“இந்தியாவில் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் வேண்டும்” – ஹாங்காங் தொழிலதிபர் எம். அருணாச்சலம் நேர்காணல்

மு இராமனாதன்

Published in Dinamalar, 19 Februray 2015

[எம்.அருணாச்சலம் ஹாங்காங் வர்த்தகர், தொழிலதிபர். இந்தியாவிலும் சீனாவிலும் இவருக்குத் தொழிற்சாலைகள் உள்ளன. ஹாங்காங் இந்திய வர்த்தகக் குழுமத்தின் தலைவர். ஹாங்காங்கில் முதலீட்டை ஊக்குவிப்பிதற்காக ஹாங்காங் அரசு இவரை ஒரு அம்பாசிடராக நியமித்திருக்கிறது.  இந்தியா- சீனா- ஹாங்காங் இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அதற்காக இந்திய அரசு இவருக்கு சிறந்த வெளிநாட்டு இந்தியருக்கான விருதை வழங்கியது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் இவரது சொந்த ஊர். இனி அவரது பேட்டி…]

ஹாங்காங்கில் வாழ்கிற தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பொதுவாக மாதச் சம்பளம் பெறுகிற வேலையில்தான் இருப்பார்கள். வணிகத்திலோ தொழிலிலோ ஈடுபடுபவர்கள் குறைவு. உங்களுக்கு இதில் எப்படி ஆர்வம் வந்தது?

 நானும் மாதச் சம்பளக்காரனாகத்தான் இருந்தேன். இந்திய வங்கி ஒன்றில் ஹாங்காங் கிளையில் வேலை பார்த்தேன். 1979இல் அந்த வேலையை விட்டு விட்டேன். அப்போது இந்தோனேசியாவில் திரு. சீனிவாசன், ஹாங்காங்கில் திரு. ரகுமான் ஆகிய நண்பர்கள் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் ‘சொந்தமாகத் தொழில் பண்ணுங்க’ என்று என்னை ஊக்குவித்தார்கள். அப்போது டெங் ஸியோபிங்கின் தலைமையில் சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலாகிக் கொண்டிருந்தன. அப்போது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் நெசவு ஆலைகளுக்கான மூலப் பொருட்கள் கொரியா, ஜப்பான், தைவான் முதலிய நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தன. ஜெர்மெனி, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் வந்தன. ஹாங்காங் நடுவில் இருந்தது. வணிகம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்கியது. ஹாங்காங் வங்கிகளில் Letter of Credit  என்று சொல்லப்படுகிற, வங்கிகள் வழங்குகிற உத்திரவாதப் பத்திரத்தின் மூலம், மூலப்பொருட்களை பல நாடுகளிலிருந்தும் வாங்கி இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும், பிறகு சீனாவுக்கும் கூட அனுப்பி வைத்தோம். இந்தோனேசியாவிலிருந்து  திரு. சீனிவாசனும், இந்தியாவிலிருந்து திரு. ரத்தன்லால் தித்வானியா, திரு. சங்கர் ஷராப் ஆகியோரும், அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆர்டரை எங்களுக்குக் கொடுத்து உதவினார்கள். இந்தியாவிலும் பல ஆலைகள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பொருட்களை வாங்கினார்கள். இப்படித்தான் எங்களுடைய வணிகம் ஆரம்பித்தது.

 ஒரு வணிகராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்கள் இப்போது தொழிலதிபராகவும் இருக்கிறீர்கள். தொழில்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

 1997இல் ஹாங்காங் ஆங்கிலேயரிடமிருந்து சீனாவிற்குக் கைமாறியது. ஹாங்காங் என்னவாகும் என்பதைப் பற்றி அப்போது பலரும் பல விதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் முன்னேற்பாடாக இருந்து கொள்ளலாம் என்று 1995இல் இந்தியாவில் தொழில் தொடங்கினோம். பிற்பாடு சீனாவிலும் தொடங்கினோம்.

 இந்தியாவில் என்னென்ன தொழில் செய்கிறீர்கள்?

 திருப்பூர், உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் நூற்பு ஆலைகள் நடத்துகிறோம். நூற்பு, நெசவு, பின்னல் எல்லாம் செய்கிறோம். உற்பத்தியாகும் பொருட்களை இந்தியச் சந்தையிலேயே விற்று விடுவோம்.

 சென்னையில் கட்டுமானத் துறைக்கான இயந்திரங்களைச் சீனாவிலிருந்து வாங்கி விற்கிறோம். விற்பனையோடு நின்றுவிடாமல் தொடர்ந்து சேவை செய்கிறோம், உபரிப் பொருட்கள் விற்கிறோம், பழுது பார்த்துக் கொடுக்கிறோம். சமீபத்தில் prefabrication கட்டுமானமும் ஆரம்பித்திருக்கிறோம்.

 அகமதாபாத் காந்திநகரில் கடிகாரப் பாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இருக்கிறது. சுவிட்ஸர்லாந்து நிறுவனமொன்றோடு சேர்ந்து தொடங்கினோம். இப்போது நாங்களே நடத்திக் கொண்டிருக்கிறோம். சில கடிகார உதிரிப்பாகங்களை இந்தியாவில் நாங்கள் மட்டும்தான் தயாரிக்கிறோம். எங்களிடமிருந்து அதிகமாக  இந்தப் பாகங்களை வாங்குவது டைட்டான். இதைத் தவிர சுவிட்ஸர்லாந்திற்கும் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

 விரைவில் ராமனாதபுரத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம். அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தெலுங்கானா மாநிலத்தில் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கத்திற்கு அருகில்  அனல் மின்நிலையம் தொடங்கப் போகிறோம். இடம் வாங்கியாகிவிட்டது. அரசாங்க அனுமதியும் கிடைத்து விட்டது. விரைவில் இயந்திரங்களை அனுப்புவோம்.

 மிக்க மகிழ்ச்சி; சீனாவில் உங்கள் தொழிற்சாலைகள் எங்கெல்லாம் உள்ளன?

 சீனாவைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறோம். ஆடை உற்பத்தியிலும், பொறியியல் சார்ந்த உற்பத்தியிலும் முக்கியமாக ஈடுபட்டிருக்கிறோம். ஹாங் ஜோவ் அருகில் ஜி ஜியாங் என்கிற ஊரில், ஊடான் மாநிலத்தில் சாங் ஷோ, இன்னும் ஷாங்காய் நகருக்கு அருகிலும் க்வாங் ஜோ நகருக்கு  அருகிலும் எங்களது தொழிற்சாலைகள் இருக்கின்றன. நெசவு ஆடைகள், தோல் ஆடைகள் உற்பத்தி செய்கிறோம். அமெரிக்கா, தென்னமரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

 இந்தத் தொழில்களுக்கு மத்தியில் ஹாங்காங்கில் உங்கள் வணிகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்னென்ன பொருட்களை வாங்கி விற்கிறீர்கள்?

 சீனாவிடமிருந்து உருக்குப் பொருட்களை வாங்கி இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் அனுப்புகிறோம். ஆஸ்திரியாவிலிருந்து இரும்புத் தாது வாங்கிச் சீனாவிற்கு விற்கிறோம்.  இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள் வாங்கி சீனா, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கிறோம். தென்னமரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் ஆடைகள் ஏற்றுமதி செய்கிறோம். தவிர,  அந்தந்தக்  காலகட்டத்தில் என்னென்ன பொருட்களுக்குக்  கிராக்கி இருக்கிறதோ அவற்றை வாங்கி விற்பனை செய்கிறோம்.

 உங்களுக்குச் சீனாவிலும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; இந்தியாவிலும் இருக்கின்றன. இவற்றை உங்களால் ஒப்பிட முடியுமா?

 உற்பத்தியிலும், உழைப்பிலும், சேவையிலும் சீனா வெகுதூரம் முன்னால் இருக்கிறது. விலையிலாகட்டும், தரத்திலாகட்டும், காலந் தவறாமையிலாகட்டும் சீனாவோடு இந்தியாவை ஒப்பிடவே முடியாது. ஆனால் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.

 இந்தியாவில் தொழில்துறையில் பல தாமதங்கள் நேருகின்றன. துறைமுகத்தில் தாமதம் ஏற்படும். போக்குவரத்தில் தாமதம் ஏற்படும். மின்சாரம் முழுமையாகக் கிடைக்காமல் போகும். அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக மூலப்பொருட்களின் விலை மாறிக் கொண்டேயிருக்கும். இதனால் சீனாவில் இருப்பது போன்ற தொழில் சமநிலை இந்தியாவில் இருப்பதில்லை.

 தொழிலாளர்களை ஒப்பிட முடியுமா?

 சீனாவில் தொழில் கலாச்சாரம் இருக்கிறது. இந்தியாவில் இது குறைவு. என்னுடைய அனுபவத்தில் இதைக் கோவை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களிடம் பார்க்கலாம். திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தொழிலாளர்களிடமும் குஜராத் அகமதாபத்தில் உள்ள தொழிலாளர்களிடமும் பார்க்கலாம். திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பூ எடுக்கிற காலம் என்றால் தொழிற்சாலையை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.  இன்னும் விவசாயப் பின்புலத்திலிருந்து ஒரு தொழிலுக்கான கலாச்சாரத்திற்கு அவர்கள் வரவில்லை.

 தொழிலாளர்களின் வேலைத் திறன் எப்படி?

 இதிலும் சீனா முன்னணியில்தான் இருக்கிறது. சீனாவில் ஒரு ஷிப்டில் 6  டஜன் பண்டல்கள் செய்கிறார்கள் என்றால், கோவை- திருப்பூர் தொழிலாளர்கள் 3  டஜன் செய்வார்கள். மற்ற பகுதிகளில் அதிலும் பாதிதான் செய்வார்கள்.

 சீனத் தொழிலாளிகள் திறமையாகத் தொழில் செய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

 அவர்கள் தொழிற்சாலையை ஒட்டியிருக்கிற டார்மிட்டிரியிலேயே தங்கிக் கொள்வார்கள். பீஸ் ரேட்டில் வேலையை எடுத்துச் செய்வார்கள். ஓவர் டைமில் வேலை செய்வார்கள். நல்ல உழைப்பாளிகள். இதைவிட முக்கியமானது தொழில் பயிற்சி. எல்லாரும் படித்திருப்பார்கள். உயர்நிலைப் பள்ளி வரை கல்வி இலவசம். இதற்குப் பிறகு சீனாவில் ஏராளமான தொழில் சார்ந்த பயிற்சிப் பள்ளிகள் (vocational training schools) உள்ளன. சமையல் வேலையாகட்டும், கிரேன் ஓட்டுவதாகட்டும், கொத்தனார் வேலையாகட்டும், பின்னல் வேலையாகட்டும் எல்லாவற்றுக்கும் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இது உண்டு-உறைவிடப் பள்ளி. அந்தந்த வேலைக்கு ஏற்ற மாதிரி இந்தப் பயிற்சி இரண்டு வாரத்திலிருந்து இரண்டு மாதம் வரை வேறுபடும். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். முற்றிலும் இலவசம். படிப்பு முடிந்ததும் அவர்களே வேலைக்கும் ஏற்பாடு செய்வார்கள். சமையல் வேலைக்கு பயிற்சி எடுத்தவரை ஹோட்டலுக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்புவார்கள். உடனே வேலை கிடைக்கும். இந்தியாவிலும் இந்தத் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் வரவேண்டும். பலரும் பயிற்சி இல்லாமல்தான் முதலில் வேலையில் சேருகிறார்கள். இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் 100 நாட்கள் வேலை கொடுக்கிறார்கள். இதில் முதல் 30 நாட்கள் ஒரு குறிப்பிட்ட தொழிற் பயிற்சியை இலவசமாகக் கொடுக்கலாம். அடுத்த 70 நாட்கள் அதே தொழிலில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

 சீனத் தொழிலாளர்களுக்கு வேலையைக் குறித்த அறிவு இருக்கிறது, வேலைக்கான பயிற்சி இருக்கிறது, அவர்களிடத்தில் தொழில் கலாச்சாரம் இருக்கிறது.  ஆகவே அவர்கள் தொழில் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் உலக நாடுகளெல்லாம் சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கிறார்கள்.

 சீன அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

 அரசாங்கம் தொழிலுக்கு அனுசரணையாக இருக்கிறது. ஹாங்காங்கிற்குப் பக்கத்திலே இருக்கிற நகரம் ஷென்ஜன். 1980இல் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வந்தார்கள். அப்போது ஷென்ஜனின் மக்கள் தொகை 2 இலட்சம். இப்போது ஹாங்காங்கை மிஞ்சி விட்டது. 1 கோடிக்கும் மேல். எவ்வளவு தொழிற்சாலைகள்? எவ்வளவு உற்பத்தி நடக்கிறது? நகரத்தின் உள்கட்டமைப்பை எவ்வளவு தூரம் உயர்த்தியிருக்கிறார்கள்?

 இந்தியாவில் எப்படி இருக்கிறது?

 ஒவ்வொரு திட்டத்திற்கும் பல்வேறு அனுமதிகள் வாங்க வேண்டும். முதலில் அந்த இடத்தின் உபயோகத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.பிறகு சுற்றுச் சூழல் அனுமதி. இதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அதைப் பரிசீலித்து மா நில அரசுக்கோ மத்திய அரசுக்கோ அனுப்புவார். அவர்கள் பல சமயங்களில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிவிடுவார்கள். புகைபோக்கியின் உயரத்திற்கு அனுமதி வாங்க வேண்டும். விமான நிலையத்திலிருந்து 500கி.மீ தூரத்தில் இருந்தாலும் அவர்களிடமும் ஆட்சேபணை இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். ஒன்றுக்கும் காலக் கெடு இல்லை. இதற்குப் பின்னாலேயே அலைந்தால் இரண்டு வருடங்களில் எல்லா அனுமதிகளையும்  வாங்கலாம்.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எப்படி?

 அங்கேயும் விதிமுறைகள் தெளிவாக இல்லை. ஷென்ஜனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா?.1998இல் முரசொலி மாறன் வாஜ்பாயி அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். வாஜ்பாயி சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எப்படி இயங்குகின்றன என்று பார்த்து வருமாறு அவரை அனுப்பினார். மாறன் ஹாங்காங்கிற்கு வந்து, இங்கிருந்து ஷென்ஜன் போனார். இந்திய வர்த்தகச் சேம்பரின்  சார்பாக நாங்களும் கூடப் போனோம். அவர்கள் சொன்னார்கள்: இங்கே தொழில் தொடங்க வேண்டுமென்றால் எங்களுக்கும் 24 துறைகளிலிருந்து அனுமதி வாங்க வேண்டும். ஆனால் தொழில் முனைவோர் இந்த 24 துறைகளுக்கும் போக வேண்டாம். ஷென்ஜன் நகராட்சி ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை (nodal officer) நியமிக்கும். அவரிடம் விண்ணப்பப் படிவத்தையும் எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அதிகாரி 24 துறைகளையும் தொடர்பு கொள்வார். அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏதேனும்ஆட்சேபணை இருந்தால் ஒரு மாதத்திற்குள் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு இல்லை என்று அர்த்தம். இந்த ஒருங்கிணைப்பு அதிகாரியே 24 துறைகளின் சார்பாக அனுமதி வழங்கி விடுவார்.

 சீனாவைத் தொழில் மயமாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. 1950இல் சீனாவின் நகரங்களில் 10% மக்கள்தான் இருந்தார்கள். 90% மக்கள் கிராமங்களில் இருந்தார்கள். இப்போது 50% மக்களுக்கு மேல் நகரங்களில் வசிக்கிறார்கள். இதை 75%  என்பதாக உயர்த்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். விவசாயம் பிரதானமாக இருந்த நாட்டில் தொழில்துறையைப் பிரதானமாக மாற்றுகிறார்கள். அதனால் தொழில்துறைக்கு எல்லா உதவியும் செய்கிறார்கள்.

 ஹாங்காங் இந்திய வர்த்தக குழுமத்தில் (Indian Chamber of Commerce) நீங்கள் தீவிரமாக செயல்படுகிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

 இந்த சேம்பர் 1952ல் ஆரம்பிக்கப்பட்டது. சிந்தி, பார்ஸி மற்றும் போரா சமூகத்தைச் சேர்ந்த 10 முன்னணி வர்த்தகர்கள் இதை ஆரம்பித்தார்கள். சர் டாக்டர் ரட்டன்ஜி அவரது அலுவலகத்தின் முதல் மாடியை சேம்பருக்கு இலவசமாகக் கொடுத்தார். அந்தக் கால கட்டத்தில் ஹாங்காங்கில் ஐந்து வர்த்தக சேம்பர்கள் தான் இருந்தன. Hong Kong General Chamber of Commerce, Chinese General Chamber of Commerce, Federation of Industry, Chinese Manufacturers Association, அப்புறம் நம்முடைய இந்திய சேம்பர். அப்போது ஹாங்காங் அரசாங்கத்திலே என்ன செய்தார்கள் என்றால் வர்த்தகத்திற்குத் தேவைப்படுகிற Certificate of Origion, Trade Declartaion  போன்ற ஆவணங்களை வழங்குவதற்கு இந்த ஐந்து சேம்பர்களுக்கும் அதிகாரம் கொடுத்தார்கள். அதனால் இந்திய வர்த்தகர்கள் மட்டுமில்லை, எல்லா வர்த்தகர்களும், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக இந்தியச் சேம்பருக்கு வருகிறார்கள். இப்போது சிம் ஷா சுய், ஹுங் ஹாம் என்கிற இரண்டு இடத்தில் அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் கிளைகள் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம்.

 சேம்பருடைய முக்கியமான பணி என்ன?

 இந்தியா , ஹாங்காங் ,  சீனா ஆகிய நாடுகளிடையே வர்த்தக உறவுகளை வளர்ப்பது. சீனாவில் இந்திய சேம்பர் இல்லை. அந்தக் காலியிடத்தை நாங்கள் முடிந்தவரை நிரப்புகிறோம். மேலும் இந்திய வர்த்தகர்களுக்கு அவர்கள் தமது பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் வந்தால், அரசாங்கத்தின் வர்த்தக முன்னேற்றக்  கழகம் என்கிற அமைப்பிடம் முறையிடுவோம். அவர்கள் உதவுவார்கள். ஹாங்காங்கிலே எந்தப் பொருளும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஒரு இடத்தில் இருந்து வாங்கி, இன்னொரு இடத்தில் விற்கிறோம். உங்கள் வர்த்தகம் ஹாங்காங் மூலம் நடந்தால் அரசாங்கத்தின் வர்த்தக முன்னேற்றக் கழகம் உதவி செய்யும்.

 மேலும், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வர்த்தகத்திற்காகப் போகிறவர்களுக்கு சேம்பர் உதவி செய்யும். இந்தியாவில் யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வோம். சென்னையிலேயே பல சேம்பர்கள் இருக்கின்றன. Madras Chamber of Commerce, Hindustan Chamber of Commerce, South Indian Chamber of Commerce- இன்னும் பல. அவரவர்களின் தேவையை அனுசரித்து தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்போம்.

 நீங்கள் பலமுறை சேம்பரின் தலைவராக இருந்திருக்கிறீர்கள்.

 1990இல் இருந்து நான் உறுப்பினராக இருந்து வருகிறேன். முதல் முறையாக 1999இல் இதன் தலைவராக பொறுப்பேற்றேன். அதற்குப் பிறகு ஏழுமுறை தலைவராக இருந்திருக்கிறேன்.

 சேம்பரில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?

 இந்திய சேம்பரில் 500 கார்ப்பரேட் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 100 உறுப்பினர்கள் இந்திய நிறுவனங்கள்- இந்திய வங்கிகள், டாடா போன்ற நிறுவனங்கள். 50 உறுப்பினர்கள் பன்னாட்டு நிறுவனங்கள்- ஹெச்.எஸ்.பி.ஸி, பிரைஸ் வாட்டர் போன்றவை; இவர்கள் துணை உறுப்பினர்கள்; சேம்பருடைய எல்லா சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாக்களிக்க முடியாது. 350 உறுப்பினர்கள் இந்திய வர்த்தக நிறுவனங்கள்.  

 வர்த்தகத்தைத் தவிர சேம்பர் வேறு என்ன செய்கிறது?

 இந்தியா தகவல் தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இங்குள்ள மாணவர்களுக்கு இருக்கிறது. ஆகவே ஹாங்காங் பல்கலைக்கழகங்களை இங்கேயுள்ள மாணர்வகளைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களை இரண்டு வாரமோ ஒரு மாதமோ டாடா, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறோம். ஹாங்காங் மாணவர்கள் இந்தியாவைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், தகவல் தொடர்புத் துறையிலும் பயிற்சி பெறலாம். அநேகமாக இந்த ஆண்டே இதைத் துவக்கி விடுவோம்.

 உலகெங்கும் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் எல்லாம் மாணவர்களை ஒரு வருடமோ ஒரு செமஸ்டரோ பரிமாறிக் கொள்கிற முறை இருக்கிறது. படிப்பிற்கு இடையில் வெளிநாட்டில் உள்ள இன்னொரு பல்கலைக்கழகத்திற்குப் போய் அதே படிப்பைத் தொடருவார்கள். மீண்டும் பழைய கல்லூரிக்கே வந்து படிப்பைத் தொடருவார்கள். இப்படியான பரிமாற்ற முறையை ஹாங்காங்கிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே டெல்லி பல்கலைக்கழகத்துடனும், ஐ.ஐ.டிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. வேறு பல கல்லூரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தப் போகின்றன. பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, பரிமாற்றம் தொடங்கும். ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கான கட்டணங்களை வசூலிக்காது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஹாங்காங் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காது, மாணவர்களின் விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை சேம்பர் கொடுக்கும்.  இதற்காக ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்துவிட்டோம். முதல் கட்டமாக ஹாங்காங் மாணவர்கள் 50 பேர் இந்தியாவுக்கும், இந்திய மாணவர்கள் 50பேர் ஹாங்காங்கிற்கும் வருவார்கள். இது அடுத்த ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

 சேம்பர் மூலம் பேரிடர் நிவாரண நிதியும் திரட்டுகிறீர்கள் அல்லவா?

 2001இல் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதுதான் இந்தப் பேரிடம் நிவாரண நிதியைத் தொடங்கினோம். அப்போது ஹாங்காங்கிலிருந்து இந்திய வர்த்தகர்களையும் சீன வர்த்தகர்களையும் பூகம்பப் பகுதிக்கே அழைத்துக்கொண்டு போய்க் காட்டினோம். பலர் வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். சாலைகள், ரயில் தடங்கள், பாலங்கள் போன்றவை புனர் நிர்மாணிக்கப்பட்டபோது, பலர் கட்டுமானப் பொருட்களை இங்கேயிருந்து அனுப்பினார்கள். அதற்குப் பிறகு இந்தப் பேரிடர் நிவாரண நிதியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

 2013இல் உத்ராஞ்சலில் வெள்ளம் வந்தபோது உதவினோம். பல இடங்களில் மின் இணைப்பு தகர்ந்து போயிருந்தது. சீரமைக்க அதிக காலம் வேண்டிவந்தது. அதனால் அந்த அரசாங்கம். சோலார் விளக்குகள் தருமாறு கேட்டது. 1500 சோலார் விளக்குகள் வாங்கிக் கொடுத்தோம். அதே ஆண்டு சீனாவில் சிச்சுவான்  மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. நிதி திரட்டி அரசாங்கத்திடம் கொடுத்தோம்.

 Investment Hong Kong அமைப்பிலும் தீவிரமாகப் பணியாற்றுகிறீர்கள். அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?

 20 ஆண்டுகளாக அதிலே பணியாற்றி வருகிறேன். ஹாங்காங் அரசாங்கம் ஏற்படுத்திய அமைப்பு இது. வெளிநாட்டு  வர்த்தகர்களை ஹாங்காங்கிலே முதலீடு செய்யச் சொல்லி ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது- இதிலே பல நாட்டைச் சேர்ந்த 30 ஹாங்காங் வர்த்தகர்களை அரசாங்கம் அம்பாசிடர்களாக நியமித்திருக்கிறது. அதிலே நானும் ஒருவன். இங்கேயிருந்து தூதுக் குழுக்கள் வெளி நாடுகளுக்குப் போகும்போது அதில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போகும்போது என்னை அழைப்பார்கள். ஹாங்காங் வர்த்தகம் செய்வதற்கு ஏன் சிறப்பானது என்று சொந்த அனுபவத்திலேயிருந்து சொல்ல வேண்டும். ஹாங்காங்கில் சட்டத்தின் மாட்சிமை (rule of law ) பேணப்படுகிறது, வர்த்தகத்தில் அரசின் தலையீடு இருக்காது, வர்த்தகம் வெளிப்படையானது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு வசதிகள் கிடைக்கும், சுங்கவரி ஆயத்துறை வரிகள் கிடையாது, வருமான வரி குறைவு- இப்படியான ஹாங்காங்கின் சிறப்புகளை வெளிநாட்டு வர்த்தகர்களிடம் சொல்வோம்.

 கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு நடத்தும் வெளிநாட்டு இந்தியர் மாநாட்டிற்குச் சென்று வருகிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

 நூறு ஆண்டுகள் முன்னால், 1914ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 9ஆம் தேதி மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பினார். அந்த நாளைத் தேர்ந்தெடுத்து 2003ஆம் ஆண்டு முதல் அதை ‘பிரவசி பாரதிய திவஸ்’  – அதாவது ‘வெளிநாட்டு இந்தியர் தினம்’ என்கிற பெயரில் மாநாடு நடத்தி வருகிறார்கள்.

 வெளிநாடுகளில் 2 கோடி 80 இலட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ஒரு பெரிய சக்தி. இதை இந்திய அரசு 2000ஆம் ஆண்டுதான் உணர்ந்தது. அந்த ஆண்டு பிஜியில் மகேந்திர சவுத்ரி என்கிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஜியிலுள்ள ராணுவம் அவரைப் பதவியேற்க விடவில்லை, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அந்தச் சம்பவம் இந்திய அரசிடம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது என்று சொல்லலாம். அதற்குப் பிறகுதான் வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை ஆதரிக்க வேண்டும் என்ற உணர்வும் அப்போதுதான் வந்தது..

 இந்த வெளிநாட்டு இந்தியர் மாநாடுகளால் பயன் இருக்கிறதா?

 இந்த மாநாடுகள் நடப்பதற்கு முன்னால்  வெளிநாட்டு இந்தியர் என்றால் ஒரு மூன்று நான்கு பெரிய பணக்காரர்களைத்தான் வெளியே தெரியும். வெளிநாட்டு  இந்தியர்களுக்குள் குறிப்பிடத்தக்க கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதெல்லாம்  இந்த மாநாடு நடக்க ஆரம்பித்த பிறகுதான் தெரியவந்தது.

 முன்னெல்லாம் வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருக்கிற இந்திய வம்சாவளியினரை வெளி நாட்டுக்காரர்கள் போலத்தான் நடத்துவார்கள். 15 நாட்களுக்கு மேலே இந்தியாவில் தங்கினால் போலிஸ் பரிசோதனை இருக்கும். இப்போது அப்படியானவர்களுக்குத் தனி அடையாள அட்டை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விசா இல்லாமல் இவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். வெளி நாட்டு இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம்.

 ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இடங்களில் படிக்கிற வெளி நாட்டு இந்தியர்களின் பிள்ளைகளுக்கு மேல்படிப்பில் சேருவதில் சிரமம் இருக்கிறது. இப்போது என்.ஆர்.ஐ மாணவர்களுக்கு ஒதுக்கீடு இருக்கிறது.

ஹாங்காங்கை எடுத்துக் கொண்டால் சுமார் 60,000 இந்தியர்கள் இருக்கிறார்கள். சீனாவில் 15,000 மாணவர்கள் உள்பட 45,000 இந்தியர்கள். ஆக ஒரு இலட்சத்திற்கும் மேல்.  தூர கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான், தைவான்  என்று எடுத்துக் கொண்டால் இன்னும் அதிகம். பலராலும் இந்தியாவில் நடக்கிற மா நாட்டிற்குப் போக முடியாது. ஆகவே சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு சம்மதித்திருக்கிறது. சமீபத்தில் பெய்ஜிங் வ ந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களைச் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினோம். அநேகமாக அடுத்த ஆண்டு இந்த மாநாடு ஹாங்காங்கில் நடக்கலாம்.  மேலும் அமைச்சரிடம் ஹாங்காங்கிலும் சீனாவிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துடன் இந்தியப் பள்ளிகள் ஆரம்பிப்பதைப் பற்றிப் பேசினோம். கூடுதல் விமான சேவை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

 உங்களுக்குச் சிறந்த வெளிநாட்டு இந்தியருக்கான விருது கொடுத்தார்கள்.

 ஆமாம். 2005ஆம் ஆண்டு கொடுத்தார்கள். இந்திய – சீன வர்த்கத்தை மேம்படுத்தப் பாடுபட்டதற்காகக் கொடுத்தார்கள். 1980 -90களில் இந்திய-சீன வர்த்தகம் 100கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது 7,500கோடியாக இருக்கிறது. இதை விரைவில் 10,000 கோடி அமெரிக்க டாலராக ஆக்க வேண்டும்.

 80களில் 90களில் இந்தியாவைப் பற்றிச் சீன வர்த்தகர்களுக்குத் தெரியாது. அப்போது நாங்கள் ஹாங்காங்கின் இந்திய சேம்பரிலிருந்து சீனாவின் பெரிய நகரங்களுக்குப் போய் மாநாடுகள் நடத்துவோம். ஹாங்காங்  இந்தியத் தூதரகமும் எங்களுக்கு உதவியது. பெய்ஜிங், ஷாங்காய், க்வாங் ஜாவ் என்று எல்லா நகரங்களுக்கும் போவோம். இந்தியா இவ்வளவு அருகாமையில் இருக்கிறது. இன்னின்ன பொருட்களை இங்கேயிருந்து வாங்கலாம். இன்னின்ன அரசுத் துறைகள் உதவி செய்யும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தோம். இப்போது வர்த்தகம் பெருகியதால் எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் வர்த்தகம் இல்லாத காலத்தில் சொந்தமாகச் செலவு செய்து கொண்டு போய்ச் சொன்னோம். 2000ஆம் ஆண்டிலிருந்து வர்த்தகம் வளர்ந்தது. 2008 ஒலிம்பிக்ஸின் போது ஏராளமான பொருட்களை இந்தியாவிலிருந்து வாங்கினார்கள். 2011ஆம் ஆண்டு சீனா நம்மிடமிருந்து 12 கோடி டன் இரும்புப் பொருட்களை வாங்கியது. இதன் மதிப்பு 1200 கோடி அமெரிக்க டாலர். இந்திய-சீன வர்த்தக மேம்பாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்தேன். அதை அங்கீகரிக்கிற விதமாக அந்த விருதைக் கொடுத்தார்கள்.

நன்றி அருணாச்சலம் அவர்களே. ஒரு தமிழரான நீங்கள் வர்த்தகத்திலும் தொழில்துறையிலும் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். ஹாங்காங் அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உங்கள் சேவையை அங்கீகரித்திருக்கின்றன. தினமலர் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லி விடை பெறுகிறோம்.

மிக்க நன்றி. உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. தினமலர் வாசகர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்.

(பேட்டி கண்டவர்: மு இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: