காரைக்குடியில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
ரெ.சந்திரமோகன்

பிப்ரவரி 13, 2010 சனிக்கிழமையன்று காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் செ.முஹம்மது யூனூஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சக்தி அ.திருநாவுக்கரசு தலைமை வகித்து நூலினை வெளியிட்டார். பேராசிரியர் டாக்டர் அய்க்கண் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் நா.வள்ளி திறானாய்வுரை நிகழ்த்தினார். நூலின் தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை வழங்கினார்.
ஆசிரியர்கள் தாம் நூலை நேராக எழுதுவார்கள். ஆனால் இந்த நூலில் முஹம்மது யூனூஸ் பேசப் பேச அதைக் கேட்டு, எழுதி, தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இராமனாதன்; இதற்காக இரண்டாண்டு காலம் உழைத்திருக்கிறார், இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது என்று பேசினார் சக்தி அ.திருநாவுக்கரசு. இது நூல் தயாரிப்பில் ஒரு புதிய முறை. இதே முறையில் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வரலாற்றை அவரது சமகாலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்தார்.
டாக்டர் அய்க்கண் தனது சிறப்புரையில், இந்த நூலின் நாயகன் முஹம்மது யூனூஸ் ஒரு சாமானியன்தான். ஆனால் இந்த நூலில் அவர் உண்மையைச் சொல்கிறார், ஒளிவு மறைவின்றி நேர்மையோடு சொல்கிறார், எளிமையாகச் சொல்கிறார், நினைவாற்றலோடு சொல்கிறார், இவையே இந்த நூலை வெகு சிறப்பான ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்றார். நூலின் ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் இருக்கிறது, பல்வேறு அரிய பதிவுகளும், அனுபவத்தில் தோய்ந்த யதார்த்தமான விமர்சனங்களும், அவை அக்கால சாமானியனின் உணர்வுகளாகவும், எந்தவிதச் சார்பும் இல்லாமல் அமைந்திருப்பதையும் பாராட்டினார். ஒரு தமிழ் நூல் மிகச் சிறந்த கட்டமைப்போடு வெளியாகியிருக்கிறது என்று கூறி நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்டினார்.

பர்மீயர்கள் எவ்வளவு அன்பாக நம்மை நடத்தினர் என்றும், காலப்போக்கில் அது எப்படி வெறுப்பாக மாறியது என்றும், இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்தவர்கள் பர்மாவில் எவ்வாறு வாழ்ந்தனர் என்றும், நூலில் இடம் பெறும் பல பதிவுகளைக் குறித்து விரிவாகப் பேசினார் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் நா.வள்ளி. இந்த நூல், யூனூஸ் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலை அவருக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். இது புரட்டிக் கொண்டு போக வேண்டிய நூலல்ல, எழுத்து எண்ணிப் படிக்க வேண்டிய நூல் என்று பாராட்டினார். தொகுப்பாசிரியர் முன்னுரையோடு விலகி நின்று கொண்டாலும் அவரது உழைப்பை நூல் நெடுகிலும் பார்க்க முடிகிறது என்றார்.
தனது ஏற்புரையில் தொகுப்பாசிரியர் மு. இராமனாதன், யூனூஸ் பாய் ஒரு மகத்தான மனிதர் என்றும், இந்த நூலைத் தொகுக்கும் எண்ணம் தனக்கு எவ்விதம் ஏற்பட்டது என்றும், அது நண்பர்களின் உதவியோடு எவ்விதம் சாத்தியமானது என்றும் விளக்கினார். கரைபுரண்டு சுழித்துக் கொண்டு ஓடும் யூனுஸ் பாயின் அனுபவங்களிலிருந்து தான் முகர்ந்திருப்பது ஒரு குடம் நீர்தான் என்றார். தான் பிறந்த வளர்ந்த மண்ணில், தமிழ் கற்ற கம்பன் மணிமண்டப முற்றத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் ரெ.சந்திரமோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
chandramohan@rediffmail.com
நன்றி: திண்ணை.காம், ஆகஸ்ட் 14, 2010