Burma Memoirs: வெளியீட்டு விழாக்கள், சென்னை

சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

எஸ். நரசிம்மன்

சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட, ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நடுவே தொகுப்பாசிரியர் மு இராமனாதன்

டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூல் வெளியிடப்பட்டது.ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படும் யூனூஸ் அவர்கள், 43 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் 42 ஆண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். இந்த நூல் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, அரசியல், இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது

புத்தகக் கண்காட்சி அன்றும் ஜனத்திரள் மிகுந்து காணப்பட்டது. இப்போதெல்லாம் எல்லா கண்காட்சிக்கும் வந்து சுற்ற நிறையப் பேர் இருக்கிறார்கள். என்றாலும், இங்கே ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம் . நூல் விற்பனையும் அதிகம் என்கிறார்கள். காலச்சுவடு இதழும் அதன் பதிப்புகளும் மட்டுமல்ல, அப்பதிப்பகத்தின் நூல் வெளியீடும் வித்யாசமாகத்தான் இருக்கிறது. கண்காட்சி நடந்த டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை, ஒவ்வொரு தினமும் ஒன்றோ இரண்டோ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்வுகள் காலச்சுவடு அரங்கிலேயே நடந்தன. விளம்பரங்கள் கிடையாது, விழா மேடை இல்லை, பொன்னாடையும், மாலை மரியாதையும் இல்லை, வார்த்தைப் பந்தல்கள் இல்லை.

எனது பர்மா குறிப்புகள்” வெளியிடப்பட்ட டிசம்பர் 31 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் (www.ilakkyavattam.com) உறுப்பினர்கள் பத்துப் பேர்- தற்போது சென்னையில் வசிப்பவர்கள், அல்லது விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தவர்கள்- நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். மற்றபடி கண்காட்சிக்கு அந்நேரம் வந்திருந்தவர்களே பார்வையாளர்களாய் அமைந்தனர்.

காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதி தனது வரவேற்புரையில் நூலைக் குறித்தும் தொகுப்பாசிரியரைக் குறித்தும் சுருக்கமாகப் பேசினார். சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார், ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை நிகழ்த்தினார். எளிய,ஆனால் ஒரு நிறைவான நிகழ்வாக அமைந்தது.

எண்பத்தைந்து வயது இளைஞர் யூனுஸ் பாயின் அர்த்தம் தோய்ந்த பர்மீய வாழ்க்கையின் சில பக்கங்களை புரட்டிக் காட்டுகிறது இந்நூல். நூலை வெளியிட்ட எஸ்.நரசிம்மன், முன்பே, ஹாங்காங்கில் யூனுஸ் பாயுடன் பழகியிருந்தாலும், இந்நூலைப் படித்தபோது தனக்குத் தோன்றிய புதிய பரிமாணங்களைப் பற்றிப் பேசினார்.

அன்பு என்ற ஒரே ஆயுதம் கொண்டு தன் வாழ்வைச் சிறப்பாக நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய யூனுஸ் பாய், பர்மாவில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்த காலம் தொடங்கி, கண்ணீரும் கவலையும் கொண்டு வெளியேறிய அனுபவங்கள் வரை, மிகை இன்றி, நேர்மையாக,ஒரு வரலாற்றுச் சாட்சியமாக பதிவு செய்திருக்கிறார்.

யூனுஸ் பாய் ஒரு வித்தியாசமான மனிதர் என்றால், அவரது பர்மிய வாழ்க்கை ஒரு நூல் வடிவானது இன்னொரு வியப்பான நிகழ்வு. இதற்கான பெருமை ஹாங்காங்கில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே தமிழிலும் எழுதி வரும் மு இராமனாதன் அவர்களைச் சேரும்.

யூனஸ் பாயைப் பல முறை சந்தித்து, அவர் சொன்னவற்றை ஒலிப்பதிவு செய்து, ஆர்வமுள்ள நண்பர்களைக் கூட்டி, ஒரு குழு அமைத்து, ஒலிவடிவத்தை எழுத்துக்கு கொணர்ந்து, மீண்டும் அவற்றை வகைப்படுத்தி, எடிட் செய்து, இனம் பிரித்து, நூலாகத் தொகுத்த அனுபவத்தை இராமனாதன் தனது ஏற்புரையில் பகிர்ந்து கொண்டார். அதையே தனி நூலாக எழுதலாம் போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சிறப்பாகத் தொகுத்த இராமனாதனுக்கும், செம்மையாக வெளியிட்டிருக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நன்றி.

snntamil@gmail.com

நன்றி: திண்ணை.காம், ஆகஸ்ட் 14, 2010

%d bloggers like this: