YIFC: Tamil Class 3rd Annual Day-Felicitation

இவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாராட்டுவது!

[ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு, மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்தத் தமிழ் வகுப்புத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, 26 மே 2007 அன்று கைஃபாங் நலச் சங்க அரங்கில் நடை பெற்றது. அது போது மு.இராமனாதன் வழங்கிய பாராட்டுரை]

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்!

இந்தத் தமிழ் வகுப்புகள் மூன்று ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. இந்த நிறைவை ஒரு விழாவாகக் கொண்டாட  வேண்டும் என்று இளம் இந்திய  நண்பர்கள் குழு விருப்பப் பட்டபோது, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதற்குப் பிற்பாடு, அந்த விழாவிலே நாலு வார்த்தை நான் இந்த அமைப்பைப் பாராட்டிப் பேசவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். அப்போது என்னை அச்சம் தொற்றிக் கொண்டது. அதற்குக் காரணம் இருக்கிறது.

என்னுடைய அபிப்பிராயத்தில் இந்த உலகத்திலேயே மிகவும் சுலபமான  காரியங்கள் இரண்டு. முதலாவது சினிமா விமர்சனம். ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு அந்தத் தொழிலின் நுட்பத்தை, அதன் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் அந்தத் திரைப்படத்தை நல்ல அரங்கிலோ, ஒரு நல்ல டிவிடியிலோ, ஒரு நல்ல விசிடியிலோ கூட பார்த்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பத்து டாலருக்கு  மூன்று  என்று  சுங்கிங் மாளிகையில கூறு கட்டி விற்கப்படுகிற குறுந்தகட்டில், கோடுகளுக்கும் புள்ளிகளுக்கும் இடையில் ஆடுகிற படத்தைப்  பார்த்தால் தாராளம்! சினிமா விமர்சனம் செய்து விடலாம். ரொம்ப சுலபமான காரியம். இன்னொரு சுலபமான காரியம்தான் இந்தப் பாராட்டு வழங்குவது.  இதிலே ஹாங்காங்  தமிழ் மக்கள் தாராளப் பிரபுக்கள். அதிலேயும் இந்த மேடை நிகழ்ச்சிகளுக்குப் பிற்பாடு வந்து குவிகிற பாராட்டுக்கள்  சொல்லி மாளாது. இப்படிப் பாராட்டிப் பாராட்டி, ஒரு கட்டத்தில், இந்தப்  பாராட்டுகிறவருக்கும்  தெரிகிறது, இந்தப் பாராட்டைக்  கேட்கிறவருக்கும் தெரிகிறது, இது முகஸ்துதி என்று. இது ஒரு பொய்யுரை, இது ஒரு புகழுரை அல்ல என்றும் தெரிகிறது. என்றாலும் இந்த விளையாட்டு நடந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இவர்கள் என்னிடத்தில் ஒரு பாராடடுரை வழங்க வேண்டும் என்று சொன்னதால்தான் எனக்கு அச்சம் வந்தது. இது ஒரு வழக்கமான பாராட்டு, இது வெறும் முதுகு தட்டல் என்கிற  எண்ணம் கேட்பவர்களுக்கு வராமல், ஒரு மனமார்ந்த,  உள்ளார்ந்த  பாராட்டைச்  சொல்லுகிறோம் என்கிற உணர்வை அவையோருக்கு உண்டாக்க வேண்டுமே என்பதுதான் எனது அச்சத்திற்கான காரணம்.

இந்த இடத்திலே நான் இரண்டு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறேன். இரண்டும் மூன்று  மாதங்களுக்கு  முந்தைய செய்திகள். ஒன்றுக்கொன்று நேரடியாகத் தொடர்பில்லாத செய்திகள். ஒன்று தமிழ்நாட்டுச் செய்தி. மற்றொன்று ஹாங்காங்  செய்தி. தமிழ்நாட்டில், அடுத்து தொடங்கப் போகிற  கல்வியாண்டில், அதாவது 2007 ஜூன் ஒன்று முதல் தொடங்கப்படவிருக்கிற  கல்வியாண்டில், முதல் வகுப்பில் இருந்து படிப்படியாகத் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமென்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலகத்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். அதாவது முதல் ஆண்டிலே முதல் வகுப்புக்குகத் தமிழ் கட்டாயப் பாடம். அடுத்த ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்குக் கட்டாயப் பாடம். அதற்கு அடுத்த ஆண்டில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு.  இப்படியே படிப்படியாக இது போய்க் கொண்டிருக்கும். இது தமிழ்நாட்டுச் செய்தி.

ஹாங்காங் செய்தி என்னவென்றால், ஹாங்காங்கிலே அடுத்த கல்வியாண்டில் இருந்து, அதாவது 2007 செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அரசாங்கப் பள்ளிகளிலேயும் அரசாங்க நிதியுதவி பெறுகிற பள்ளிகளிலேயும் முதல் வகுப்பிலிருந்து தொடங்கி, படிப்படியாக சீன மொழி ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமென்று ஹாங்காங் கல்வி அமைச்சர் டாக்டர் ஆர்தர் லீ அறிவித்திருக்கிறார். சீன மொழி ஹாங்காங்கிலே கட்டாயமாக்கப்படும் என்று சொல்லும்போது், இதுவரை அது கட்டாயப் பாடமாக இல்லையா என்றால்… கட்டாயம்தான். ஹாங்காங்கிலே பெருவாரியாக இருக்கிற சீன மக்களுக்கு இதுவரை சீன மொழி கட்டாயப்பாடமாக இருந்தது. இனிமேல் ஹாங்காங்கிலே இருக்கிற பொதுப்பள்ளிகளிலேயும், அரசாங்கப் பள்ளிகளிலேயும், அரசு நிதியுதவி பெறுகிற DSS பள்ளிகளிலேயும் படிக்கிற எல்லாப் பிள்ளைகளுக்கும் இது கட்டாயப் பாடமாகும். அதாவது வேறு இனத்தவர்கள், வேறு நாட்டவர்கள் யாராக இருந்தாலும், பொதுப்பள்ளிகளிலே படிக்கிற மாணவர்கள், சீன மொழியை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்பது தான் இந்த உத்தரவின் சாராம்சம். இப்போது நம் தமிழ் வகுப்பிலே படிக்கிற பிள்ளைகளில் பொதுப் பள்ளிகளிலே படிக்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சில பேர் சீன மொழி படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதை அவர்கள் விருப்பத்தோடு செய்கிறார்கள். இனிமேல், அடுத்த கல்வியாண்டிலிருந்து முதல் வகுப்பிலே சேர்கிறவர்கள் சீன மொழியை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும். இங்கே ஹாங்காங்கிலே பணியாற்றுவதற்காக பல நாட்டவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களில் பலரும் இந்த மண்ணினுடைய மொழியைத் தங்கள் பிள்ளைகள் படிப்பதிலே ஆர்வமுடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆக, இது இனி எல்லாத் தரப்பினரின் ஆதரவோடும் நடைமுறைக்கு வரும். 

இப்போது தமிழ் நாட்டிலே அறிவிக்கப்பட்டிருக்கிற சட்டம் என்னவென்றால், தமிழைத்  தாய் மொழியாகக் கொண்டிருக்கிற மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் மொழியை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும். அப்படியானால், இதுவரை தமிழைத்  தாய் மொழியாகக் கொண்டிருக்கிறவர்கள் தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டாமா என்றால்… படிக்க வேண்டாம்.

இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தமிழகத்திலே இரு மொழித் திட்டம் அமலுக்கு வந்தது. இதனுடைய நோக்கம் முதலாவதாக ஆங்கிலமும் அடுத்ததாக தமிழ் அல்லது அவரவருடைய தாய் மொழியும் என்பதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இது என்னவாகிவிட்டது என்று சொன்னால்….முதலாவது ஆங்கிலம்,  இரண்டாவது தமிழ், அல்லது மலையாளம், அல்லது தெலுங்கு, அல்லது கன்னடம், அல்லது அரபி, அல்லது உருது, அல்லது சமஸ்கிருதம், அல்லது பிரெஞ்சு, அல்லது ஜெர்மன்- என்று 13 மொழிகளிலே ஏதாவது ஒரு  மொழியை  மாணவர்கள் விருப்பத்திற்கு எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்பதாக நடைமுறையிலே இருந்து வருகிறது.

இதிலே குறிப்பாக நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்கள், நடுத்தரவர்க்க, மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலேயும் CBSE பள்ளிகளிலேயும் படிக்கிறவர்கள், தமிழைக் கவனமாகத் தவிர்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று : தமிழ் மொழியை எடுத்துப் படித்தால் மதிப்பெண்கள் வராது. மற்ற மொழிகளிலே நிறைய மதிப்பெண்கள் வாங்கலாம். இன்னொரு காரணம் : மற்ற மொழிகளை எளிதாகப் படித்து விடலாம். தமிழ் மொழியைப் படிப்பது கடினம். மற்ற மொழிகளை எளிதாகப் படித்து முடித்துவிட்டால் நிறைய உபரி நேரம் கிடைக்கும். இந்த உபரி நேரத்திலே என்ன செய்யலாம்? இன்னும் Maths படிக்கலாம், இன்னும் Biology படிக்கலாம், இன்னும் Physics படிக்கலாம், இன்னும் Chemistry படிக்கலாம், வேகமாக டாக்டர் ஆகலாம், இஞ்சினியர் ஆகலாம், அக்கவுண்டண்ட் ஆகலாம்.  இப்படி இரண்டு காரணங்களை மாணவர்களும் பெற்றோர்களும் சொல்கிறார்கள். இந்த இரண்டும் அல்லாமல் இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இன்று தமிழ் நாட்டில் வசிப்பதற்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு மாதிரி, தொலைக்காட்சிகளிலே வருகிற பெண் அறிவிப்பாளர்கள் பேசுகிற மாதிரியான ஒரு தமிழை, ஒப்பேற்றிப் பேசினால் போதும். தமிழ் நாட்டில் வசித்து விடலாம்.

‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்பதுதான் எங்களுடைய கொள்கை என்று் சொல்லிக் கொண்டிருக்கிற எல்லா அரசாங்கங்களும், அவர்கள்  வெளியிடுகிற சுற்றறிக்கைகள், அரசிதழ்  என்று சொல்லப்படுகிற gazette notification எல்லாம் ஆங்கிலத்திலேதான் இருக்கிறது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு எல்லாம் ஆங்கிலத்திலேதான் இருக்கிறது. விஜயகாந்தின் கல்யாண மண்டபம், ஜோதிகாவின்  திருமணம் இதற்கப்பால் உலகச் செய்திகள் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலச் செய்தித்தாள்களைத்தான் படிக்க வேண்டும். அன்றாடம் பயன்பாட்டிலிருக்கிற பல பொரு்ட்களுக்கு முறையான தமிழ்ச் சொற்கள் இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்கி்லத்தோடுதான் கொஞ்சிக் குலாவுகிறது. எல்லா மென்பொருள்களும் ஆங்கிலத்திலேதான் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் தமிழ் நாட்டில் வசிப்பதற்குத் தமிழ் தேவையில்லை.

தமிழ் இன்பத் தமிழ் தான். தமிழ் தொன்மையான மொழி தான். தமிழ் செம்மொழிதான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த மொழி, தமிழ் மொழிதான். உலகத்திலேயே முதல் குரங்கு, எந்தக் குரங்கு? தமிழ் குரங்குதான். ‘ஆனால், நாங்கள் தமிழ் படிக்க மாட்டோம்!’ என்பதுதான் இன்றைக்கு தமிழ் நாட்டிலே இருக்கிற பெரும்பாலான படித்த நகரவாசிகளுடைய மனோபாவம்.  இந்த மனோபாவத்திலே இருக்கிற ஒரு சமூகத்தில் இருந்து தான் இந்த இளைஞர்களும் வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தமிழை நெஞ்சிலே வைத்துப் போற்றுகிறார்கள். ஒரு அகல் விளக்கைப் போல அந்த தீபத்தைக் கொண்டு நடக்கிறார்கள். மழையிலேயும், புயலிலேயும், டைஃபூன் காற்றிலேயும் அந்த தீபம் அணைந்து போகாமல் அதை  இரு கைகளாலும் அணைத்துக் காப்பாற்றுகிறார்கள். அந்த தீபத்தை-அந்த ஒளியை- அந்தத் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுக்கிறார்கள்.

அன்பு நெஞ்சங்களே! இவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாரட்டுவது? சிங்கப்பூரிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் நூல்களை வருவித்து, வாரந்தவறாமல் வகுப்புகள் நடத்தி, தேர்வு வைத்து, மாய்ந்து, மாய்ந்து பாடுபடுகிறார்களே, ஆசிரியர்களும்,அமைப்பாளர்களும் இவர்களைப் பாரட்டாமல் யாரைப் பாரட்டுவது?

தமிழர்கள் பரவியிருக்கிற பல நாடுகளிலும் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிற முயற்சி நடைபெற்று வருகிறது. தங்கள் பண்பாட்டின் வேரடி மண் தாய் மொழியில்தான் இருக்கிறது என்பது பெற்றோர்கள் பலருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆகவே அவர்கள் இந்த வகுப்புகளுக்குத் தங்கள் பிள்ளைகளை முடுக்கி விடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டுக் காற்றைச் சுவாசித்து வளர்கிற பிள்ளைகள் பலருக்கும் தமிழ் அவசியமாகப் படுவதில்லை. இவர்கள் தமிழ் வகுப்புகளுக்குப் போவது பெற்றோர்களின் கட்டாயத்தினால்தான்.  ஆனால் ஹாங்காங் தமிழ் வகுப்பு மாணவர்கள் இந்த விதிக்கு விலக்காயிருக்கிறார்கள். அவர்கள் எல்லையற்ற ஆர்வத்தோடு தமிழ் கற்கிறார்கள். ‘எங்களுக்கு  வீடியோ விளையாட்டுக்கள் வேண்டாம் , கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் வேண்டாம்’ என்று சொல்லி விட்டு ‘நிலா நிலா ஓடி வா’ என்று சனிக்கிழமை தோறும் பாடி மகிழ்கிறார்கள். ஒரு வகையில், இந்த வகுப்புகளை எல்லாத் தடைகளையும் மீறிச் செலுத்துவது, இந்தப் பிள்ளைகளின் ஆர்வம்தான்.  இவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாராட்டுவது? 

இந்தப் பாராட்டு என்று சொல்கிற போது அதிலே இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஒரு அமைப்பிலே இருக்கிற வளர்ச்சியை ஒட்டி இந்த பாராட்டும் அமைகிறது. ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை முதலிலே தரையிலே கிடக்கும். ஒரு் ஆறு மாதமானால் குப்புறப் படுக்கும். அப்புறம் தவழும். அப்புறம் எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்து நிற்கும். ஒரு வயது ஆகும் போது, தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் காலை ஊன்றி நடக்கும். ஒவ்வொரு கட்டத்திலேயும் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் கைதட்டிப் பாராட்டுவார்கள். அந்தக் குழந்தையை உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் அந்தக் குழந்தை நடக்க ஆரம்பித்த பிற்பாடு, அதற்கு அடுத்த  கட்டத்தை நோக்கித்தான் அது செல்ல வேண்டும். அப்போது அந்தக்  குழந்தை  தவழத்  தொடங்கினால், முதலிலே  தவழ்ந்த  போது பாராட்டிய பெற்றோர்கள், இப்போது பாராட்ட மாட்டார்கள். இந்தத் தமிழ் வகுப்பிற்கு இப்போது மூன்று வயதாகிறது. இந்தக் குழந்தை இனி ஓடத் துவங்க வேண்டும். இந்தத் தமிழ் வகுப்புகள் முறையான வகுப்பாக மாறி, பெரிய வகுப்பறைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

ஹாங்காங்கிலே அவ்வப்போது பலராலும் தமிழ் வகுப்பு முயற்சிகள் தொடங்கப் பெற்று தொடர முடியாமல் நின்று போயிருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஹாங்காங்கிலே  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலே பத்து வயதையொட்டிய குழந்தைகள் 100 – 150 பேர் இருக்கலாம். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும். அதை இளைஞர்களே! உங்களால்தான் செய்ய முடியும். இந்தச் சமூகம் அதை உங்களிடம் எதிர்பார்க்கிறது. இதற்கு ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது. ஹாங்காங் இந்திய முஸ்லிம் கழகத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது. இதை நீங்கள் முன்னெடுத்துச்  செல்ல வேண்டும். ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின்  பாராட்டுதல்  உங்களோடு எப்போதும் தொடர்ந்து வரும் என்று சொல்லி, இதுகாறும் செவிமடுத்த உங்கள் அத்துணை  பேருக்கும்  நன்றி  சொல்லி, விடை பெறுகிறேன்.

நன்றி ! வணக்கம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: