. தாங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் பணிகளைத் தொடர்ந்தார்கள். நோயாளியின் சுவாசக் குழலில் குழாயைச் செலுத்துகிற intubation என்கிற சிகிச்சையளித்த பணியாளர்களில் சரிபாதிப்பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். ஆயின் அப்படியான சிகிச்சை அளிக்கப்படுவது நிறுத்தப்படவேயில்லை. மகப்பேறு விடுப்பில் இருந்த தாதியர்கூடப் பணிக்கு அழைக்கப்பட்டதும், அவர்களும் அந்தச் சூழலிலும் வேலைக்குத் திரும்பியதும் நடந்தது.
மருத்துவப் பணியாளர்கள் சமூகத்தில் எப்படியான முன்மாதிரி ஆயினர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு யூன் கின் க்ஷிங் என்கிற இளைஞன். அவனது நேர்காணல் அப்போது பத்திரிகைகளில் வந்தது. யூன், சார்ஸினால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து விட்டான். ஆனால் நோயின் கொடுங்கரங்களுக்கு அவனது பெற்றோர் இருவரும் பலியானார்கள். மரணப்படுக்கையிலும் பெற்றோருக்கு அருகிருக்க அவன் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது இறுதிச் சடங்கிலும் அவனால் கலந்துகொள்ள முடியவில்லை. சார்ஸில் மரணமடைந்தவர்களின் சடலங்களை அரசாங்கமே எரியூட்டியது. இந்தத் துக்கத்திற்கு அவனது எதிர்வினை எப்படி இருந்தது? “மருத்துவமனையில் மருத்துவர்களும் தாதியர்களும் ஆற்றிய தொண்டை என்னால் மறக்க முடியாது. நான் சிகிச்சை பெற்றுவந்த சார்ஸ் வார்டில் பணிபுரியும் ஒரு முதிய துப்புரவுத்தொழிலாளி எனக்கு ஆதர்சமாகி இருக்கிறாள். நான் அங்கு இருந்தபோது அந்தத் தொழிலாளி ‘தொடர்ந்து வார்டுக்கு வந்து வேலை செய்யறது மூலம்தான், என்கூட வேலை செய்றவங்களுக்கு என்னாலானதைச் செய்யமுடியும்’ என்று சொன்னாள்.” பெற்றோரை இழந்து, நோயின் கொடுமையை அனுபவித்துத் தப்பி வெளிவந்தபின் அளித்த நேர்காணலை அந்த இளைஞன் இப்படி முடித்திருந்தான்: நான் மருத்துவமனையில் பணியாற்ற விழைகிறேன். சார்ஸ் நோயாளிகளுக்கு என்னால் செய்யக்கூடிய உதவி இதுதான். மருத்துவப் பணியாளர்களின் தியாகத்திற்கு மரியாதை இருந்தது.
இற்றைத் திங்கள்
2019இன் கடைசி நாளன்று கொரோனா வைரஸ் வூகான் நகரில் உலவுவதைச் சீனா உலகுக்குத் தெரிவித்தது. அன்றைய தினமே ஹாங்காங் எல்லைகளில் வெப்பமானிப் பரிசோதனை தொடங்கிவிட்டது. நாளொன்றுக்குச் சராசரியாக 3 லட்சம் பேர் நீர் வழியாகவும், ஆகாய மார்க்கமாகவும், சாலைகள், ரயில்கள் ஊடாகவும் ஹாங்காங்- சீன எல்லைகளைக் கடப்பார்கள். இதற்காக 14 வாயில்கள் உள்ளன. அவற்றில் 11 வாயில்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன. எஞ்சிய வாயில் வழியாகக் கடப்பவர்களும் 14 நாட்கள் சுயமாகத் தனிமை வாசம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்கள் கையில் ஒரு மின்னணுப்பட்டை கட்டப் பட்டது. இது அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் காட்டிக் கொடுத்து விடும்.

கோவிட்-19 சீனாவில் தலைகாட்டத் தொடங்கிய ஜனவரி மாதம் முதற்கொண்டே ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கிவிட்டார்கள். உலக சுகாதார அமைப்பும் மேற்கு நாடுகளும் அப்போது முகக்கவசம் அணிய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தன. இந்தியாவின் நிலைப்பாடும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதைப்பற்றி ஹாங்காங் கவலைப்படவில்லை. ஹாங்காங் அப்போதும் முகக்கவசம் அணிந்தது; இப்போதும் அணிந்துவருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என்று சொல்லிவந்த உலக சுகாதார அமைப்பு, ஏப்ரல் முதல் வாரத்தில் தனது கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. ஏப்ரல் 6ஆம் தேதி அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை முகக்கவசத்திற்கு ஆதரவாக இருந்தது. இப்போது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் எல்லாப் பொது இடங்களிலும் முகக்கவசம் அணியச்சொல்லி மக்களைஅறிவுறுத்துகின்றன.
ஹாங்காங் பள்ளிகள் ஜனவரி மூன்றாம் வாரத்திலேயே மூடப்பட்டன. இணையம் வழியாகப் பாடங்களும் பயிற்சிகளும் நடந்து வருகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அரசு ஊழியர்களே முன்னுதாரணமாயினர். தனியார் நிறுவனங்கள் அவற்றைப் பின்பற்றின. ஊரடங்கு என்பது உத்தரவாகப் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் ஊர் அடங்கியிருந்தது. அங்காடிகளிலும் தெருக்களிலும் கூட்டமில்லை.
இந்த முறை மருத்துவப் பணியாளர்கள் போதிய பாதுகாப்புப் படையணிகளோடு களத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அற்றைத் திங்களில் கற்ற கல்வி இற்றைத் திங்களில் உதவியது.
ஒன்பது மாதம் நீண்ட போரட்டங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கு வேண்டாத விருந்தாளியாய் வந்திருக்கிறது கோவிட்-19. மக்களின் வாழ்நிலை தாழ்ந்திருக்கிறது. அதைச் சீர்படுத்த வயதுவந்த ஒவ்வொரு ஹாங்காங் குடிமகனுக்கும் 10000 ஹாங்காங் டாலர் (ரூ. 98,740) வழங்குகிறது அரசு. சிறு தொழில்களுக்கு ஊக்கத் தொகை, மக்களுக்கு வரிச்சலுகை, வீட்டு வசதி வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாடகை ரத்து என்று பல நலத்திட்டங்களும் அமலாகின்றன. அரசு அறிவித்திருக்கும் நலத்திட்டங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை நெருங்குகிறது.
இப்போதும் விமான நிலையம் மூடப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாங்காங் குடிமக்களில் சிலர் வைரஸையும் சுமந்து வருகின்றனர். அவர்கள் தன்னிமைப்படுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் 18 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1023, மரணங்கள் 4 மட்டுமே. நாளாந்தம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது.
ஹாங்காங் மக்கள் இற்றைத் திங்களில் ஒரு பலம் வாய்ந்த எதிரியை நேர்கொண்டு போராடியிருக்கிறார்கள். என்றாலும் யுத்தம் முடியவில்லை. அதுவரை அவர்கள் கவசங்களைக் களையமாட்டார்கள். பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. அற்றைத் திங்களிலும் அது ஒரு பெரும் வீழ்ச்சியைக் கண்டது. அதை நிமிர்த்துகிற வலுவும் அவர்களுக்கு இருந்தது. அந்த அனுபவம் இற்றைத் திங்களில் அவர்களுக்குக் கைகொடுக்கும்.
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com
Great awareness teaching for the public.Everyone should accept the reality.
LikeLike