அச்சு வழிபாட்டின் பாரம்பரியம்
மு. இராமனாதன்
First published in Kalachuvadu, October 2007
கண்ணனின் தமிழ் ஊடகங்கள் குறித்த உரையை ஆர்வத்தோடு வாசித்தேன். அதில் ஓரிடத்தில் தமிழில் திரைப்பட நட்சத்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட முதல் இதழ் ‘ரஜினி ரசிகன்’ என்று அவர் நினைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அச்சு ஊடகங்கள் மூலமாக நடைபெற்று வரும் நட்சத்திர வழிபாட்டை 15-20 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. அது நீண்ட பாரம்பரியமுள்ளது. எழுபதுகளில் சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட பல இதழ்களை வாசித்திருக்கிறேன். அதற்கு முன்பும் அப்படியான இதழ்கள் வந்திருக்கலாம். அதை அப்போது பள்ளிப் பிராயத்தில் இருந்தவர்களைக் கேட்டால் தெரியவரலாம்.
எங்கள் ஊரில் சிவாஜி ரசிகர் மன்றம் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துப் படிப்பகம் ஒன்று நடத்திவந்தது. பல பத்திரிகைகளும் வந்தன. சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட இதழ்கள் பிரதான இடம்வகித்தன. இந்த இதழ்கள் சிவாஜியை நடிகர் திலகம், பத்மஸ்ரீ, சிம்மக் குரலோன், கலைக்குரிசில், கலைவள்ளல் முதலான பெயர்களிலும் எம்ஜிஆரை டோ ப்பா தலையன், புஷ்குல்லா, தாத்தா முதலான பெயர்களிலும் அழைத்துவந்தன. பல இதழ்களின் பெயர்கள் நினைவில் இல்லை. சில இலக்கியச் சிற்றிதழ்கள்போல வந்த வேகத்தில் நின்றும்போயின எனில் ‘மதி ஒளி’ சண்முகமும் சின்ன அண்ணாமலையும் நடத்திவந்த இதழ்கள், முறையே மதி ஒளி மற்றும் சிவாஜி ரசிகன் தொடர்ந்து வந்ததாக ஞாபகம்.
இதைப் போலவே எம்ஜிஆர் ஆதரவு இதழ்களும் வந்தன. அவை சிவாஜியைத் தொந்தி கணேசன், பப்டு முதலான பெயர்களில் விளித்தன. ஒரு நல்ல சிவாஜி ரசிகனாக விளங்கிய நான், எம்ஜிஆர் ஆதரவு இதழ்களைப் புறக்கணித்தேன்.
1971இல் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் வெளியானது. சிவாஜி ரிக்ஷாக்காரனாக நடித்த பாபுவும் அதே ஆண்டில் வெளியானது. ரிக்ஷாக்காரனில் எம்ஜிஆர் பல வண்ண மேல் சட்டையும் நீளம் குறைவான கால் சட்டையும் அணிந்துகொண்டு, ‘அறிமுகம்’ மஞ்சுளாவிடம், ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு; இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு’ என்று பாடினார். பாபுவில் சிவாஜி ஐம்பது வயதிலேயே முதுமையாலும் காச நோயாலும் பீடிக்கப்பட்டபோதும், செஞ் சோற்றுக் கடனுக்காக இருமல்களுக்கிடையில் நெஞ்சை உருக்கும் வசனங்கள் பேசினார். 1971இன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்ஜிஆருக்குக் கிடைத்தது. அப்போதைய திமுக அரசின் செல்வாக்கினால்தான் இது சாத்தியமானது என்று பலர் கருதினர். சிவாஜி ஆதரவு இதழ்களுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவை எம்ஜிஆரையும் மைய – மாநில அரசுகளையும் தேர்வுக் குழுவையும் பிடிபிடியென்று பிடித்தன.
அப்போது சென்னை வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நேயர்களின் தேர்வின் அடிப்படையில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி வந்தது. இதில் ‘அழகிய தமிழ் மகள் இவள்’ (ரிக்ஷாக்காரன்) பாடல் முதலிடத்திலும் ‘இதோ எந்தன் தெய்வம்’ (பாபு) பாடல் இரண்டாம் இடத்திலும் நீண்ட நாள்கள் தொடர்ந்தன. ஒரு சிவாஜி ஆதரவு இதழ் இதை வானொலி நிலையத்தின் சதி என்று சாடியது நினைவிருக்கிறது.
அப்போது எம்ஜியார் – சிவாஜியைத் தாண்டி வேறு யாருக்கும் இப்படியான ஆதரவு இதழ்கள் வந்ததாகத் தெரியவில்லை. எனில், இப்போது கூடுதல் ஜனநாயகமயமாகிப் பல நடிகர்களுக்கும் ஆதரவு இதழ்கள் வருவதாகத் தெரிகிறது. இப்போதைய இதழ்கள் மற்றவர்களின் அபிமான நட்சத்திரங்களைச் சாடுமா?, அவர்களின் சதி வேலைகளை அம்பலப்படுத்துமா? எனக்குத் தெரியவில்லை. அப்படிச் செய்யாத பட்சத்தில் அந்த இதழ்களின் சுவாரசியம் குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது.
மு. இராமனாதன்
ஹாங்காங்
நண்பர் மு. இராமனாதனின் தகவல்களுக்கு நன்றி. அனுபவங்கொண்ட இதழியல் முகவர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்டிருந்த செய்தி அது. உறுதியாகத் தெரியாததால் ‘நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன். கிடைத்த தகவலை இன்னும் ஆழமாகப் பரிசீலிக்காமல் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது.
– கண்ணன்
நன்றி: காலச்சுவடு , இதழ் 94, அக்டோபர் 2007