இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்

மு. இராமனாதன்

Published in Kalachuvadu November 2020

க்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம்வந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கைதான் இதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் வங்கதேசப் பொருளாதாரம் 3.80% வளர்ச்சி அடையும் என்று நிதியம் கணித்திருக்கிறது. இது கொரோனாக் காலம். பல நாடுகளின் வளர்ச்சி எதிர்த் திசையில் செல்கிறது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் 4.4 விழுக்காடாகக் கீழே இறங்கவுள்ளது. இந்தியப் பொருளாதாரமோ இந்த வரம்பையும் மீறி 10.3 விழுக்காடாகச் சுருங்கும் என்று கணித்திருக்கும் அதே அறிக்கைதான் வங்கதேசத்திற்குத் தேர்ச்சிச் சான்று வழங்குகிறது. பல அரசியலர்களும் சமூக விஞ்ஞானிகளும் இதை வங்கத்தின் எழுச்சியாகப் பார்த்தார்கள்.

இந்தத் தெற்காசிய எழுச்சி விவாதிக்கப்பட்ட அளவிற்குத் தென்கிழக்கே உயர்ந்துவரும் இன்னுமோர் எழுச்சி இங்கே கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தேசத்தின் பெயர் வியட்நாம். போர்களின் நுகத்தடியில் மூன்று தசாப்தங்களைக் கழித்த நாடு. நடப்பு ஆண்டில் வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி 1.7% ஆக இருக்கும் என்று நிதியம் கணிக்கிறது.

இந்த இரண்டு ஆசிய நாடுகளும் ஒப்பீட்டளவில் சிறியவைதாம். ஆனால் கீர்த்தியில் பெரியவை. இவற்றின் வளர்ச்சியையும், இந்த நாடுகளைப் போலவே இதற்கு முன் சாதனைகள் நிகழ்த்திய பிற ஆசிய நாடுகளின் வளர்ச்சியையும் நெருங்கிப் பார்ப்பது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.

ஆசிய அற்புதங்கள் மூன்று

பல்வேறு காலகட்டங்களில் பல ஆசிய நாடுகள் இந்தியாவின் முன்மாதிரியாகவோ இணையாகவோ சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் நாலுகால்ப் பாய்ச்சலில் முன்னேறிய ஆசிய நாடுகள் மூன்று. அவை: ஜப்பான், தைவான், தென் கொரியா. இந்த நாடுகள் ஆசியாவின் அற்புதங்கள் என்றழைக்கப்பட்டன.

ஏகாதிபத்திய சாம்ராஜ்யமாக விளங்கிய ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஆசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. போரின் முடிவு ஜப்பானுக்குச் சாதகமாக இல்லை; ஆகவே சரணடைந்தது. அப்போது அதன் காலனிநாடுகளை மட்டுமல்ல லட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருந்தது. அந்த இடத்திலிருந்துதான் அது மீட்டுருவாக்கம் பெற்றது. அதன் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயங்கினார்கள். தொழிற் சங்கங்கள் சக்திமிக்கவையாக இருந்தன. பத்தாண்டுகளில் ஜப்பான் மேலேழுந்தது. விரைவில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது.

அடுத்த அற்புதம் தைவான். 1948இல் மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சியைச் சீனாவில் நிறுவியபோது, தோல்வியுற்ற கோமிங்டாங் கட்சி தைவானில் தனது ஆட்சியை நிறுவிக்கொண்டது; அமெரிக்கா உதவியது. முதலில் விவசாயத்திலும் பிற்பாடு தொழில்துறையிலும் வேகமாக முன்னேறியது. 1965க்கும் 1986க்கும் இடையில் தைவானின் பொருளாதார வளர்ச்சி 360% உயர்ந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

சீனா, தைவானைத் தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைந்த சீனத்தின் ஒரு பகுதிதான் தைவான் என்று சீனா கூறுகிறது. தைவான் இந்த இக்கட்டுகளுக்கு இடையிலும் தனது தனித்துவமான ஜனநாயக அடையாளத்தைப் பேணுகிறது. எனில், இந்தத் தர்க்கங்கள் எதுவும் சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான வணிக உறவுகளுக்குத் தடையாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பரஸ்பர வணிகமும் முதலீடுகளும் அதிகரித்திருக்கின்றன.

வியட்நாமில் ஓர் ஆயத்த ஆடையகம்

மூன்றாவது ஆசிய அற்புதம் தென் கொரியா. 1910இல் கொரியாவைக் கைப்பற்றிய ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின்பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும்வரை நீடித்தது. போருக்குப் பிறகு கொரியா இரண்டுபட்டது. சோவியத் யூனியன் ஆதரவுடன் வடகொரியாவும் அமெரிக்க ஆதரவுடன் தென்கொரியாவும் அமைந்தன. 1950-53இல் இரண்டு கொரியாக்களும் பொருதிக்கொண்டன. வல்லரசுகள் பின்னணியிலும் முன்னணியிலும் போரிட்டன. போரிலிருந்து மீண்டுவந்த தென்கொரியா வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது. பிறகு அது திரும்பிப் பார்க்கவேயில்லை.

ஜப்பான், தைவான், கொரியா ஆகிய மூன்றுநாடுகளும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஆசிய அற்புதங்கள் என்றழைக்கப்பட்டாலும், இந்தியர்களுக்கு ஜப்பானே பிடித்தமானதாக இருந்தது. இந்தியாவிற்கு இணையாக அல்ல, முன்னுதாரணமாகக்கூட அல்ல, உயரத்தில் வைத்து வழிபடும் பிரதிமையாக ஜப்பான் இருந்தது. ஜப்பானியர்களின் கடும் உழைப்பை விதந்தோதும் ‘தேவதைக் கதைகள்’ பல இங்கே உலவின.

ஆசிய நட்சத்திரங்கள் இரண்டு

இந்த மூன்று அற்புதங்கள் அன்னியில் ஆசியாவில் சாதனைநிகழ்த்திய இன்னும் இரண்டு நட்சத்திரங்களும் உண்டு. அவை: ஹாங்காங்கும் சிங்கப்பூரும். ஒன்று, ஓப்பிய யுத்தத்தில் தோல்வியுற்ற சீனா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குக் கையளித்த மீனவ கிராமம்; அதைக் காலனியாட்சிக் காலத்திலேயே ஓர் உலகத்தரமான நகரமாகக் கட்டி எழுப்பினார்கள் புலம்பெயர்ந்த சீனர்கள். மற்றொன்று மலேசியாவிலிருந்து கழற்றிவிடப்பட்ட நகரம்; ஒரு சீனரின் தலைமையில் சீனர்களும் மலாய் மக்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து அதை உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக மாற்றினார்கள். இந்த இரண்டு நகரங்களின் ஒழுங்கும் வளமும் அவ்வப்போது இந்தியாவுடன் ஒப்பிடப்படுவதுண்டு. அவை சிறிய நகரங்கள், இந்தியா ஒரு துணைக்கண்டம் என்கிற சமாதானத்தோடு அதைக் கடக்க முயல்கிறோம்.

சிந்தியா

இந்தியாவோடு பலவிதத்திலும் ஒப்பிடத்தக்க சீனா, 1978இல் தனது இரும்புக் கதவுகளைத் திறந்தது. அதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால், 1990இல் இந்தியா உலகமயத்தைக் கையில் எடுத்தது. இரண்டு நாடுகளும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டன. இரண்டுநாடுகளும் மிகுதியும் கிராமப்புறங்களும் விவசாயிகளும் நிறைந்தவை, மிகப்பழைய பாரம்பரியங்களிலிருந்து கிளைத்தவை. ஆனால் முற்றிலும் வெவ்வேறான பாதைகளைக் கடந்து வந்தவை.

தென்கொரியாவில் ஓர் ஆயத்த ஆடையகம்

2000க்குப் பிந்தைய ஆண்டுகளில் இரண்டுநாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் உயர்ந்தவண்ணம் இருந்தன. 2009இல் உலகம் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, இந்தியா- சீனாவின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 7.8% ஆகவும் 9.4% ஆகவும் இருந்தன. 2005இல் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜெய்ராம் ரமேஷ் ‘Making Sense of Chindia’ என்று ஒரு நூல் எழுதினார். அநேகமாக சிந்தியா என்கிற சொல் அப்போதுதான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சீனா, இந்தியா என்கிற இரண்டு சொற்களின் கூட்டில் உருவாகிய மூன்றாவது சொல் அது. உலகெங்கும் உள்ள அரசியல் நோக்கர்களை அந்தச் சொல் பிடித்துக்கொண்டது. அவர்கள் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிக் குவித்தார்கள். ‘உலகின் அதிக மக்கள் தொகையுள்ள இரண்டு தேசங்கள், வளர்ச்சியையும் வளத்தையும் நோக்கி முன்னேறுகின்றன. ஒன்று உற்பத்தியிலும் மற்றது தகவல் தொழில்நுட்பத்திலும் முத்திரை பதித்துவருகின்றன. இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாக இருக்கும். அதை சிந்தியா வழிநடத்தும்’ என்பதுதான் முக்காலே மூணுவீசம் கட்டுரைகளின் மையச்சரடு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. உலகின் தொழிற்சாலையாக உருவான சீனா, இப்போது பெரும் தொழில்நுட்பச் சக்தியாகவும் வளர்ந்துவிட்டது. மாறாக சேவைத் துறையிலும் மென்பொருள் துறையிலும் கோலோச்சிய இந்தியா இப்போது அந்தந்தத் துறைகளிலும் சர்வதேசப் போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.

1978இல் டெங் சியோ பிங்கின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னர் சீனாவின் ஓராண்டுத் தனிநபர் வருமானம் இந்தியாவைவிடக் குறைவாக இருந்தது (1978: சீனா- 156டாலர்; இந்தியா- 205டாலர்). நாற்பதாண்டுகளுக்குப் பிறகு 2018இல் சீனாவின் வருமானம் இந்தியாவின் வருமானத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகியிருக்கிறது (2018: சீனா- 9,770டாலர்; இந்தியா- 2,010டாலர்). நடப்பு ஆண்டில் இது ஆறு மடங்காகிவிடும் என்பது நிதியத்தின் கணிப்பு (2020: சீனா- 10,838டாலர்; இந்தியா- 1877டாலர்). இப்போது யாரும் இந்தியாவைச் சீனாவோடு ஒப்பிடுவதில்லை; சிந்தியா என்று சொல்வதுமில்லை.

வங்கதேசம்- வணிகமும் வாழ்நிலையும்

இந்தச் சூழலில்தான் வங்கதேசத்தின் எழுச்சி செய்தியாகியிருக்கிறது. 1971இல் மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் தனிநாடாகிய வங்கதேசத்திற்கு முஜிபுர் ரகுமான் தலைமையேற்றார்; 1975இல் அவரது ராணுவத்தாலேயே கொலையுண்டார். அடுத்த பதினாறு ஆண்டுகள் ராணுவம் முன்னாலோ பின்னாலோ இருந்துகொண்டு ஆட்சி செய்தது. 1991இல் தேர்தல் ஜனநாயகம் மீண்டது. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு, நெருக்கடி நிலை, தீவிரவாதம் எனும் இவற்றுக்கு இடையிலும் ஜனநாயகம் தொடர்கிறது. 1991இல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இன்றளவும் தொடர்கிறது. நாடு தனது மனிதவளத்தைப் பயன்படுத்தி ஓர் உற்பத்தி மையமாக உருவாகியது. ஆடைத் தொழில் பிரதானமாக மாறியது. மருந்து, கப்பல் கட்டுமானம், தோல் பொருட்கள் முதலான தொழில்களும் வளர்ந்தன. உற்பத்தி அனைத்தும் ஏற்றுமதியையே மையம்கொண்டிருந்தன. அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமில்லை, மக்களின் வாழ்நிலையையும் உயர்த்தியது. இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

1970இல் ஒரு சராசரி வங்கதேசத்தவரின் ஆயுள் 47 ஆண்டுகளாகவும் ஒரு சராசரி இந்தியரின் ஆயுள் 48 ஆண்டுகளாகவும் இருந்தன. இப்போது முறையே 72 ஆண்டுகளாகவும் 69 ஆண்டுகளாகவும் உயர்ந்திருக்கிறது. அடுத்த புள்ளிவிவரம் கருவள விகிதத்தைப் பற்றியது. இந்த விகிதம் ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை குழந்தைகளை ஈன்றெடுப்பாள் என்பதைக் குறிக்கும். 1960இல் ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் விகிதம் 5.9ஆகவும், சராசரி வங்கப் பெண்ணின் விகிதம் 6.7ஆகவும் இருந்தது. 2018இல் இந்தியாவின் கருவள விகிதம் 2.2ஆகவும் வங்க விகிதம் 2ஆகவும் குறைந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் இரண்டு செய்திகளைச் சொல்கிறது. முதலாவது நேரடியானது. இந்தியாவைவிட வங்கத்தின் விகிதம் குறைந்துவிட்டது. அடுத்தது, இஸ்லாமிய நாடுகளில் பிள்ளைப் பிறப்பைக் கட்டுப்படுத்தமாட்டார்கள் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அந்தக் கூற்றுக்கான எதிர்வினையாகவும் இந்தப் புள்ளிவிவரம் அமைந்துவிட்டது.

வியட்நாம் எழுச்சி

வங்கதேசத்தைப் போலவே தொழிலிலும் ஏற்றுமதி வணிகத்திலும் முத்திரை பதித்துவருகிறது வியட்நாம். பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான இந்தோ-சீனப் போர் (1946-54), அமெரிக்கர்களுக்கு எதிரான வியட்நாம் யுத்தம் (1955-75) ஆகியவற்றின் அழுத்தத்திலிருந்து நாடு மீண்டுவந்து மூச்சுவிட முடிந்தது 1986இல்தான். இன்று வளரும் நாடுகளிடையே அதிகமான அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடுகளுள் ஒன்றாக எழுந்து நிற்கிறது. வியட்நாமியர்கள் எல்லாத் தொழிலையும் உவந்துசெய்தனர். தேசத்தையும் தங்களையும் வறுமையின் பிடியிலிருந்து மீட்டுக்கொண்டனர். கடந்த முப்பது ஆண்டுகளில் வியட்நாமின் தனிநபர் வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. நடப்பு ஆண்டில் அது மூவாயிரம் டாலரை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்திருக்கிறது. பத்து லட்சம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில்தான் பாதிப்பு இருக்கிறது.

வளர்ச்சியின் காரணிகள்

வியட்நாமும் வங்கதேசமும் சர்வதேச வணிகத்தில் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்க-சீன வர்த்தகப் போரும் ஒரு காரணம். இரண்டு ஆண்டுகளாகச் சீனப் பொருட்களுக்குக் கூடுதல் தீர்வை விதித்துவருகிறது அமெரிக்கா. இதனால் சீனாவில் உற்பத்தி செய்யும் மேலைநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறித் தத்தமது தாய்நாடுகளுக்குத் திரும்பிவிடும் என்று டிரம்ப் அரசு எதிர்பார்த்தது. அது அப்படி நடக்கவில்லை. சில நிறுவனங்கள் இடம் மாறவே செய்தன. ஆனால் அவை அமெரிக்காவிற்கோ ஐரோப்பாவிற்கோ திரும்பச் செல்லவில்லை. அவை தேர்ந்தெடுத்த நாடுகளுள் குறிப்பிடத்தக்கவையாக வங்கதேசமும் வியட்நாமும் இருந்தன. பெரிய அளவில் சீனாவிலிருந்து இடம் பெயரும் அந்நிய நிறுவனங்களை இந்தியாவால் ஈர்க்க முடியவில்லை. இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் காரணங்களில் இரண்டு கவனிக்கத்தக்கவை.

முதலாவதாக, அந்த இரண்டு நாடுகளும் உலகம் முழுவதையும் ஒரே சந்தையாகப் பார்க்கும் கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தத்தை மேற்கொள்கின்றன. ஆகவே உலகின் உற்பத்திச் சங்கிலியில் அவை பிணைந்திருக்கின்றன. மாறாக இந்தியா, உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கீட்டு முறைகளையும் தீர்வைகளையும் கைக்கொள்கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தங்களில் இணைய மறுக்கிறது. இதனால் நமது உற்பத்தியாளர்களால் போட்டியை எதிர்கொள்ள முடிவதில்லை.

இரண்டாவதாக, இந்தியாவின் உள்கட்டமைப்பு (சாலை, ரயில், துறைமுகம், மின்சாரம், நீர்) இன்னும் உலகத்தரமானதாக உயர வேண்டும். அது அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும். வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட வளரும் நாடுகள் உள்கட்டமைப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் நல்குகின்றன.

இந்தியா இன்னும் இரண்டு கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அவை நமது அபரிமிதமான மக்கள் வளத்திற்குத் தரமான கல்வியும் மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இந்தியா இந்த இரண்டு துறைகளிலும் முன்னேறியிருப்பது உண்மைதான். ஆனால் அவை எளிய மக்கள் பலருக்கும் எட்டாக் கனியாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும். கனரகத் தொழில்களுக்குத் திறன்மிக்க தொழிலாளர்கள் வேண்டும். கல்வியும் ஆரோக்கியமும் அதற்கான அடித்தளங்களாக அமையும்.

வளத்திற்கான பாதை

இந்த இடத்தில் நாம் பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடுகளோடு அந்தந்த நாடுகளின் வரலாற்றையும் பார்க்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் முன்னேறிவரும் ஆசிய நாடுகள் எதன்மீதும் வரலாறு கருணை காட்டவில்லை. அந்த நாடுகள் கடந்துவந்த பாதை கடினமானதுதான். கல்லையும் முள்ளையும் கடந்து அவை வளர்ச்சிப் பாதையில் அடிவைத்தபோது கரவொலி எழுந்தது. ஒரு காலத்தில் ஜப்பானும் தைவானும் தென் கொரியாவும் ஆசியாவின் அற்புதங்கள் எனப் போற்றப்பட்டன. ஹாங்காங்கும் சிங்கப்பூரும் ஆசியாவின் நட்சத்திரங்கள் என்று புகழப்பட்டன. இந்தியா வியந்து பார்த்தது. பிந்தைய ஆண்டுகளில் சீனா உலகின் தொழிற்சாலை ஆயிற்று. உலகம் முழுமையையும் தனது உற்பத்திச் சங்கிலியால் இணைத்தது. சீனாவிற்கு இணையாக இல்லாவிட்டாலும் இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியது. இப்போது ஒரு சுணக்கம் இருக்கிறது. இந்த வேளையில்தான் வங்கதேசமும் வியட்நாமும் எழுச்சி கொண்டு முன்னேறுகின்றன. இந்தியாவின் சுணக்கம் நேர்செய்யப்பட வேண்டும். இந்தியாவும் இந்த உற்பத்திச் சந்தையில் ஓடித்தான் ஆக வேண்டும்.

ஆசிய மண்டபத்தில் இந்தியா பல மணக்கோலங்களைக் கண்டுவிட்டது. இந்த மண்டபத்தில் பலநாடுகள் வளர்ச்சியையும் வளத்தையும் கரம் பற்றின. முதலில் ஜப்பான், தைவான், தென்கொரியா. கூடவே ஹாங்காங், சிங்கப்பூர். அடுத்து சீனா. இப்போது வங்கதேசமும் வியட்நாமும் மணக்கோலம் தரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இது இந்தியாவின் நேரம். இந்தியாவும் மணவறையில் அமர வேண்டும்.

மின்னஞ்சல்:  Mu.Ramanathan@gmail.com

One thought on “இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்

  1. எந்த ஒரு நாடும் சுய பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல் உண்மையான முன்னேற்றம் இருக்காது. வல்லரசுகளுக்கான ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி என்பது குமிழிப் ( Bubble) பொருளாதாரம் போன்றது. எந்த நேரமும் வெடித்துவிடும். 1975களிலான முதலாளிகளின் பொற்காலம் மீளமுடியாத, ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் சென்று விட்டது. அது உலகு தழுவிய வேலையின்மையாக, வீக்கமாக, பின்னடையும் வளர்ச்சியாக…….. என சென்றுகொண்டேயுள்ளது. அது பங்களாதேஷில் வியட்னாமிலும் கூட கோரத்தாண்டவமாடும் காலம் தூரமில்லை. ஏனெனில் அங்கெல்லாம் சுய பொருளாதாரம் கட்டமைக்கப்படவில்லை.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: