மு. இராமனாதன்
Published in Kalachuvadu August 2020
வண்ணநிலவனின் படைப்புலகம் நாவல்களாலும் சிறுகதைகளாலும் கொஞ்சம் கவிதைகளாலும் உருவானது. அதில் கட்டுரைகளுக்கும் இடமுண்டு. அவரது எல்லாப் படைப்புகளும் எளிய மனிதர்களைச் சுற்றி வருவன; அவர்களது வாசனைகளால் நிரம்பியிருப்பன.

கடல்புரத்தில்
வண்ணநிலவனின் முதல் நாவல் ‘கடல்புரத்தில்’ 1977இல் வெளியானது; அந்த ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதினையும் பெற்றது. மீனவர்களைப் பற்றி அதற்கு முன்னால் இத்தனை நம்பகமான நாவல் வந்ததில்லை. குருஸ் மிக்கேல் ஒரு பரதவன், அவன் மனைவி மரியம்மை, மகன் செபாஸ்தியான், மகள் பிலோமிக் குட்டி என்றழைக்கப்படும் பிலோமினா, பக்கத்து வீட்டுக்காரன் ஐஸக், பெரியவர் பவுலுப் பாட்டா- இப்படி அசலான மனிதர்கள் கதைக்குள் வருகிறார்கள். குருஸ் மிக்கேலுக்கும் செபாஸ்தியானுக்கும் இடையிலான வாக்குவாதமாகக் கதை தொடங்குகிறது. அது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான சச்சரவு என்பதைத் தாண்டி, வல்லங்களுக்கும் விசைப்படகுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாகவும், மாறிவரும் மதிப்பீடுகளுக்கு இடையிலான சிக்கல்களாகவும் விரிகிறது.
நாவலின் முதல் பதிப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐந்தாம் பதிப்பு வெளியானது (‘பரிசல்’ பதிப்பகம், 2006). இந்தப் பதிப்பிற்கு ஞாநி முன்னுரை எழுதியிருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை மறுபடியும் வெளியிடுவதில் வண்ணநிலவன் மிகவும் தயங்கியதாக ஞாநி அதில் எழுதுகிறார். தயக்கத்திற்கு என்ன காரணம்? நாவல், அது எழுதப்பட்ட காலத்தின் வாழ்வைப் பதிவு செய்தது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு சுயமரியாதை எழுச்சி மிகுந்துவரும் ஒரு காலகட்டத்தில், அது மங்கிக்கிடந்த காலத்தின் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுமோ என்பதுதான் வண்ணநிலவனின் தயக்கத்திற்குக் காரணம். இதற்கு ஞாநி தன் முன்னுரையிலேயே விடையும் சொல்கிறார். “எழுச்சிக் காலத்தில்தான் நமது அடிமை மரபு நினைவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எத்தனை போராட்டத்திற்குப் பின் இன்றைய எழுச்சியை அடைய வேண்டி வந்தது என்று புதிய தலைமுறைகளுக்குப் புரியும்.” இப்படி ஞாநி எழுதியும் பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. சாதி அபிமானம் மேலும் அதிகமாகிவிட்டது; என்றாலும் ‘கடல்புரத்தில்’ மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுகிறது. காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாஸிக் படைப்புகள் வரிசையிலும், நற்றிணைப் பதிப்பகத்தின் தமிழின் முன்னோடி நாவல்கள் வரிசையிலும் ‘கடல்புரத்தில்’ வெளியாகிக்கொண்டிருக்கிறது. தமிழ் வாசகர்கள் இந்த நாவலை அது எழுதப்பட்ட காலத்தில்வைத்துச் சரியாகப் புரிந்துகொள்வதை இது காட்டுகிறது.
வண்ணநிலவன் இந்த நாவலை எப்படி கட்டமைத்திருக்கிறார்? கதை மாந்தர்கள் தம் எளிய மொழியில் பேசுகிறார்கள். ஆனால் கதாசிரியர் தனது மொழியின் ஒரு பகுதியைப் பைபிளிலிருந்து பெறுகிறார். பிலோமினா, சாமிதாஸைக் காதலிக்கிறாள். அந்தக் காதல் கைகூடுவதில்லை. ஆனாலும் அவளால் அவனை மறக்க முடிவதில்லை; மறக்கவும் விரும்புவதில்லை. அப்போது வண்ணநிலவன் எழுதுகிறார்: “அவள் எந்த நிலையிலும் சாமிதாஸைப் பாராமல் இராள்.” இந்த வசனக்கட்டு பைபிளிலிருந்து வந்திருக்க வேண்டும். ஆபிரகாம், தேவனின் ஆணைக்கிணங்கத் தன் மகனையே பலியிட முன்வருகிறான். அப்போது அசரீரி கேட்கிறது: “நீ அவனை உன் புத்திரன் என்றும் பாராமல், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தாய்”. அசரீரியில் இடம்பெறும் பாராமல் என்கிற சொல்லையும் அதே மாதிரியான வசனக்கட்டையும் வண்ணநிலவன் கைக்கொள்கிறார்.
பிறிதொரு இடத்தில் அம்மை மரித்த துக்கத்திலிருந்து பிலோமி மீண்டு தன்னை விருப்பு வெறுப்பில்லாமல் தயார் செய்துகொள்கிறாள். வண்ணநிலவன் எழுதுகிறார்: “அவளுக்கு எப்படி அது முடிந்தது என்பதை அவளே அறியாள்.” கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்து பைபிளில் வரும் வாசகமிது: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றெவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” இந்த அறியானிலிருந்துதான் வண்ணநிலவனின் அறியாள் வந்திருக்க வேண்டும்.
பைபிளின் வசனக்கட்டு வசீகரமானது. திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யப்பட்டு அது ஒரு மந்திரம் போலாகிவிட்டது. ஆனால் காலப்போக்கில் தமிழ் உரைநடை நவீனமாகிவிட்டது. பைபிளின் உரைநடையைக் கதையின் ஒரு கூற்றுமொழியாகத் தேர்வுசெய்துகொண்டதன் மூலம், வண்ணநிலவன் தனக்குத்தானே ஒரு சவாலை விதித்துக்கொள்கிறார். ‘கடல்புரத்தில்’ தொடர்ந்து வாசிக்கப்படுவது அந்தச் சவாலில் அவர் பெற்ற வெற்றிக்குச் சாட்சியாக அமைகிறது.
கம்பாநதி
வண்ணநிலவனின் ‘கம்பாநதி’ 1979இல் வெளியானது. கதையின் களம்: பாளையங்கோட்டை. இளைஞன் பாப்பையா வேலை தேடிக்கொண்டே இருக்கிறான். அப்பா சங்கரன் பிள்ளைக்கு இரண்டு மனைவிகள். ஆனால் எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதில்லை. பாப்பையாவின் அக்கா சிவகாமி வேலைக்குப் போகிறாள். அவள் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது. பாப்பையா கோமதியை விரும்புகிறான்; அவளும்தான். ஆனால் கதிரேசனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். அப்போது பாப்பையா பட்டாளத்தில் சேர்ந்துவிடுகிறான். ஒரு காலத்தில் இந்த ஊர் வழியாகத்தான் கம்பாநதி ஓடியதாம்; இப்போது ஓட்டமில்லை; பெயர் மட்டும் எஞ்சியிருப்பது கதையின் நடுவே ஒரு தகவலாக இடம்பெறுகிறது. ‘கடல்புரத்தி’லோடு ஒப்பிட்டால் ‘கம்பாநதி’யின் உள்ளடக்கம் புதிது, சொல் புதிது, சொல்முறை புதிது.
ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ (1980) நாவலில் விரல்விட்டு எண்ணக்கூடிய உரையாடல்களே இடம் பெறுகின்றன. பாளையங்கோட்டையில் இது ஒரு சின்னஞ்சிறு தெரு. எதிரும் புதிருமாக ஆறு வீடுகள். தெருவின் ஆரம்பத்தில் ரெயினீஸ் ஐயரின் கல்லறை இருக்கிறது.
முதல் வீட்டில் டாரதி என்கிற சிறுமி இருக்கிறாள். தாயில்லாப் பெண். அப்பா நேவியில் பணியாற்றுகிறார். இது அவளது பெரியம்மா வீடு. டெய்சி பெரியம்மா. பெரியப்பா பாதிரியார். எபன் அண்ணன் சிநேகம் மிகுந்தவன். பெரியம்மா நல்லவளா கெட்டவளா என்பது டாரதிக்குத் தெரியவில்லை. இந்த வசனத்தைப் பின்னாளில் தமிழ் சினிமாவில் சுட்டுவிட்டார்கள்.
எதிர்வீட்டில் இருப்பவள் இருதயம் டீச்சர். அவளது கணவன் சேசய்யா ஒரு சீக்காளி. எந்த நேரமும் இருமிக் கொண்டிருப்பான். என்றாலும் டீச்சருக்கு சேசய்யாமீது அளவற்ற காதல். ‘என் அதிகாரி’ என்று அவனைக் கட்டிக் கொள்வாள். அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பெரியவர் ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபேக்காளும். இப்போது மாதத்தின் முதல்வாரத்தில் வரும் மணியார்டரை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
டாரதிக்கு அடுத்த வீட்டில் அன்னமேரி டீச்சரும் அவளது மகன் தியோடரும் இருக்கிறார்கள். தியோடர் நன்றாக இருந்த பையன்தான்; மனைவி எலிசெபெத் போனதிலிருந்து ரொம்பவும் குடிக்கிறான். மூன்றாவது வீடு ரயில்வேயில் வேலை பார்க்கும் ஹென்றி மதுரநாயகம் பிள்ளையுடையது. கடைசி வீடு ‘வாழ்ந்துகெட்ட’ ஜாஸ்மின் பிள்ளையின் வீடு. இப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை.
இந்த ஆறு வீட்டுக்காரர்களும் அவர்களது வாழ்க்கையும்தான் கதை. தொடர்ச்சியான சம்பவங்களோ திடீர் திருப்பங்களோ இல்லாத கதை. ஆனாலும் இந்தக் கதையும் காலம் கடந்து நிற்கிறது.
இந்த மூன்று நாவல்களுமே மூன்று விதமானவை. இங்கே அ.முத்துலிங்கம் நினைவுக்கு வருகிறார். அவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்பு ‘குதிரைக்காரன்’ (காலச்சுவடு, 2012). அதன் முன்னுரையில் அவர் சொல்கிறார்: “நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம்? நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். நூறு ரோஜாக்கன்று நட்டு வளர்த்தவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்தெடுப்பது எத்தனை சுலபம்? ஆனால் கதைகள் அப்படியல்ல. நூறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101வது கதை எழுதுவது அத்தனை எளிதாக இருப்பதில்லை; உண்மையில் மிகவும் கடினமானது. அது ஏற்கெனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றைச் சொல்ல வேண்டும்.”
இந்தச் சொல்லாத ஒன்றைத்தான் தனது அடுத்தடுத்த படைப்புகளில் வண்ணநிலவன் சொல்ல முயல்கிறார். இதற்கான தூண்டுதலை க.நா.சு.விடமிருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறார். ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் க. நா.சு. அப்படியான சோதனை முயற்சிகளை வண்ணநிலவன் தொடர்ந்து செய்துவருகிறார். இதை அவரது சிறுகதைகளில் பரக்கக் காணலாம்.
எஸ்தர்
வண்ணநிலவனின் சிறுகதைகளுள் அதிகக் கவன ஈர்ப்பைப் பெற்ற ‘எஸ்தர்’ பஞ்சத்தையும் வறட்சியையும் பேசுகிற கதை. எஸ்தர் சித்தி குடும்பத்தை நிர்வகிக்கிறாள். அண்ணன் மரியதாஸின் மரணத்துக்குப் பின்னாலிருந்தே அப்படித்தான். மரியதாஸுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அகஸ்டின். இளையவன் டேவிட். இரண்டுபேரின் மனைவிமாரின் பெயரும் அமலம். அதனால் ஒருத்தி பெரிய அமலம். அடுத்தவள் சின்ன அமலம். இவர்களது குழந்தைகள், பாட்டி, வேலைக்காரன் ஈசாக் என்று எல்லாருமான அந்தக் குடும்பம் சித்திக்குக் கட்டுப்பட்டு இயங்கியது. இத்தனைக்கும் சித்தி உருட்டல், மிரட்டல் என்னவென்றே தெரியாத பெண். காடு, கரை, மாடு எல்லாம் உள்ள குடும்பந்தான். நெல் அரிசிச் சோறு பொங்கிக்கொண்டிருந்த குடும்பந்தான். இப்போது சக்கைபோன்ற கம்பையும் கேப்பையையும் வைத்துச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு அக்கினியை உயரே இருந்து கொட்டுகிறது யார்? இந்த வறட்சியிலிருந்து மீள்வது எப்படி? இரண்டு அமலங்களையும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அவரவர் வீட்டுக்குப் போகச் சொல்கிறாள் சித்தி. ஓர் ஆலோசனையாக அல்ல, ஒரு தீர்மானமாக. அவளும் அகஸ்டினும் டேவிட்டும் ஈசாக்கும் மதுரைக்குப் போய்க் கொத்துவேலை பார்ப்போம் என்கிறாள். ‘பாட்டி இருக்காளே’ என்கிறான் டேவிட். சித்தி பதில் சொல்வதில்லை. இரவு வறட்சியான காற்று வீசுகிறது. நடுவீட்டில் குழந்தைகளின் பக்கத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி, எழுந்துபோய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொள்கிறாள். அடுத்த காட்சியில் பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டுபோவதற்கு ஒரு பழைய சவப்பெட்டியை ஈசாக் தலைச்சுமையாகக் கொண்டு வருகிறான். யாரும் அழவே இல்லை. எல்லாருடைய முகங்களிலும் கலவரம் படர்ந்து கிடக்கிறது.
இந்தக் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அன்றன்றைய தினத்தை உண்டு உடுத்திக் கடந்துபோவதல்லால் பெரிய அபிலாஷைகள் ஏதும் இல்லாதவர்கள். இவர்கள்மீது வாழ்க்கை ஏன் இத்தனை கொடூரமாய் இருக்கிறது என்ற கேள்வியை வண்ணநிலவன் எழுப்புவதில்லை. ஆனால் வாசகர் எழுப்பிக்கொள்கிறார். ஏனெனில் கதை முடிந்தாலும் அது வாசகரோடு நடத்தும் உரையாடல் முடிவதில்லை.
வண்ணநிலவனின் வாசனை
வண்ணநிலவனின் படைப்புகளின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் படர்ந்துள்ள வாசனை. ‘கடல்புரத்தில்’ பிலோமினா புடவை மாற்றப் பெட்டியைத் திறப்பாள். பெட்டிக்குள்ளிருந்து பாச்சா உருண்டை வாசனையும் பவுடர் வாசனையும் கலந்துவரும்.
‘கம்பா நதி’யில் வருகிற சிவகாமியின் உடைகளில் இளம் எலுமிச்சை வாடையும், அவளுடைய அம்மாவின் உடைகளில் பாசிப்பருப்பை வறுத்த மணமும் வரும். தாமிரபரணி ஆற்றில் ஓடுகிற தண்ணீருக்கு ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு மணமும் ருசியும் வந்துவிடும். கோடைக் காலத்தில் ஆற்றில் குளிக்கிறவர்களின் கூட்டம் அதிகரித்துவிட்டிருப்பதாலும், வடிகால்கள் வறண்டு கிடப்பதாலும் முறுகிய இரும்பின் மணம் ஆற்றுத் தண்ணீருக்கு ஏற்பட்டுவிடும்.
‘ரெயினீஸ் ஐயர் தெரு’வின் ஆசீர்வாதம் பிள்ளை பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் அவரது உடம்பிலிருந்தும் உடைகளிலிருந்தும் சாக்பீஸும் பேப்பரும் கலந்து அடிக்கிற வாடை வரும். மனைவி ரெபாக்காள் உடம்பிலிருந்து காய்ச்சின பாலின் முறுகலான வாடை வரும். வயசாக வயசாக அவ்விருவருமே ஒருவரிலொருவர் நேசித்த அந்த மணங்களெல்லாம் இருவர் உடம்பிலிருந்தும் போய்ப் பழைய அழுக்குத்துணிகளின் புழுங்கிய வாடை அந்த வீட்டிற்குள் வந்துவிடும்.
‘எஸ்தர்’ கதையில் வீசுகிற வறண்ட புழுக்கமான காற்றில், காட்டில் விழுந்துகிடக்கிற காய்ந்த மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை இவற்றின் மணம் கலந்திருக்கும்.
‘மெஹ்ருன்னிஸா’ கதையில் வருகிற ராமையா ஒவ்வொரு பனைமரத்தைச் சுற்றியும் அதன் அடியில், காற்று கொண்டுவந்து சேர்த்த மிருதுவான தேரி மணலை மோந்து பார்ப்பான். விடிவதற்குச் சற்று முன்னால் மோந்து பார்த்தால் பச்சைப் பனை ஓலைகளின் வாடை அடிக்கும். நல்ல மத்தியான வேளையில் வெயில் சூட்டினால் அந்த மணலில் ஒருவிதமான கார நெடி வீசும்.
இப்படியாக வண்ணநிலவனின் படைப்பு வெளியினின்றும் பரவும் வாசனையானது மனிதநேயத்தையும் சுற்றுச்சூழல் அக்கறையையும் சகல ஜீவராசிகளின் மீதான தயையையும் படரவிட்டுக் கொண்டே இருக்கிறது.
இருப்புப் பாதைக் கண்காணிப்பாளன்
வண்ணநிலவனுக்குக் கவிதை முகமொன்றும் உண்டு. எனக்குப் பிடித்த கவிதை இருப்புப் பாதைக் கண்காணிப்பாளன். தண்டவாளங்களைக் கண்காணித்தபடிப் போகும் ஓர் எளிய தொழிலாளி வண்ணநிலவனின் கவிதைக்குள் பிரவேசிக்கிறான்.
வழியில் எதிர்ப்படும் / ஆடு மேய்க்கும் பறட்டைத் தலை சிறுவர்கள் / முன்னம் பல்லிழந்த முதிய பைத்தியக்காரி / எல்லாரும் அவன் நண்பர்களே.
தண்டவாளங்களுக்கு நடுவே / மேயும் சிறுகுருவிகள் கூட / அவனைக் கண்டு பயந்து பறப்பதில்லை. முடிவற்ற தண்டவாளங்களினூடே / நீளமான சுத்தி யலுடன் / துயர நினைவுகள் ஏதுமின்றி / தனியே போகிறான்.
கவிதையை யாத்த படைப்பாளிதான் இந்த இருப்புப் பாதைக் கண்காணிப்பாளனோ என்றொரு மயக்கம் ஏற்படுகிறது. இந்தக் கண்காணிப்பாளன் தண்டவாளங்களினூடே போகிறான். இந்தப் படைப்பாளி வாழ்க்கைப் பாதைகளினூடே போகிறார். பறட்டைத் தலைச் சிறுவர்களும் பைத்தியக்காரியும் கண்காணிப்பாளனுக்கு மட்டுமல்ல படைப்பாளிக்கும் நண்பர்கள். கண்காணிப்பாளனின் கையில் இருக்கும் சுத்தியல் கனமானது, ஆனால் அவன் இதயம் மென்மையானது. படைப்பாளியின் கையில் இருக்கும் எழுதுகோல் வலிமையானது, ஆனால் அவரது உள்ளம் கரிசனம் மிகுந்தது; எளிய மனிதர்களின்மீது அக்கறை கொண்டது. அவரது பிலோமினாவும் சிவகாமியும் மெஹ்ருன்னிஸாவும் சகமனிதர்களின் மீதான எல்லையற்ற நேசத்தைப் படரவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் மண்ணின் வாசனையும் நீரின் வாசனையும் காற்றின் வாசனையும் ஜடப் பொருள்களின் வாசனையும் கலந்திருக்கும்.
2020இல் நடந்த சென்னை புத்தகக் காட்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்க வடிவம்.
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com
யதார்த்தமான பெயர்கள், சொல்லாடல்கள், புத்தகத்தின் வர்ணனை, விமர்சனம் அருமை.
ஒரு பரட்டத் தலைக் கிறுக்குச் சாமானியனாலேயே ரசிக்க முடிகிறது. மிகவும் அருமை.
LikeLike