நெகிழ்ச்சியும் செம்மையும்
நூல் : எனது பர்மா குறிப்புகள்.
ஆசிரியர் : செ.முஹம்மது யூனூஸ்.
விலை : ரூபாய் 165/-.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை,
நாகர்கோவில்-629 001.
ஃபோன் : 04652-278525.
ஹாங்காங்கில் வசிக்கும் இந்நூலாசிரியர், தனது 85 வயதிலும் கூட, தான் பிறந்து வளர்ந்து 42 ஆண்டுகள் வரை வாழ்ந்த பர்மாவின் அன்றைய காலகட்ட நினைவுகளை அடுக்கடுக்காகக் கூறும் விதம், படிப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. ஏதோ ஆங்கிலேயர் காலத்திய, அதிலும் வேறொரு நாட்டைப் பற்றிய குறிப்புகள்தானே என்று மேலோட்டமாக வாசிக்க முனைந்த நான், பிறகு ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து, ஆழமாகப் படிக்கும்படி ஆனது. இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் பல குடும்பங்கள் அன்று செல்வச்செழிப்போடு திகழ்ந்ததற்கு, பர்மா சம்பாத்தியம் எப்படி காரணமாக அமைந்தது என்பது முதல், அங்கே ஹிந்துக்களும், முஸ்லிம்களும், பர்மீயர்களும் இணக்கமாகவும், மற்றவரது கலாச்சாரங்களை மதித்தும், ‘மாமா – மச்சான்’ என்று உறவுமுறைகளைக் கூறியும் ஒற்றுமையாக வாழ்ந்த, அந்த வசந்த கால நினைவுகளை எல்லாம் ஆசிரியர் ரசனையோடு கூறியுள்ளது நம்மையும் அந்தச் சூழ்நிலையோடு ஐக்கியப்படுத்துகிறது. இவை தவிர, இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக வெளியேற நேர்ந்தது… என்று இதுவரை வெளிவராத, மனதை நெகிழ வைக்கும் பல தகவல்களும் இந்நூலில் செம்மையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
– பரக்கத்
நன்றி: துக்ளக், 31-03-2010