கட்டுரை
மு. இராமனாதன்

Published in Kalchuvadu, June 2020
பலரும் சொல்லி வருகிறார்கள்: இந்த வைரஸ் பேதம் பார்ப்பதில்லை. உயர்ந்தவன் x தாழ்ந்தவன், பெரியவன்x சிறியவன், நல்லவன் x கெட்டவன், உள்ளவன் x இல்லாதவன் எல்லோரும் அதற்கு ஒன்றுதான். உண்மைதான்போல. மார்ச் 27 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஏப்ரல் 6 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு வாரம் அவர் தங்கவேண்டி வந்தது. மார்ச் 25 அன்று தனிமைப்படுத்தப்பட்டவர் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் சார்லஸ். மார்ச் 23 அன்று அமெரிக்க
செனட்டர்கள் மிட் ரோம்னியும் மைக் லீயும்; மார்ச் 22, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கலும், அதற்கு ஒரு மாதம் முன்பே ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகரும் தனிமைப் படுத்தப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட சர்வதேசப் பிரபலங்களின் பட்டியல் அமைச்சர்களாலும் நீதியரசர்களாலும் தூதுவர்களாலும் மேயர்களாலும் நிரம்பியிருக்கிறது. ஆகவே வைரஸின் முன் அனைவரும் சமம் எனும் கூற்று சரியாகத்தானே இருக்க வேண்டும்?
இந்த இடத்தில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ (1945) நாவல் நினைவுக்கு வருகிறது. அது ஓர் உருவகக் கதை. ஒரு பண்ணையில் உள்ள விலங்குகள் தங்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் எஜமானர்களாகிய மனிதர்களை எதிர்த்துப் போராடுகின்றன. அவர்களைப் பண்ணையை விட்டுத் துரத்திவிடுகின்றன. தாங்களே பண்ணையை நிர்வகிக்கின்றன. அப்படியாக விலங்குப் பண்ணை உருவாகிறது. ‘எல்லா விலங்குகளும் சமம்’ என்பது பண்ணையின் தாரக மந்திரமாய் மாறுகிறது. நாளடைவில் சில புத்திசாலி வெண்பன்றிகள் தலைமை ஏற்கின்றன. உழைப்புச் சுரண்டலைத் தொடங்குகின்றன. ஊழலும் பெருகுகிறது. இப்போது தாரக மந்திரம் மாற்றி எழுதப்படுகிறது. ‘எல்லா விலங்குகளும் சமம்; ஆனால் சில விலங்குகள் மற்ற விலங்குகளைவிடக் கூடுதல் சமம்.’
எல்லாக் காலங்களிலும் இந்தச் சமமின்மை நீடிக்கிறது. கொரோனாக் காலத்திலும் இந்தப் பேதங்கள் நீடிக்கின்றன.
மேலைநாடு மேலானது
கோவிட் – 19 வைரஸ் சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது. வைரஸின் பாதிப்பு சீன எல்லையைத் தாண்டாத வரை அந்நாட்டின் பிரச்சனையாகத்தான் கருதப்பட்டது. ‘இந்த வைரஸ் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது. ஏனெனில் இது சீனாவில் தயாரிக்கப்பட்டது’ என்கிற பகடி மேற்குலகில் பிரபலமாக இருந்தது. வைரஸ், சீனாவைக் கடந்து ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருந்த சீனா கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கி இப்போது பதினொராவது இடத்தில் இருக்கிறது. (இந்தியா மேலேறி பனிரெண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது; விரைவில் சீனாவைத் தாண்டிவிடும்). மே 15ஆம் தேதி நிலவரப்படி உலகெங்கிலுமாகப் பாதிக்கப்பட்டவர்கள் 44.5 லட்சம் பேர். உயிரிழந்தவர்கள் மூன்று லட்சம் பேர். இப்போதும் பகடி நிற்கவில்லை. ‘சீனத் தயாரிப்புகளிலேயே உத்தராவதம் மிக்கது கொரோனா வைரஸ்தான்’ என்பதாக எள்ளல் உருமாறியிருக்கிறது.
இதைச் சீன வைரஸ் என்றழைத்தார் ட்ரம்ப். 2009இல் பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான H1N1/09 வைரஸ் முதலில் கலிபோர்னியாவில் கண்டறியப்பட்டது. அதன் நதிமூலம் மெக்ஸிகோ என்று பின்னர் அறியப்பட்டது. எனினும், அது ‘அமெரிக்க வைரஸ்’ என்றோ ‘மெக்ஸி வைரஸ்’ என்றோ அழைக்கப்படவில்லை. நாடுகளின் பெயர்களுடன் (‘ஹாங்காங் காய்ச்சல்-1968,’ ‘ஆசியக் காய்ச்சல்-1957’) வைரஸைக் கட்டிவைக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்டத்தான் இப்போதைய வைரஸிற்குக் ‘கோவிட்-19’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகவே இதைச் சீன வைரஸ் என்றழைப்பது பிழையானது என்று உலக சுகாதார அமைப்பே ட்ரம்புக்குக்கு எடுத்துச் சொன்னது. அது அவரது செவிகளில் தேளாகக் கொட்டியிருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நல்கையை நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். அவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். அவர் உலகின் ஆகப்பெரிய வல்லரசின் தலைவர். அவர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்.
கொரோனாவுக்கு நிறம் தெரியும்
மேலை நாடுகள் கீழை நாடுகளைவிட மேல் என்றால், மேலை நாடுகளுக்குள்ளே வெள்ளையர்கள்தான் கறுப்பர்களைவிட மேல். இங்கெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கறுப்பர்களே அதிகம். சிக்காகோ ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்காவின் பிற நகரங்களைக்காட்டிலும் சிக்காகோவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அதிகம். அதாவது அங்கே மூன்றில் ஒருவர் கறுப்பர். ஆனால் கொரோனாவில் மரணமடைந்தவர்களில் நான்கில் மூன்று பேர் கறுப்பர்களாக இருந்தார்கள். ஏன்?
அவர்களது வருவாய் குறைவு. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் சிறுபான்மையினர். கொரோனாவுக்கும் முன்னரே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி கறுப்பர்களில் 90% குடும்பங்கள் பசிக்கு அண்மையில் இருக்கின்றன. வெள்ளையர் குடும்பங்களில் இந்தக் கணக்கு 1%தான். குறைந்த வருவாய், சத்துள்ள உணவை அவர்களிடமிருந்து விலக்கிவைக்கிறது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழிடங்கள் நெரிசல் மிகுந்தவையாகவும் சுகாதாரக் குறைபாடுள்ளவையாகவும் இருக்கின்றன. ஆகவே நோயும் அவர்களுக்கு அண்மையிலேயே வசிக்கிறது.
பொருளில்லார்க்குக் கொரோனா உண்டு
சில மாதங்களுக்கு முன்னர் ஆக்ஸ்பாம் அமைப்பு உலக அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை ஆய்வு செய்தது. இந்தியாவில் இந்த இடைவெளி அதிகம் என்று சொல்வதற்கு ஆய்வு எதுவும் தேவையில்லை. எவ்வளவு அதிகம் என்று மதிப்பிடத்தான் ஆய்வு தேவை. இந்தியாவின் முதல் 63 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 2018-19 ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் மொத்தத் தொகையைவிட அதிகமானது என்று அந்த ஆய்வு தெரிவித்தது. இந்தத் தொகை ரூ.24.4 லட்சம் கோடி.
இந்தச் செல்வந்தர்களைக் கொரோனாவால் சாமான்யமாகத் தீண்டிவிட முடியாது. நடுத்தர வர்க்கத்தினரும் பாதுகாப்பு வளையங்களுக்குள் புகுந்துகொள்ள முடிந்தது. இவர்களில் சிலருக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கொடுப்பினை வாய்த்தது. மற்றவர்களாலும் ஊரடங்கை ஒரு விடுமுறையைப் போல் கழிக்க முடிந்தது. சமையல், சங்கீதம், ஆசனம், ஆங்கிலம் என்று இணையத்தில் வகுப்புகள் நடந்தன. சிலர் நாளைக்கு ஒன்று என்ற ரீதியில் படம் பார்த்தார்கள். சமூக ஊடக வெளியெங்கும் சிபாரிசுகளும் சிலாகிப்புகளும் மிதந்தன. இன்னும் சிலர் புத்தகம் படித்தார்கள். சமீபத்தில் அ. முத்துலிங்கம் இப்படிச் சொல்லியிருந்தார்: “இப்பொழுது பல நாவல்கள் தலையணை சைசில் வருகின்றன. படுத்துக்கொண்டு நெஞ்சிலே வைத்து படித்தால் விலா எலும்பு முறிந்துவிடும்.” ஆனால் அப்படியான பல புத்தகங்கள் சிபாரிசு செய்யப்பட்டன. விலா எலும்பைக் காப்பாற்றிக்கொண்டு பலரும் படித்திருப்பார்கள்.
எனில், இப்படிப் படம் பார்க்கவும் புத்தகம் படிக்கவும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கோடிக்கணக்கான மக்களாலானதுதான் இந்தியா. இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு கௌரவம்தான் இருந்தது. அவர்களிடம் ஒரு வேலை இருந்தது; சொற்ப ஊதியம் கிடைத்தது. அதில் அவர்கள் பசியாறினார்கள். ஊரடங்கினால் வேலையையும் அது நல்கிய சுயமதிப்பையும் இழந்தார்கள்.

தனிமனித இடைவெளி என்பதற்கெல்லாம் அவர்களது குடில்களில் பொருளில்லை. வெளிநாட்டினருக்கு மும்பையைச் சுற்றிக்காட்டும் சில சுற்றுலா நிறுவனங்களின் பட்டியலில் தாராவியும் இருக்கும். 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது ஒரு அதிசயம்தானே? இந்தச் சுற்றுலாவிற்குப் போய்வந்த பிரெஞ்சுப் பொறியாள நண்பரொருவர் வியப்படைந்தார். பத்துக்குப் பத்து அறையில் அவர் போனபோது ஐந்து பேர் இருந்தார்களாம். வசிப்பறை, படுக்கையறை, அடுப்படி எல்லாம் அந்த ஓர் அறைதான். அதிலும் அவர் வியப்படையவில்லை. அவர் சொன்னார்: ‘அந்த அறையில் குளிர்ப்பெட்டி இல்லை. தானியங்களைப் போட்டு வைத்துக்கொள்ளும் டப்பாக்கள் இல்லை. பொங்கி உண்பதற்கான சில பாத்திரங்கள் மட்டுமே இருந்தன.’ வழிகாட்டி இவரிடம் சொன்னாராம்: ‘அப்படியான சேகரங்கள் இவர்களுக்குத் தேவையில்லை. இவர்கள் அன்றன்றைக்கு வாங்கி, அன்றன்றைக்குப் பொங்கி, அன்றன்றைக்குச் சாப்பிட்டுக் கொள்வார்கள்.’ இப்படியானவர்களின் ஒரேயொரு கையிருப்பான வேலை இல்லாமல் போயிருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே யாசகர்கள் ஆக்கியிருக்கிறது. இவர்களைப் பொறுத்தமட்டில் சத்தான உணவு, கைகழுவுதல், தனிமனித இடைவெளி என்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.
கொரோனா காட்டும் பால் வேற்றுமை
எளிய மக்கள் எல்லா நாடுகளிலும் ஒடுக்கப்படும் சாதியாகத்தான் இருந்து வருகிறார்கள். சாதிக்கு எதிராகத்தான் “ஆண்சாதி பெண்சாதி ஆகும் இருசாதி; வீண்சாதி மற்றதெல்லாம்” என்றார் குதம்பைச் சித்தர். ஆனால் ஆண் சாதிக்குப் பெண் சாதியின் மீதுள்ள ஆதிக்கம் காலாகாலமாய்த் தொடர்கிறது. வீட்டுக்குள் வன்முறை என்பது ஏழை எளிய மக்கள் வீடுகளில் மட்டும் இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. அது ஒரு மூட நம்பிக்கை. அது எல்லா வர்க்கங்களிலும் நிலவுகிறது. இந்த ஊரடங்குக் காலத்தில் தாழ்ப்பாள் இடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் பெண்களின் மீதான குடும்ப வன்முறை படமெடுத்தது. தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்குப் பிறகு இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தப் புகாரை ஆணையத்தின் வாட்ஸப் எண்ணில் அளிக்கலாம். புகார் அளிக்கிற பெண்ணிற்கு அலைபேசி இருக்க வேண்டும், வாட்ஸப்பைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஆணையத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். எல்லோரும் வீடடங்கிக் கிடக்கிற வேளையில் புகார் அளிக்கத் தனிமையும் துணிவும் வாய்க்க வேண்டும். இத்தனையும் இருக்கிற சிலரின் என்ணிக்கை இந்தக் கொரோனாக் காலத்தில்கூட அதிகமாகியிருப்பதையே புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.
பணிப்பெண்கள் வர முடியாததால் நடுத்தர வர்க்கப் பெண்களின் வேலைச் சுமை கூடிவிட்டது. குடும்பம் முழுதும் வீட்டில் முடங்கியதால் எல்லோரது தேவைகளும் கூடிவிட்டன. உண்ணும் சோறும் பருகும் தேநீரும் தின்னும் பலகாரமும் வேளாவேளைக்குப் பரிமாற வேண்டும். முதியவர்களைப் போற்ற வேண்டும். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்ல வேண்டும், வீடு சுத்தமாக்க வேண்டும். எல்லாவற்றையும் வீட்டுப் பெண்டிரே செய்ய வேண்டும். பால் வேற்றுமை குழந்தை வளர்ப்பிலேயே தொடங்கிவிடுகிறது. களையெடுப்பும் அங்கிருந்தே தொடங்க வேண்டும்.
பேதமில்லா உலகம்
இந்தக் கொரோனாக் காலத்தில் ஓர் இத்தாலிய மூதாட்டியின் காணொலி வைரலானது. அவர் கொரோனாவுக்கு எதிராகக் கைகழுவச் சொல்கிறார். தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைப் பொத்திக் கொள்ளச் சொல்கிறார். இதனால் அந்தக் காணொளி வைரலாகியிருக்க முடியாது. அடுத்து ஆரத்தழுவுதலையும் முத்தமிடுதலையும் கொரோனாக் காலத்தில் தவிர்க்கச் சொல்கிறார். பதிலுக்குக் கண்ணடிக்கச் சொல்கிறார். ஒரு மூதாட்டி கண்ணடித்துக் காட்டுவது சுவாரஸ்யம்தான். ஆனால் அது மட்டும் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை அந்தக் காணொளியை நோக்கி ஈர்த்திருக்க முடியாது. அடுத்து அவர் சொல்கிறார்: ‘எளிய மக்களுக்கு உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். வன்மத்தையும் வெறுப்பையும் கழுவிவிடுங்கள். இந்த வைரஸிற்கு ஒரு நாள் மருந்து கண்டுபிடிக்கப்படும். அதைக் கொன்றுவிடலாம். ஆனால் மனத்தில் பேதங்களை வளர்க்காதீர்கள். அதற்கு மருந்து இல்லை.’ இப்படிச் சொல்கிறபோது அவருக்குக் கண்கள் கலங்குகின்றன. என்றாலும் கண்ணடித்து அந்தக் காணொளியை நிறைவு செய்கிறார்.
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com
Dear Ramanathan, Well written piece on the present Corona pandemic. Nice ly thought, compiled article. Congrats. Best Wishes.
LikeLike
நன்று உரைத்தார்….இளவல் மு.இராமநாதன்…
சமம்…என்பதும் relative term தான் என்பதை உணர்த்தும் விதமாக…
தொடரட்டும் உங்கள் எழுத்து …பரவட்டும் நம் தமிழ் அறிஞர் கருத்து…
LikeLike
உண்மையை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள். உங்களின் கடைசி பத்தியில் அந்த இத்தாலிய மூதாட்டி சொன்னது மட்டும் நமது காதுகளில் ஏறுவதில்லை. உடனேயே அவள் இத்தாலிக்காரி என முத்திரை குத்தும் நிலையே தொடர்கிறது. இது எப்போது மாற!? விடை தெரியாத கேள்வியோடு முடிகிறது.
LikeLike