Burma Memoirs: மதிப்புரைகள்

நூல் வடிவில் ஓர் ஆவணம்

சுப வீரபாண்டியன்

“பர்மா என்று சொல்லும்போது, எனக்கு அது ஓர் அந்நிய நாடாகத் தோன்றவில்லை. காரணம், நான் அந்த நாட்டில்தான் பிறந்தேன், வளர்ந்தேன், படித்தேன், பழகினேன். நான் அங்கே உருவாக்கப்பட்டேன்” என்று கூறும் பெரியவர் முகம்மது யூனூஸின் சொந்த ஊர், தமிழ்நாட்டில் உள்ள கீழக்கரை. யூனூஸ் பாய் என்று ஹாங்காங் தமிழர்கள் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பெரியவரின் வயது 86.

பர்மாவில் பிறந்த அவர், 42 வயது வரை அங்கு வாழ்ந்தவர். 1966ஆம் ஆண்டு ஹாங்காங் சென்றடைந்தார். இன்று வரை அங்குதான் உள்ளார். தமிழ்நாட்டிற்கும் வந்து போயிருக்கிறார். வாழ்நாள் முழுவதும் வெளிநாடுகளிலேயே வாழ்ந்திருந்தாலும், தமிழ் மொழியில் மட்டுமின்றித் தமிழ் இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல புலமை உள்ளது. உரையாடலில் இடையிடையே திருக்குறள் இடம்பிடித்துக் கொள்கிறது.

யூனூஸ் பாயின் பர்மா வாழ்க்கையை, அவர் சொல்லச் சொல்ல, மு.ராமநாதனும், அவருடைய நண்பர்களும் எழுத்தில் வடித்து நூலாகத் தந்துள்ளனர். தன் வரலாற்று நூல்தான் என்றாலும், அவருடைய வாழ்க்கை மட்டுமே அந்நூலில் இல்லை. சரியாகச் சொன்னால், அவர் வாழ்க்கை தொடர்பான செய்திகள் நூலில் மிகக் குறைவாகவே உள்ளன. பர்மீய மக்களின் பண்பாடும், பர்மாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்நிலையும்தான் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. அரை நூற்றாண்டுக்கு முந்திய பர்மாவின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ள அரிய நூல் என்று இதனைக் கூறலாம்.

இரண்டாம் உலகப் போர் (1939-45) நடைபெற்ற காலம் முழுவதும் யூனூஸ் பாய் பர்மாவில் இருந்துள்ளார் என்பதால், அது தொடர்பான அரசியல் செய்திகளும் நூலுள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போரில் மிகக் கூடுதலாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் பர்மாவும் ஒன்று ஆகும். அந்த பாதிப்புகளையும், மக்களிடையே ஏற்பட்டிருந்த மன உளைச்சல்களையும் பெரியவர் கூர்மையாகப் பதிவு செய்துள்ளார். நேதாஜி பற்றிய மிக முக்கியமான, வேறுபட்ட பார்வை ஒன்றும் இந்நூலில் காணக் கிடக்கிறது.

ஏராளமான செய்திகள் சொல்லப்பட்டுள்ளன என்பதோடு மட்டுமின்றி, அவை சுவையாகவும் சொல்லப்பட்டுள்ளன. இன்று வழக்கொழிந்து போன பழைய நாணயங்கள்  குறித்தும், அன்றையப் பொருளாதார நிலை குறித்தும், கூறப் பட்டுள்ள பகுதியை  அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

“ஒரு ரூபாய்க்கு 320 சாமன்கள் வாங்கலாம். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஒரு ரூபாய்க்கு 320 சல்லி – அம்மன் சல்லி என்று சொல்லுவார்கள். ஆங்கிலேய ஆட்சியில் 64 காசு அல்லது 192 தம்படி. ஒரு காசிற்கு மூன்று தம்படி. ஒரு காசுக்கு மூன்று சாமான்கள் வாங்கலாம். ஒரு பெரிய வெங்காயம், ஒரு பூண்டு, கொஞ்சம் கடுகு வாங்கிக் கொண்டு ஒரு காசு தரலாம். மிச்சத்திற்குக் கொஞ்சம் வெந்தயம் கொடுங்கள் என்று கேட்டும் வாங்கலாம்” என்கிறார் யூனூஸ் பாய்.

இதைப் படிக்கும்போதுதான், ‘இந்தப் பயல் ஒரு சல்லிக் காசுக்கும் பொற மாட்டான்’  என்று பெரியவர்கள் அன்று திட்டியதன் பொருள் புரிகிறது. அதாவது, ஒரு ரூபாயில் 320இல் ஒரு பங்குக்குக் கூடப் பயன்பட மாட்டான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பர்மாவில் அவர் பிறந்து வாழ்ந்த ‘சவுட்டான்’ (பர்மீய மொழியில் Kyauktan) என்னும் ஊரின் அமைப்புப் பற்றியும், அவ்வூர் மக்களின் கள்ளங் கபடம் இல்லாத குணங்கள் பற்றியும் விளக்கும் பக்கங்கள், நம்மை பர்மாவிற்கே அழைத்துச் செல்கின்றன என்றுதான் கூற வேண்டும்.

தமிழகத்திலிருந்து பர்மா சென்று, அந்தக் கால கட்டத்தில் நாடகங்களை நடத்திய, டி.பி.ராஜலெட்சுமி-மைதீன் சாகிப், கிட்டப்பா-சுந்தராம்பாள், எம்.எஸ்.விஜயன்-பி.எஸ்.கோவிந்தன் ஆகிய நாடகக் குழுவினர் குறித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாம் உலகப் போர் பற்றிய சரியான பார்வை ஒன்றையும், நூலாசிரியர் குறித்துள்ளார். முதல் உலகப் போர் முடிவடைந்தபின், வெற்றி பெற்ற நாடுகள், தோல்வியடைந்த நாடுகளான ஜெர்மனி, துருக்கி ஆகியனவற்றின் பகுதிகள் சிலவற்றைத் தங்கள் வயமாக்கிக் கொண்டதுதான், தொடர்ந்த வெறுப்புக்கும், பகைக்கும் காரணமாயின என்று கூறுகிறார்.

முதல் உலகப் போருக்கு முன்பு, உஸ்பெஸ்கிஸ்தான். கஜகஸ்தான் ஆகியவை துருக்கியின் கீழ் இருந்தன. பிறகு அவை ரஷ்யாவின் கீழ் ஆக்கப்பட்டுவிட்டன. அது போலவே, ஜெர்மனியின் பகுதியாக இருந்த ஆஸ்திரியா, பவேரியா ஆகியனவற்றை மேலை நாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. இந்தச் செயல்தான், அந்த நாட்டு மக்களிடையே பெருங்கோபத்தை உண்டாக்கியது. அதனை இட்லர் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார் யூனூஸ் பாய்.

நேதாஜி பற்றிய ஒரு புதிய செய்தியையும் நூல் வெளிப்படுத்துகின்றது. 1941 டிசம்பர் 23ஆம் தேதி பர்மாவின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதனைத் தொடர்ந்து, இரண்டே மாதங்களில், பர்மா முழுவதையும் ஜப்பான் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வந்துவிட்டது.

வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்று விட்டதாய் எண்ணிப் பர்மீய மக்கள் முதலில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வெள்ளையர்களை விட ஜப்பானியர்கள் அம்மக்களை இழிவாக நடத்தத் தொடங்கிய பின்னர், பர்மீய மக்களின் மனநிலை மாறியது. இதனை அருகிருந்து கவனித்த நேதாஜி, ஜப்பானியப் படைகளை இந்தியாவிற்குள் அழைத்துச் செல்வது குறித்து மறு ஆய்வு செய்திருக்கக்கூடும் என்றும், அதன் பயனாகவே விமான விபத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தான் உறுதியாக நம்புவதாக யூனூஸ் பாய் குறிப்பிடுகின்றார்.

மிக முக்கியமான இவ்வரலாற்றுச் செய்தி, ஆய்வாளர்களின் கவனத்திற்கு உரியதாக உள்ளது. நூலின் மொழி நடை, மிக எளிமையாகவும், படிக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. இம்முயற்சியை மு.ராமநாதன் முன்னெடுத்திருந்த போதிலும், ஏறத்தாழ 10 நண்பர்கள் ஒருங்கிணைந்து, ஒரு குழுவாகச் செயல்பட்டுள்ளனர். இத்தகைய கூட்டு முயற்சிகள், வரவேற்கத்தக்கனவும், பின்பற்றத்தக்கனவும் ஆகும்.

வரலாற்றிலும், பண்பாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாய்ப் படிக்க வேண்டிய நூல் இது.

(எனது பர்மா குறிப்புகள். செ.முஹம்மது யூனூஸ். தொகுப்பு. மு.இராமனாதன். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை.ரூ165)

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் மார்ச்16_10

%d bloggers like this: