Published in Kalachuvadu December 2020
மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்
கட்டுரை
மு. இராமனாதன்
“ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!”இது பராசக்தி (1952) படத்தின் நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம்.
68 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களின் நினைவு அடுக்குகளுக்குள் தேங்கிக் கிடக்கும் வசனம். ரங்கூன் பர்மாவின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை தமிழ் வணிகர்களையும் தொழிலாளர்களையும் அரவணைத்த தேசம் பர்மா. இன்று எல்லாம் மாறிவிட்டது. பர்மா, மியான்மார் ஆகிவிட்டது. ரங்கூன், யாங்கூன் ஆகிவிட்டது. தலைநகரே நைப்பிதா எனும் புதிய இடத்துக்குப் பெயர்ந்துவிட்டது. இன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிற நாடாகத்தான் இருக்கிறது மியான்மார். ஆனால் பராசக்தி வசனம் நினைவில் நிற்கிற அளவுக்குக்கூட பர்மாவையோ பர்மாத் தமிழர்களையோ தாய்நாட்டுத் தமிழர்கள் நினைத்துக் கொள்வதில்லை. கடந்த நவம்பர் 8ஆம் தேதி மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. ஒரு காலத்தில் மனித உரிமைகளின் திருவுருவாக விளங்கிய, ஆனால் சமீபகாலமாக மேற்குலகின் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் அவுங் சான் சூச்சிதான் இந்தத் தேர்தலின் நட்சத்திரம். அவரது என்.எல்.டி கட்சி, தேர்தலில் கணிசமான இடங்களை அள்ளியது. ராணுவத்தின் ஆசியோடு இயங்கிவரும் யு.எஸ்.டி.பி கட்சியும் போட்டியில் இருந்தது. எனில், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி கணிசமானது. நமது ஊடகங்கள் மியான்மாரைப் போலவே இந்தத் தேர்தலையும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கத் தேர்தல் களேபரம் வேறு.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்றில்லை, இந்தியாவுக்கும் மியான்மார் உறவில் உற்சாகக் குறைவு இருப்பதாகத்தான் தெரிகிறது. இத்தனைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயுள்ள எல்லைக்கோடு நீளமானது; அதாவது 1610கி.மீ; நமது வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்போடும் பாதுகாப்போடும் பிணைந்தது. இந்தியாவிலிருந்து போன புத்தமதம் பர்மியர்களுக்கு இசைவாக இருந்தது. அதை அவர்கள் நெஞ்சாரத் தழுவிக்கொண்டார்கள். 1937வரை பிரிட்டிஷ்-இந்தியாவின் ஒருபகுதியாகத்தான் இருந்தது பர்மா. இந்தியர்கள், அதிகமும் தமிழர்கள், செறிவாக வசித்துவந்தனர். இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா பர்மாவில்தான் சிறைவைக்கப்பட்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்தியச் சுதந்திர லீக் காலூன்றியிருந்த அந்நிய மண்ணாக இருந்தது பர்மா.
இரண்டாம் உலகப்போரின்போது பர்மா, ஜப்பானிய ஆளுகைக்கு உள்ளாகியது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்தியர்கள் பலர் கால்நடையாக வெளியேறினர். விடுதலைக்குப் பிறகான ராணுவ ஆட்சி தமிழர்களுக்கு வாழ்வுரிமைச் சிக்கல்களை உருவாக்கியது. இந்தியர்கள் பலர் கப்பல் கப்பலாக வெளியேறினர். இந்தக் கசப்பான அனுபவங்களால்தான் தமிழகத் தமிழர்கள் பர்மாவைத் தங்கள் நினைவில் நிறுத்தாமல் போயிருக்க வேண்டும்.
அரசியலும் ராணுவமும்
பர்மாவின் அரசியல் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. 1948இல் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் அவுங் சான். அவர்தான் சூச்சியின் தந்தை. ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பின் தளபதியாக இருந்தார் அவுங் சான். ஜப்பானியர்கள் வெளியேறியதும் அதைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையும் முன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர். 1958இல் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஓர் இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962இல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011வரை நீடித்தது. அந்த அரை நூற்றாண்டுக் கால ராணுவ ஆட்சி மியான்மாரை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியிருந்தது. நாடு ராணுவத்தின் இரும்புக் கரங்களில் கட்டுண்டு கிடந்தது. கல்வியும் தொழிலும் விவசாயமும் வர்த்தகமும் தேங்கிப்போயிருந்தன. எதிர்க் குரல்கள் ஒடுக்கப்பட்டன. பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஊழல் மலிந்திருந்தது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களும் தண்டனைத் தடைகளும் சூழ்ந்திருந்தன. உள்நாட்டு உற்பத்தியில் கிழக்காசியாவிலேயே கடைசி இடத்தில் இருந்தது மியான்மார்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988இல் மாணவர்கள் போராடினார்கள். அப்போது அவுங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார் சூச்சி. போராட்டத்தைப் பாராமுகத்தோடு அவரால் கடக்க முடியவில்லை. அப்போதுதான் சூச்சி தேசிய ஜனநாயக லீக்கை (என்.எல்.டி) தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989இல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்தார். 1990இல் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392ஐக் கைப்பற்றியது என்.எல்.டி. ஆனால் ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. அதற்கு அடுத்த ஆண்டு சூச்சிக்குச் சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. சூச்சி, சக்தியற்றவர்களின் சக்தி என்று புகழப்பட்டார். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 2010இல் தேர்தல் நடந்தது. இந்த முறை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுபெற்ற யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். அது மியான்மார் அரசியலில் ஒரு முக்கியமான கட்டம் என்று பலருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஜனநாயகக் கிரணங்கள்
தளபதி தெயின் அதிபரான பிறகு அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பலரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் சூச்சியை விடுவித்தார். பத்திரிகைத் தணிக்கை தளர்த்தப்பட்டது. தொழிற் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டன. வர்த்தக, வங்கி விதிகள் திருத்தப்பட்டன. மியான்மார் அந்நிய முதலீட்டை வரவேற்றது. அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளும் தண்டனைத் தடைகளை விலக்கிக்கொண்டன. 2012இல் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43இல் வெற்றி பெற்றது. சூச்சி எதிர்க்கட்சித் தலைவரானார்.
நீர்வளம், நிலவளம், கனிமவளம், எண்ணெய் வளம் எல்லாம் ஒருங்கே அமைந்த நாடு மியான்மார். அரை நூற்றாண்டுத் தேக்கத்தால் அதன் மடி சுரந்தபடி இருந்தது. முட்டிப் பால் கறப்பதற்குப் பல நாடுகளும் தயாராகத்தான் இருந்தன. ஆனால் ஆட்சி ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவை தயங்கின. நிலைமை இப்போது மாறிவிட்டதா?

2015 தேர்தல்
2015இல் பொதுத் தேர்தல் வந்தது. உலகெங்கும் எதிர்பார்ப்புகள் மிகுந்தன. ஓடிவரும் பொன்னிற மயிலின் சித்திரம் பொறித்த என்.எல்.டி கட்சியின் சிவப்புக் கொடிகளும் சூச்சியின் படங்களும் எங்கும் தோரணங்களாய் ஆடின. கூடவே யு.எஸ்.டி.பி.யின் நீலநிறக் கொடிகளும் ஆடின. ஆனால் என்.எல்.டி.தான் 80% வாக்குகளையும் மூன்றில் இரண்டு பங்கு இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறையும் சூச்சியால் அதிபராக முடியவில்லை. முக்கியமான அமைச்சரகங்களும் அவரது கட்சிக்குக் கிடைக்கவில்லை. 2008இல் ராணுவம் திருத்தி எழுதிய அரசியலமைப்பின் பேரிலேயே இவை நடந்தன.
சூச்சியின் காலஞ்சென்ற கணவர் ஆங்கிலேயர். அவரது இரண்டு மகன்களும் ஆங்கிலேயக் குடிமக்கள். அரசியல் சட்டத்தின் 59F பிரிவின்படி வெளிநாட்டவரை மணந்தவர்கள் அதிபராகப் பதவி வகிக்கக்கூடாது. அதே பிரிவின்படி அதிபராக இருப்பவரின் பிள்ளைகள் அந்நிய நாடொன்றுக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரிவை விலக்குவதற்கு சூச்சி பலவாறும் முயன்றார். ராணுவ அரசு செவிசாய்க்கவில்லை; தேர்தலுக்கு முன்பே இது சூச்சிக்குத் தெரியும்.
மேலும் புதிய அரசியல் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் 25% இடங்களுக்கு உறுப்பினர்களை ராணுவமே நியமிக்கும். மீதமுள்ள 75% இடங்களுக்குத்தான் தேர்தல் நடக்கும். தவிர, அதிபர் தேர்வும் நேரடியானதல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டுபேரையும், ராணுவத்தின் நியமன உறுப்பினர்கள் ஒருவரையும் முன்மொழிய வேண்டும். இவர்களுக்குள் தேர்தல் நடக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இதில் வெற்றி பெற்றவர் அதிபராகவும், மற்ற இருவரும் துணை அதிபர்களாகவும் பதவியேற்க வேண்டும். இதைத் தவிர பாதுகாப்பு, உள்துறை, நிதிபோன்ற முக்கியமான துறைகளுக்கான அமைச்சர்களை ராணுவமே நியமிக்கும். இதை ராணுவம் ‘ஒழுங்குடன்கூடிய ஜனநாயகம்’ என்றழைத்தது. இதற்கெல்லாம் இசைந்தே சூச்சியும் அவரது கட்சியினரும் போட்டியிட்டார்கள்; வெற்றி பெற்றார்கள். சூச்சியின் வேட்பாளர் ஒருவர் அதிபரானார். சூச்சி ‘அரசின் ஆலோசகர்’ என்று ஒரு பதவியைத் தனக்காக ஏற்படுத்திக்கொண்டார். ராணுவத்தினர் முக்கியத் துறைகளின் அமைச்சர்களாயினர். ராணுவத்தின் செல்வாக்கு ஆட்சியில் நீடிக்கும் என்பது மியான்மார் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் சூச்சியின் தலைமையில் ஜனநாயகம் மெல்ல மெல்ல உயர்ந்துவரும், மனித உரிமைகள் மதிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு முன்னால் மியான்மரின் இனவரைவியலைப் பார்த்துவிடலாம்.
பெரும்பான்மையும் சிறுபான்மையும்
மியன்மார் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர், புத்த மதத்தினர்கள் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். 2015இல் இங்கேயுள்ள 291 இடங்களில் என்.எல்.டி கணிசமான இடங்களைப் பெற்றது. சிறுபான்மையினர் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இங்கேயுள்ள 207 இடங்களிலும் (31%) என்.எல்.டி குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றது.
மியான்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் இனங்கள் பிரதானமானவை. இந்த இனங்களில் தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட பல அரசியல் கட்சிகளும் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்களும் உள்ளன. 2015 தேர்தல் முடிவுகள் சிறுபான்மையினர் மத்தியிலும் சூச்சிக்குச் செல்வாக்கு இருந்ததைப் புலப்படுத்தியது. ரக்கைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் சூச்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக எழுதினார், அப்போது அவருடன் சென்ற ரெயிடர்ஸ் செய்தியாளர்.
அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் ரொகிங்கியா எனும் முஸ்லிம் பிரிவினர், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இவர்கள் மியான்மாரின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களால் நிலம் வாங்க முடியாது; அவர்களின் பிள்ளைகளால் கல்வி கற்க முடியாது. வேலை செய்தாலும் பல நேரங்களில் கூலிக்கு உத்தரவாதம் கிடையாது; இவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் பர்மாவில் நுழைந்தவர்கள் என்று சொல்லி வந்தது மியன்மார் அரசு. பல தலைமுறைகளாகத் தாங்கள் பர்மாவில் வசித்துவருவதாகச் சொல்லும் ரொகிங்கியாக்களின் குரல் அம்பலம் ஏறவில்லை. பெரும்பான்மை ‘பாமா’ இனத்தவருக்கு இந்தச் சிறுபான்மை ரொகிங்கியா இனத்தவர்மீது அனுதாபம் இல்லை. மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால் பெரும்பான்மை பாமா இனத்தவரும் சிறுபான்மை ரொகிங்கியா இனத்தவரும் வேறுபட்டவர்கள். உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போலவே பாமா இனத்தவருக்கு ஓர் உயர்வு மனப்பான்மை இருக்கிறது. 2015 தேர்தல் காலத்தில் இந்தப் பிரச்சினையில் சூச்சி மவுனம் காத்து வந்தார். அந்தத் தேர்தலில் பல சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்தன; எனினும் என்.எல்.டி.தான் கணிசமான இடங்களைப் பெற்றது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மையினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக சூச்சி நடந்துகொண்டாரா?
ரொஹிங்கியா அகதிகள்
சூச்சியின் என்.எல்.டி பொறுப்பேற்ற பிறகு ரொகிங்கியாப் பிரச்சினை மேலும் மோசமாகிவிட்டது. 2017இல் ஓர் ஆயுதக் குழு ரக்கைன் மாநிலத்தின் சில காவல் சாவடிகளைத் தாக்கியது. அதை அடுத்துக் கட்டவிழ்ந்த வன்முறையில் ரொகிங்கியாக்களின் குடில்கள் கொளுத்தப்பட்டன. 730 குழந்தைகள் உட்பட 6700 ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கிறது MSF தொண்டு நிறுவனம். 288 கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டதாகச் சொல்கிறது HRW தொண்டு நிறுவனம். 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏழு லட்சம் ரொகிங்கியாக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அப்போது அங்கு ஏற்கெனவே மூன்று லட்சம் அகதிகள் இருந்தனர். இதற்கு அடுத்த ஆண்டு ஐநாவின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் மியான்மார் அரசின் மீதான இனப்படுகொலை வழக்கை விசாரித்தது. வழக்கில் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி அளித்தவர், ஒரு காலத்தில் சமாதானத்தின் தூதுவராகக் கொண்டாடப்பட்ட, இப்போதைய அரசின் ஆலோசகர் அவுங் சான் சூச்சி. உலகம் அந்தக் காட்சியை நம்பமுடியாமல் பார்த்தது. அவரது சாட்சியம் மியான்மார் ராணுவத்தைக் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. நீதிமன்றம் மியான்மார் அரசை எச்சரித்தது. வங்கதேசத்திலிருந்து அகதிகளை மீளப்பெற்று அவர்களின் மறுவாழ்வுக்கு ஏது செய்யுமாறு உத்தரவிட்டது. ஐநா நீதிமன்றத்தால் வழக்கை விசாரிக்க முடியும்; தீர்ப்பெழுதவும் முடியும். ஆனால் நடைமுறைப்படுத்துகிற யாதொரு அதிகாரமும் அதனிடம் கிடையாது. ஆகவே நிலைமை இன்னும் சீரடையவில்லை.

2020 தேர்தல்
இந்த வேளையில்தான் மீண்டும் தேர்தல் வந்தது. மியான்மாரில் கொரோனா கொடிகட்டிப் பறக்கிறது. கூடவே சிவப்புக் கொடிகளும் நீலக் கொடிகளும் பறக்கின்றன. ஆனால் இந்தமுறை ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் கொரோனாவால் தடை செய்யப்பட்டன. இந்தத் தேர்தலிலும் பல சிறிய கட்சிகளும் சிறுபான்மை இனத்தவரின் கட்சிகளும் போட்டியிட்டன. 2015இல் என்.எல்.டி. எதிர்க்கட்சியாக இருந்தது. 2020இல் ஆளுங் கட்சி. அப்போது சிறிய கட்சிகள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பரப்புரை செய்தன. இப்போதைய ஆளுங்கட்சி சில கட்சிகளின் பரப்புரையைத் தடை செய்தது; சில கட்சிகளின் பரப்புரைகள் தணிக்கை செய்யப்பட்டன. சிறுபான்மை இனத்தவர்கள் வசிக்கும் மாநிலங்களில் சுமார் பதினைந்து லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்தது தேர்தல் ஆணையம். ரொகிங்கியா முஸ்லிம்களுக்குக் குடியுரிமை இல்லையென்பதால் வாக்குரிமையும் இல்லை. சிறுபான்மையினர் வசிக்கும் சில தொகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. என்.எல்.டி. தனக்கு ஆதரவாக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது என்று சிறுபான்மை இனத்தவரின் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் கேட்பதற்குக் காதுகள் இல்லை.
கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியாலும் அதற்கு முன்பே அரசு கைக்கொண்ட தாராளவாதக் கொள்கைகளாலும் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது; ஆனால் அதன் பலன் எளிய மக்களைச் சென்றடையவில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். இதனால் மேற்குலக இதழாளர்கள் சிலர் சூச்சியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் அதிருப்தியுற்ற மத்தியதர வர்க்கத்தினரும் இளைஞர்களும் சூச்சிக்கு எதிராகத் திரும்புவார்கள் என்று எழுதினார்கள். ஆனால் வேறுசிலர் இதை மறுத்தார்கள். ஒரு சர்வதேச அரங்கில், பெரும்பான்மை இனத்தின் குரலாக ஒலித்தார் சூச்சி; சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மறுத்தார். இதனால் பெரும்பான்மை இனத்தவரிடையே அவரது ஆதரவு பெருகியிருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

இரண்டாம் தரப்பினரின் கணிப்புதான் சரி என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின. நவம்பர் 14 அன்று தேர்தல் ஆணையம் முதற்கட்ட முடிவுகளை வெளியிட்டது. அப்போதும் 64 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 412 இடங்களில் என்.எல்.டி 346 இடங்களையும், யு.எஸ்.டி.பி வெறும் 24 இடங்களையும் பெற்றிருந்தன. என்.எல்.டி இரண்டாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. 2015இல் தேர்தல் முடிவுகள் வெளியானபோது மியான்மாரின் ஜனநாயகமும் பொருளாதாரமும் முன்னேறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இல்லை. சூச்சி, மனித உரிமைகளின் ஒளிவிளக்காக இப்போது பார்க்கப்படுவதில்லை. அமெரிக்காவின் முன்னாள் தூதர் டெரிக் மிட்சல், “சூச்சி மாறவில்லை. அவர் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கிறார். அவரது முழுப்பரிமாணமும் நமக்குத் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவுதான்” என்று சொல்லியிருக்கிறார்.
யூனூஸ் பாயும் சூச்சியும்
தூதரின் கூற்றைப் படித்ததும் எனக்கு யூனூஸ் பாய் நினைவுக்கு வந்தார். ஹாங்காங் இந்தியர்களால் முஹம்மது யூனூஸ் (1924-2015) அப்படித்தான் அழைக்கப்பட்டார். பாய்தான் எனக்கு பர்மீய அரசியலையும் வரலாற்றையும் அறிமுகப்படுத்தியவர். தன் வாழ்நாளின் செம்பாதியை பர்மாவிலும் மீதியை ஹாங்காங்கிலும் கழித்தவர். அவரது ‘எனது பர்மா குறிப்புகள்’ (காலச்சுவடு, 2009) நூல், பர்மாவில் தமிழர்கள் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்கும்; கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேறும்வரை நீளும். இந்த நூல் உருவாக்கத்துக்காக 2007 – 2009 காலகட்டத்தில் அவரைப் பலமுறை நேர்கண்டேன். அப்போது சூச்சி வீட்டுக் காவலில் இருந்தார். மேற்கு ஊடகங்களில் அவர் மனித உரிமைக் காவலராக வலம் வந்து கொண்டிருந்தார். நான் சூச்சியைப் பற்றிப் பலமுறை கேட்டேன். ஆனால் பாய் பட்டும் படாமலும்தான் பதில் சொன்னார்.

2010இல் மியான்மாருக்குப் போக்கும் வரவும் எளிதாகத் தொடங்கின. 2011இல் அவருடன் நான் யாங்கூனுக்குப் போனேன். அவர் பிறந்து வளர்ந்த இடங்களைப் பிரியத்துடன் சுற்றிக் காட்டினார். உறவினர்களும் நண்பர்களும் அவரை ஓடியோடி உபசரித்தனர். அப்போது சூச்சி விடுதலையாகியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராவதற்கு இன்னும் ஓராண்டு காலமிருந்தது. என்.எல்.டி. மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. பல இடங்களில் கட்சியின் சிவப்புக் கொடிகளையும் சூச்சியின் படங்களையும் பார்க்க முடிந்தது. தமிழர்கள் பலருக்கும் அரசியலில் ஆர்வமில்லை. தமிழர்களிடையே அறியப்பட்ட அரசியல்வாதி யாரும் இல்லை. எனினும் பாயின் உறவுக்காரப் பெண் ஒருவர் என்.எல். டி கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவர் சூச்சியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டார். ஆனால் பாய் ஆர்வம் காட்டவில்லை.
பாய் 1966ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து வெளியேறினார். அதற்கு ஆறு ஆண்டுகள் முன்பே பதினைந்து வயதுச் சிறுமியாக இருந்த சூச்சி பர்மாவிலிருந்து வெளியேறிவிட்டார். அப்போது பிரதமராக இருந்த ஊ நூ, சூச்சியின் தந்தை அவுங் சானின் சகா. அவர் தனது தோழரின் மனைவியை 1960இல் இந்தியத்தூதராக நியமித்தார். அப்போது அம்மாவோடு இந்தியா சென்ற சூச்சி, 1962இல் ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு பலகாலம் பர்மா திரும்பவில்லை. ஆகவே சூச்சியைக் குறித்து பாய் நெருக்கமாக அறிந்திருக்கவில்லை; அதனால் சூச்சியைக் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் பாய்க்கு ஆர்வமில்லை. அப்படி நினைத்தேன். அது தவறு என்று இப்போது தோன்றுகிறது. பாய் உலகச் செய்திகள் அனைத்தையும் ஊன்றிப் படித்தவர். அவருக்கு சூச்சியைக் குறித்துப் பெரிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்று தோன்றுகிறது. பர்மா குறிப்புகள் நூலை வாசித்தவர்களுக்குத் தெரியும், பாய் யாரையாவது புகழ்வது என்றால் வகைதொகையின்றிப் புகழ்வார். ஆனால் எவரையும் விமர்சிக்கவோ குறைத்துச் சொல்லவோ மாட்டார். அதனால்தான் சூச்சியைக் குறித்த சந்தேகங்களை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை; சூச்சியைப் புகழ்ந்து பேசவுமில்லை.
பர்மியத் தமிழர்கள்
அந்தப் பயணத்தில் பர்மியத் தமிழர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது. 1962இல் ஏற்பட்ட ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான தமிழர்கள் மியான்மாரிலிருந்து வெளியேறினார்கள். அப்போது மியான்மாரிலேயே தொடர்ந்து வாழ்வதெனத் தமிழர்கள் பலர் முடிவெடுத்தனர். மியான்மாரின் தற்போதைய மக்கள் தொகை 5½ கோடி. அதில் இந்தியர்கள் 2% (11 லட்சம்). இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களே. ஆண்கள் அனைவரும் பர்மியர்களைப் போல சட்டையை உள்ளே விட்டுக் கைலியை மேலே கட்டியிருந்தார்கள். பெண்களில் பலரும் பர்மியர்களைப் போலவே கை வைத்த மேல்சட்டையும் கைலியும் உடுத்தியிருந்தார்கள். எல்லோரும் சரளமாக பர்மிய மொழியைப் பேசுகிறார்கள். கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் ஈடுபாட்டோடு போகிறார்கள். தமிழர்களிடையே செல்வந்தர்கள் குறைவு. கிராமவாசிகள் விவசாயத்திலும் நகரவாசிகள் சிறிய வர்த்தகங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். பர்மிய அடையாளத்தையும் தமிழ் அடையாளத்தையும் அவர்கள் ஒருசேரப் பேணுவதாக எனக்குத் தோன்றியது. என்றாலும், சீனர்களைப் போல தமிழர்களால் பர்மியர்களோடு இரண்டறக் கலக்க முடியவில்லை. தோற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். சமயம் பிறிதொரு காரணமாக இருக்கலாம். மேலும், இவர்கள் நான்காவது, மூன்றாவது தலைமுறையாக மியான்மாரில் வாழ்கிறவர்கள். எனினும் கலாச்சார வேர்களோடு உள்ள பிணைப்பைத் தொடர்ந்து பேணுவது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
தமிழ் இளைஞர்கள் பலரும் தங்கள் பெற்றோர்களைப் போலன்றி, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். பர்மியப் பயிற்றுமொழியில் படித்ததால் தமிழும் ஆங்கிலமும் பேசச் சிரமப்படுகிறார்கள். தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கெடுபிடிகளுக்கிடையே வாழக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். நான் போயிருந்தபோது தளபதி தெயின் அறிவித்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துகொண்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரிடமும் பார்க்க முடிந்தது. மாறிவரும் சூழலுக்குத் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், இந்திய அரசோ தாய்த் தமிழகமோ தங்களுக்காகக் குரல் கொடுக்காது என்பதும் மியான்மார் தமிழ்ச் சமூகத்திற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை யாரும் ஒரு புகாராகச் சொல்லவில்லை.
வருங்காலம்
இப்போது 2020 தேர்தல் முடிவுகள் ஊடகங்களில் பெரிய செய்தியாக இல்லை. 2015 தேர்தலின்போதும், அதன் முடிவுகள் வெளியானபோதும், என்.எல்.டி பதவியேற்றபோதும் மியான்மாரிலும் உலக நாடுகள் இடையேயும் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்போது எல்லாம் வடிந்துவிட்டது. மியான்மாரில் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குமான பாதைகள் அடைபட்டுவிட்டன என்கிற கருத்துதான் பரவலாக இருக்கிறது. பெரும்பான்மையினரின் ஆதரவு சூச்சிக்கு இருக்கிறது. சிறுபான்மையினரின் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. இனி மீண்டும் அரசமைக்கப் போகும் என்.எல்.டி.யிடமும் சூத்திரதாரியாக இயங்கும் ராணுவத்திடமும் நாட்டின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் எனும் சர்வதேச அழுத்தம் எழுந்தால், அது மியான்மார் பின்னோக்கிப் போவதைத் தடுக்கும். 2010இல் நடந்ததைப்போல படிப்படியான மாற்றங்கள் நடக்கலாகும். பர்மாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கும் அது நல்ல சேதியாக இருக்கும். மியான்மாரின் வணிகம் பெருகினால் அது அவர்களோடு வரலாற்றாலும் கலாச்சாரத்தாலும் பிணைக்கப்பட்டுள்ள தாய்நாட்டுத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சி தரும். அப்போது ‘யாங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!’ என்று புதிய தமிழ் சினிமா ஒன்றின் நாயகன் வசனம் பேசக்கூடும்.
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com
‘பராசக்தி’ வசனத்தில் ஆரம்பித்து அதே போன்ற வசனத்தை புதிய தமிழ்த் திரைப்படக் கதாநாயகன் பேசும் வாய்ப்பை சூச்சி ஏற்படுத்த வேண்டும் என்று முடித்துள்ளார் எங்கள் வகுப்பு தோழர். அவருக்கு என் வாழ்த்துகள்.
LikeLiked by 1 person