ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு Published in One India, 1 September 2016 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்கContinue reading “தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு”
Tag Archives: hindu tamil
சர்வதேச சினிமா: இவர்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, February 26, 2016 ஹாங்காங்கில் தற்போது ‘தீபன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. மே 2015-ல் நடந்த கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பனை விருதை வென்ற படம் இது. அப்போது ஹாங்காங் நாட்டின் நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட், தீபனாக நடித்த அந்தோணிதாசன் ஹாங்காங்கில் ஆறு மாதங்கள் அகதியாக வாழ்ந்தவர் என்று எழுதியிருந்தது. அது 1988-ம் ஆண்டு. முன்னாள் போராளியான அவருக்கு அப்போது வயது 19. பிரான்ஸில் 1993-ல் தஞ்சம் புகுந்த அந்தோணிதாசனின் புனைபெயர் ஷோபாசக்தி என்றும், அவர் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதிவருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தது நாளிதழ். இப்போது வாசகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுவருகிற அவரது ‘Box- கதைப் புத்தகம்’ என்ற நாவல் அப்போது வெளியாகவில்லை. ‘தீபன்’ படத்தின் இயக்குநர் ஜாக் ஒதியார் சர்வதேசத் திரையுலகில் அறியப்பட்டவர். இவரது முந்தைய படங்களான ‘A Prophet’, ‘Rust and Bone’ ஆகியவையும் விருதுகளைக் குவித்தவை. போராளியின் கதை சிவதாசன் ஒரு முன்னாள் போராளி. அவனது புதிய பெயர்தான் தீபன். அவனுக்குக் கிடைக்கிற கடவுச் சீட்டிலுள்ள பெயர். இளம் பெண்ணான யாழினியும் (காளீஸ்வரி), 9 வயதுச் சிறுமியான இளையாளும் (குளோடின்) படத்தின் பிற பிரதான பாத்திரங்கள்; அந்தப் பெயர்களும்கூட அவர்களது சொந்தப் பெயர்களல்ல. கள்ளக் கடவுச்சீட்டில் உள்ள பெயர்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். மூவரும் தத்தமது குடும்பங்களை யுத்தத்தில் இழந்தவர்கள். இப்போது ஒரே குடும்பமாக அபிநயிக்கிறார்கள். அகதிக் கோரிக்கையோடு பிரான்ஸில் தஞ்சம் அடைகிறார்கள். கொஞ்ச நாட்களில் தீபனுக்குப் புறநகர் ஒன்றின் தொகுதி வீட்டில் பராமரிப்பாளானாக வேலை கிடைக்கிறது. இளையாள் முதன்முதலாகப் பள்ளிக்குப் போகிறாள். யாழினிக்கும் ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை கிடைக்கிறது. மெல்ல மெல்ல ஒரு குடும்பமாக வாழத் தலைப்படுகிறார்கள். அப்போது அந்தக் கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் போதைப்பொருள் மாபியாக்களிடையே மோதல் ஏற்படுகிறது. தீபன் அதற்குள் இழுபடுகிறான். அவன் அடக்கி வைத்திருந்த, அவனுள் கனன்றுகொண்டிருந்த வன்முறை வெளிப்படுகிறது. அகதிகள் சமாதானத்தையே நேசிக்கிறார்கள் என்றுதான் படம் முடிகிறது. உயிர் தரித்திருப்பதற்கும் பிழைத்திருப்பதற்கும்தானே அவர்கள் இத்தனை பாடு படுகிறார்கள்? புலம்பெயர்வும் அலைந்துழல்வும் 1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலரும் திரவியம் தேடிப் போனவர்களில்லை. புதிய மண்ணில் கால் பதிக்கும்போது அவர்கள் கையிருப்பிலுள்ள காசு குறைவு; அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களும் குறைவு. போதிய கம்பளியாடை இல்லாத அவர்களைக் குளிரும் பனியும் வாட்டும். புதிய கலாச்சாரமும், புரியாத மொழியும் அவர்களைச் சுற்றிக் காற்றில் கலந்திருக்கும் கசப்புணர்வும் மேலதிகமாக வாட்டும். இவர்களின் அலைதல் எழுத்தில்கூட அதிகம் பதிவாகவில்லை. திரைப்படங்களில் அபூர்வம். ஆதலால், இந்தப் படம் வாராது போல் வந்த மாமணி. சர்வதேசத் தமிழ்ப் படம் படத்தில் பிரெஞ்சுப் பாத்திரங்கள் பிரெஞ்சிலும் தமிழ்ப் பாத்திரங்கள் தமிழிலும் பேசுகிறார்கள். படத்தில் மிகுதியும் தமிழ்தான் கேட்கிறது. ஹாங்காங்கில் ஆங்கில, சீன மொழி சப்டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. படம் உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களை மனதில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழ் அறிந்தவர்களால் பல காட்சிகளை நெருக்கமாக உணர முடியும். ‘பாலும் தெளிதேனும், ‘நிலா அது வானத்து மேலே’ போன்ற பாடல்களைப் பாத்திரங்கள் பாடுகிறபோது, அவை ஒரு தமிழ்ப் பார்வையாளருக்கு, அவற்றின் மீது படிந்திருக்கும் காலத்தின் தூசியோடு வந்து சேர்கின்றன. தமிழ் தெரியாத இயக்குநர் – கதாசிரியரின் நுண்ணுணர்வு வியப்பூட்டுகிறது. படத்தில் பேசாத தருணங்களும் ஏராளமுண்டு. ஒரு காட்சியில் தீபன் முள்ளிவாய்க்காலில் படுகாயமுற்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். எவ்விதமான முகபாவமும் இல்லை. எந்த வசனமும் இல்லை. படத்தில் அரசியல் காட்சிகள் குறைவுதான். அகதிகளின் அலைச்சல்தான் படத்தின் மையம். தீபன் தற்போது ஹாங்காங்கில் வெளியாகி இரண்டு திரையரங்குகளில் ஓடுகிறது. படத்துக்கு ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ எழுதிய விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: ‘மூன்று அகதிகளும் புதிய உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் படுகிற அல்லல்கள், அவர்கள் கைவிட்டுவிட்டு வந்த பூமியில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல’. படம் இங்கிலாந்தில் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவிலும் விரைவில் வெளிவரலாம். மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர் தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
பிளாஸ்டிக்குக்கு விடைகொடுப்போம்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, January 18, 2016 பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமான பிளாஸ்டிக்கை ஒழிக்க மனமாற்றம் தேவை வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலைப் படித்தவர்களால் அதில் வரும் மழை வர்ணனையை மறக்க முடியாது. பாளையங்கோட்டையில் உள்ள அந்தச் சின்னஞ்சிறு தெரு, மழையில் மேலும் பிரகாசம் எய்துமாம். ஆனால், சென்னையில் கொட்டிய மழையால் நகரம் பிரகாசம் எய்தவில்லை; மாறாக நகரத்தின் சில கசடுகள் மேலெழும்பி வந்தன. அப்படியான ஒன்றுதான் பிளாஸ்டிக் கழிவுகள். பல நீர்வழிப் பாதைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டன. வடிகால்கள், வாய்க்கால்கள், ஆறு எங்கிலும் பிளாஸ்டிக் பைகள் மிதந்தன. மாநகராட்சி ஊழியர்களும் தன்னார்வலர்களும் இரவு பகலாக அவற்றை அள்ளினார்கள். பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் பரவலானது 90-களில்தான். அதுவரை எல்லோரும் அங்காடிகளுக்குத் துணிப் பைகளையும் சாப்பாட்டுக் கடைகளுக்குப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்றார்கள். இப்போது கையை வீசிக்கொண்டு செல்கிறார்கள். வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளோடு காத்திருக்கிறார்கள். எப்படிப்பட்டது பிளாஸ்டிக்? பிளாஸ்டிக் எடை குறைவானது, மலிவானது, நெகிழ்வானது, மடிக்கக்கூடியது, உடையாது, நீர் உட்புகாதது, கண்ணாடி போல் உள்ளேயிருப்பதை வெளிக்காட்டுவது. அதனால், கடந்த கால் நூற்றாண்டில் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. ஆனாலும் சூழலியலாளர்கள் ஏன் பிளாஸ்டிக்கை வெறுக்கிறார்கள்? மண்ணில் துளிர்த்தவை எல்லாம் மீண்டும் மண்ணில் மறைய வேண்டும். அதுவே இந்தப் பூமியின் இருப்புக்கு ஆதாரமானது. பிளாஸ்டிக் இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்படுவதில்லை. அது எளிதில் இந்த மண்ணிலிருந்து மறைவதில்லை. அ.முத்துலிங்கம் ‘ஆயுள்’ என்றொரு சிறுகதை எழுதியி ருக்கிறார். நாயகன் தேசாந்திரி. ஊர் ஊராகச் சுற்றுபவன். அவனிடத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ள ஒரு பொதியும், ஒரு பிளாஸ்டிக் தண்ணீர்க் குடுவையும் இருக்கின்றன. ஒரு முறை இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் வசிக்கும் பள்ளத்தாக்குக்கு வருகிறான். அவனுடைய குடுவை அவர்களுக்கு விநோதமாக இருக்கிறது. அவன் அங்கே சில காலம் தங்குகிறான். ஒரு பழங்குடிப் பெண்ணை விரும்புகிறான். ஒரு மழைக் காலத்தில் பள்ளத்தாக்கிலிருந்து புறப்படுகிறான். மீண்டும் வருவதாக அவளிடம் சொல்கிறான். அவன் நினைவாக பிளாஸ்டிக் குடுவையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவள் காத்திருக்கிறாள். அவளைச் சுற்றி மரணங்கள் நிகழ்கின்றன. அவளும் ஒரு நாள் இறந்துபோகிறாள். அவளது குடிசையும் சிதிலமாகிறது. அந்த பிளாஸ்டிக் குடுவையும் காணாமல் போகிறது. ஆனால், அது அழிவதில்லை. அது மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகும். ஈக்கள் சராசரியாக 28 நாட்கள் வாழும். வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் ஒரு வருடம். தவளை இரண்டு வருடங்கள். நாய் 15 வருடங்கள். சிங்கம் 30 வருடங்கள். ஒட்டகச்சிவிங்கி 36 வருடங்கள். மனிதன் 65 வருடங்கள். கிளி 70 வருடங்கள். கடல் ஆமை 100 வருடங்கள். ஆனால், மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அழிந்துபட குறைந்தது 450 வருடங்களாகும். அத்தனை காலமும் அது பூமிக்குப் பாரமாய் இருக்கும். இப்போதே வடசென்னை கொடுங்கையூர் குப்பைமேடும் தென்சென்னைப் பெருங்குடிக் குப்பைமேடும் நிரம்பி வழிகின்றன. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி வைப்பதற்கு இன்னும் பல குப்பைமேடுகள் வேண்டிவரும். பிளாஸ்டிக் தீது இயற்கையால் மீண்டும் இட்டு நிரப்ப முடியாத வளங்களான எண்ணெயிலிருந்தும் எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிறது பிளாஸ்டிக். இதில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப் படுகின்றன. அவை காற்றை, நீரை, மண்ணை மாசாக்குகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் வரக் காரணமாகின்றன. வீதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழைநீர்- கழிவுநீர் வடிகால்களை அடைத்துக்கொள்கின்றன. அவை நீரில் மிதந்தும் காற்றில் பறந்தும் கடலை அடைகின்றன. கடல்வாழ் உயிரினங் களில் பல பிளாஸ்டிக்கை விழுங்கி இறந்துபோகின்றன. எத்தனை அபாயங்கள் இருந்தபோதும் பிளாஸ்டிக் வசீகரமானது. உலகளவில் ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது. சமீபகாலத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்துவரும் நகரங்களுள் ஒன்று ஹாங்காங். ஹாங்காங் உதாரணம் ஹாங்காங்கிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்தது. தொடர்ந்த பிராச்சாரத்துக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல் ஒரு சட்டம் இயற்றினார்கள். காய்கறி-இறைச்சிக் கடைகளைத் தவிர, அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை வழங்க வேண்டும். இப்போது ஒரு லட்சம் அங்காடிகளுக்கும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து பைகளை எடுத்துவருகிறார்கள். கடந்த ஜூலை இரண்டாம் வாரம் ஹாங்காங் புத்தகக் காட்சி நடந்தது. 580 அரங்குகள். 10 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். துணிப் பைகளிலும், முதுகுப் பைகளிலும், சக்கரம் வைத்த பெட்டிகளிலும் புத்தகங்களை அள்ளிப்போனார்கள். பிளாஸ்டிக் என்ற பேச்சே இல்லை. இதற்குச் சட்டம் மட்டுமல்ல; மக்களின் விழிப்புணர்வும் காரணம். கன்னியாகுமரி உதாரணம் இதெல்லாம் வெளிநாடுகளில்தான் சாத்தியம் என்று பெருமூச்சுடன் சிலர் கடந்து போகக்கூடும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியான விழிப்புணர்வைப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஊர் சுற்றிப் பார்க்கக் குடும்பத்துடன் போயிருந்தேன். மாவட்டத்தில் அப்போதே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலைப் போலவே அதன் தெப்பக்குளமும் அழகானது. குளக்கரையில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எனது மகள் குளிர்பானம் கேட்டாள். போத்தலைக் கொண்டுவந்த பரிசாரகர், சற்றுக் குனிந்து எங்களுக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் மகளிடம் சொன்னார்: ‘நாங்க ஸ்ட்ரா கொடுக்கறதில்லம்மா’. அது இங்கே சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. நாங்கள் கொடுப்பதில்லை என்றுதான் சொன்னார். மிகவும் பதவிசாகச் சொன்னார். அடுத்த நாள் கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய துணிக்கடை ஒன்றுக்குப் போனோம். என் மனைவி தனக்கு வேண்டிய நிறத்தைச் சுட்டுவதற்காகத் தனது கைப்பையிலிருந்து ஒரு துணியை எடுத்துக்காட்டினார். கடைக்காரர் பதறிவிட்டார். ஏன்? அது இரண்டு நாட்களுக்கு முன்னால் திருநெல்வேலியில் வாங்கியது. பிளாஸ்டிக் பையில் இருந்தது. ‘பரிசோதகர்கள் வந்தால் உங்கள் கடையில் பிளாஸ்டிக் எப்படி வந்தது என்று கேட்பார்கள். அம்மா, பையை உள்ளே வையுங்கள்’ என்றார். சட்டமும் மக்களின் விழிப்புணர்வும் பிளாஸ்டிக்கை ஒரு மாவட்டத்திலிருந்து புறந்தள்ளிக்கொண்டிருப்பதைக் கண்டோம். ஒரு மாவட்டத்தில் சாத்தியமாவது ஒரு மாநிலத்தில் சாத்தியமாகாதா என்ன? இதுதான் நேரம் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல் இப்படி முடியும்: “மழையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது.” நாவலில் வருகிற சின்னஞ்சிறு தெருவில் பெய்த மழையைப் போன்றதல்ல சென்னையில் கொட்டிய மழை. என்றாலும் வண்ணநிலவன் சொல்வது போன்ற கடவுள் தன்மையை சென்னைவாசிகளிடம் பார்க்க முடிந்தது. அவர்கள் ஒரு பேரிடரைப் பரிவுடனும் பொறுப்புடனும் துணிவுடனும் எதிர்கொண்டார்கள். இதுதான் நேரம். பிளாஸ்டிக்கை மறுதலிப்பதில் சென்னை தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கலாம். பல நூறாண்டு காலம் பூமிக்குப் பாரமாய் இருக்கப்போகும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அடியோடு நிறுத்துவது உத்தமம். குறைவாகப் பயன்படுத்திக் குப்பைத் தொட்டிகளில் சேர்ப்பது மத்திமம். பேரிடருக்குப் பின்னும் பாடம் கற்க மறுப்பது அதமம். – மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
ஸ்டார்ட்-அப் திட்டம் பலன் தருமா?
எம்.அருணாச்சலம் Published in The Hindu-Tamil, December 18, 2015 இந்தியாவில் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்கான தேவை இருக்கிறது ஜனவரி 16 அன்று பிரதமர் மோடி ஸ்டார்ட்–அப் திட்டத்தைத் துவக்கப்போகிறார். இதற்கு ‘ஸ்டார்ட்–அப் இந்தியா, ஸ்டாண்ட்–அப் இந்தியா’ (தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா) என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்குமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்–அப் நிறுவனங்களின் தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். ஸ்டார்ட்–அப் என்று எதைச் சொல்கிறார்கள்? இந்தத் திட்டத்தால் இந்தியா எழுந்து நிற்குமா? இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்–அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான். தொடக்கத்தில் ஸ்டார்ட்–அப் என்பது ஒரு கருத்துருவாக (idea) இருக்கும். அதைப் புதிய வழியில், புதிய முறையில் (innovation) ஒரு திட்டமாக உருவாக்க வேண்டும். இந்தக் கருத்துருவை முன்வைப்பவர்கள்தான் இதை வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்திருக்க வேண்டும். எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமும் வேண்டும். இந்தக் கருத்தை அவர்கள் யாருக்கும் கை மாற்றிக் கொடுக்க முடியாது. ஒரு திட்டமாக உருப்பெற்ற பின்புதான் பலருக்கும் இதன் பயன்பாடு புரியவரும். ஆகவே, இந்தக் கருத்தை மட்டும் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். இது ஒரு பிரசவம் மாதிரி. கருவுற்ற பெண்தான் பிள்ளை பெற்றாக வேண்டும். திட்டமாக உருப்பெற்ற பின்னர் அதைச் சந்தைக்குக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும்போது கருத்தை உருவாக்கியவர்களே நிறுவனத்துக்குத் தலைமை தாங்குவார்கள். அல்லது முக்கியப் பொறுப்பு வகிப்பார்கள். ஆகவே, இது தனி மனிதர்களின் திறனைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. இந்தத் திறமைசாலிகளுக்கு நிதி வேண்டும். கருத்து திட்டமாக உருப்பெறும்போது குறைவான நிதி வேண்டும். நிறுவனமாகி சந்தைப் படுத்தும்போது அதிகமான நிதி வேண்டும். ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டுமல்ல. சுற்றுலா, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், உயிரியில், சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக சேவையாற்றி வருகின்றன. ஹாங்காங் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்குப் பல நாடுகளின் அரசாங்கங்கள் உதவிவருகின்றன. உதாரணமாக, ஹாங்காங் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. ஹாங்காங்கில் அறிவியல் பூங்கா என்கிற இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இங்கே ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் அலுவலகம் அமைத்துக்கொள்ளலாம். அவர்களது கருத்துரு ஒரு திட்டமாக உருவாகும் வரை நிதியுதவியும் கிடைக்கும். பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப ரீதியில் உதவும். இன்வெஸ்ட்மெண்ட் ஹாங்காங் என்கிற வர்த்தகத்தை ஊக்குவிக்கிற அமைப்பில் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்காகவே தனிப் பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவு முதலீட்டாளர்களிடம் திட்டத்தைக் கொண்டு சேர்க்கும். சீனா ஹாங்காங் சந்தை சிறியது. ஆனால், சீனாவின் சந்தை இந்தியாவைப் போலவே பெரியது. உற்பத்தித் துறையிலும் கணினி வன்பொருளிலும் சீனா முன்னணி வகிக்கிறது. மென்பொருளில் முன்னேறி வருகிறது. இந்தப் பின்புலத்தோடு ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. ஹாங்காங்குக்கு வெகு அருகில் உள்ள நகரம் ஷென்ஜன். கடந்த ஐந்தாண்டுகளில் பல ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் இரண்டு பிரபலமானவை: வீசாட், டி.ஜே.ஐ. வீசாட் உடனடித் தகவல் பரிமாற்ற சேவை. சீனாவின் இணைய விதிகளுக்கு உட்பட்டு 2010-ல் தொடங்கப்பட்டது. வங்கிச் சேவைகளுக்குக்கூட நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகிறது. இன்று உலகளவில் 10 கோடிப் பேர் இதன் உறுப்பினர்கள். டி.ஜே.ஐ டிரோன் (drone) வகைப்படும் தானியங்கி கேமராக்களைத் தயாரிக்கிறது. ரிமோட்டில் இயக்கலாம். ராணுவத்தில் மட்டும் பயன்படுத்திய மாதிரியை எடுத்துக்கொண்டு, எளிமைப்படுத்தி, சிவில் சமூகத்தின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் பிராங் வாங். ஹாங்காங்கில் அறிவியல் படித்தார். 2006-ல் ஸ்டார்ட்–அப் நிறுவனமாக ஷென்ஜனில் தொடங்கினார். இப்போது ரூ.10,000 முதல் ரூ.20 லட்சம் வரை விதவிதமான டிரோன்கள் தயாரிக்கிறார். இந்த டிரோன்களுக்குப் பயன்பாடு அதிகம். இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைப் படம் எடுக்கும். அடர்ந்த காடுகள், பனிப் பிரதேசங்கள், பூமிக்கு அடியில் என்று மனிதர்கள் போக முடியாத பகுதிகளுக்குச் சென்று படமெடுத்து ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். இந்தியா இந்தியாவிலும் பல ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்றவை ஆன்லைன் வணிகத்துக்குப் பெயர் பெற்றவை. மேக்–மை–டிரிப் விமான–பேருந்துப் பயணங்களுக்கும் விடுதிகளுக்கும் முன்பதிவு செய்கிறது. இன்மோபி ஸ்மார்ட்போனில் விளம்பரம் செய்கிறது. ஓலா வாடகை கார் சேவை வழங்குகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்கலாம்? நமது அரசு அதிகாரிகள் ஸ்டார்ட்–அப் கருத்துக்களைப் பரிசீலித்து அவர்களுக்கு உதவுவதற்கான பயிற்சி பெற்றவர்களில்லை. இந்தப் பணியில் பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்தலாம். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும், மேலும் நல்ல உள்கட்டமைப்பு உள்ள மருத்துவக் கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகளையும் ஈடுபடுத்தலாம். இங்கெல்லாம் புதிய கட்டிடங்கள் கட்டி ஸ்டார்ட்–அப் கருத்தாளர்களுக்கு இடம், தகவல் தொடர்பு, ஆய்வுக்கூடம் போன்றவற்றை வழங்கலாம். மாநில அரசுகள் இதில் பெரும்பங்கு வகிக்க முடியும். நமது வங்கிகளுக்கு, இப்படியான கருத்தாளர்களுக்கு நிதி வழங்குவதிலும் அவர்களது திட்டங்களை மதிப்பிடுவதிலும் சிரமம் இருக்கும். திட்டங்களுக்கேற்ப கடனாகவோ மானியமாகவோ நிதி வழங்குகிற பொறுப்பையும் கல்வி நிறுவனங்களுக்கே வழங்கலாம். எல்லா ஸ்டார்ட்–அப் கருத்துருக்களும் வெற்றிகரமான திட்டங்களாக உருப்பெறாது. கணிசமானவை தோல்வி அடையும். நிதி ஒதுக்கும்போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு கருத்துரு சந்தைக்கு வருவதற்குக் காலக்கெடு விதிக்க முடியாது. கருத்தைப் பொறுத்து, கிடைக்கும் வசதிகளைப் பொறுத்து கால அளவு மாறுபடும். இதையும் நிதி வழங்குவோர் மனதில் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அரசின் விதிமுறைகளும் ஸ்டார்ட்–அப் திட்டங்களை ஊக்குவிக்கிற வகையில் இருக்க வேண்டும். சில ஸ்டார்ட்–அப் திட்டங்கள் சந்தைக்கு வரும்போது பழைய விதிகள் பொருத்தமாக இருக்காது. உதாரணமாக, ஹாங்காங்கில் இப்போது உபெர் எனப்படும் வாடகை கார் சேவை பிரபலமாகி வருகிறது. சொந்த காரும் ஓட்டுநர் உரிமமும் வைத்திருக்கிற இளைஞர்கள் பகுதி நேரமாக இதில் சேர விரும்புகிறார்கள். ஹாங்காங்கில் நடப்பில் இருக்கும் வாடகை கார் சட்டப்படி இதைச் செய்ய முடியாது. அந்தச் சட்டங்களை எழுதியவர்கள் பின்னொரு காலத்தில் ஸ்மார்ட்போன் மூலம் பதிவுசெய்து வாடகை காரில் போக முடியும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹாங்காங் அரசு இப்போது மக்களின் பாதுகாப்புக்குப் பழுதில்லாமல் சட்டத்தைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலித்துவருகிறது. ஸ்டார்ட்–அப் நிறுவனங்களால் மக்களுக்குக் கூடுதல் சேவையைக் குறைந்த விலையில் கொடுக்க முடியும். இந்தியாவில் அதற்கான தேவை இருக்கிறது. திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதியும் வழிகாட்டுதலும் அரசின் ஆதரவும் வேண்டும். இதில் கல்வி நிறுவனங்களும் அறிவியல் நிறுவனங்களும் சிறப்பான பங்காற்ற முடியும். பிரதமர் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்கான புதிய செயல்திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். (எம். அருணாச்சலம், ஹாங்காங் இந்திய வர்த்தகக் குழுமத்தின் தலைவர். 2005-ல் இந்திய அரசின் சிறந்த வெளிநாட்டு இந்தியருக்கான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவர்) கேட்டு எழுதியவர்: மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, December 18, 2015 ஒரு நகரின் கட்டமைப்பு என்பது தக்க மழைநீர் வடிகாலையும் உள்ளடக்கியதே. நவம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையின் அளவு 1,219 மில்லிமீட்டர். இது நவம்பர் மாதம் பொழிகிற சராசரி மழையான 407மி.மீயைவிட மூன்று மடங்கு அதிகம். டிசம்பர் 1-ம் தேதி தாம்பரத்தின் மழைமானி காட்டிய அளவு 494 மி.மீ. ஒரு மாத சராசரி மழையைவிட இந்த ஒரு நாள் மழை அதிகமானது. கடந்த நூறாண்டுகளில் இப்படிக்Continue reading “நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்”
மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, November 5, 2015 இந்தத் தேர்தலால் மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்து, ஜனநாயகம் மலருமா? ரங்கூன் நகரெங்கும் தோரணங்களாய் ஆடுகின்றன சிவப்புக் கொடிகள். அவற்றில் போராடும் பொன்னிற மயிலொன்றின் சித்திரமும் இருக்கிறது. எதிர்க் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் கொடிகள் அவை. கூடவே, கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் படங்களும் காற்றில் அசைகின்றன. ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் ஆளுங்கட்சியின் பச்சை நிறக் கொடிகளும் இடையிடையே ஆடத்தான் செய்கின்றன. மியான்மர்Continue reading “மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்”
எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே?
மு.இராமனாதன் Published in The Hindu-Tamil, October 26, 2015 நல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா? ஏடு தேடுதல் என்கிற சொற்றொடர் உடனடியாக நினைவூட்டுகிற ஆளுமை உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை அலைந்து திரிந்து, தேடி எடுத்து, பரிசோதித்து, அரும்பதவுரை எழுதி, அச்சிட்டு வழங்கியவர் உ.வே. சாமிநாதையர் (1855 – 1942). இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பிரதி எடுப்பதும், நூல்களை அச்சிடுவதும், சேகரித்து வைப்பதும் எளிதாகிவிட்டன. எனில், தமிழ்ப்Continue reading “எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே?”
சீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, September 3, 2015 டோக்கியோவில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலான யூ.எஸ்.எஸ். மிசோரியில், சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த ஜப்பானியப் பிரதிநிதிகள்… போரிடுவதற்கு மட்டுமில்லை, மன்னிப்புக் கேட்பதற்கும் துணிவு வேண்டும். இன்று பெய்ஜிங் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தியானன்மென் சதுக்கத்தில் 12,000 துருப்புகளின் அணிவகுப்பு நடக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னால், 1945 செப்டம்பர் 2-ம் நாள் டோக்கியோவில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலில், ஜப்பானியர்கள் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டாம் உலகப்Continue reading “சீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்”
சிங்கப்பூரின் பொன்விழா
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, August 8, 2015 சிங்கப்பூர் நிகழ்த்திவரும் சாதனைகளும் அதன்முன் உள்ள சவால்களும். சிங்கப்பூர் தனி நாடானது ஆகஸ்ட் 9, 1965. ஆனால், யாரும் ஆடவில்லை பள்ளுப் பாடவில்லை. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று கொண்டாடவும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் பிரதமராக இருக்கப்போகும் லீ குவான் யூ மிகுந்த கலக்கத்திலிருந்தார். இந்த நகரை எப்படி ஒரு தனிநாடாக மாற்றப்போகிறோம் என்று மலைத்துப்போயிருந்தார். மழை நசநசத்துக்கொண்டிருந்தது. எங்கும் புழுக்கம். தனது உணர்ச்சிகளைக்Continue reading “சிங்கப்பூரின் பொன்விழா”
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, August 2, 2015 பேக்கர் தெரு மெட்ரோ ரயில் நிலையம் லண்டன் நகரின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையத்தில் ஐந்து சுரங்க ரயில் தடங்கள் குறுக்கு மறுக்காக ஓடுகின்றன. ஷெர்லக் ஹோம்ஸின் காலத்தில் இத்தனை தடங்கள் இல்லை. இப்போது ஐந்து தடங்களுக்குமாக 10 நடைமேடைகள்; அதன் வளைந்த சுவர்களில் ஷெர்லக் ஹோம்ஸின் சித்திரங்கள். வட்டத் தொப்பியும் மழை அங்கியும் புகையிலைக் குழாயுமாக உலகப் புகழ்பெற்ற துப்பறிவாளர் நம்மை வரவேற்கிறார். நடைமேடையிலிருந்துContinue reading “ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு”