Burma Memoirs: மதிப்புரைகள்

நிகழ்வுகளின் கதை

எனது பர்மா குறிப்புகள்

ஆசிரியர்: செ. முகம்மது யூனூஸ்,  தொகுப்பு: மு. இராமனாதன்,  பக்கங்கள்: 220, விலை: ரூ.165

மிக எளிமையாக, ஆரம்பகாலத்து பர்மாவை நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் யூனூஸ் பாய், நம்மை காலத்தினூடே, பர்மாவின் வளர்ச்சியையும் அதில் பெரும் பங்கு பெற்ற இந்தியர்களையும் காண்பித்துச் செல்கிறார்.

ஆரம்பிக்கையிலேயே பர்மியத் திருநாடு என்றுதான் அழைக்கிறார் -அதிலிருந்தே அவருக்கு அந்நாட்டின் மீதுள்ள அளவில்லாத பற்று தெரிகிறது. ரங்கூன், கிழக்கு லண்டன் என்றழைக்கப்பட்டது. அதன் பெயர்க்காரணம் என்ற விவரங்களைக் கூறிவிட்டு, ஜாதி மதம் பாராது இந்தியர்கள் வாழந்ததை விவரிக்கிறார். இந்துக் கோவில்களில் இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு வருவதும்,அவர்கள் அவற்றில் பங்குகொள்வதும் அன்றைய பர்மிய இந்திய சமூகம், இந்தியாவை விட பன்மடங்கு சிறந்த சமூகமாகவே வாழந்தது என்பதும் தெளிவாகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், 1930ம் வருடத்தில் முதலில் துறைமுகத் தொழிலாளர்கள் இடையில், ஒரு கலகம் மூண்டது. அதற்குக் காரணம் பர்மியர்கள் தாங்களே வளர்த்துக் கொண்ட பொறாமைதான். அன்றைய  ரங்கூன் துறைமுகத்து கடைநிலைத் தொழிலாளர்கள் எல்லாருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கடின உழைப்பாளிகள் – ஆகையால் அவர்களால் முன்னேற முடிந்தது.

பர்மியர்கள், தங்களது தொழிலை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக நினைத்தார்கள். கடின உழைப்புடன் முன்னேறும் இந்தியர்களை அவர்கள் வெறுக்க ஆரம்பித்தது ஊசோ என்பவர் தலைமையின் கீழ் தான். இக்கலகம் பின், அதாவது 1938ல் பெரிதாகவே வளர்ந்தது. இந்நிகழ்ச்சிகளை எளிய முறையில் யூனூஸ் விளக்குகிறார்.

குடியுரிமைச் சிக்கல்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிலையை நன்றாகச் சித்தரிக்கிறது. நாடு கடத்தப்படும் உத்தரவு பெற்ற தமிழ் விவசாயிகள், (அரை நிர்வாணத்தில் உடை) இந்திய பாஸ்போர்ட் கூட இல்லாதவர்கள் பட்டபாடு கண்ணீரை வரவழைக்கிறது. ராணுவ ஆட்சி வந்தவுடன் இந்தியர்கள் வெளியேற ஆரம்பித்தனர். அவ்வாறு வெளியேற முனைந்தவர்கள் பட்டபாட்டை விவரிக்கிறார் யூனூஸ்.

ஆசிரியர் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாது, நிகழ்வுகளின் கதையாகவே தனது சுய  சரிதையைச் சொல்லியிருப்பதாகும்.

புலம் பெயர்ந்து வாழும்  தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

– முனைவர். கே. ஆர். பாலசுப்பிரமணியன்.

நன்றி: தினமலர், சென்னை, ஞாயிறு, 4-7-2010

%d bloggers like this: