Published in Kalachuvadu December 2020மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்கட்டுரைமு. இராமனாதன் “ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!”இது பராசக்தி (1952) படத்தின் நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம். 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களின் நினைவு அடுக்குகளுக்குள் தேங்கிக் கிடக்கும் வசனம். ரங்கூன் பர்மாவின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை தமிழ் வணிகர்களையும் தொழிலாளர்களையும் அரவணைத்த தேசம் பர்மா. இன்று எல்லாம் மாறிவிட்டது. பர்மா, மியான்மார் ஆகிவிட்டது. ரங்கூன், யாங்கூன் ஆகிவிட்டது.Continue reading “மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்”
Category Archives: Politics and Society
இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
மு. இராமனாதன் Published in Kalachuvadu November 2020 அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம்வந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கைதான் இதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் வங்கதேசப் பொருளாதாரம் 3.80% வளர்ச்சி அடையும் என்று நிதியம் கணித்திருக்கிறது. இது கொரோனாக்Continue reading “இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்”
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
Published in Kalachuvadu October 2020 மு. இராமனாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர்காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதிவரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால் திருத்தணிமுதல் தென்குமரிவரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில்Continue reading “தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?”
வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்
கட்டுரை மு. இராமனாதன் Published in Kalchuvadu, June 2020 பலரும் சொல்லி வருகிறார்கள்: இந்த வைரஸ் பேதம் பார்ப்பதில்லை. உயர்ந்தவன் x தாழ்ந்தவன், பெரியவன்x சிறியவன், நல்லவன் x கெட்டவன், உள்ளவன் x இல்லாதவன் எல்லோரும் அதற்கு ஒன்றுதான். உண்மைதான்போல. மார்ச் 27 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஏப்ரல் 6 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு வாரம்Continue reading “வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்”
அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
கட்டுரை மு. இராமனாதன் Published in Kalchuvadu, May 2020 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். “அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. அன்று எங்கள் தந்தை வேள் பாரி இருந்தார். பறம்புமலை எம்மிடம் இருந்தது. இன்று எங்கள் மலை எம்மிடம் இல்லை, எங்கள் தந்தையும் இல்லை.” புறநானூறு தெரிந்திருந்தால் ஹாங்காங் மக்களும் இந்தப் பாடலை இப்போது பாடியிருப்பார்கள். ஆனால், மூலப் பாடலைத் திருப்பிப் போட்டிருப்பார்கள்.Continue reading “அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்”
தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு
ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு Published in One India, 1 September 2016 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்கContinue reading “தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு”
சர்வதேச சினிமா: இவர்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, February 26, 2016 ஹாங்காங்கில் தற்போது ‘தீபன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. மே 2015-ல் நடந்த கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பனை விருதை வென்ற படம் இது. அப்போது ஹாங்காங் நாட்டின் நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட், தீபனாக நடித்த அந்தோணிதாசன் ஹாங்காங்கில் ஆறு மாதங்கள் அகதியாக வாழ்ந்தவர் என்று எழுதியிருந்தது. அது 1988-ம் ஆண்டு. முன்னாள் போராளியான அவருக்கு அப்போது வயது 19. பிரான்ஸில் 1993-ல் தஞ்சம் புகுந்த அந்தோணிதாசனின் புனைபெயர் ஷோபாசக்தி என்றும், அவர் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதிவருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தது நாளிதழ். இப்போது வாசகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுவருகிற அவரது ‘Box- கதைப் புத்தகம்’ என்ற நாவல் அப்போது வெளியாகவில்லை. ‘தீபன்’ படத்தின் இயக்குநர் ஜாக் ஒதியார் சர்வதேசத் திரையுலகில் அறியப்பட்டவர். இவரது முந்தைய படங்களான ‘A Prophet’, ‘Rust and Bone’ ஆகியவையும் விருதுகளைக் குவித்தவை. போராளியின் கதை சிவதாசன் ஒரு முன்னாள் போராளி. அவனது புதிய பெயர்தான் தீபன். அவனுக்குக் கிடைக்கிற கடவுச் சீட்டிலுள்ள பெயர். இளம் பெண்ணான யாழினியும் (காளீஸ்வரி), 9 வயதுச் சிறுமியான இளையாளும் (குளோடின்) படத்தின் பிற பிரதான பாத்திரங்கள்; அந்தப் பெயர்களும்கூட அவர்களது சொந்தப் பெயர்களல்ல. கள்ளக் கடவுச்சீட்டில் உள்ள பெயர்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். மூவரும் தத்தமது குடும்பங்களை யுத்தத்தில் இழந்தவர்கள். இப்போது ஒரே குடும்பமாக அபிநயிக்கிறார்கள். அகதிக் கோரிக்கையோடு பிரான்ஸில் தஞ்சம் அடைகிறார்கள். கொஞ்ச நாட்களில் தீபனுக்குப் புறநகர் ஒன்றின் தொகுதி வீட்டில் பராமரிப்பாளானாக வேலை கிடைக்கிறது. இளையாள் முதன்முதலாகப் பள்ளிக்குப் போகிறாள். யாழினிக்கும் ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை கிடைக்கிறது. மெல்ல மெல்ல ஒரு குடும்பமாக வாழத் தலைப்படுகிறார்கள். அப்போது அந்தக் கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் போதைப்பொருள் மாபியாக்களிடையே மோதல் ஏற்படுகிறது. தீபன் அதற்குள் இழுபடுகிறான். அவன் அடக்கி வைத்திருந்த, அவனுள் கனன்றுகொண்டிருந்த வன்முறை வெளிப்படுகிறது. அகதிகள் சமாதானத்தையே நேசிக்கிறார்கள் என்றுதான் படம் முடிகிறது. உயிர் தரித்திருப்பதற்கும் பிழைத்திருப்பதற்கும்தானே அவர்கள் இத்தனை பாடு படுகிறார்கள்? புலம்பெயர்வும் அலைந்துழல்வும் 1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலரும் திரவியம் தேடிப் போனவர்களில்லை. புதிய மண்ணில் கால் பதிக்கும்போது அவர்கள் கையிருப்பிலுள்ள காசு குறைவு; அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களும் குறைவு. போதிய கம்பளியாடை இல்லாத அவர்களைக் குளிரும் பனியும் வாட்டும். புதிய கலாச்சாரமும், புரியாத மொழியும் அவர்களைச் சுற்றிக் காற்றில் கலந்திருக்கும் கசப்புணர்வும் மேலதிகமாக வாட்டும். இவர்களின் அலைதல் எழுத்தில்கூட அதிகம் பதிவாகவில்லை. திரைப்படங்களில் அபூர்வம். ஆதலால், இந்தப் படம் வாராது போல் வந்த மாமணி. சர்வதேசத் தமிழ்ப் படம் படத்தில் பிரெஞ்சுப் பாத்திரங்கள் பிரெஞ்சிலும் தமிழ்ப் பாத்திரங்கள் தமிழிலும் பேசுகிறார்கள். படத்தில் மிகுதியும் தமிழ்தான் கேட்கிறது. ஹாங்காங்கில் ஆங்கில, சீன மொழி சப்டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. படம் உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களை மனதில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழ் அறிந்தவர்களால் பல காட்சிகளை நெருக்கமாக உணர முடியும். ‘பாலும் தெளிதேனும், ‘நிலா அது வானத்து மேலே’ போன்ற பாடல்களைப் பாத்திரங்கள் பாடுகிறபோது, அவை ஒரு தமிழ்ப் பார்வையாளருக்கு, அவற்றின் மீது படிந்திருக்கும் காலத்தின் தூசியோடு வந்து சேர்கின்றன. தமிழ் தெரியாத இயக்குநர் – கதாசிரியரின் நுண்ணுணர்வு வியப்பூட்டுகிறது. படத்தில் பேசாத தருணங்களும் ஏராளமுண்டு. ஒரு காட்சியில் தீபன் முள்ளிவாய்க்காலில் படுகாயமுற்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். எவ்விதமான முகபாவமும் இல்லை. எந்த வசனமும் இல்லை. படத்தில் அரசியல் காட்சிகள் குறைவுதான். அகதிகளின் அலைச்சல்தான் படத்தின் மையம். தீபன் தற்போது ஹாங்காங்கில் வெளியாகி இரண்டு திரையரங்குகளில் ஓடுகிறது. படத்துக்கு ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ எழுதிய விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: ‘மூன்று அகதிகளும் புதிய உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் படுகிற அல்லல்கள், அவர்கள் கைவிட்டுவிட்டு வந்த பூமியில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல’. படம் இங்கிலாந்தில் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவிலும் விரைவில் வெளிவரலாம். மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர் தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி
மு. இராமனாதன் Published in Solvanam, 26/01/2016 (ரேடியோ ஹாங்காங் சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நடத்திய நிகழ்ச்சியில் 26.9.15 அன்று ஒலிபரப்பானது) சுதா ரவி: வணக்கம் நேயர்களே. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கிவரும் ரேடியோ ஹாங்காங் தமிழோசை நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கவிதா மோகன்: வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் நடந்து வரும் தமிழ் வகுப்பைப் பற்றிப் பேசப் போகிறோம். கூடவே தமிழ் வகுப்பு மாணவர்கள் அவர்களுடைய பாடப்புத்தகத்திலிருந்து சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும் சொல்லப்Continue reading “ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி”
உரை: ஹாங்காங் தமிழ் வகுப்புகள்
மு. இராமனாதன் Published in Kalachuvadu, January 2016 ஹாங்காங் தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல தருணத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் அவசியத்தைப் பற்றியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் ஹாங்காங் பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றிவரும் நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்தபொறியாளர் ஒருவர், புதிதாகச் சேர்ந்திருக்கும் இளம்பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களின் சிறப்பு, நூதன பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பாடம் எடுக்க வேண்டும். உரை நடந்துகொண்டிருக்கும் போதே உணவும் நடந்தேறிவிடும். என் முறை வந்தது. நான் ஒரு சிறிய மாற்றம் செய்தேன். ஹாங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் கிராக்கியுள்ள துறையல்ல. உண்மையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உலகத்தரமானவை. ஆகவே, இந்த இளம் சீனப்பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்களின் ஆங்கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்வதற்கு இல்லை. நான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமல்ல, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் பொருட்களின் வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக்குறிப்புகள், மின்னஞ்சல்கள் என்று நாள்தோறும் நிறைய எழுத வேண்டும். ஹாங்காங் மக்கள் சீனமொழியில்தான் பேசு கிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீனத்திலேயே இருக்கின்றன. எண்களைக் கூடச் சீனமொழியில்தான் எழுதுவார்கள் சொல்லுவார்கள். எனினும் பொறியியல்துறையில் அலுவல்மொழி ஆங்கிலமாகத்தான் இருந்துவருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் சிலாக்கியமானதாக இல்லை. ஆகவே, பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும் கடிதங்களிலும் விவரக்குறிப்பு களிலும் என்னென்ன கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்ரீதியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன். நான் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த வாரங்களில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதுபோலப் பயிற்சி எடுத்துக்கொண்டு எழுதினார்கள். இச்சம்பவம் நடந்த சிலமாதங்களில் இந்தியாவில் நடந்துவந்த ஒரு திட்டப்பணிக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டேன். ஹாங்காங் இளைஞர்கள் சொல்லுவார்கள், ‘இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்’ என்று! நானும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால் அருகிலிருந்து பார்த்தபோதுதான் தெரிந்தது இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக் கொள்ளும் படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக்குறிப்புகள், Power Point Presentation எல்லாம் இருந்தது. ஒருநாள் மாலைவேளையில் அந்த உரையை நிகழ்த்துவது என்ற முடிவுசெய்து அறிவிப்பை வெளியிட்டேன். இந்தியாவில் எனக்கு வேறுவிதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகமிகக் குறைவான இளைஞர் களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக வராத சிலபேரிடம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன பெரிய பயிற்சி வேண்டும்? நீங்கள் பொறியியலைப் பற்றிப் பேசுங்கள்; வருகிறோம்” என்றார்கள். இதிலிருந்து நான் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டேன். சீன இளைஞர்களுக்குத் தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. இந்திய – தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையது தான். ஆனால் அது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் பலர் தமிழ் படிப்பதில்லை. அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம், உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள். ஹாங்காங் இளம் பொறியாளர்கள் தங்களது தாய் மொழியான சீனமொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக இளம் பொறியாளர்களுக்கு அல்லது அவர்களில் பலருக்குத் தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. தாய்மொழிக் கல்வியின் மகத்து வத்தை உலகெங்குமுள்ள கல்வியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுப் பெற்றோர்களின் காதுகளில் அது விழுவதில்லை. சரி, இது தமிழகத்தின் நிலைமை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும்? அப்படிப் படிப்பதில் சிரமம் உள்ளதே என்பது அடுத்த கேள்வி. அ. முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும் ஒரு பையன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக்கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்கமுடியாது.” புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களின் பிரச்சனை இதுதான். அவர்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்க் கலாச்சாரம் இல்லை, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. ஆகவே ‘ஏன் படிக்க வேண்டும் தமிழ்?’ என்பது அவர்கள் மனதில் எழும் கேள்வி. ஏனென்றால், அவர்கள் அதில்தான் இயல்பாகச் சிந்திக்க முடியும். வீட்டில் பெற்றோர்கள் அதற்கான சூழலை, தமிழில் எப்போதும் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும், தாய்மொழிதான் அவர்களது அடையாளம், முகவரி. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் மொழியைக் கற்க வேண்டும், அவர்களது பண்பாட்டிற்கு இசைவாக நடக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். அதே வேளையில் தாய்மொழிக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். “என்னுடைய தாய்மொழி தமிழ். But I do not Speak Tamil” என்று சொல்லுகிற தமிழ் இளைஞனை எந்த வெளிநாட்டுக்காரனும் மதிக்கப்போவதில்லை. தாய்மொழிக் கல்வி உணர்வுபூர்வமானது. மிக இயல்பானது. அதுவே தெளிவான சிந்தனைப்போக்கை, படைப்பூக்கத்தை வளர்க்க வல்லது. உலகெங்கும் வாழும் தமிழர்கள், பல நாடுகளிலும் இந்தத் தமிழ் வகுப்பை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் குறைவு. காரணம் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. அவர்களுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு முன்பாக தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும். ஹாங்காங் தமிழ் வகுப்பு அதைச் செவ்வனே செய்துவருகிறது. அதனால்தான் தொடர்ச்சியாக 12ஆம் ஆண்டில் அதனால் செயல்பட முடிகிறது. கா. சிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்டார்: “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது.” ஆயிரக்கணக்கானஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு செம்மொழி, இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நவீன மொழி நம்முடைய தாய்மொழியாக அமைந்தது எதேச்சையாக இருக்கலாம். ஆனால் அது பெருமைக்குரியதல்லவா? அந்தமொழியை நம் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகைசெய்ய வேண்டாமா? அதைத்தான் ஹாங்காங் தமிழ் வகுப்புகள் செய்துவருகின்றன. தமிழ்மொழியைப் போலவே ஹாங்காங் தமிழ் வகுப்புகளும் அதன் தொடர்ச்சியினால்தான் பெருமையடைகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்தி வருவதற்கு முக்கியக் காரணி- இதன் மாணவர்கள். அந்த 125 தமிழ்ச் சிறுவர் சிறுமியரைப் பாராட்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களைப் பாராட்டுகிறேன். 11 ஆண்டுகளாக இந்த வகுப்புகளைச் சிறப்பாக நடத்திவரும் தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் தைக்கா உபைதுல்லா, அப்துல் அஜீஸ், ஷேக் அப்துல்காதர், சையத் அஹமத், எஸ்.எஸ். முபாரக், காழி அலாவுதீன், எம். அப்துல்காதர், பிரபு சுஐபு ஆகியோரைப் பாராட்டுகிறேன். இந்த வகுப்புகளின் இப்போதைய ஆசிரியர்களான திருமதிகள் சுதாரவி, கதீஜாகாஃபர், கவிதாமோகன், ஷபீனா அப்துல்ரகுமான், அனுராதா ரங்கநாதன், ஸ்ரீப்ரியா பூவராகவன், ராதாமணி, மணிமேகலை செந்தில்நாதன், கலைச்செல்வி அருணாச்சலம், பூங்குழலி சுந்தரமூர்த்தி, கண்மணிசெல்வம், அலமேலு இராமனாதன், சித்ரா வெங்கடசுப்ரமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்; தமிழ் வகுப்புகளின் ஆலோசகர். ‘ரேடியோ ஹாங்காங்’ சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திவரும் ஒலிபரப்பில் 26.9.15 அன்று தமிழில் பேசியது) மின்னஞ்சல்: mu.ramanathan@gamil.com
பிளாஸ்டிக்குக்கு விடைகொடுப்போம்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, January 18, 2016 பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமான பிளாஸ்டிக்கை ஒழிக்க மனமாற்றம் தேவை வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலைப் படித்தவர்களால் அதில் வரும் மழை வர்ணனையை மறக்க முடியாது. பாளையங்கோட்டையில் உள்ள அந்தச் சின்னஞ்சிறு தெரு, மழையில் மேலும் பிரகாசம் எய்துமாம். ஆனால், சென்னையில் கொட்டிய மழையால் நகரம் பிரகாசம் எய்தவில்லை; மாறாக நகரத்தின் சில கசடுகள் மேலெழும்பி வந்தன. அப்படியான ஒன்றுதான் பிளாஸ்டிக் கழிவுகள். பல நீர்வழிப் பாதைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டன. வடிகால்கள், வாய்க்கால்கள், ஆறு எங்கிலும் பிளாஸ்டிக் பைகள் மிதந்தன. மாநகராட்சி ஊழியர்களும் தன்னார்வலர்களும் இரவு பகலாக அவற்றை அள்ளினார்கள். பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் பரவலானது 90-களில்தான். அதுவரை எல்லோரும் அங்காடிகளுக்குத் துணிப் பைகளையும் சாப்பாட்டுக் கடைகளுக்குப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்றார்கள். இப்போது கையை வீசிக்கொண்டு செல்கிறார்கள். வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளோடு காத்திருக்கிறார்கள். எப்படிப்பட்டது பிளாஸ்டிக்? பிளாஸ்டிக் எடை குறைவானது, மலிவானது, நெகிழ்வானது, மடிக்கக்கூடியது, உடையாது, நீர் உட்புகாதது, கண்ணாடி போல் உள்ளேயிருப்பதை வெளிக்காட்டுவது. அதனால், கடந்த கால் நூற்றாண்டில் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. ஆனாலும் சூழலியலாளர்கள் ஏன் பிளாஸ்டிக்கை வெறுக்கிறார்கள்? மண்ணில் துளிர்த்தவை எல்லாம் மீண்டும் மண்ணில் மறைய வேண்டும். அதுவே இந்தப் பூமியின் இருப்புக்கு ஆதாரமானது. பிளாஸ்டிக் இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்படுவதில்லை. அது எளிதில் இந்த மண்ணிலிருந்து மறைவதில்லை. அ.முத்துலிங்கம் ‘ஆயுள்’ என்றொரு சிறுகதை எழுதியி ருக்கிறார். நாயகன் தேசாந்திரி. ஊர் ஊராகச் சுற்றுபவன். அவனிடத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ள ஒரு பொதியும், ஒரு பிளாஸ்டிக் தண்ணீர்க் குடுவையும் இருக்கின்றன. ஒரு முறை இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் வசிக்கும் பள்ளத்தாக்குக்கு வருகிறான். அவனுடைய குடுவை அவர்களுக்கு விநோதமாக இருக்கிறது. அவன் அங்கே சில காலம் தங்குகிறான். ஒரு பழங்குடிப் பெண்ணை விரும்புகிறான். ஒரு மழைக் காலத்தில் பள்ளத்தாக்கிலிருந்து புறப்படுகிறான். மீண்டும் வருவதாக அவளிடம் சொல்கிறான். அவன் நினைவாக பிளாஸ்டிக் குடுவையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவள் காத்திருக்கிறாள். அவளைச் சுற்றி மரணங்கள் நிகழ்கின்றன. அவளும் ஒரு நாள் இறந்துபோகிறாள். அவளது குடிசையும் சிதிலமாகிறது. அந்த பிளாஸ்டிக் குடுவையும் காணாமல் போகிறது. ஆனால், அது அழிவதில்லை. அது மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகும். ஈக்கள் சராசரியாக 28 நாட்கள் வாழும். வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் ஒரு வருடம். தவளை இரண்டு வருடங்கள். நாய் 15 வருடங்கள். சிங்கம் 30 வருடங்கள். ஒட்டகச்சிவிங்கி 36 வருடங்கள். மனிதன் 65 வருடங்கள். கிளி 70 வருடங்கள். கடல் ஆமை 100 வருடங்கள். ஆனால், மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அழிந்துபட குறைந்தது 450 வருடங்களாகும். அத்தனை காலமும் அது பூமிக்குப் பாரமாய் இருக்கும். இப்போதே வடசென்னை கொடுங்கையூர் குப்பைமேடும் தென்சென்னைப் பெருங்குடிக் குப்பைமேடும் நிரம்பி வழிகின்றன. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி வைப்பதற்கு இன்னும் பல குப்பைமேடுகள் வேண்டிவரும். பிளாஸ்டிக் தீது இயற்கையால் மீண்டும் இட்டு நிரப்ப முடியாத வளங்களான எண்ணெயிலிருந்தும் எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிறது பிளாஸ்டிக். இதில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப் படுகின்றன. அவை காற்றை, நீரை, மண்ணை மாசாக்குகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் வரக் காரணமாகின்றன. வீதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழைநீர்- கழிவுநீர் வடிகால்களை அடைத்துக்கொள்கின்றன. அவை நீரில் மிதந்தும் காற்றில் பறந்தும் கடலை அடைகின்றன. கடல்வாழ் உயிரினங் களில் பல பிளாஸ்டிக்கை விழுங்கி இறந்துபோகின்றன. எத்தனை அபாயங்கள் இருந்தபோதும் பிளாஸ்டிக் வசீகரமானது. உலகளவில் ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது. சமீபகாலத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்துவரும் நகரங்களுள் ஒன்று ஹாங்காங். ஹாங்காங் உதாரணம் ஹாங்காங்கிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்தது. தொடர்ந்த பிராச்சாரத்துக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல் ஒரு சட்டம் இயற்றினார்கள். காய்கறி-இறைச்சிக் கடைகளைத் தவிர, அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை வழங்க வேண்டும். இப்போது ஒரு லட்சம் அங்காடிகளுக்கும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து பைகளை எடுத்துவருகிறார்கள். கடந்த ஜூலை இரண்டாம் வாரம் ஹாங்காங் புத்தகக் காட்சி நடந்தது. 580 அரங்குகள். 10 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். துணிப் பைகளிலும், முதுகுப் பைகளிலும், சக்கரம் வைத்த பெட்டிகளிலும் புத்தகங்களை அள்ளிப்போனார்கள். பிளாஸ்டிக் என்ற பேச்சே இல்லை. இதற்குச் சட்டம் மட்டுமல்ல; மக்களின் விழிப்புணர்வும் காரணம். கன்னியாகுமரி உதாரணம் இதெல்லாம் வெளிநாடுகளில்தான் சாத்தியம் என்று பெருமூச்சுடன் சிலர் கடந்து போகக்கூடும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியான விழிப்புணர்வைப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஊர் சுற்றிப் பார்க்கக் குடும்பத்துடன் போயிருந்தேன். மாவட்டத்தில் அப்போதே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலைப் போலவே அதன் தெப்பக்குளமும் அழகானது. குளக்கரையில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எனது மகள் குளிர்பானம் கேட்டாள். போத்தலைக் கொண்டுவந்த பரிசாரகர், சற்றுக் குனிந்து எங்களுக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் மகளிடம் சொன்னார்: ‘நாங்க ஸ்ட்ரா கொடுக்கறதில்லம்மா’. அது இங்கே சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. நாங்கள் கொடுப்பதில்லை என்றுதான் சொன்னார். மிகவும் பதவிசாகச் சொன்னார். அடுத்த நாள் கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய துணிக்கடை ஒன்றுக்குப் போனோம். என் மனைவி தனக்கு வேண்டிய நிறத்தைச் சுட்டுவதற்காகத் தனது கைப்பையிலிருந்து ஒரு துணியை எடுத்துக்காட்டினார். கடைக்காரர் பதறிவிட்டார். ஏன்? அது இரண்டு நாட்களுக்கு முன்னால் திருநெல்வேலியில் வாங்கியது. பிளாஸ்டிக் பையில் இருந்தது. ‘பரிசோதகர்கள் வந்தால் உங்கள் கடையில் பிளாஸ்டிக் எப்படி வந்தது என்று கேட்பார்கள். அம்மா, பையை உள்ளே வையுங்கள்’ என்றார். சட்டமும் மக்களின் விழிப்புணர்வும் பிளாஸ்டிக்கை ஒரு மாவட்டத்திலிருந்து புறந்தள்ளிக்கொண்டிருப்பதைக் கண்டோம். ஒரு மாவட்டத்தில் சாத்தியமாவது ஒரு மாநிலத்தில் சாத்தியமாகாதா என்ன? இதுதான் நேரம் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல் இப்படி முடியும்: “மழையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது.” நாவலில் வருகிற சின்னஞ்சிறு தெருவில் பெய்த மழையைப் போன்றதல்ல சென்னையில் கொட்டிய மழை. என்றாலும் வண்ணநிலவன் சொல்வது போன்ற கடவுள் தன்மையை சென்னைவாசிகளிடம் பார்க்க முடிந்தது. அவர்கள் ஒரு பேரிடரைப் பரிவுடனும் பொறுப்புடனும் துணிவுடனும் எதிர்கொண்டார்கள். இதுதான் நேரம். பிளாஸ்டிக்கை மறுதலிப்பதில் சென்னை தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கலாம். பல நூறாண்டு காலம் பூமிக்குப் பாரமாய் இருக்கப்போகும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அடியோடு நிறுத்துவது உத்தமம். குறைவாகப் பயன்படுத்திக் குப்பைத் தொட்டிகளில் சேர்ப்பது மத்திமம். பேரிடருக்குப் பின்னும் பாடம் கற்க மறுப்பது அதமம். – மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com