தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு

ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு

Published in One India, 1 September 2016

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்க ரயில் பாதைப் போக்குவரத்தில் தேர்ச்சி மிக்கவரும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளாரும், ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் ஆலோசகரும், எழுத்தாளருமான மு. இராமனாதன் ஹாங்காங் நாடு தொடர்பாக மாணவர்களிடையே உரையாடினார்.

 அப்போது அவர் பேசுகையில், தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும். ஹாங்காங் நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி. சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் . அடிப்படைக்கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத் தரப்படும். அடிப்படைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும். சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும் தாய் மொழி வழிக் கல்வியே தர முடியும். அரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. உலக அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 25 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மூன்று ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன. அதற்குக் காரணம் தாய் மொழி கல்வியில் இவர்கள் படிப்பதே ஆகும். தாய் மொழி கல்வியில் படிப்பதற்கு நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார். நிறைவாக மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக ரஞ்சித், ஜீவா, பரத் குமார், தனலெட்சுமி, ஜெனிபர், ராஜி, ஐயப்பன், கோட்டை ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்

மாணவர்களின் கேள்விகளும், மு.இராமனாதன் பதில்களும்:

ரஞ்சித் : ஹாங்காங் நாட்டில் அரசாங்கப் பள்ளிகள் உள்ளனவா ?

பதில் : பெரும்பாலான பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகளே. 

பரமேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உணவு முறை என்ன ?

பதில் ; அங்கு அதிகமானவர்கள் சைவ உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. மசாலா அதிகம் இருக்காது. அவர்களும் நம்மைப் போல அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள்தான். ஆனால் சோறு குறைவாகவும் காய்கறி, மாமிசம் அதிகமாகவும் சேர்த்துக் கொள்வார்கள். மசாலா அதிகம் போடுவது அந்த உணவின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்பார்கள். எனவே மசாலா சேர்த்து கொள்வதை தவிர்ப்பார்கள். இயல்பான சுவையை அதிகம் விரும்புவார்கள். ஆரோக்கியமான உணவு வகைகளே அதிகமாக உட்கொள்வார்கள்

தனலெட்சுமி : ஹாங்காங் நாட்டிற்கும்,இந்திய நாட்டிற்கும் நேர வித்தியாசம் எப்படி இருக்கும்?

பதில்: இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படும். இந்தியாவில் ஆறு மணி என்றால் ஹாங்காங்கில் எட்டரை மணியாக இருக்கும்.

ஜெகதீஸ்வரன் : நாணயம் எப்படி இருக்கும்?

பதில் : ஹாங்காங் நாட்டிற்கு என்று தனி நாணயம் உண்டு. ஹாங்காங் டாலர் என்று பெயர். பரமேஸ்வரி : விவசாயம் எப்படி இருக்கும்? பதில் : ஹாங்காங் சிறிய நாடு. நமது சென்னை நகரத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும்தான் இருக்கும். விவசாயம் இல்லை. தொழிற்சாலைகள் இருக்கும். பெரும்பாலான பகுதி மலையும்,மலையை சார்ந்த இடமுமாக இருக்கும்.

ஜீவா : சீனா தொழிலில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம் ? 

பதில் : சீனாவின் வெற்றிக்கு காரணம் தொழிற்சாலை சார்ந்த அறிவுதான். தொழிற்சாலை சார்ந்த அறிவு அடிப்படை கல்வியில் வழங்கப்படும். அடிப்படை கல்வி தாய் மொழி கல்வியில் இருப்பதால் அவர்கள் அனைத்து விதமான தகவல்களையும் நல்ல முறையில் கற்று கொள்கின்றனர். அதுவே அவர்களின் வெற்றிக்கு அடைப்படையாக அமைகிறது.

ரஞ்சித் : ஹாங்காங்கில் சாலை விதிகள் எப்படி இருக்கும் ?

பதில் : கட்டாயம் விதிகளை நன்றாக பின்பற்றுவார்கள். பள்ளிகளில் விதிகள் கண்டிப்பாக சொல்லி தரப்படும் . அடிப்படைக் கல்வியில் விதிகள் கடைபிடிக்கக் கற்று தரப்படுவதால் விதிகளை யாரும் மீறுவதில்லை. வரிசையில் வரவேண்டும் என்றால் வரிசையில் மட்டுமே வருவார்கள். அதனை கண்டிப்பாக மீறமாட்டாரகள். சாலையில் வாகனங்கள் தேவையில்லாத ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுஉள்ளது .அதனை பின்பற்றுவார்கள்

ஐயப்பன் : வாகனங்கள் எப்படி இருக்கும்?

பதில் : பொது வாகனங்களில் செல்வதை அதிகம் ஊக்குவிப்பார்கள். தனி நபர் போக்குவரத்து வாகனங்களை அதிகம் ஊக்குவிப்பது கிடையாது.நேரத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்.23 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சரியாக 23 நிமிடத்தில் வந்து நிற்பார்கள்.எனக்கு ஆரம்ப காலங்களில் இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் நடக்கிறது.

சபரி : என்ன மொழி பயன்படுத்துவார்கள் ? 

பதில் : கேண்டனிஸ் என்கிற சீன மொழியின் ஒரு வகை பயன்பாட்டில் உள்ளது.

ராஜேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உடை எது ? 

பதில்: ஹாங்காங் சீனர்கள் மேலை நாட்டு உடைகளையே அணிவார்கள். பண்டிகைகளிலும் விசேடங்களிலும் பாரம்பரிய உடையை அவர்கள் விரும்பி அணிவார்கள்

சஞ்சீவ் : விழா எது பெரிய விழாவாக இருக்கும்?

பதில் : பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சீனப் புத்தாண்டு விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் . அக்டோபரில் வசந்த விழா கொண்டாடப்படும். ஏப்ரல் மாதத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா பெரிய விழாவாக கொண்டாடப்படும்.

ராஜி : ஹாங்காங் நாட்டின் தேசியப் பூ எது ?

பதில் : போக்கினியா. வயலட் நிறத்தில் இருக்கும் 

பார்கவி லலிதா : இயற்கை அமைப்பு எப்படி இருக்கும் ?

பதில் : மலையும் ,மலையை சார்ந்த பகுதியும் இருக்கும். கட்டிடங்கள் உயரமாக இருக்கும். தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டு இருக்கும். குளிர் காலம், கோடை காலம், வசந்த காலம் எல்லாம் இருக்கும்.

உமா மஹேஸ்வரி : விலங்குகள் இருக்குமா ?

பதில் : விலங்குகள் அதிகமாக இருக்காது. செல்லப் பிராணிகள் மட்டுமே இருக்கும் .

நந்தகுமார் : மதங்கள் இருக்குமா ?

பதில் : ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் ஆகும். மதம் என்பது அவரவர் விருப்பம் .அவர்களுக்கு என்ன மதத்தை பின்பற்றவேண்டுமோ அதனை பின்பற்றலாம்.அதற்கு எந்தத் தடையும் கிடையாது.

காவியா : கல்வி முறை எப்படி இருக்கும் ?

பதில் : அடிப்படைக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முழுவதும் தாய் மொழியில் இருக்கும். 12ம் வகுப்பு வரை உண்டு.பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே. 12ம் வகுப்புக்கு பிறகு நாம் விரும்பும் படிப்பைப் படிக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: