Burma Memoirs: மதிப்புரைகள்

எனது பர்மா குறிப்புகள் – வரலாற்று சாட்சியம்

உரை

எஸ். நரசிம்மன்

வணக்கம்!

இந்த இனிய மாலைப்பொழுதில் ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்றழைக்கப்படும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி நினைக்கவும் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு அளித்த அவர்தம் “எனது பர்மா குறிப்புகள்” என்ற இந்நூலுக்கும் இதை மிகச் சிறப்பாகத் தொகுத்திருக்கும் நண்பர் மு. இராமனாதனுக்கும் நல்ல முறையில் நூலைத் தயாரித்து வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றி.

நானும் ஹாங்காங் நகரத்தில் கொஞ்ச காலம் இருந்தேன். அப்போது இந்நூலின் நாயகனான யூனூஸ் பாய் அவர்களுடன் பழகி உள்ளேன். அவரது எளிமை, தன்னடக்கம், எப்போதும் தெளிக்கும் உற்சாகம், தமிழ் மேலுள்ள தணியாத தாகம், சமூக அக்கறை ஆகியவற்றைக் கண்டிருக்கிறேன். இன்று அவரது பர்மா குறிப்புகளைப் படித்துவிட்டு வியந்துபோய் நிற்கிறேன்.

பர்மாவில் பிறந்து, வளர்ந்து, அதன் ஈரமண்ணில் விளையாடி, அதன் மக்களோடு உறவாடி, பின் புலம்பெயர்ந்து ஹாங்காங் நகரம் புகுந்து, தொழில் தொடங்கி, தலையெடுத்து, அங்கும் தன் நற்செயல்களால் புதிய களம் அமைத்து, தமிழ் வளர்த்து, ‘வாழ்வின் அர்த்தமே மானுடத்தை நேசிப்பது’ என்று வாழ்ந்து வரும் ஒரு மனிதரின் வாழ்க்கைப் பதிவுகள் இந்நூலில் வரலாற்றுப் பெட்டகமாகியுள்ளன.

யூனூஸ் பாய்க்கு அபாரமான நினைவாற்றல்! பர்மாவைவிட்டு விலகிப் பல காலமான (1966) பின்பும் அது எப்படி ஒவ்வொரு பர்மீய நாளும் பொழுதும் நடந்ததும் ஓடியதும் உரிமைகளுக்காகப் போராடியதும் உறவுகளை வேண்டி அலைந்ததும் என. . . அத்துணை நிகழ்வுகளையும் தெளிவாக அவரால் பதிவுசெய்ய முடிகிறது. ஓர் உதாரணம் – அவர்தம் சொந்த ஊரான சவுட்டான் பற்றிய படப்பிடிப்பு! ஆசை ஆசையாய்ச் சொல்லும் வரிகள்: ஊரின் வளம், வயல்கள், வற்றாத நதி, நதியில் போகும் ‘சம்பான்’ எனும் படகு, ஒரு நாளில் இரண்டுமுறை பெருகும் வெள்ளம், நதியிலே மீன் பிடித்து, படகிலேயே சமைத்து உண்ணும் வங்காளப் படகோட்டிகள், பஜார் நிறைய இந்தியக் கடைகள், தையற்கடை துரைச்சாமி, பழனிப் புலவர், ராமுலு, முடிதிருத்தும் சலூன்கள், நீண்ட முடிகளுடன் ஆண்கள், தொடைவரை பச்சை குத்திய பர்மீயர்கள், வடக்கே ‘சிங்கான் ஓடை’, உயரமான தேவாலயம், தமிழகத்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் கன்னியாஸ்திரிகளும் எடுத்துக்கொண்ட எந்த வழக்கிலும் தோற்றுப்போகாத அட்வகேட்டுகள், செட்டி யார் தெருவின் வட்டிக்கடைகள், ஏஜெண்டுகள், முருகன் கோயில், நடேச பத்தர், தேவைக்கு மேல் கிடைத்த அரிசியை விற்ற பிச்சைக்காரர்கள் எனப் பர்மீயர்களும் இந்தியர்களும் வாழ்ந்த புன்னகை பூத்த பூமியை ஒரு திரைப்படம்போல் விவரிக்கிறார்.

யூனூஸ் பாயின் 42 ஆண்டு கால பர்மீய வாழ்க்கையில், பர்மா பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. அந்தச் சரித்திரப் பதிவுகளை வெகு சரளமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நேதாஜி என்னும் மாபெரும் தலைவரை, அவரது ராஜதந்திரத்தைப் போற்றுகிறார். அவருடைய இந்திய சுதந்திர லீக்கில் பங்காற்றியதில் பெருமை தெரிகிறது. ஜெர்மனியின் ஆவேசம், ரஷ்யாவின் இழப்புகள், ஜப்பானின் படையெடுப்பு, பர்மாவின் தடுமாற்றம், ரங்கூன்மீது குண்டு வீச்சு, போருக்கு நடுவே அலைக்கழிக்கப்பட்ட வாழ்வு என்று தன் நினைவுக் குறிப்புகளிலிருந்து விவரங்களையும் விளக்கங்களையும் வியக்கும்படி எடுத்துவைக்கிறார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட நேரடி அனுபவங்களை விவரிக்கும்போதுகூடத் தன்னுடைய கதையைச் சொல்லாமல் நாடு பட்ட பாட்டைச் சொல்கிறார். தன்னைச் சுற்றி நடந்தவற்றைச் சொல்லும் போதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத விவேகம் இவரது பண்பு.

முஹம்மது யூனூஸ் அவர்கள் அன்பே உருவானவர். அவரது உலகில் கடுஞ்சொற்களுக்கும் வன் முறைக்கும் இடமில்லை. ‘பர்மா’ என்னும் நாடு இந்தியர்களை அரவணைத்து ஏற்ற காலம் போய் இந்தியர்களை வெறுத்து வெளியேற்றிய நாளையும் கனத்த மனத்தோடு ஆவணப்படுத்துகிறார். வெளியேற்றத்தின்போது பர்மீய அதிகாரிகள் இந்தியப் பெண்களின் தாலியைக்கூடப் பறித்துக்கொண்டனர் என்கிறார். இந்த நூலின் உச்சபட்ச கடுஞ் சொற்கள் அடுத்து வருகின்றன. “ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்று சொல்வார்கள். அந்தக் கண்ணீர், அந்தப் பெண்களின் சாபம், அந்த நாட்டைவிட்டு இன்னும் அகலவில்லை, அதனால் தான் அந்த நாடு இன்னும் முன்னேறவில்லை என்று எனக்குத் தோன்றும்.”

புத்தகம் முழுவதும் சுவையான நிகழ்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. தனது புகைப்படத்தை எடுத்துக்கொள்ளாத ஏ. கே. செட்டியார், காந்தி படத்தில் பின்னணி பேசிய வை. மு. கோதைநாயகி, ‘கோவலன்’ நாடகத்தில் உள்ள வேடிக்கைகள், ‘காமிகாஜே’ எனும் பெயர் கொண்ட ஜப்பானியத் தற்கொலைப் படை விமானங்கள் அழித்த பிரமாண்டமான பிரிட்டிஷ் கப்பல்கள், ராணுவ ஆட்சி வெளியிட்ட ஒன்பது ரூபாய் நோட்டுகள், ‘Smile Pinky’ புகழ் Cleft Lips சிகிச்சையை 1934இலேயே இலவசமாகச் செய்த டாக்டர்.என்.எஸ். பிள்ளை, பெரியாரும் மணியம்மையாரும் பர்மா வந்தபோது அவர்களுக்குச் செய்ய முடிந்த உதவிகள், பறந்துகொண்டிருந்த விமானத்தில் திறந்துகொண்ட அவசரவாயிலும் அப்போது யூனூஸ் பாய் செய்த ‘சாகச’ங்களும் என்று ஏகப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை எந்த வித ஆர்ப்பாட்டமும் மிகைப்படுத்தலும் இல்லாமல் விவரிக்கிறார்.

நூல் நெடுகிலும் நல்ல தமிழ் மேற்கோள்கள் வருகின்றன. அச்சம் கவ்வியிருந்த போர்க் காலச் சூழலில், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கொட்டும் பனியில் வெட்ட வெளியில் வைக்கோலைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தபோது அவருக்கு ஔவையாரின் “தையும் மாசியும் வையகத்து உறங்கு” எனும் வரி நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியாலேயே குறுநில மன்னர்களைத் தோற்கடித்தார்கள் என்று சொல்லும்போதும் “காதம் இருபத்தி நாலன்றி . . .” என்று குலோத்துங்கனைக் கடிந்து கம்பன் கூறிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகள் ஜெர்மனியை நடத்திய விதத்தைச் சொல்லும்போது ஈசாப் கதைகள் வருகின்றன. காந்தியடிகள் தீண்டாமையை எதிர்த்துப் போராடியதைச் சொல்லும்போது தியாகராஜ பாகவதரின் பாடல்களை அவர் நினைவுகூர்கிறார். எழுதுகிற வனின் பொறுப் புணர்ச்சியைப் பற்றிப் பேசும்போது வைரமுத்துவின் கவிதை வரிகளைப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் நூலின் தொகுப் பாசிரியர் மு. இராமனாதன் ஒரு கட்டியங்காரனாக நின்றுகொண்டு யூனூஸ் பாயை வாசகனுக்கு அறிமுகம் செய்கிறார். யூனூஸ் பாயின் நேர்காணல்கள் எவ்விதம் பதிவு செய்யப்பட்டு எப்படித் தொகுக்கப்பட்டன என்றும் விவரிக்கிறார். இந்த முன்னுரை நூலுக்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.

இந்நூலில் வரலாறு இருக்கிறது; ஒரு காலகட்டத்தின் கலாச்சாரம் இருக்கிறது. இந்நூல் மனித உறவுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது; பல்வேறு சமூக, அரசியல் நடப்புகளை ஆழமாய் ஆராய்கிறது; கலை, இலக்கியம் குறித்த பதிவுகளும் விரிவாக உள்ளன. ஆனால் இது சுயசரிதை அல்ல. தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியாத ஒரு பண்பான மனிதனின் மனப் பதிவுகள். இந்நூல் நமக்குத் தருவது ஒரு நேர்மையான மனிதனின் வரலாற்றுச் சாட்சியத்தை.

பாரதி சொல்லுவான்:

வையத்தில் அன்பிற்சிறந்த தவம் இல்லை!

அன்புடையார்

இன்புற்று வாழ்தல் இயல்பு!

அப்படிப்பட்ட ஒரு அன்புடையாரின் ஒரு பரிமாணம்தான் இந்நூல்.(எஸ்.நரசிம்மன் சென்னையில் இந்திய வங்கி ஒன்றில் தலைமை மேலாளராகப் பணியாற்றுகிறார். ஹாங்காங்கில் நான்கு வருடங்கள் பணியாற்றினார். 31.12.09 அன்று காலச்சுவடு அரங்கில் செ. முஹம்மது யூனூஸ் அவர்களின் ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலை வெளியிட்டுப் பேசினார். அந்தப் பேச்சின் எழுத்து வடிவம் இது.)

%d bloggers like this: